ஜெஃப் பெசோஸ் உடன் விண்வெளிக்குப் பயணிக்கும் 82 வயதான பெண்மணி!
விர்ஜின் கேலடிக் நிறுவனம் மூலமும் பயணிக்க திட்டம்!
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் அடுத்த வாரம் தனது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் 'நியூஸ் ஷெப்பர்ட்' ராக்கெட் மூலம் விண்வெளிக்கு பயணப்பட இருக்கிறார். 'Blue Origin' நிறுவனத்தின் இந்த முதல் பயணத்தில் ஜெஃப் பெசோஸ் தனது சகோதரருடன் விண்வெளிக்கு பறக்க இருக்கிறார்.
இவர்கள் இருவரை தவிர இந்தப் பயணத்தில் மூன்றாவது நபராக விண்வெளி டிக்கெட்டை ஏலம் எடுத்த நபர் பயணிக்க இருக்கிறார். இதேபோல் இதே பயணத்தில் நான்காவது நபராக ஜெஃப் பெசோஸ் செல்லவிருக்கிறார் 82 வயது மூதாட்டி ஒருவர். அவர் பெயர் மேரி வாலஸ் ஃபங்க். விண்வெளிக்குச் செல்வது ஃபங்க்கிற்கு முதல்முறையாக இதன்மூலம் அமையப்போகிறது.
மேலும், விண்வெளிக்குச் செல்லும் மிக வயதான நபர் என்ற பெருமையையும் ஃபங்க் இதன்மூலம் பெற இருக்கிறார். இந்த விஷயத்தில் இன்னொரு சுவாரஸ்யம் இருக்கிறது. பெண் விமானியாக இருந்து ஓய்வு பெற்ற ஃபங்க் 60 ஆண்டுகள் முன்பே விண்வெளிக்குச் செல்ல வேண்டியது.
1961 ஆம் ஆண்டில், தனது 22வது வயதில் "மெர்குரி 13" என்று அழைக்கப்படும் பெண்கள் மட்டுமே செல்லும் விண்வெளி பயணத்துக்கு ஃபங்க் தேர்வு செய்யப்பப்பட்டிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். ஆனால் அந்த பயணத் திட்டம் ரத்து செய்யப்பட ஃபங்க்கின் கனவு கனவாக இருந்துள்ளது.
பின்னர் தான் பெண் விமானியாகவும், பிறகு பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் முதல் பெண் பாதுகாப்பு ஆய்வாளராக நீண்ட காலமாக பணியாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையே, தான் அவருக்கு ஜெஃப் பெசோஸ் உடன் பயணிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில், தனது 11 நிமிட விண்வெளி பயணத்தில் தனது குழுவினருடன் ஃபங்க்கையும் சேர்ப்பதாக பெசோஸ் அறிவித்தார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர்,
“இனி நீண்ட காலம் யாரும் காத்திருக்க வேண்டியதில்லை. எங்களின் ஒரு மரியாதைக்குரிய விருந்தினராக ஃபங்க் எங்களுடன் பறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று அறிமுகம் செய்தார்.
இதற்கிடையே, இதே ஃபங்க் ஒரு தசாப்தம் முன்பாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனம், மூலம் விண்வெளி செல்ல 200,000 டாலர் பணம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளிக்குச் செல்லும் வகையில் இந்தத் தொகையை முன்பணமாக செலுத்தி இருப்பதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது பெசோஸ் உடன் பயணிக்க இருக்கும் போதிலும், விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் இருக்கையையும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் ஃபங்க்கிற்கு இல்லை என்று தெரிகிறது. இதனை ஃபங்க்கின் ஏஜென்ட் உறுதியும் படுத்தியிருக்கிறார்.
“தற்போதையை கட்டத்தில், ஆமாம், வாலி விர்ஜின் கேலக்டிக் உடன் பறக்க திட்டமிட்டுள்ளார்," என்று அவர் கூறியிருக்கிறார்.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது யூனிட்டி ராக்கெட்டின் முதல் பயணத்தை 11ம் தேதி தான் முடித்தது. இதன் மூலம் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் வரலாற்று சாதனை நிகழ்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை, பிரான்சனும் அவரின் குழுவில் இருந்த மூன்று பேரும் பூமிக்கு 55 மைல் தொலைவில் பறந்து, பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சுமார் ஐந்து நிமிடங்கள் மிதந்து, பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். இருப்பினும், விர்ஜின் அடுத்த ஆண்டு விண்வெளி சுற்றுலாப் பயணிகளுக்கான விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே 600 டிக்கெட்டுகளை ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உள்ளிட்ட நம்பிக்கையான விண்வெளி சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.