அல்சீமர் நோய் இருந்தும் கண்கவர் ஓவியங்கள் உருவாக்கும் 83 வயது லதா சௌத்ரி!

மும்பையைச் சேர்ந்த லதா சௌத்ரிக்கு மறதி நோயான அல்சைமர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதும் சிறு வயது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருந்தாலும் ஓவியத் திறனில் மனதை செலுத்தி அழகான படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
0 CLAPS
0

மும்பை பாந்திரா கிழக்குப் பகுதியில் வசிக்கிறார் லதா சௌத்ரி. இவரது வீட்டில் காணப்படும் அழகழகான, வண்ணமயமான ஓவியங்கள் பார்ப்போர் கண்களைக் கவர்ந்து மெய்மறக்கச் செய்கின்றன.

சிறு வயதிலேயே ஓவியத்தில் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். லதாவிற்கு அவரது மூத்த சகோதரி மாயி ஓவியம் வரைவதன் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்துள்ளார்.

லதா சௌத்ரி

லதாவின் அப்பா ராம்பாவ் டட்னிஸ். சுதந்திரத்திற்கு முன்பு வெளியாகிய மராத்தி செய்தித்தாளின் பத்திரிக்கையாளர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக இருந்தார். டாக்டர் அம்பேத்கர், என்வி காட்கில் போன்றோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்.

லதா மும்பை கிர்கான் பகுதியில் உள்ள ராம் மோகன் ஆங்கிலப் பள்ளியில் படித்தார். பிரபல பாடகிகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் இளைய சகோதரி உஷா மங்கேஷ்கர் லதா உடன் அதே வகுப்பில் படித்தவர்.

இசை, ஓவியம் போன்றவற்றில் முறையான பயிற்சி பெறாவிட்டாலும் லதா சௌத்ரிக்கு இவற்றில் அதிக ஆர்வம் இருந்தது. ஒருசமயம் நிகழ்ச்சி ஒன்றில் உஷா மங்கேஷகருடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் லதா சௌத்ரியின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களை வெகுவாகப் பாராட்டிய பிரபல நடிகை துர்கா கோட் இந்தத் திறனை வளர்த்தெடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது லதாவிற்கு 11 வயது.

அமைதியாக சென்று கொண்டிருந்த லதாவின் குழந்தைப் பருவத்தில் பேரிடியாக வந்தது அவரது அப்பாவின் மரணம். குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் போனது. கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்தார். ஓவியங்களை விற்பனை செய்தார். புடவைகளில் கைகளால் பிரிண்ட் செய்து சம்பாதித்தார். இப்படியே காலம் கடந்தது.

யோகேந்திர சங்கர் சௌத்ரி என்பவருடன் லதாவிற்கு திருமணம் நடந்தது. லதா கணவருடன் பாந்திரா கிழக்குப் பகுதிக்கு மாற்றலானார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக பாந்திராவில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு 83 வயதாகிறது.

லதா சௌத்ரி மற்றும் அவரது கணவர் யோகேந்திர சங்கர் சௌத்ரி

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய அல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

லதாவின் அம்மாவும் உடன் பிறந்தவர்களும் உயிரிழந்துவிட்டனர். ஆனால் லதா தொடர்ந்து அவர்களைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பார். அவர்கள் ஏன் கூப்பிடுவதே இல்லை என திடீரென்று கேட்பார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் சாலையில் வெறிச்சோடிக் கிடக்கும் காரணத்தை அவரால் புரிந்துகொள்ளவில்லை.

லதாவை அவரது கணவர் கவனித்துக்கொள்கிறார். இவர்களுக்கு பரேஷ், பிரதீக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் பரேஷ் தனது குடும்பத்துடன் மும்பையிலேயே வசித்து வருகிறார். அதானி குழுமத்தில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் பிரிவில் குழுத் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் தினமும் சென்று அம்மாவை சந்திப்பது வழக்கம்.

மற்றொரு மகனான பிரதீக் துபாயில் வசிக்கிறார். பெருந்தொற்று பரவத் தொடங்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அவரால் மும்பை திரும்பமுடியவில்லை.

லதாவின் ஓவியத் திறன் மீட்டெடுக்கப்பட பரேஷ் உதவியுள்ளார். அவர் கூறும்போது,

“என் அம்மா இன்னமும் அவரது சிறு வயது நினைவுகளிலேயே மூழ்கியிருக்கிறார். அவரது அம்மா வீட்டினர் உயிருடன் இல்லை என்பதை அவருக்கு விளக்கினாலும் அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். குடும்பத்தினரை யாரோ கொல்ல திட்டமிடுவதாக கவலைப்படுகிறார். நாங்கள் சாப்பிட்டோமா என்பதை திரும்ப திரும்பக் கேட்பார். எத்தனை முறை பதிலளித்தாலும் பிரதீக் எங்கே என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஏதாவது நடவடிக்கைகளில் அவரை ஈடுபடுத்த மருத்துவர் ஆலோசனை வழங்கினார்,” என்று அவரது நிலையை விவரித்தார்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஓவியம் வரையத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார் பரேஷ். தாவரங்கள், விலங்குகள் பற்றிய புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

”அவர் ஓவியங்கள் வரைய ஊக்குவிக்க சில நாட்கள் ஆனது. ஆனால் வரைய ஆரம்பித்ததும் சிதையாத கவனம் செலுத்துகிறார். மணிக்கணக்கில் உட்கார்ந்து மிகவும் நுணுக்கமாக ஓவியங்கள் வரைகிறார்,” என்கிறார்.

சத்தீஸ்கரில் உள்ள வார்லி பழங்குடியினர் லதாவை பெரிதும் ஈர்த்தனர். இந்தப் பழங்குடியினத்தவர்களை சித்தரிக்கும் வகையில் அவரது ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

ஐந்து அங்குலம் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரிடம் கொடுத்தால் போதும் அதைப் பார்த்துவிட்டு ஐந்திற்கு நான்கடி என்கிற அளவில் அந்தப் புகைப்படத்தை அப்படியே ஓவியமாகத் தீட்டிவிடுவார்.

லதா சௌத்ரி வரைந்த ஓவியம்

“மரத்தின் கிளை ஒன்றில் சாய்ந்தபடி ஒரு பெண் நின்றிருக்கும் பெரிய புகைப்படம் ஒன்றை அவர் வரைந்திருக்கிறார். அது என் வீட்டில் இருக்கிறது,” என்கிறார் பரேஷ்.

லதாவும் அவரது கணவரும் வசித்து வரும் வீட்டில் அவர் மிகவும் சௌகரியமாக உணர்கிறார்.

“இன்றும் மூன்று வேளை அவரே சமைக்கிறார். அவர் சமைக்கும் மீன் கறி, பருப்பு போன்ற உணவு வகைகளை என் நண்பர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உதவிக்கு யாரையும் வைத்துக்கொள்ளாமல் அவரே எல்லா வேலைகளையும் செய்துகொள்கிறார். அவர்கள் வசிக்கும் வீட்டில் எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது அவருக்கு அத்துப்படி. ஆனால் எங்கள் வீட்டிற்கு சென்றால் வாசல் கதவு எங்கே என்பதை மறந்துவிடுகிறார், கிச்சனுக்கு எப்படி செல்வது என்பது தெரிவதில்லை,” என்கிறார்.

லதாவின் கணவர் அவரது மிகப்பெரிய பலம். ஓவியம் வரைய ஊக்குவிக்கிறார். சின்னக் குழந்தை போல் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்கிறார்.

“அம்மாவிற்கு தான் ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்வதுபோல் இருக்கும். இப்போதுதான் சொன்னேன் என்பார். அப்பாதான் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார் என்பார். அப்பாவிற்கும் 87 வயதாகிறது. வீட்டில் எல்லா வேலைகளும் செய்கிறார். அப்பாவுடன் வாழ்ந்த திருமண வாழ்க்கை அம்மாவிற்கு நினைவில்லை. அதனால் அந்த நாட்களை பற்றி மனைவியுடன் பேச முடியாததை நினைத்து அப்பா வேதனைப்படுகிறார்,” என்கிறார்.

அம்மா சுய பச்சாதாபம் கொள்ளாமல் நேர்மறையான அணுகுமுறையுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது மகிழ்ச்சியளிப்பதாக பரேஷ் குறிப்பிடுகிறார். லதா புத்தகங்களும் செய்தித்தாள்களும் படிக்கிறார்.

“அம்மாவிற்கு எதுவும் நினைவில் இருப்பதில்லை என்பதால் ஒவ்வொரு நாளும் அவருக்குப் புதிதுதான். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அம்மா ஓவியம் வரையத் தொடங்கியிருக்கிறார். இருந்தபோதும் இன்று ஓவியம்தான் அவருக்கு எல்லாம்,” என்கிறார் பரேஷ்.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world