பதிப்புகளில்

'எனக்கான பொறுப்புகள் அதிகமாகி உள்ளது’- மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர் பகவான்!

புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்ய வைத்து வார்த்தை மாறாமல் விடைத்தாளில் கொட்டப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மத்தியில், தகப்பனாய், ஆசனாய், தோழனாய் நடந்த ‘தயாளன்’ எனும் ஆசிரியராக நடித்த சமுத்திரக்கனியின் ’சாட்டை” திரைப்படம் வென்றது. உண்மையில் நிஜ உலகிலும் இன்றும் பல தயாளன்கள் நிறைந்து இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைத் தான் திருவள்ளூர் ஊர் மக்களும், மாணக்கர்களும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

jaishree
28th Jun 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

“மற்றொரு பள்ளிக்கு பணியிடமாற்றத்தில் விரைவில் செல்வேன் என்று எனக்கு முன்பேத் தெரியும். பாசமான என் பள்ளி மாணவ, மாணவிகளை பிரிந்து செல்வது எனக்கும் வருத்தம் தான். மாணவர்களும் பீல் பண்ணுவாங்கனு தான் பள்ளித் தொடங்கும் நேரத்தில் செல்லாமல், பத்து மணிக்கு மேல் பணியிடமாற்ற ஆர்டரை வாங்க பள்ளிக்குச் சென்றேன். ஆனால், அங்கு மாணவர்கள் என்னை போகவிடாமல் தடுப்பார்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு பய்யன் கட்டிப்பிடிச்சுக்கிட்டு விடமாட்றான். பைக் எடுக்க விடலை, ஒருத்தன் சாவியை எடுக்குறான். போகாதீங்க சார்... போகாதீங்க சார் என்று அழுகையில், அவர்களை எப்படி ஆசுவாசப்படுத்துவது என்றே தெரியலை. வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வு...” 

என்று அழுகுரலுடனே பேசத் தொடங்கினார் பகவான் எனும் பாசக்கார ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜ்பேட்டை கிராமத்தைத் சேர்ந்தவர் பகவான். அரசு பள்ளிகளிலே பள்ளிப் படிப்பை முடித்து, திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றவர். பி.எட் படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே ஆசிரியர் போட்டி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2014ம் ஆண்டு வெளியகரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியைத் தொடக்கியுள்ளார்.

image


வீட்டுப்பாடங்களை அடுக்கடுக்காய் கொடுப்பது, வகுப்பறையில் கட் அண்ட் ரைட்டாக இருப்பது, மார்க்குக்கு பின் ஓடச் சொல்வது என்றில்லாமல், பகவான் மாணவர்களை கையாண்ட விதமே தனிப் பாணி. உற்சாகமற்ற வகுப்பறைக்குள் புரோஜெக்டர் கொண்டு காட்சிபடுத்துதல் வழி கற்பித்துள்ளார். கரும்பலகைகளை மட்டுமே பார்த்து பழகிய மாணவனின் களைத்த மூளைக்கு புது குதூகலம் அளித்துள்ளது பகவானின் கற்பித்தல் முறை.

கற்றலும்... கற்பித்தலும்

“தேர்வுகளில் மார்க் வாங்குவதற்காக மட்டும் மாணவனை தயார் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்தால், அதில் எந்தளவுக்கு அவன் உள் வாங்கிக் கொள்கிறான் என்பது ரொம்ப முக்கியம்.” 

6ம் வகுப்பில் 'சுனாமி' என்றொரு பாடம் இருக்கிறது. அதை சுனாமி என்பது ராட்ச பேரலைடா. அதற்கு நம்மக்கள் எல்லாம் பலியாகி போனாங்கடா சொன்னா, அவன் எப்படி உணர்வுப்பூர்வமா அணுகுவான். அந்த காலக்கட்டத்தில் பிறக்காதவன் அவன். அதற்கு காட்சிவழிப்படுத்துதலே சிறந்தது. எங்க தலைமை ஆசிரியர் அரவிந்த் சாரிடம் புரோஜெக்டர் வைத்து பாடம் நடத்த கேட்ட போது, அவரும் பெர்மிஷன் கொடுத்தார். சுனாமி வீடியோக்களை காண்பிக்ககையில் ஒவ்வொரு மாணவனும் படபடத்து போனான், என சொல்கிறார் பகவான்.

என் வகுப்பிருக்கும் நாளில் விடுப்பு எடுக்கக்கூடாது என்று ஒவ்வொரு மாணவனும் நினைக்க ஆரம்பித்தான். அதுவே எனக்கு சந்தோஷத்தை கொடுக்கையில், பள்ளியில் சேர்ந்த முதலாண்டிலே என் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். 

“நான் கற்பித்தது அவர்களிடம் சரியாக சென்றடைந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த பாசப்பிணைப்புக்கு பின் தான் இன்னும் பொறுப்புகள் அதிகமாகியிருப்பதாக உணர்கிறேன்,”

எனும் பகவானிடம், மாணவர்களின் மனதினிற்கினிய ஆசானாக இருந்து அண்ணனாக மாறியது குறித்து கேட்டப்போது,

image


“என் அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அம்மா தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அந்த வறுமையில் படித்தாலும், பள்ளிச் சூழல் எனக்கு மகிழ்வை தந்தது. நிச்சயம், என் பள்ளிக் காலத்தில் எனக்கிருந்த மனநிலையில் என் மாணவனும் இருக்கலாம். அதனால் ஒவ்வொருத்தர்களின் கதைகளையும் கேட்டறியத் தொடங்கினேன். 

எட்டுக் கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளியில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் பெற்றோர்கள் குறைந்த எண்ணிக்கையிலே வருவர். அதனால், எங்கள் தலைமையாசிரியர் நாமே மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கலாம் என்று கூறினார். அப்படித்தான், மாணவர்களின் பெற்றோர்கள் எனக்கு பழக்கமானார்கள். பின், என்னை அவர்களது வீட்டில் ஒருவனாக்கிவிட்டனர். 

”அவர்களது வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களுக்கு என்னையும் கலந்துக் கொள்ள அழைப்பர். ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் போன் செய்து நலம் விசாரிப்பர். இதுபோன்று ஏற்கனவே பலமுறை உச்சக்கட்ட அன்பால் என்னை கட்டிப்போட்டிருக்கின்றனர்,” என்று நெகிழ்கிறார் அவர். 

“நான் திரையில் நடித்ததை நீங்கள் நிஜத்தில் நிகழ்த்திவிட்டீர்கள்...”

கோலிவுட் ஸ்டார் முதல் பாலிவுட் பிரபலம் வரை பலரும் சோஷியல் மீடியாக்களில் பகவானை புகழ, பகவானின் நிஜ வாழ்க்கையை திரையில் நடித்துக் காட்டிய சமுத்திரக்கனியும், நடிகர் விஜய் சேதுபதியும் தொலைப்பேசியில் பகவானை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

image


“படத்தில் நான் நடித்ததை நிகழ்த்திட்டீங்க. ரொம்ப சந்தோஷம். இனிமேல், சில முட்டுக்கட்டைகள் வரலாம். அதையெல்லாம் தடையாக எண்ணாமல் போயிகிட்டே இருக்கனும் என்று சமுத்திரக்கனி சார் சொன்னாங்க. இந்த பாராட்டுக்கள் எல்லாம் தனிமனிதனான பகவானுக்கு கிடைத்தது இல்லை. என்னைவிட பன்மடங்கு நன்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்ன, அவர்கள் வெளிச்சத்துக்கு வாராமல் சத்தமில்லாமல் சாதனை நிகழ்த்துகின்றனர். அவர்களுக்குமானது இந்த பாராட்டுக்கள்,” என்ற பகவான் அடுத்த பள்ளியை நோக்கிய பயணத்தை தொடக்கிவிட்டார். 

ஆம், அரசாணையின் படி பணியிட மாற்றத்துக்கான ஆவணத்தை அருங்குளம் பள்ளியில் கொடுத்து சேர்ந்துவிட்டார். எனினும், மாணவர்களுடன் சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் பதாகைகளுடன், பகவானின் பணியிடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவர்கள் சுமூக நிலைக்கு திரும்பும் வரை, இதே பள்ளியில் பணியாற்ற உத்தரவு அளித்துள்ளது திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை.

தொடர்ந்து பயணியுங்கள் ஆசிரியரே... அருங்குளம் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு பகவான் தேவைப்படலாம்!

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags