பதிப்புகளில்

அளப்பரிய சமூக பொறுப்புடன் செயல்படும் ‘குப்பைக்காரன்’

சேலம் மாவட்டத்தில் கழிவு-மேலாண்மையில் சாதிக்கும் ‘குப்பைக்காரன்’ குழுவினர்.

25th May 2018
Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share

தேசிய அளவில் பல பிரம்மாண்ட திட்டங்கள் குப்பை மேலாண்மைக்காக வகுக்கப்பட்டு, அந்த திட்டத்தை பற்றி பல தேசிய தலைவர்கள் பெரும் பிரச்சாரங்கள் செய்திருந்தாலும் கூட, இன்றும் கூட பெருமளவு குப்பை மண்டியிருக்கும் இடங்களை பார்த்து, மூக்கை மூடிக் கொள்ளாமல் நாம் ஒரு தினத்தை கடப்பதில்லை. யோசித்து பார்த்தால், பெருமளவு மாற்றங்களை எதிர்பார்க்கும் நாம் தான் முதலில் மாற்றத்திற்காக பொறுப்பேற்க வேண்டும் என்பது புரியும்.

‘குப்பைக்காரன்’ என்றொரு அமைப்பை தொடங்கி அதன் வழியே குப்பை மேலாண்மையை பெருமளவில் செய்து கொண்டிருக்கும் நான்கு நண்பர்கள் ஏற்றிருக்கும் பொறுப்பு அளப்பரியது. சமூக செயல்முனைவின் வழியே அறிமுகமான கெளதம், பரணிதரன், செழியன் மற்றும் சைதன்யனின் மனைவி ஹரிணி ஆகிய நால்வரும் இணைந்து சேலத்தில் இந்த அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பு தொடங்கப்பட்டு தற்போது ஆறு மாதம் ஆகியிருக்கிறது.

குப்பைக்காரன் குழுவினர்

குப்பைக்காரன் குழுவினர்


ஏற்கனவே, ‘க்ரீன் கனெக்ட்’ என்ற அமைப்பின் வழியே ‘பயோ-கேஸ்’ தொடர்பான வேலை வரும் சைதன்யன், குப்பை மேலாண்மைக்கென சிறப்பாக தொடங்கியது தான் ‘குப்பைக்காரன்’ அமைப்பு. இதில் பங்காக இருக்க, தங்களுடைய கார்ப்பரேட் வேலைகளை ராஜினாமா செய்து கொண்டு வந்திருக்கும் கௌதமும், பரணிதரனும் பொறியியல் பட்டதாரிகள். சைதன்யனின் மனைவி ஃபேஷன் டெக்னாலஜி படித்து விட்டு, சமூக செயல்முனைவில் இருந்தவர். 

இவர்கள் தங்களுடைய முதல் புராஜெக்டாக ‘போகி பக்கெட்’ சேலஞ்’சை இந்த ஜனவரியில் செய்து முடித்திருக்கிறார்கள். போகி பண்டிகை சமயத்தில் மக்கள் பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பது வழக்கமாக இருக்கிறது. இதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க, சேலம் கார்ப்பரேஷனோடு இணைந்து இப்படி ஒரு திட்டத்தை கையாண்டிருக்கிறார்கள். நூறு இடங்களில் பெரிய அளவிலான அட்டைப் பெட்டிகளை வைத்து, அதில் மக்களுக்கு தேவையில்லாத பொருட்களை, துணிகளை, காலணிகளை எல்லாம் போடும்படி அறிவித்திருக்கிறார்கள்.பத்து நாட்கள் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

“பயன்படுத்தக் கூடிய நிலையில் இருபதாயிரம் ஆடைகளும், மறுசுழற்சி செய்யத் தகுந்த நிலையில் இரண்டு டன் ஆடைகளும் சேகரிக்கப்பட்டது,” என கௌதம் சொல்கிறார்.
image


இந்த முயற்சியை பாராட்டிய பலரும், இந்த ஒரு நிகழ்வோடு நின்று விடாமல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியது இவர்களுக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக, பிப்ரவரி மாதத்தில் இரண்டு ‘ஜீரோ வேஸ்ட்’ கல்யாணங்களை நிர்வகித்திருக்கிறார்கள். 

“குப்பைகள் எதுவுமே குப்பை கிடங்குகளுக்கு போகாமல் நேரடியாக மறுசுழற்சி ஆலைக்கு செல்வதை தான் ‘ஜீரோ வேஸ்ட்’,” எனக் குறிப்பிடுகிறார்கள்.

கூடவே, சேலம் கார்ப்பரேஷனனின் நான்கு வார்டுகளிடம் இருந்தும் உலர் கழிவுகளை பெறும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்கள் ‘குப்பைக்காரன்’ குழுவினர். ‘ஜீரோ வேஸ்ட்’ ஈவண்டுகளை நிர்வகிக்க பணம் பெற்றுக் கொள்ளும் இவர்கள், கார்ப்பரேஷனிடம் இருந்து குப்பையை காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். பிறகு, அவற்றை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி ஆலைக்கு அனுப்புகிறார்கள்.

கார்ப்பரேஷனிடம் இருந்து குப்பையை வாங்குவது ஒரு மாடல் தான் எனவும், மொத்தம் ஐந்து மாடல்கள் வடிவமைத்து வைத்திருப்பதாகவும் அடுத்தடுத்த மாதங்களில் அவை நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கிறார்கள் ‘குப்பைக்காரன்’ குழுவினர். அவற்றில் ஒன்று ‘டூ பின் ஒன் பேக்’ மாடல். சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு பின்களையும், வெள்ளை நிறத்தில் ஒரு பையையும் மக்களுக்கு அளித்துவிட்டு - பச்சை தொட்டியில் சமையலறை கழிவுகளையும், சிவப்பு தொட்டியில் பேண்டேஜ், சானிடரி நாப்கின் போன்ற கழிவுகளையும், வெள்ளைப் பையில் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியே போட அறிவுறுத்துவது இந்த மாடலின் நோக்கம்.

image


மேலும், பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர் (Bulk waste generator) மாடலின்படி பெரிய அளவில் குப்பையை உண்டாக்கும் நிறுவனங்களுக்கு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதாக இருக்கிறார்கள்.

“உதாரணமாக ஒரு ஹோட்டலில் தினமும் நூறு கிலோ உணவு வீண் ஆகிறது என்றால், அவர்களுக்கு ஒரு பயோ-கேஸ் பிளாண்ட் அளிப்போம்,” என்கிறார் கௌதம்.

இவை மட்டுமின்றி டி.விக்கள், ரேடியோக்கள், கணினிகள், மொபைல் ஃபோன்கள் போன்ற மின் - கழிவுகளையும் கையாள்கிறது ‘குப்பைக்காரன்’. ஒரு ஸ்ட்ராவை நாம் வெகு சில நொடிகளே பயன்படுத்துகிறோம், ஆனால் அவை மக்காத பொருள் ஆனதால், மண்ணிலேயே இருந்து பல உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த நிலையில் தான், வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி, சர்வதேச சுற்றுச்சூழல் தினத்திற்காக ‘பீட் தி பிளாஸ்டிக்’ என்றொரு நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள் ‘குப்பைக்காரன்’ குழுவினர். பிளாஸ்டிக் பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதே இந்த பிரச்சாரத்தின் மையமாக இருக்கும். 

தற்போது தங்களுக்கென தனி அலுவலகம் அமைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் இக்குழுவினர் , அவ்வளவு எளிதாக வேலையை செய்துவிடவில்லை. குப்பைகளை சேகரிப்பதிலேயே சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

“கழிவுகளை வகை பிரித்து மறுசுழற்சி செய்வதில் பெரும் சிக்கலாக இருப்பது பொதுமக்கள் குப்பையை பிரித்து வைக்காமல் இருப்பது தான்,” என்கிறார் குப்பைகாரன் குழுவின் பரணிதரன்.
image


பக்கத்து மாநிலமான கேரளாவில் மனிதக்கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னுமே இந்த வேலையை செய்யும் பொறுப்பு குறிப்பிட்ட சமூக மக்களுக்கானதாக இருக்கிறது. நமக்கான பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வதேயில்லை என்பது உண்மை. 

சுற்றுச்சூழலை பற்றி கடுகளவு அக்கறை இருப்பவர்களுக்கும் பிளாஸ்டிக்கின் பாதிப்புகள் தெரியும். இருந்தாலும், நாம் பிளாஸ்டிக்கை களைவதில்லை. குறைந்தபட்சம், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பலருடைய பொறுப்பை முதுகில் சுமக்கும் ‘குப்பைக்காரன்’ போன்றவர்களுக்கு முழு ஆதரவையும் தர வேண்டும்.

Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக