பதிப்புகளில்

தொழில்முனைவில் ஒரு திட்டம் தோல்வியடைந்தால் அடுத்து ப்ளான் தயாராக இருக்க வேண்டும்: மேகா பையா

YS TEAM TAMIL
22nd Dec 2015
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

3டி அச்சு மூலமாக பொருட்கள் தயாரிக்கும், "இன்ஸ்டாப்ரோ3டி" (Instapro3D) நிறுவனர் மேகா பையா சிறுவயதிலேயே கற்றலில் ஆர்வம் மிகந்த குழந்தையாக இருந்திருக்கிறார். டிஸ்கவரி சேனலும், என்சைக்ளோபீடியாவும் தான் அவருக்கு சிறந்த தோழர்களாக இருந்திருக்கின்றன.

மேகாவின் வாழ்க்கையில் அவருடைய தந்தை அவருக்கு மிகப் பெரிய தாக்கம். மேகாவின் சிறு வயதில், வீட்டில் ஏதாவது மின் பொருட்கள் வேலை செய்யாமல் போனால், அவருடைய அப்பா, அதை திறந்து சரி செய்ய முயற்சி செய்வாராம், “பெரும்பாலும் அவை வெற்றிகரமாகத் தான் முடியும்” என அதை சிரித்துக் கொண்டே நினைவு கூறுகிறார். தொழில்நுட்பத்தில் எப்போதும் ஆர்வம் இருக்கும் மேகா, தொழிற்சாலையில் இயந்திரங்கள் எப்படி வேலை செய்கிறது, அவை பழுதடையும் போது அதை அப்பா எப்படி சரி செய்கிறார் என்பதையெல்லாம் பார்க்க அப்பாவோடு தொழிற்சாலைக்கு செல்வாராம்.

image


கடந்த கோடை காலத்தில், பெண்கள் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியும் போது, அதன் கூர் முனை புற்களுக்குள் சென்று, வெளியிடங்களில் நடப்பதற்கு ஏதுவானதாக இல்லாமல் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுக் காணப் போவதாய் முடிவு செய்தார் மேகா. “அதனால், நடக்கும் போது, கூர்முனைகள் தரையில் புதையாமல் இருக்க, அவற்றிற்கு ஒரு மூடி வேண்டும் என நினைத்தேன். ஒரு வழியாக வடிவமைப்பை முடித்தப் பிறகு, அதன் உற்பத்தி மாதிரியை செய்ய அதிக அளவிலான முதலீடு தேவைப் பட்டது. அப்போது தான் 3டி பிரிண்டிங் பற்றி அறிந்து கொண்டு அந்தத் துறையைப் பற்றி தெரிந்துக் கொண்டேன்”, என்கிறார் மேகா.

அந்தத் துறையை ஆழக் கற்றதன் மூலமாகத் தான் இன்ஸ்டாப்ரோ3டி பிறந்தது. இன்ஸ்டாப்ரோ 3டி, சிந்தனையாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையேயான இடைவெளியை குறைக்கும் நோக்கோடு பிறந்தது என்கிறார் மேகா.

3டி அச்சு

மேகாவை பொறுத்தவரை, 3டி அச்சு முறை இந்தியாவிற்கு புதிது. மேலும், பொதுமக்களை இன்னும் சென்றடையவில்லை. “இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி முதன்முறையாக தெரிந்துக் கொண்டபோது, தொன்னூறுகளின் ஜெட்சன்ஸ் கார்ட்டூன் நிஜத்தில் வந்ததுபோல அத்தனை உற்சாகம் அளிப்பதாய் இருந்தது. 3டி அச்சு மூலமாக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்கிறார் உற்சாகமாய்.

image


இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தில் தற்போது, நான்கு தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்று அமைந்திருக்கிறது. ஒரு சேவை நிறுவனமாக இயங்கும் இன்ஸ்டாப்ரோ3டி வடிவமைப்பாளர்கள், உருவாக்குநர்கள், மாணவர்கள், கட்டிட கலைஞர்கள், பொறியியலாளர்கள், பேக்கரிகள் மற்றும் நகை வடிவமைப்பவர்களோடு ஒருங்கிணைந்து, மாதிரி பொருட்களை உருவாக்கி, நேரடியாக டிஜிட்டல் உற்பத்தியும் செய்கிறது.

தனக்கான பாதையை வடிவமைத்த கதை

மேகா, பள்ளிக் காலத்தில் அறிவியலில் அதிக ஆர்வம் காட்டியிருந்தாலும் கூட, இளநிலை கல்வியின் போது அதில் மாற்றம் ஏற்பட்டது. “2012ல் லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து வணிகப் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்ற போதிலும், தொழில்நுட்பத்தின் மேல் இருந்த ஆர்வம் மட்டும் மாறவில்லை” என பகிர்ந்துக் கொள்கிறார்.

பட்டப்படிப்பிற்கு பிறகு மேகா எல்.ஈ.டி லைட்டிங் மற்றும் குறிப்பான்கள் தயாரிக்கும் தன் குடும்பத் தொழிலில் இணைந்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, சுயமாக தன் நிறுவனத்தை ஆரம்பித்தார். “அப்பாவின் தொழிற்சாலையில், அமைப்புகளும் நெறிமுறைகளும் ஏற்கனவே இருந்தன. அங்கு என்னுடைய அடையாளம் அப்பாவின் மகளாக இருப்பது மட்டுமே. எனக்கு அதை விட அதிகமான ஒரு நிலை வேண்டும், அதனால், என் ஆற்றலையும், சக்தியையும் கண்டறிய விரும்பினேன்” என்கிறார் மேகா.

மிகப் பெரிய சவாலாய் இருந்திருக்கிறது அந்த முடிவு. மேகாவிற்கு அப்போது 24 வயது. திருமணத்திற்கு தகுந்த வயதானதால், தன் பெரும் முயற்சிக்கு தன் பெற்றோர்களின் சம்மதத்தை பெற முயற்சி செய்திருக்கிறார்.“என் பெற்றோர்கள் எனக்கு அளித்த கல்வியை அர்த்தப்படுத்தும்படி, சவால் நிறைந்த வேலையை செய்ய வேண்டும் என நினைத்தேன். ஒரு வழியாக அவர்களும் சமரசமானார்கள், அப்போதிலிருந்து எனக்கு உறுதுணையாகவும் இருக்கின்றார்கள்”, என்கிறார் மேகா.

இன்ஸ்டாப்ரோ 3டி Instapro3D

3டி அச்சுக்கு, இந்தியாவில் ஒரு சூழலியலை உருவாக்கி, அதன் தொழில்நுட்பம் மூலமாக படைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை புதிய பொருட்களை உருவாக்க ஊக்குவிப்பது தான் இன்ஸ்டாப்ரோ3டியின் நோக்கம்.

இன்ஸ்டாப்ரோ3டியின் பணிகளைப் பற்றி பேசும் போது, கூலர் மாஸ்டர், ஏபிபி சோலார், மெக்கேன் ஹெல்த், சிபார்ட் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களோடு தாங்கள் வேலை செய்ததாய் பகிர்ந்துக் கொள்கிறார் மேகா.

இவை மட்டுமின்று, இன்ஸ்டாப்ரோ3டி நிறுவனம் பல பரிசோதனைகளும் செய்துக் கொண்டே இருக்கின்றன . கை மற்றும் கால் ரேகை அச்சுக்களை 3டி அச்சின் மூலம் பொருளாக மாற்றி நினைவுப் பொருளாக வைத்துக் கொள்வது, அவற்றில் ஒன்று. “ஒரு குழந்தை பிறப்பதென்பது மிக உணர்ச்சிவசமான நிகழ்வு என்று நாங்கள் மனதார நம்புகிறோம். அந்த பொழுதைக் கைபற்றி, அதை ஒரு நினைவுப் பொருளாக மாற்றும் போது, அவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் ரசிப்பது, விலைமதிப்பற்றதாக இருக்கும். காகிதத்தில் இருக்கும் கை அழுத்தங்களை 3டி அச்சின் மூலமாக நினைவுப் பொருளாக மாற்றும் முதல் நிறுவனம் நாங்கள் தான்.”

3டி தொழில்நுட்பம் சுவாரசியமான எதிர்பார்ப்பை திரட்டியிருந்தாலுமே பாதுகாப்பு, விண்வெளி, நகை வடிவமைப்பு, மருத்துவம் ஆகிய துறைகளில் பரவலாக உபயோகிக்கப்படும் இந்தப் புது தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய தொடங்கவில்லை என்கிறார் மேகா.

ஊக்கமும், சவால்களும்

“தொழில்முனைவு, சவால்களால் கட்டமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாண்டு, நிர்வகித்து, சீர் செய்ய வேண்டி இருக்கும். அடுத்தக்கட்ட வளர்ச்சியைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கும். அதிலும், மையக் குழுவை அமைப்பதென்பது, நெருக்கடியான அடிப்படை கவலையாக இருக்கும்”.

image


பெண் தொழில்முனைவராக மேகாவிற்கு வேறுபட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. “நான் பெண் என்ற காரணத்தினால், வாடிக்கையாளர்கள் என்னை குறைவாக மதிப்பிட்டதும் உண்டு; ஆனால், பெரும்பாலும், எனக்கு சாதகமாகத் தான் எல்லாம் அமையும்”, என்கிறார்.

தவறான விளைவுகளை எண்ணி வருந்திக் கொண்டே இருக்காமல், சரியாக அமைவதை நினைத்து உற்சாகம் அடைய வேண்டும் என்பது, மேகா சவால்களின் மூலம் கற்ற அனுபவப் பாடம்.

“நான் சரியான வேலையைத் தான் செய்கிறேனா என்று நானும் பல முறை நினைத்ததுண்டு. ஆனால், ‘ப்ளான் ‘A' சரியாக போகாவிட்டால், மற்ற இருப்பத்தைந்து எழுத்துக்கள் இருக்கின்றனவே’ என்னும் சொற்றொடரை நினைத்து, அதன்படி செயல்படுவேன். முக்கியமானது என்னவென்றால், நீங்கள் செய்வதை மட்டும் நிறுத்தவே கூடாது”.

தொழில்நுட்பத்தில் பெண்கள்

தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல், பொதுவாகவே, பெண்களின் பங்களிப்புக் குறைவாக இருப்பதன் காரணம், பெண்களுக்கு அளிக்கப் படும் குறைவான வாய்ப்புகள் தான் என்கிறார் மேகா. “பெரும்பாலான பெண்கள், அசாத்திய திறன்களை கொண்டிருந்தாலும், சமூக காரணங்களால் தாங்கள் விரும்பும் துறையில் தடம் பதிக்க முடியாது என்பதை நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார், அனுதாபத்தோடு.

பெண் தொழில்நுட்ப தொழில்முனைவராய் இருப்பது சாதாரண காரியமில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார் மேகா. “உங்கள் குழுவின் நபர்களுக்கு மத்தியில் உங்கள் ஆற்றலையும், நம்பகத்தன்மையையும் நிலைநாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் திறனை குறைவாக மதிப்பிடுவார்கள்; இருப்பினும், சில சமயங்களில் அது உங்களுக்கு சாதகமாய் அமையலாம். ஒவ்வொரு சிக்கலும், அனுபவமும் ஒரு புதிய அணுகுமுறையை அளித்து, நம்மைச் சிறப்பாக மேம்படுத்தும் என நான் நம்புகிறேன்”.

ஐந்து வருட அனுபவம்

தற்போது தான் இன்ஸ்டாப்ரோவை நிறுவிருக்கிறார் மேகா. தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமில்லை என்பதை வேகமாய் சுட்டிக் காட்டுகிறார். “இப்போது, தொழில்நுட்பத்தின் மேற்பரப்பை மட்டும் தான் நாங்கள் எட்டியிருக்கிறோம். இந்த தொழில்நுட்பம் எதை எல்லாம் செய்ய வல்லது என்பதை முற்றிலும் அறிந்துக் கொள்ளவில்லை. வருங்காலத்தில், எல்லோரும் வீட்டில் கணினி வைத்திருப்பதுப் போல, 3டி அச்சுக் கருவி ஒன்றை வைத்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது”, என்கிறார்.

இன்ஸ்டாப்ரோ 3டி, சிறப்பாக ஒருங்கிணைந்த சேவைப் பணியகமாக, வடிவமைப்பாளர்கள், படைப்பாளர்கள், உருவாக்குநர்களுக்கு உதவும் என நம்புகிறார் மேகா !

இணையதள முகவரி: Instapro3d

ஆக்கம் : Tanvi Dubey | தமிழில் : Sneha

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags