8 மாதங்களுக்கு பின் வளர்த்த குடும்பத்துடன் இணைந்த ‘கூவி' - நெஞ்சை உறையவைக்கும் கதை!

கேரள தமிழரின் நெகிழ்ச்சி!
4 CLAPS
0

கடந்த ஆண்டு ஆகஸ்டில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெட்டிமுடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக தமிழர்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் அழிந்துபோயின. இதில் தங்கியிருந்த தமிழர்கள் இரவோடு இரவாக உறக்கத்திலேயே தங்கள் உயிரை இழந்தனர்.

கிட்டத்தட்ட 63 பேர் சிக்கி காணாமல் போயினர். இவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படை 8 நாள்களுக்கு மேலாக தேடி மீட்டனர். அப்போது அந்த பகுதியில் கூவி என்ற நாய் அங்கும் இங்குமா சுற்றித் திரிந்தது. இந்தக் கூவி நாயை நிலச்சரிவில் உயிரிழந்த ஒரு குடும்பம் தான் வளர்த்து வந்துள்ளது.

இதையடுத்து தனது எஜமானரின் குடும்பத்தை தேடுவதற்காக கூவி மீட்புப் படையினருடன் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. சில நாட்களுக்கு பிறகு மோப்ப சக்தி மூலமாக, தன்னை வளர்த்த எஜமானரின் இரண்டு வயது குழந்தை தனுஷ்காவின் சடலத்தை மீட்டது. அப்போதே கூவி குறித்த தகவல் இணையங்களில் வெளியாக கூவி நெட்டிசன்களின் இதயங்களை வென்றது.

இதற்கிடையே, மீட்புப் பணிகளின் கூவியின் செயல்பாடுகளை பார்த்த, கேரள மாநில மோப்ப நாய் பயிற்சியாளரான அஜித், கூவியை தன்னுடன் அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க விரும்பினார்.

ஆனால் அதற்கு அரசு அனுமதி வேண்டும் என்பதால் இடுக்கி மாவட்ட காவல்துறை மாற்று கலெக்டரிடம் விண்ணப்பித்து, முறையான அனுமதி வாங்கி கூவியை கேரள காவல்துறையில் இணைத்தார். கூவி கேரள காவல்துறையில் பயிற்சிபெற்று வந்த காலகட்டத்தில் அதன் எஜமானர் குடும்பத்தில் இருந்து மீட்கப்பட்ட 70 வயது பழனியம்மா, தனது மகன் ஒருவருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர்கள், கூவியை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புவதாக ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினர்.

இதை அறிந்த கேரள காவல்துறை கூவியை மீண்டும் பழனியம்மா குடும்பத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி போலீஸ் தலைமையகத்தில் முறையான அனுமதி வாங்கிய இடுக்கி காவல்துறையினர், கடந்த வெள்ளிக்கிழமை, கூவியை பழனியம்மா இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.

கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து எஜமானர் குடும்பத்தை சந்தித்தது கூவி. அப்போது பழனியம்மா, கூவியின் பெயரைச் சொல்லி அழைக்க உடனே ஓடிச் சென்று அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த பாச சம்பவத்தை அங்கிருந்த போலீஸ்காரர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

கூவி மீண்டும் தங்களுடன் இணைந்த சந்தோசத்தில் பேசிய, பழனியம்மா,

“போலீஸார் கூவியை அழைத்து வந்த போது நான் கூவியின் பெயரைச் சொல்லி கூப்பிட்டேன். என் சத்தத்தை கேட்டதும் அவள் என்னிடம் ஓடி வந்து ஒட்டிக்கொண்டாள். நாங்கள் மீண்டும் கூவியை பார்ப்போம், மீண்டும் அது எங்களுடன் இணையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. அதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை," என நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார்.

தகவல் உதவி-thenewsminute | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world