பதிப்புகளில்

லோக்கல் ட்ரெயின் ஃபுட்போர்ட் தொடரும் உயிர் இழப்புகள்: தொங்கும் பயணிகளை காக்கும் பிரச்சாரம்!

லோக்கல் ரயில்களில், ஃபுட்போர்டில் தொங்கியபடியே பயணிப்பவர்கள் ஏராளம். சில தினங்களுக்கு முன்பு சென்னை ட்ரெயினில் இருந்து 5 பேர் கீழே விழுந்து உயிர் இழந்தனர். இது போன்ற விபத்துகளை தவிர்க்க மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார். 

27th Jul 2018
Add to
Shares
80
Comments
Share This
Add to
Shares
80
Comments
Share

மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்திய நகரங்களில் மும்பையும் முதன்மையானது. எனவே, சாலைகளிளும் நெரிசல் காணப்படும். பயணங்களுக்கு ஏதுவானதாக இருப்பது லோக்கல் ரயில்கள் மட்டும் தான் என்பது மும்பையை சென்றடைந்தவுடன் புரிந்துவிடும். கூடவே, பிற போக்குவரத்து வசதிகளை விட, லோக்கல் ரயில்கள் மலிவானது என்பதால், பெரும்பாலான மக்கள் லோக்கல் ரயில்களையே தேர்ந்தெடுப்பார்கள். 

மும்பையில் லோக்கல் ரயில் பயணம் சில நொடிகளில் மரண பயத்தை காட்டிவிடும் என்பது அந்த ரயில்களில் பயணித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் எல்ஃபின்ஸ்டன் ரோடு ஸ்டேஷனில் நடந்த கூட்ட நெரிசலில் சில உயிர்கள் பலியாகின என்பதை மறக்க முடியாது. கூடவே, ரயில்களில் ஃபுட்போர்டில் தொங்கி கொண்டிருப்பவர்களில் சிலர், பிடிப்பதற்கு ஏதுவான வசதி இல்லாமல் நழுவி விழுந்து இறக்கின்றனர். அல்லது, ரயில் செல்லும் பாதையின் ஓரங்களில் இருக்கும் மின் கம்பிகளில் மோதி கீழே விழுபவர்களும் உண்டு. 

அதே போல் சில தினங்களுக்கும் முன் சென்னை எலக்ட்ரிக் ரயிலில் இருந்தே விழுந்து ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தது, மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 

ஜூன் மாதம் வரை, சென்னை லோக்கல் ரயில்களில் இருந்து தவறி விழுந்தவர்களில் எண்ணிக்கை மட்டுமே 39 ஆக இருக்கிறது. ஏறத்தாழ நான்காயிரம் பேர், ஃபுட்போர்டில் பயணம் செய்ததற்காக அபராதம் செலுத்தியிருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி தொகுப்பு. 
பட உதவி : thebetterindia.com

பட உதவி : thebetterindia.com


2017 ஆம் ஆண்டு மட்டுமே மும்பையில் ரயிலில் இருந்து விழுந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 654 ஆக இருக்கிறது. இதில் ஒரு பெரும் பங்கு, தவறி விழுந்ததால் இறந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது உண்மை. 

இந்தப் பிரச்சினையை கையாள அரசாங்கம், அவ்வப்போது புது ரயில்களை இயக்கத் தொடங்குவது உண்டு. என்றாலுமே, இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறியபடியே தான் பயணிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. இந்நிலையில், ஃபுட்போர்டில் நிற்பவர்கள் கீழே விழாமல் இருக்கம், ‘ஃபேக் பக்கட் ஜகா பனா’ (பேகை பிடியுங்கள், இடம் உண்டாக்குங்கள்) என்றொரு பிரச்சாரத்தை ரயில் ரயிலாக ஏறி சொல்லிக் கொண்டிருக்கிறார் மும்பையை சேர்ந்த 26 வயது இளைஞர் நிஷாந்த் பங்கேரா. 

2015 ஆம் ஆண்டு, கோபர் - திவா ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார் 21 வயதான பவேஷ் நகாடே. இது பரவலான விவாதங்களை தொடங்கியது என்றாலும், அதற்கு முன்னரே இந்த பிரச்சினையை பற்றி பேசத் தொடங்கியிருந்தார் நிஷாந்த் பங்கேரா. ஒரு பயண நிறுவனத்தின் கார்ப்பரேட் தொடர்பு துறையில் பணியாற்றும் நிஷாந்த், MUSE எனும் இளைஞர் அமைப்பையும் நடத்திவருகிறார். மும்பை லோக்கல் ரயில்களில் நடக்கும் மரணங்களை தடுத்து நிறுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. 

தி பெட்டர் இந்தியா தளத்திற்கு பேட்டியளித்திருந்த நிஷாந்த்,

“ட்ரெயின் கிளம்பும் ஸ்டேஷனில் இருந்து ஏறுபவர்கள் உட்கார்ந்து கொண்டே பயணிக்க முடியும். உட்கார்ந்து கொண்டே பயணிப்பது மட்டுமில்லாமல், இவர்கள் தங்களின் பேக்கை லக்கேஜ் வைக்கும் அடுக்குகளிலும் வைப்பார்கள். ஆனால், இடையிடையே ஏறி இறங்குபவர்களால் பேக்கை வேறெங்கும் வைக்க முடியாது,” என்று சொல்லியிருக்கிறார். 
Image : thebetterindia.com

Image : thebetterindia.com


நின்று கொண்டிருப்பவர்களின் பைகள், ரேக்குகளில் வைக்கப்பட்டால், கூடுதலாக நான்கு சதுரடி இடம் ரயிலில் உண்டாக்கப்படுகிறது என்பது நிஷாந்தின் யோசனை. இதை கண்டறிந்த உடனேயே, ரயில் ரயிலாக ஏறி மக்களுக்கு இதைப்பற்றி சொல்லத் தொடங்கினார். உட்கார்ந்திருப்பவர்கள் தங்கள் பைகளை மடியில் வைத்துக் கொண்டு, நின்று கொண்டிருப்பவர்களின் பைகளை வாங்கி ரேக்கில் வைத்தால், யாராவது ஒருவர் கிழே விழுவது தடுக்கப்படும் என்று தன் நண்பர்களுடம் இணைந்து பிரச்சாரம் செய்திருக்கிறார். 

ஒருக்கட்டத்தில் இந்த பிரச்சாரம் மட்டுமே மக்களை சென்றடையாது என்பதை உணர்ந்து, ரயில்களில் இதை அறிவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருக்கிறார். கூடவே, பைகளை மாட்டிக் கொள்ள நிறைய ஹுக்குகள் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். ரயிலில் திரும்ப திரும்ப இது அறிவிக்கப்படும் போது, மக்கள் மனதில் அது ஆழமாக பதிந்து ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்பது நிஷாந்தின் எண்ணம். 

Image : thebetterindia.com

Image : thebetterindia.com


2015 ஆம் ஆண்டு இந்த விண்ணப்பம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இரண்டு வருடங்களுக்கு எந்த பதிலுமே இல்லாமல் இருந்தது. மீண்டும் 2017 ஆம் ஆண்டு, புதிதாக பிரச்சாரத்தை நிஷாந்த் தொடங்கினார். விண்ணப்பமும் அனுப்பினார். 

ஒரு செய்தித் தாள், நிஷாந்தை பேட்டி எடுத்த பிறகு, அரசிடம் இருந்து (அதிகாரப்பூர்வமாக இல்லாமல்) பதில் வந்திருக்கிறது. நிஷாந்தின் யோசனையை அங்கீகரிக்க அரசு முன் வந்தது மட்டுமல்லாமல், அவரை பாராட்டவும் செய்திருக்கிறது. 

உடனடியாக இல்லையென்றாலும், கூடிய விரைவில், மும்பை ரயில்களிலும் பாதுகாப்பாக பயணிக்கலாம் எனும் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார் நிஷாந்த். இதே போல சென்னையிலும் இளைஞர்கள் ஒன்று கூடி ரயில் பயணிப்போர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அகால விபத்துகளும், மரணங்களும் தடுக்கப்படலாம்.

தகவல் உதவி:  thebetterindia.com | தமிழில்: ஸ்னேஹா

Add to
Shares
80
Comments
Share This
Add to
Shares
80
Comments
Share
Report an issue
Authors

Related Tags