பதிப்புகளில்

சென்னை மாணவர்களின் ’ஜெய் ஹிந்த்’ சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தும் நாசா!

நாசாவினால் விண்வெளியில் செலுத்தப்படவுள்ள இந்த 33 கிராம் எடை சாட்டிலைட்டை வடிவமைத்து சாதனை செய்திருக்கிறார்கள் சென்னை ஹிந்துஸ்தான் இஸ்டிட்டியூட்டில் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் படிக்கும் நான்கு மாணவர்கள். 

sneha belcin
29th Jun 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

நம் நாட்டில் பெரும் தலைவர்கள் ‘மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது’ , ‘பரிணாம வளர்ச்சி பொய்’ என்பது போன்ற அறிக்கைகளை விட்டுவிட்டு மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில் தான், இளைய தலைமுறை அறிவியலை இறுகப்பற்றி சாதனைகள் பல செய்து வருகின்றனர்.

சென்னையின் ஹிந்துஸ்தான் இஸ்ண்டிட்டியூட்டில் முதலாம் ஆண்டு ஏரோஸ்பேஸ் படித்துக் கொண்டிருக்கும் நான்கு மாணவர்கள் நாசாவின் ‘க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்’ போட்டிக்காக முப்பத்து மூன்று கிராம் எடை கொண்ட சாட்டிலைட்டை வடிவமைத்திருக்கிறார்கள்.

டெஸ்ட் ஆப்பரேஷன்களை செய்தது கிரிபிரசாத், சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் தொடர்பான வேலைகளை செய்தது அமர்நாத், சாட்டிலைட்டிற்கான வடிவமைப்புகளை செய்தது சுதி என்று தெரிவிக்கிறார் புராஜெக்ட் லீடராக இருந்து வேலைகளை ஒருங்கிணைத்த ஹரிகிருஷ்ணன். இதில் கிரிபிரசாத் தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற மூவருமே குழந்தை பருவத்தில் இருந்தே வானியல் மீது ஆர்வத்தோடே வளர்ந்தவர்கள்.

“எனக்கு சின்ன வயசுல பைலட் ஆகணும்னு ஆசை. வளர வளர தான் ராக்கெட் பத்தி நிறைய கத்துக்கிட்ட பிறகு தான் ஏரோஸ்பேஸ் படிக்கலாமே என இதைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் ஹரிபிரசாத்.

கடந்த டிசம்பரில் ‘அக்டோபர் 5’ என்ற திரைப்படத்தை பார்த்தது ஹரிகிருஷ்ணனை பாதித்திருக்கிறது. ஒரு விண்வெளி வீரரை பற்றியதாக இருந்த அந்த படம், தன்னுடைய இலக்கை நோக்கி தானும் நகர வேண்டும் என்று ஒரு உந்துதலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக, ஒரு சாட்டிலைட் வடிவமைக்க வேண்டும் எனும் முடிவு செய்திருந்த போது தான் நாசாவின் போட்டி குறித்து தெரியவந்தது. 

ஜனவரி மாதத்திலேயே ஒரு புரோபோசலை எழுதி நாசாவிற்கு அனுப்ப, ஏப்ரலில் அங்கிருந்து பச்சை சிக்னல் கிடைத்தது. மே முதல் வாரத்தில் இருந்து இந்த சாட்டிலைட்டை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கிய ஹரிகிருஷ்ணனின் குழு, ஜுன் பத்தாம் தேதி வேலையை நிறைவு செய்திருக்கிறார்கள். சாட்டிலைட்டிற்கு ’ஜெய் ஹிந்த்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

image


விண்வெளியில் இருக்கப் போகும் சாட்டிலைட் என்பதால் அதற்கு தேவையான பாகங்களில் சிலதை இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஆனாலும், சாட்டிலைட்டின் மொத்த பட்ஜெட்டே பதினைந்தாயிரம் ரூபாய் தானாம். இறக்குமதி செய்யும் வேலை, ஃபாப்ரிகேஷன், 3டி அச்சு போன்ற வேலைகளை செய்து முடிக்கவே மூன்று வாரங்கள் ஆகியிருக்கிறது. சாட்டிலைட் உருவாக்கத்திற்கு தங்களுடைய பேராசிரியர் தினேஷ்குமார் ஊக்கமளித்தாக சொல்கிறார் ஹரிகிருஷ்ணன்.

கடந்த வருடம், தமிழ்நாட்டின் ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினர் 64 கிராம் எடையில் சாட்டிலைட் வடிவமைத்து சாதனை செய்திருந்தார்கள். இதிலிருந்து ‘ஜெய் ஹிந்த்’ எப்படி மாறுபடுகிறது என்று கேட்ட போது,

“ஆமாம். அந்த சாட்டிலைட் பற்றி படித்து தெரிந்து கொண்டோம். 64 கிராம் எடையிருந்த அந்த சாட்டிலைட் பத்து பாராமீட்டர்களை படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் பத்தோடு நிறுத்த வேண்டாம் என இருபது பாராமீட்டர்கள் ரீட் செய்ய வடிவமைத்தோம். மேலும், அந்த சாட்டிலைட்டின் லைஃப்டைம் நூற்று இருபது நிமிடங்கள். ஜெய் ஹிந்த் கிட்டத்தட்ட இருபத்தைந்து மணி நேரங்கள் ஸ்பேஸில் இருக்கும்,” என்கிறார்.

இந்த சாட்டிலைட்டின் மூன்று முக்கிய சிறப்பம்சம் :

* ஒவ்வொரு உயரத்திலும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை படிக்க பயன்படுத்துவது, 

* நைலான்; விண்வெளியில் என்ன ரியாக்‌ஷனுக்கு உள்ளாகிறது என்பதை படிப்பது 

* சாட்டிலைட்டை லாஞ்ச் செய்ய பயன்படுத்தப்படும் பலூன் செல்லும் பாதையை தெரிந்துகொள்வது.

கல்லூரியின் முதலாண்டு பாடத்திட்டத்தில் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களே பயிற்றுவிக்கப்படுவதனால், சாட்டிலைட் உண்டாக்குவதற்கு நிறைய தகவல்கள் இணையத்தில் இருந்தே எடுத்ததாக சொல்கிறார். கடந்த நான்கு வருடங்களாக நாசா நடத்திவரும் ‘க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்’ போட்டியில் தேர்வாகும் ஏவுகணைகளை விண்ணில் செலுத்த ராக்கெட் அல்லது பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

image


“சில சாட்டிலைட்டுகள் ஸ்பேஸில் குறிப்பிட்ட உலோகத்தோடு என்ன ரியாக்‌ஷன் நடக்கிறது என்பதை மட்டுமே கணிக்கக் கூடிய எக்ஸ்பரிமெண்டுகளை செய்யும் - இவற்றுக்கு பவர் தேவையில்லை. வேறு எக்ஸ்பரிமெண்ட்ஸ் சென்சார் எல்லாம் பயன்படுத்தி ரீடிங் எடுப்பதாக இருக்கும் - இதற்கு பவர் தேவைப்படும். நாசா, சில சமயம், பவர் தேவைப்படும் எக்ஸ்பரிமெண்டுகளை எல்லாம் ராக்கெட்டில் லாஞ்ச் செய்யும், பவர் தேவையில்லாதவற்றை பலூனில் லாஞ்ச் செய்யும். சில சமயம் அப்படியே மாற்றி பவர் தேவையில்லாத சாட்டிலைட்டுகளை எல்லாம் ராக்கெட்டில் லாஞ்ச் செய்யும். இந்த வருடம் பவர் எக்ஸ்பரிமெண்டுகளை பலூனில் லாஞ்ச் செய்கிறார்கள்.”

விர்ஜினியாவில் இருக்கும் கொலராடோ ஸ்பேஸ் செண்டரில் இருந்து ஜூலை மாத இறுதியிலோ, ஆகஸ்ட் தொடக்கத்திலோ சாட்டிலைட் லாஞ்ச் செய்யப்படவுள்ளது. லாஞ்ச் செய்யப்படுவதை பார்க்க உங்கள் குழு போகுமா எனக் கேட்ட போது, 

“இல்லை, எதாவது ஃபண்டிங் கிடைத்தால் தான் போக முடியும்...” என்கிறார் ஹரிகிருஷ்ணன்.

அறிவியலை நம்பி, மதித்து செயல்படும் இந்த தலைமுறையினர் உண்மையிலேயே நம்பிக்கை அளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags

Latest Stories