குறைந்த பட்ஜெட்டில் நிறைவாக புத்தாண்டை கொண்டாட எளிதான 8 யோசனைகள்!
கரோனா காலத்தின் தாக்கத்தால் இன்னமும் கூட நம்மில் பலரும் பொருளாதார ரீதியில் மீண்டெழாமல் இருக்கலாம். அதற்காக, நமக்கு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்காமல் இருக்க முடியுமா என்ன? - இதோ நம் கையைக் கடிக்காத பட்ஜெட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான சில யோசனைகள்...
ஆண்டு முழுவதும் எத்தனையோ பிரச்சினைகள், துயரங்கள், போராட்டங்களை எதிர்கொண்டிருந்தாலும், புதிதாக ஓர் ஆண்டு பிறக்கும்போது, அந்த ஆண்டை குதூகலத்துடன் வரவேற்பது நம்முள் பாசிட்டிவ் வைப்ஸ் பரவச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
எனவேதான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாகிறது. எனினும், நம்மில் பலரும் நிதிச் சிக்கல்களில் நீந்திக்கொண்டிருக்கும் வேளையில், பெரிதாக செலவுகள் செய்யாமல் சிறிய பட்ஜெட்டில் நிறைய மகிழ்ச்சிப் பெறத்தக்க புத்தாண்டுக் கொண்டாட்ட யோசனைகளைப் பார்ப்போம்.
புத்தாண்டை கொண்டாட சில யோசனைகள்
ஓர் எளிய கேம்ப் ஃபையர் (Campfire)
மனதுக்கும் உடலுக்கும் குளிர் தரும் காலத்தில் பிறக்கும் புத்தாண்டை இதமான அனுபவத்துடன் வரவேற்கும் வழிதான் ‘கேம்ப் ஃபயர்’. நம் குடும்பத்தினரும், நம் நண்பர்களும் ஒன்று கூடி, நம் வீட்டுக்கு அருகிலே ஒரு வெட்ட வெளியைத் தேர்ந்தெடுத்து அங்கு கேம்ப் ஃபையர் தயார் செய்யலாம்.
மொபைல் அல்லது ஸ்பீக்கர்கள் மூலம் துள்ளல் இசைப் பாடங்களைப் போட்டு உற்சாகமாக நடனமாடலாம். நம் கேங்கில் நன்றாகப் பாடக் கூடியவர்களை பாடவிட்டு கைத்தட்டி ரசித்து மகிழலாம். கேக்குகள், ஸ்நாக்ஸுகளை அவ்வப்போது உள்ளே தள்ளலாம். கடைசியாக, வீட்டில் ஒன்றாக வட்டமிட்டு அமர்ந்து வீட்டிலேயே தயாரித்த இரவு விருந்தை ஒரு பிடி பிடிக்கலாம்.
வீட்டுக்குள் டிஜே பார்ட்டி (DJ Party)
வீட்டில் பெரிய ஹால் இருந்தாலோ அல்லது மொட்டை மாடியிலோ சிம்பிளாக டான்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யலாம். வீடு அல்லது மொட்டை மாடியை பலூன்களாலும் டெகரேஷன் பொருட்களாலும் அலங்கரிக்கலாம். நல்ல ஸ்பீக்கர் ஒன்றை ஏற்பாடு செய்து துள்ளல் இசைப் பாடல்களை ஒலிக்கச் செய்து உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்கலாம்.
நடனப் போட்டி
வீட்டுக்கு டிஜே பார்ட்டியின் நீட்சிதான் இது. குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து சூப்பரான நடனப் போட்டியை நடத்தலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், ஜோடி ஜோடியாகவும், குழுவாகவும் நடனப் போட்டிகளை வடிவமைக்கலாம். எல்லாருமே சேர்ந்து பரிசுப் பொருட்கள் வாங்கி, பல்வேறு கேட்டகரி நடனப் போட்டியில் வெல்வோருக்கு பரிசு வழங்கியும் மகிழலாம்.
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி உங்கள் பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போரையும் ஒன்று திரட்டி கூட இதுபோன்ற நடனப் போட்டிகள் வைத்து ஜாலியாக புத்தாண்டை வரவேற்கலாம்.
பாட்டுக்குப் பாட்டு
வீட்டிலோ அல்லது மொட்டை மாடியிலோ சிம்பிளான டெகரேஷன்கள் செய்து, அனைவரும் வட்டமாக அமர்ந்து பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தலாம். சிறப்பாக பாடுவோருக்கு பரிசுகளும் வழங்கி மகிழலாம். வீட்டு உறுப்பினர்கள் தங்கள் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் நண்பர்கள், உடன் பணிபுரிவோரையும் அழைத்து உற்சாகமாகப் பாட்டுப் பாடி புத்தாண்டை வரவேற்கலாம். சுவைமிகு நல்ல உணவும் பாட்டும் கொடுக்கும் உற்சாகத்துக்கு ஈடேது?!
80ஸ், 90ஸ் கேம்கள் (Games)
புத்தாண்டை வரவேற்கும் இரவில் மொபைல்களுக்கெல்லாம் ஓய்வு அளித்துவிட்டு, நம் உறவினர்கள் - நண்பர்களில் 80ஸ், 90ஸ் கேம்களில் எக்ஸ்பர்ட்களைக் கண்டறிந்து அவர்கள் மூலம் அந்தக் கால விளையாட்டுகளை அரங்கேற்றலாம். இல்லையேல், வீட்டிலேயே செஸ், கேரம் டோரன்மென்ட்டுகளை ஏற்பாடு செய்து விளையாட்டுகளுடன் புத்தாண்டை வரவேற்கலாம்.
வாசிப்புடன் புத்தாண்டு (Books)
வாசிப்புப் பழக்கமே குறைந்து வரும் சூழலில், உறவினர்கள் - நண்பர்களுடன் இணைந்து வீட்டுக்குள்ளோ அல்லது மொட்டை மாடியிலோ நல்ல வெளிச்சத்தை ஏற்பாடு செய்து சிம்பிளான வாசிப்புக் கூட்டம் ஒன்றை நடத்தலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கதைகள், கவிதைகளை சிறு மேடையில் ஏறி மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டலாம்.
இயன்றால், நாம் அனைவரும் சொந்த எழுத்துகளையும் வாசித்துக் காட்டலாம். அதற்காக, முன்கூட்டியே கவிதைகள், கதைகள் எழுதி வைத்துக்கொள்ளலாம்.
கதைசொல்லி மகிழ்வோம் (Story-telling)
நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் முன்கூட்டியே சொல்லிவைத்து, ஆளுக்கொரு கதை படித்து வரச் சொல்ல வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், தங்களது ஆல்டைம் ஃபேவரிட் சினிமா ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
வீட்டு வாசலில் வட்டமிட்டோ, வீட்டுக்குள் பெரிய ஹாலிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து ஒவ்வொருவரும் பிறருக்கு கதை சொல்லலாம். ஒருமுறை இதை முயற்சி செய்து பாருங்கள். இதில் கிடைக்கும் மன நிறைவால் அவ்வப்போது இப்படி ஒரு நிகழ்வை அரங்கேற்றத் தொடங்கிவிடுவீர்கள்.
மினி பிக்னிக் (Mini Picnic)
பிக்னிக் உடன் புத்தாண்டை வரவேற்பதும் சிறந்த வழியே. அதற்காக, நீண்ட தூரமோ அல்லது பிரபலமான ஸ்பாட்களுக்கோ போக வேண்டாம். நாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள மலைகள், வயல்வெளிகள், தோட்டங்கள், அருவிகள், கடற்கரைகள் முதலான இடங்களுக்கு நண்பர்கள், உறவினர்களுடன் ஜாலியாக விசிட் அடிக்கலாம். அல்லது, கொஞ்சம் லாங் டிரைவ் கூட ப்ளான் பண்ணலாம். இந்தப் பயணத்துக்கு தேவையான உணவை வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Edited by Induja Raghunathan