பதிப்புகளில்

வானில் பறக்கும் ‘கபாலி’ ரூ.500 கோடி வசூலுடன் சாதனை புரியும்: 'கலைப்புலி' தாணு நம்பிக்கை!

Induja Raghunathan
30th Jun 2016
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விநியோகஸ்தராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். சிறுவயது முதலே கலைதாகம் கொண்டவர். தன்னுடைய புத்தாக்க எண்ணங்களுடன் வணிக யுக்திகளை புகுத்தி இத்துறையில் பல வெற்றிகளை குவித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்த பெருமை மிக்கவர். உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள மாஸ் சினிமாவான 'கபாலி' படத்தின் தயாரிப்பாளரான 'கலைப்புலி' தாணுவிடம் தமிழ் யுவர்ஸ்டோரி சிறப்பு நேர்காணல் கண்டது. தனது வணிக வெற்றி ரகசியங்களையும் யுக்திகளை பற்றி அவர் பகிர்ந்து கொண்டவை இதோ…

image


30 ஆண்டுகளாக சினிமா துறையில் தொழில் புரிகிறீர்கள்? உங்களின் இந்த பயணம் எப்படி தொடங்கியது? 

பள்ளி காலம் முதலே எனக்குள் கலைதாகம் இருந்தது. பேச்சுபோட்டி, பாட்டு போட்டி என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். சினிமா மீதான காதலால் இளம் வயதிலேயே தமிழ் திரைப்பட விநியோகஸ்தராக இத்துறையில் நுழைந்தேன். முதல் படத்தில், "வருவாளோ தேவி, தெரு ஓரம்" என்று ஒரு பாடல் எழுதிருக்கிறேன். பின், "நல்லவன்" படத்தில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்னேன். சில காலம் கழித்து இயக்கத்தை விட்டுவிட்டு, தயாரிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்து பல படங்களை தயாரிக்கத் தொடங்கினேன்.

சினிமா தொழிலில் வெற்றி காண நீங்கள் கையாளும் யுக்திகள் என்னென்ன?

நான் படங்களை விளம்பரப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவேன். என் படங்களில் தனித்துவத்தை எதிர்ப்பார்ப்பேன். திட்டமிட்ட அதே பட்ஜெட்டில், பிரம்மாண்டத்தை காட்டுவேன்.

"நான்கு ஷீட்யில் 100 போஸ்டர்ஸ் செய்வதற்குப் பதில், அதனை எட்டு ஷீட்டாக்கி, 50 போஸ்டர்ஸ் செய்வேன். ஹீரோக்களின் முகம் மட்டும் இருப்பது போன்ற 50 அடி கட்அவுட் வைத்திருக்கிறேன்.

ஆரம்பகாலத்தில் யார் படத்தின் விளம்பரத்திற்காக, ஒரு குழந்தை அழுவதுபோல் போஸ்டர் ஒட்டினோம். காரணம், அது ஏ- சர்ட்ஃபிகேட் படம். அதற்கு தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று குழந்தை அழுவது போல சித்தரிந்திருந்தேன்.

பட தயாரிப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்?  

இப்போது ஒரு சமயத்தில் பல படங்கள் வெளிவருகின்றன். எத்தனைப் படங்கள் வெளிவந்தாலும், நம் படம் தனித்து இருக்க வேண்டும். எந்த விதத்திலும் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. விளம்பரத்திலும், வசூலிலும் புரட்சியை உருவாக்க வேண்டும் என்றே நினைப்பேன்..

தொடர்ந்து படங்களை வெற்றிகரமாய் தயாரிக்க, உத்வேகமாய் உங்களுக்கு இருப்பது எது? 

முதலில் ஒரு வினியோகஸ்தராக எனது சினிமா பயணம் தொடங்கியது. அது வியாபார யுக்தியை எனக்குக் கற்று தந்தது. இத்துறைப் பற்றிய தெளிவான புரிதல், அனுபவம் என்னை ஒரு வினியோகஸ்தரிலிருந்து தயாரிப்பாளராக மாற்றியது. சினிமாத்துறை மீதான் அதீத ஆர்வமே இன்றுவரை எனக்கு உத்வேகத்தை தந்து, மரியாதைக்குரிய ஒரு நிலையான இடத்தை எனக்கு தந்துள்ளது.

படத்தை பிராண்டிங் செய்ய, எந்தெந்த வழிகளில் என்னென்ன யுக்திகளை கையாளுகிறீர்கள்?

சினிமாத் துறையைப் பொறுத்தவரையில், பிராண்டிங் என்பது முழுக்கமுழுக்க கதாப்பாத்திரங்களைப் பொறுத்து உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த "கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்" படத்தை நான் தயாரித்தபோது, ப்ரூ மற்றும் ஃபேர் & லவ்லி நிறுவனங்களிடம் இருந்து, பிராண்டிங்காக சலுகைகள் வந்தன. உலக அழகி ஐஸ்வர்யா என்பதால், ஃபேரன் லவ்லியை நான் தேர்வு செய்தேன். "என் மேனியின் ரகசியத்தை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என்று படத்தின் டைட்டிலை விளம்பரத்தில் சேர்த்துவிட்டேன். அதேபோல், கலைஞர்கள், கதாபாத்திரங்கள் கொண்டு, படைப்பாற்றலுடன் பிராண்டிங் செய்வது எனது பழக்கம்.

image


ரஜினுக்கும், உங்களுக்கும் இருக்கும் நட்புறவு பற்றி கூறுங்கள்?

என் முதல் படத்தில் இருந்தே, எனக்கும் அவருக்கும் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பைரவி திரைப்படத்தில் ரஜினியின் ஸ்டில்களை பார்த்து அசந்துபோன நான் அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ எனும் டைட்டிலை அவரது பெயரோடு இணைத்து விளம்பரம் செய்தேன். அண்ணாமலை, முத்து, பாட்ஷா பட சமயத்திலேயே அவரது படத்தை தயாரிக்க இருந்தேன் ஆனால் சில சந்தர்ப்ப சூழல்களினால் அந்த வாய்ப்புகள் தவறிபோயின.

ஆனாலும், பொறுமையாகக் காத்திருந்தேன். 'தெறி' படத்தின் போதுதான், ரஜினிகாந்த் அவரது அடுத்த படத்தை தயாரிக்கும் படி என்னிடம் சொன்னார். அவ்வாறு உருவானதே கபாலி.  

தொழில் ரீதியில், ஒரு தயாரிப்பாளராய் சூப்பர்ஸ்டாரை எப்படி கையாளுகிறீர்கள்?

நாம் கேட்பதற்கு முன்னரே, அள்ளி தரும் வள்ளல் அவர். நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ, அதைவிட அற்புதமான ஈடுபாடுடன் நடிப்பவர் அவர். பட ஆரம்பத்தில் எப்படி பேசி முடிவு செய்து கொண்டோமோ, அதேபோல் அழகாய் இயக்குனர் ரஞ்சித்தும் படத்தை முடித்து கொடுத்திருக்கிறார்.

கபாலி படத்திற்கு என்னென்ன தொழில் யுக்திகள் கையாண்டுள்ளீர்கள்?

இதுவரை இல்லாத வகையில் புதுவித விளம்பரத்தை கபாலி படத்திற்காக செய்திருக்கிறோம். முதன்முறையாக 'ஏர் ஏசியா' இப்படத்தின் ஏர்லைன் பார்டனராக எங்களுடன் இணைந்துள்ளனர். ஏர் ஏசியா கபாலி படத்திற்காக, குறைந்தவிலை விமானங்களை சில வழித்தடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, கபாலி படம் பெயிண்ட் அடிக்கப்பட்ட விமானம் ஊரெங்கும் பறக்கப் போகிறது, மக்கள் அதை கண்டு உற்சாகப்படப் போகின்றனர். இது ஒரு பிரம்மாண்டமான விளம்பரம் மாதிரி.

image


image


கபாலி, ரிலீசுக்கு முன்பே 200 கோடி பிசினஸ் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது? உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

உண்மையில் கபாலி படத்தின் வர்த்தகம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. கபாலியின் அமெரிக்க உரிமை விற்பனை எதிர்பார்க்காத அளவு 8.6 கோடிக்கும், ஆஸ்திரேலியா 1.65 கோடிக்கும் முடிந்துள்ளது. என்னைப்பொறுத்தவரை ‘கபாலி 500 கோடி வசூலை தொடும் என இலக்கு வைத்துள்ளேன். அது எல்லாவித ரெக்கார்டுகளையும் உடைத்தெறியும்.” 

வெற்றிக்காக உங்களை எப்படி ஈடுபடுத்தி கொள்கிறீர்கள்? 

தேடலும், உழைப்பும்தான். காலை 6 மணிக்கு எழுந்து சாமி கும்மிட்டு வேலை தொடங்குவதிலிருந்து, இரவு 1 மணி வரை, படத்தைப் பற்றிய அதே சிந்தனைதான் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். முழு ஈடுபாட்டுடன் என் பணியைச் செய்வேன்.

நான் அண்மையில் தயாரித்த நடிகர் விஜய் நடித்த "தெறி" படம்தான் அவரது படங்களிலேயே அதிக வருவாய் ஈட்டிய படம். 

படங்கள் தோல்வி அடைய முக்கியக் காரணங்கள் என்ன? 

கடந்து ஐந்தாறு வருடங்களாக, 100 படங்களில் 90% சதவீதம் தோல்வியை சந்திக்கின்றன. வருடத்திற்கு 10 படங்கள் தான் சிறப்பாக ஓடுகிறது, அதில் 5 சூப்பர் ஹிட் ஆகும், 5 படங்கள் சராசரியாக ஓடும்.

கட்டுமானமும் கட்டுபாடும் இல்லாத தொழில் என்பதால் இத்துறையில் பலர் தொழில் புரிய நுழைந்து விடுக்கிறனர். சிலர் முதலீடு செய்த பணம் வந்து விடும், பிரச்சனையில்லை என்று நினைக்கின்றனர். சிலர் தானே இயக்குவது, தானே தயாரிப்பது, தானே நடிப்பது என மொபைல்களிலே படம் எடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், முக்கியத்துவத்தை அறியாமல், ஆர்வத்தில் களம் இறங்கிவிடுகின்றனர். அனுபவமின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

வளர்ந்து வரும் இளம் தயாரிப்பாளர்களுக்கு உங்கள் அறிவுரை?

"வரும்முன் காத்தலே சிறந்தது" என்பது போல், தயாரிப்பதற்கு முன் துறையில் எங்களைப் போல் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கற்றறிந்து, களத்தில் இறங்குவது பாதுகாப்பானது.

புகழ் பெற்ற நடிகர்களின் படங்கள், அவர்களின் பெயருக்காகவே சிறப்பாக ஓடிவிடும். அதனால், புதுமுக படங்களின் கதை, வலிமையானதாக இருக்க வேண்டும். ஒரு படத்தின் ஹீரோவிற்கு எவ்வளவு வசூல் ஆகுமோ, அதில் 80% செலவழிப்பது மட்டுமே நல்லது.

இறுதியாக கபாலி திரைப்படம் பற்றி சிறப்பான தகவல்? 

தாய்லாந்தில் கேளிக்கை, கூத்தாட்டம், கொண்டாட்டம் நிறைந்த ஒரு தெரு இருக்கிறது. ரஜினி சாரைக் கொண்டு அங்கு ஷூட்டிங் செய்ய முடியாததால், இங்கே ஸ்டுடியோவிலே அந்த தெரு போன்று செட்டு போட்டோம். அந்த சீன் அருமையாக வந்திருக்கிறது. மக்களுக்கு நிச்சயம் அது மாயஜாலம் போல இருக்கும்.

ஜூலை மாதம் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. . 

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags