பதிப்புகளில்

இந்தியாவின் உண்மையான பவர்ஸ்டார் 'குன்வர் சச்தேவா'

Gowtham Dhavamani
13th Oct 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

"பனிரெண்டாம் வகுப்பில், மருத்துவர் ஆவது எனது கனவு" என்கிறார் குன்வர் சச்தேவா. ஆனால் அவரை மற்றவர்கள் பெருமையாக அழைப்பது " இந்தியாவின் இன்வெர்டர் மனிதன்" என்று. பேனா மற்றும் காகிதம் முதலிய பொருட்கள் விற்பனையில் இருந்து, தொலைதொடர்பு சம்மந்தப்பட்ட நிறுவனத்தின், விற்பனை பிரிவில் இருந்து, இந்தியாவின் இன்வெர்ட்டர் துறையில் புரட்சி ஏற்படுத்தும் வரை, குன்வர் சச்தேவாவின், தொழில்முனையும் பயணம், பலவிதபட்டதாகவும், மிக நீண்டதாகவும் இருந்துள்ளது.

டெல்லியில் மிக சாதாரண, பஞ்சாபி குடும்பத்தில், இரண்டு சகோதரர்களுடன், தனது இளமை பருவத்தை கழித்தார். அவரது தந்தை, இந்தியன் ரயில்வே துறையில், எழுத்தராக இருந்தார். முதலில் தனியார் பள்ளியில் பயின்ற குன்வர் பின்பு அரசு பள்ளிக்கு, பணப்பற்றாக்குறை காரணமாக மாற்றப்பட்டார்.

அவர் தனது மருத்துவ நுழைவுத்தேர்வை முடித்தபொழுது, 49% மட்டுமே அவரால் பெற இயன்றது. "எனவே நான் மீண்டும் வேறு ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்றேன். இறுதி தேர்வில், முதல் மாணவனானேன். ஆயினும், நுழைவுத்தேர்வில் அம்முறையும் தோல்வி" என்கிறார் குன்வர்.

அதன் பிறகு அவருக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டு, ஹிந்து கல்லூரியில், புள்ளியியல் துறையில் சேர்ந்தார். ஆனால் தனது வாழ்வை மாற்ற போவது பொறியியல் என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதைவிடுத்து, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் அவருக்கு பேரார்வம் இருந்தது.

கற்றதும் பெற்றதும்

தனது கல்லூரி காலத்தின் போதுதான், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, குன்வர் உருவாக்கிக் கொண்டார். பிற்காலத்தில், தனது மின்மாற்றி தொழில்முனைவின் பொழுது, தனக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்பது குன்வர் அறியாதது. அந்நேரத்தில் தான் குன்வர், தனது சகோதரனோடு இணைந்து, பேனா மற்றும் காகிதம் முதலிய எழுது பொருட்களை விற்க ஆரம்பித்தார். "பேனா விற்பது எனது தேவையாக இருந்தது. எனது சகோதரன் அப்போது ஒரு பேனா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்கினான். எனது கல்லூரி காலத்தில், அதில் அவனுக்கு உதவியாக இருந்தேன். பின்பு கல்லூரி முடித்து, அதில் முழுநேரமாக ஈடுபட்டேன்" என குன்வர் மேலும் கூறினார்.

அதன் பின் தனது மேல் படிப்பாக டெல்லி பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று, தனது முதல் மற்றும் கடைசி வேலையாக, ஒரு கம்பி வட தொலைதொடர்பு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் இணைந்தார்.

"எனக்கு கிடைத்த முதல் வேலை, எனக்கு இந்த துறையின் சாத்தியக்கூறுகளை 1988ல் கற்பித்தது. எனவே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில், "சு-கம் கம்யுனிகேஷேன் சிஸ்டம்ஸ்" (SU-KAM) என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கினேன் என்றார் அவர்.

அவர் விற்பனையில் கில்லாடியாக இருந்தபோதும், தயாரிப்பு, தயாரிப்பை பொருத்தும் வேலை, அதன் பின்னால் இருந்த தொழில்நுட்பம் ஆகியவற்றை அவர் அறியவில்லை. அவர் சிஏடிவி(CATV) மற்றும் எம்ஏடிவி (MATV) ஆகியவற்றை பலமாடி கட்டிடங்களிலும், உணவு விடுதிகளிலும் பொருத்தும் பணி செய்தார். மேலும் அந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை அறியாததால் பலரிடம் தான் ஏமாந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

பலமுறை சூடு பட்டபின், தானே கருவிகளை பொருத்தும் வேலைகளுக்கு நேரில் செல்ல ஆரம்பித்தார். இது அவற்றை பற்றிய முழு விவரங்களை அவர் கற்க உதவியாக இருந்தது.

Kunwar sachdeva

Kunwar sachdeva


"அவ்வேளையில் என் வாசிக்கும் பழக்கம் எனக்கு உதவியாக அமைந்தது. நான் அறிவியல் கருத்துகளை தெளிவாக புரிந்து கொள்ளவும், எனது அறிவை வளர்த்துக்கொள்ளவும் அது உதவியது. பின் நான் எனக்கு தேவையான ஆட்களை, நானே பயிற்றுவிக்க ஆரம்பித்தேன்" என்கிறார் அவர். மேலும் கம்பி வட தொலைக்காட்சி, ஒவ்வொரு வீட்டிற்க்கும் தேவைப்பட்டது தனக்கு சாதகமாக அமைந்ததாகவும், அதனால் அதன் தேவை பல மடங்கு பெருகி, அதை சார்ந்த அறிவை அவர் வளர்த்துக்கொள்ள உதவியதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த சூழ்நிலை, கம்பி வட தொலைகாட்சி தொழிலுக்கு தேவையான டைரக்ஷனல் கப்ளர்கள், ஆம்பிலிபையர்கள், மற்றும் மாடுலேட்டர்களை, தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்தது.

"அந்நேரத்தில் எனது மிகப்பெரிய முதலீடு ஸ்பெக்ட்ரம் அனலைஸ்சர் என்ற கருவியாக அமைந்தது. எனது பொருட்களின் தரத்தையும், தொழில்நுட்பத்தையும் உயர்த்துவதற்காக, தொழில்நுட்பத்தை நமக்கு ஏற்றபடி மாற்றியமைக்க நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.

தெரிந்த பாதையில் இருந்து தெரியாத பாதைக்கு...

இன்வர்டர் தயாரிக்கும் தொழில் தொடங்குவது, சந்தர்ப்பவசமாக அமைந்தது. தனது கம்பி வடதொழில் சூடு பிடித்தாலும், தனது வீட்டில் இருந்தும், இல்லாதது போல் இயங்காமல் இருந்த இன்வர்டர் அவரை இந்தியாவின் திறன் சேமிப்பு துறையை பற்றி சிந்திக்க வைத்தது. "எங்கள் வீட்டில் இருந்த இன்வர்டர் இயங்காமல் போனபோதெல்லாம் நாங்கள், எலெக்ட்ரிஷியனை அழைக்க வேண்டி இருந்தது. அப்படி ஒருநாள் மிகவும் மனம் நொந்து, அந்த இன்வர்டரை திறந்து, அதில் தரமற்ற ஒரு பிசிபி(PCB) இருந்ததை கண்டேன். அதை எனது சு-கம் கம்யுனிகேஷேனின், ஆராய்ச்சி துறையிடம் தந்து ஆய்வு செய்யச்சொன்னேன்.

அது மட்டும் அல்லாது, சந்தையில் இருந்த மற்ற இன்வர்டர்களையும் அவரது ஆராய்ச்சி அணி ஆய்வு செய்தபொது, அவற்றின் தரம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே அந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள அவரே முடிவெடுத்தார். அதற்காக தரமான இன்வர்டர்களின் செயல் முறை பற்றி அறிந்து கொள்ள, கனடாவில் இருந்து சில இன்வர்டர்களை இறக்குமதி செய்தார். (அவை வீட்டு உபயோகத்திற்கானது அல்ல).

"ஆரம்பக்கட்ட சோதனைகளுக்கு பின் நாங்கள் இன்வர்டர் தயாரிக்க முடிவு செய்தோம். எனவே, 1988யில், "சு-கம் பவர் சிஸ்டம்" உருவானது. மேலும் கம்பி வட தொலைகாட்சி தொழில் வளர்ந்து வந்தாலும், அதை 2 வருடங்கள் கழித்து நிறுத்த முடிவெடுத்தோம். ஏன் என்றால், திறன் சேமிப்பு துறையில் நல்ல எதிர்காலம் எனக்கு புலப்பட்டது.

எனவே மொத்த அணியும், கம்பி வட தொழிலில் இருந்து, சு-கம் பவர் சிஸ்டம்ஸ்க்கு இடம் பெயர்ந்து, இன்வர்டர் மற்றும் யுபிஎஸ்(UPS) தயாரிக்க தொடங்கினர். ஆரம்பக்கட்டத்தில், நேரடி விற்பனையில் கவனம் செலுத்திய அவர்கள், அது தொழிலுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்து, விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தர்களை நியமித்தனர்.

புதுமை மற்றும் மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தல்

முதலில், மக்களை அதி நவீன தொழில்நுட்பத்தை பற்றி நம்ப வைப்பது சிரமமாக இருந்தது. ஏன் என்றால், எங்கள் தயாரிப்பு மற்ற இன்வர்டர்களில், கால் பங்கு அளவும், நவீன தொழில் நுட்பம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் எங்கள் தயாரிப்பின் தரத்தையும், திறனையும் அறிந்து, அவர்கள் எங்கள் பொருளுக்கு விநியோகஸ்தர்களாக இணைந்தனர்.

"அது முதல் என்னால் இந்த துறையில் முன்னோடியாக திகழ முடிந்தது, காரணம், மக்கள் தேவைக்கு ஏற்ப, புதுமைகளை தயாரிப்பில் புகுத்தி வந்தோம். உதாரணமாக, எனது முதல் தயாரிப்பு வீட்டில் ஜெனரேட்டர் தேவையை குறைத்தது. அதற்கு பின்பு வந்த தயாரிப்பு, குளிர் சாதன பெட்டிகளை இயக்கும் அளவு அமைந்தது. பின்பு, மற்ற தொழில்களுக்கு உபயோகப்படும் அளவு அமைந்தது.

2000 ஆமாவது ஆண்டில் "சு-கம்" நிறுவனம் உலகின் முதல் பிளாஸ்டிக்கில் உருவான இன்வர்டர் தயாரிக்கும் நிறுவனம் ஆனது. குன்வர்க்கு இந்த யோசனை, ஒரு குழந்தை மீது, இன்வர்டர் மூலம் மின்சாரம் தாக்கியதாக அறிந்தபோது உதித்தது. அது முதல் அவர் இன்வர்டர்களை, மிகவும் பாதுகாப்பாக தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால் சந்தையில், இன்வர்டர் வெளியிடும் வெப்பத்தை தாங்கும் அளவு எந்த ஒரு பிளாஸ்டிக்கும் இல்லை.

விரைவில், குன்வர் அப்போதைய ஜிஇ பிளாஸ்டிக் நிறுவனத்தை அப்படி ஒரு பிளாஸ்டிக்கை தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களின் முதல் பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட இன்வர்டர், அந்த சகாப்தத்தின் கண்டுபிடிப்பாக அங்கிகரிக்க பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து, இந்தியாவின் முதல்" சைன் வேவ்" இன்வர்டர்களை தயாரித்தனர். அது முதல் அத்துறையின் முன்னோடியாக சு-கம் நிறுவனம் மாறியது. புதுமை மற்றும் தொழில்நுட்பம் எப்போதும் எங்கள் தனித்தன்மையாக விளங்குகிறது என்கிறார் குன்வர்.

திறனாளிகளை ஈர்த்தல்

புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் புகுத்தினாலும், குன்வர்க்கு சவாலாக விளங்கியது, சரியான திறமைசாலிகளை நிறுவனத்தில், சேர்பதுதான். அந்த காலகட்டத்தில், புதிதாக தொழில்முனையும் நிறுவனங்களுக்கு, திறனாளிகள் பாதுகாப்பான வேலைகளை விட்டு வர தயங்கினர். " எனக்கு இன்னும் நினைவு உள்ளது. ஐந்து பேராக இருந்த எங்கள் குழுவில் ஒருவர் பகுதி நேர பிளம்பராக வேலை பார்த்தார்" என்கிறார் குன்வர்.

அதற்கு அடுத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆட்களை கையாள்வது. குன்வரின் திறமையால் சரியான ஆட்களை தேர்வு செய்து, அவர்களை ஒருங்கிணைத்து ஒரே அணியாக இயங்கவைப்பது, அவரால் இயன்றது.

"நம்மால் அது இயலாது என்ற மனபோக்கு தான் சமாளிக்க கடினமான ஒன்றாக இருந்தது. ஏன் என்றால் புதுமைகளை உருவாக்கும் பொழுது, அதிக சோதனைகளும், அதிக தோல்விகளும், மனதை துவழ வைத்துவிடும்". மேலும் குன்வர் இயலும் என்று நினைத்த விஷயங்களை அவரது பொறியாளர்கள் இயலாது என்று நினைத்தனர்.

" நாங்கள் வளர, வளர, எங்களுக்கு நல்ல திறனாளிகள் கிடைத்தனர். தற்போது பெருமையாக இங்கு இருக்கும் அனைவரும், அவரவர் துறையின் வல்லுநர் என்று என்னால் கூற இயலும் என்று குன்வர் கூறினார். தற்போது யுகே, யுஎஸ் யில் உள்ள வேலைகளை விட்டுவிட்டு, சு-கம் நிறுவனத்தில் சேர பலர் வருகின்றனர்.

அனைத்து தொழில்முனையும் நிறுவனங்களை போன்றும், சு-கம் நிதி திரட்ட சிரமப்பட்டது. 90களில் அது மேலும் கடினமாக இருந்தது. அடமானம் வைக்க சொத்துக்களோ, பணக்கார பெற்றோர்களோ, மிகப்பெரிய தொடர்புகளோ குன்வரிடம் இல்லை. ஆரம்பம் முதல் குன்வர் அவராகவே தேவைப்பட்ட நிதியை தனது நண்பர்களிடமும் சொந்தங்களிடமும், திரட்டினர்.

"பல நேரங்களில் என்னால் கூறிய தேதிகளில் கடனை அடைக்க இயலாது போனது, ஓடி ஒழியாது, கடன் கொடுத்தோரை சந்தித்து, மேலும் கால அவகாசம் பெற கற்றுகொண்டேன். அவர்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவதே முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டேன். 2006 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் பண்ட் நிறுவனம் எங்கள் நிறுவனத்தில், முதலீடு செய்தது. அது, அம்பானி மட்டும் திமாசெக் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும் என்றார் குன்வர்.

கடந்து வந்த பாதை

"சு-கம் நிறுவனத்தோடு எனது பயணத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், நம்பமுடியாத அளவு மிகபெரிய பயணம் என்று கூறலாம். எவ்வளவு முறை மேலாண்மை பற்றிய கருத்துக்கள், ஆட்களோடு இயங்கும் விதம், வாழ்க்கையின் தத்துவங்கள் ஆகியவற்றை, நான் புதிதாக கற்றும், கற்றதை மறந்தும் இருக்கிறேன் என கூற இயலாது. மேலும், கற்றுகொண்ட விஷயங்களை மறக்கும் யுக்தியை கற்றுக்கொள்வது தான், ஒரு விஷயத்தை கற்றுகொள்வதை விட கடினமானது.

எப்போதும், நாம் நமது கருத்துக்களில் உறுதியாக இருப்பதால், உண்மை நிலை நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை. ஆனால் சு-கம் போன்று 90 நாடுகளில் பரந்து விரிந்து செயல் படும் ஒரு நிறுவனத்தை நீங்கள் இயக்கினால், சில நேரங்களில், நம் கருத்து தவறாக இருக்க வாய்ப்பு உண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.

நம் வட்டத்திற்கு வெளியே வந்து நிலையை வேறு கோணத்தில் பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும்.குன்வர் தான் தொழில் முனைந்தது தான், வாழ்க்கையில் தான் எடுத்த முடிவுகளில் சிறந்த முடிவு என்கிறார். மேலும் அவர் கூறுவது,தொழில் முனைவதால், ஒவ்வொரு நாளும், சவாலாகவும், பரிசாகவும் அமையும். மின்னல் வேகத்தில் முடிவுகள் எடுப்பது மேலும் சுவாரசியம் கூட்டும் என்கிறார் அவர்.

அவர் கூறுவது, ஒருகட்டத்தில், பணத்தை பற்றிய சிந்தனை அகன்று, அனுபவங்கள் பொகிஷங்கலாகும். நம் திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும். நான் பொறியாளனும் அல்ல மேலாண்மை கற்றவனும் அல்ல, ஆனால் அனைவரிடத்தும், என்னால் எனக்கு தேவையான செயலை பெற இயலும். நீங்கள் போட்டியில் மிக நீண்ட நாட்கள் இருந்தால், உங்கள் கண்முன் அனைத்தும் கட்டவிழும். அது அற்புதமாக இருக்கும். நான் மூன்று தலைமுறையாக உழைத்து வருகின்றேன். தட்டச்சு முதல் தொடுத்திரை கணினி வரை அனைத்தையும் பார்த்துள்ளேன்.

மேலும் தற்போது குன்வர், இந்தியாவில் சூரிய தகடுகள் மூலம் மேலும் ஒரு புரட்சி நிகழ்த்த யோசித்து வருகிறார். அவரின் ஆசை எதிர்காலத்தில், இந்தியாவில் அணைத்து இல்லங்களும், சூரிய சக்தியில் இயங்க வேண்டும் என்பதாகும். அத்தோடு, சூரிய சக்தி துறையில், இந்தியா மிகபெரிய சந்தையாக உருவெடுக்கும் என்று அவர் நம்புகின்றார். மேலும் தற்போது புதிய தொழில்முனைவுகளையும் அவர் வழி நடத்துகின்றார்.

"இந்தியர்கள் எப்போதும் புதுமைவாதிகள். அதை இப்போது உலகமும் அங்கீகரித்துள்ளது. முதலில் நான் துவங்கிய போது அது ஒரு கனவாக இருந்தது என்கிறார் குன்வர்.

தற்போது ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும், சூரிய சக்தி மூலம் ஒளிரும் எல்இடி(LED) விளக்குகள் தயாரிக்கும் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார்.

இணையதள முகவரி: SuKam

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக