தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த 84 மனநல மருத்துவமனை நோயாளிகள்!

By Chitra Ramaraj|7th Apr 2021
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று வரும் 84 பேர் இந்த முறை சட்டசபைத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் மனநலக் காப்பகத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்காக பலர் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதில், 104 ஆண்களும், 55 பெண்களும் என மொத்தம் 159 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாகத் தேர்ச்சி பெற்றனர்.


உரிய பயிற்சிகளுக்குப் பின்னர், கடந்த லோக்சபா தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகளை வாக்களிக்க அனுமதிப்பது அதுவே முதல்முறை ஆகும். மத்திய சென்னை தொகுதியில் அவர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

voters

Photo courtesy : New Indian Express

அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபைத் தேர்தலிலும் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள தெளிந்த சிந்தனையுடைய நோயாளிகளுக்கு தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது பற்றி திட்டமிடப்பட்டது.

இதற்காக தற்போது அங்கு கிசிச்சையில் உள்ள 889 பேரில், புரிந்துகொள்ளும் தன்மையில் உள்ள 88 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டதில் 84 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்த 84 பேரும் வாக்குகளைப் பதிவு செய்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அவர்களில் 56 பேர் ஆண்கள் மற்றும் 28 பேர் பெண்கள் ஆவர். வழக்கம் போலவே அங்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.


இது குறித்து மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ணா சந்திரிகா கூறுகையில்,

“மனநல காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 889, புரிந்துகொள்ளும் தன்மையில் உள்ள 88 பேரை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் 84 பேர் தகுதி பெற்றனர். அவர்கள் அனைவரும், வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் காப்பகத்தில் பணியில் உள்ள 10 பணியாளர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் வாக்களித்த பலர் தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வெளியில் சென்று விட்டார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றவர்களை போல், இவர்கள் வாக்களிக்க இயலாது என்பதால், அவர்களுக்கென பிரத்யேகமாக காப்பக வளாகத்திலேயே வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது. முன்னதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடன் காப்பகத்திற்கு உட்பட்ட வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்தெந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பது போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


மேலும், எவ்வாறு அவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 84 நோயாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.


செய்தித்தாள்கள் வாசிப்பது மற்றும் தினமும் செய்தி சேனல்களைப் பார்க்கும் வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்பட்டிருப்பதால், அன்றாட நாட்டு நிலவரங்களை தங்களால் தெரிந்து கொள்ள முடிந்ததாக வாக்களித்தவர்கள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் சிகிச்சைப் பெற்று வரும் விமலா என்பவர் நேற்றைய தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,

“அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், பெட்ரோல், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முறை வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற