பதிப்புகளில்

புறக்கணிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஓர் புரட்சி!

27th Nov 2015
Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share

சூழலின் காரணமாக மோசமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள் காலமெல்லாம் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அத்தகையவர்கள் வாழ்க்கையில் மெய்யான மாற்றத்தை உருவாக்கியுள்ளார் ஊர்மி பாசு.

மீனா (நிஜமான பெயரல்ல) 11 ஆம் வயதில் கடத்தப்பட்டாள். தற்போது தனது பழைய துயர நினைவுகளில் இருந்து வேகமாக மீண்டு வருகிறாள். இந்த மாற்றத்தை அவளிடம் கொண்டுவந்தவர்கள் நியூலைட் மன நல ஆலோசகர்கள். இன்று மீனாவிடம் பெரிய மாற்றம் காணப்பட்டுள்ளது என்றாலும் இன்னமும் அவளது ஆழ் மனதில் துயரத்தின் வடு நீடிக்கவே செய்கிறது. மேற்கு வங்கம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த அவளது கிராமத்தில் இருந்து அண்டை வீட்டுக்காரரால் ஆசைகாட்டி கடத்தப்பட்டாள். மீனாவைக் கடத்திய அண்டை வீட்டுக்காரர் மனிதக் கடத்தலையே தொழிலாகச் செய்து வருபவள். கடத்தப்பட்ட மீனா, பீகாருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்னொரு கடத்தல்காரனிடம் விற்கப்பட்டாள். மீனாவை விலைக்கு வாங்கியவன் திருமண விருந்துகளில் நாட்டியமாடவும், பாலுறவிற்கும் அவளை நிர்பந்தித்தான். பச்சிளம் பருவம் மாறாச் சிறுமியான மீனாவின் தோற்றத்தை முதிர்ச்சியாகக் காட்ட வளர்ச்சிக் ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டன. எப்படியோ ஒருவழியாக கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பித்து காளிகாட் வந்து சேர்ந்தாள் மீனா. அவள் வயதிற்குரிய படிப்பு இல்லாவிட்டாலும் பள்ளிக் கல்வியை படித்து முடித்தாள். 2015 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த கையோடு நியூலைட் உதவியுடன் தொழிற் கல்வி பயின்றாள். மீனா கடினமான உழைப்பாளி என்பதோடு பொறுப்புணர்வும் மிக்க இளம்பெண். சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு அதிலிருந்து மீண்டவள் என்றாலும் இன்று வெற்றிப் படிக்கட்டில் உயர்ந்து நிற்கிறாள்.

image


குழந்தைக் கடத்தலுக்கு ஆளாகி அவளது 10 ஆம் வயதில் கொல்கத்தாவின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான சோனாக்கட்சியில் இருந்து மீட்கப்பட்டவள் ஹேமா. தன்னை ஹேமாவின் வளர்ப்புத் தாய் என்று சொல்லிக் கொள்ளும் ஒருத்திதான் உண்மையில் அவளைச் சிவப்பு விளக்குப் பகுதியில் கொண்டு சேர்த்தவள். ஹேமாவின் சிறுமிப் பருவமும், பதின்ம பருவமும் கடத்தலில் மீட்கப்படுபவர்கள் தங்க வைக்கப்படும் அரசு விடுதியில் கழிந்தது. பருவ வயதை எட்டிய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காப்பு விடுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹேமா, கடந்த சில ஆண்டுகளாக சோனார் டோரியில் உள்ள நியூலைட் இல்லத்தில் இருந்து வருகிறாள். தற்போது திறந்தவெளிக் கல்வி உயர்நிலைத் தேர்விற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறாள். அற்புதமான நாட்டியக்காரியான ஹேமா நாட்டிய வல்லுனர்களால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களது ஆசீர்வாதங்களுடன் வாழ்க்கைத் தொழிலாக நாட்டியத்தையே தேர்ந்தெடுக்கவிருக்கிறாள் வெகு விரைவில்.

பலர் வாழ்வில் நியூலைட் ஏற்றிய ஒளி

ஹேமா, மீனா இருவரது வாழ்விலும் நியூலைட் ஒளியேற்றியுள்ளது. 2000 ஆம் ஆண்டு ஊர்மி பாசுவால் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது நியூலைட். நேர்மறை எண்ணங்கள் வாழ்வில் எத்தகைய சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணக் குடும்பம் ஊர்மியினுடையது. ஊர்மியின் பாட்டனார் ஒரு டாக்டராக இருந்தவர். தலித் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வீட்டையே ஒரு பள்ளியாக மாற்றியவர். “இந்தியாவின் பாரம்பரியம் சொல்லப்படுகிற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கிய குடும்பம் எங்களுடையது. 2000 ஆம் ஆண்டில் காளிகட்டின் இருண்ட சந்துகள் வழியாக நான் நடந்து போனதன் மூலமாக என் வாழ்க்கை என்றென்றைக்குமாக மாறி விட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெண் சமநீதிக்காகப் போராடுவதில் ஈடுபாடு கொண்டிருந்த நான், சமூக சேவைத் தளத்தில் காளிகாட் சமூகத்தின் இளைஞர்களான கிருஷ்ணா மண்டல், சாகிப் நாராயண் பட்டாச்சார்ஜி ஆகியோருடன் இணைந்து தீவிரமாகச் செயல்படத் துவங்கினேன். வெற்றிக்கு உத்திரவாதமான திட்டம் ஏதும் கைவசம் இல்லாமலே வெறும் 10000 ரூபாயுடன் நியூலைட்டைத் துவக்கினோம்” என்று தனது கடந்த காலத்தை நினைவு கூர்கிறார் ஊர்மி பாசு. மும்பை டாட்டா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் குற்றவியல் மற்றும் நிர்வாகச் சீரமைவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற புதிதில் மும்பை காவல் துறையில் மனநலம் பாதித்த பெண்களுக்கான தனித்தப் பிரிவு ஒன்றை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பு அவரது நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு போபால் விஷ வாயுக் கசிவு மீட்புப் பணியிலும் சேவையாற்றியுள்ளார்.

ஊர்மிபாசு

ஊர்மிபாசு


பதினைந்து ஆண்டுகளாக வளர்ச்சித் துறையில் நன்கு அறியப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார் ஊர்மி. கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள தெருக்குழந்தைகள், கடத்தலுக்கு உள்ளான குழந்தைத் தொழிலாளர்கள், சுரண்டலுக்குள்ளாகும் சிறுவர் (பாலியல் தொழிலில் உள்ள பெண்களுக்கு நேரும் கடுமையான வன்முறை) போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு பாசுவிற்கு நேர்ந்தது.

புகலிடத்தில் விளையாடும் குழந்தைகள்

புகலிடத்தில் விளையாடும் குழந்தைகள்


பாதுகாப்பான புகலிடம்

அனைத்து வகைகளிலும் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்குரிய உரிமை இந்த உலகில் அனைத்துக் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டமாக இந்த உரிமை சமீபகாலமாக இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. சமூகக் கேடுகள் அனைத்திலும் மிக மோசமானது குழந்தைகள் நலன் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதேயாகும். நியூலைட்டின் துவக்கத்திலேயே பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு புகலிடம் அங்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது. ”சிவப்பு விளக்குப் பகுதி தெருக்களில் உள்ள தாய்மார்கள் மாலை நேரங்களில் தான் தங்களது தொழிலுக்குச் சென்றாக வேண்டும். சில நாட்கள் முழு இரவும் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எந்த மாச்சர்யமும் இல்லாமல் யாராவது பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார்கள். அல்லது பிள்ளைகளை கவனித்துக் கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நிலையைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வந்த நான், அந்தக் குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு இல்லம் உருவாக்க வேண்டும் என்று கருதி மாலைநேரக் காப்பகத்தை உருவாக்கினேன். அந்த இல்லம் தான் இன்று நியூலைட் சேவை மையத்தின் கீழ் இயங்கும் பாதிப்பிற்குள்ளான அனைத்துப் பிள்ளைகளுக்குமான பரந்த திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நியூலைட் குழந்தைகள் அனைவருக்கும் பாதுகாப்பையும், அச்சமற்ற சூழலையும் உத்திரவாதப்படுத்தியுள்ளது. சிறுவர் காப்பகம் ஒன்று சிறுமியர் காப்பகம் இரண்டு என மூன்று காப்பகங்களை நியூலைட் நடத்தி வருகிறது” என்று கூறினார் ஊர்மி பாசு.

அக்கறையும், பாதுகாப்புமான சூழலை ஏற்படுத்துதல்

இந்த நகரத்தில் ஆண்டு தோறும் 40000 பேர் புதிதாகப் பாலியல் தொழிலுக்குள் வருகின்றனர். அவர்களது குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது சாதாரண செயல் அல்ல. ஆனால் நியூலைட் அமைப்பின் கீழ் இயங்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவையாளர்கள் குழந்தைகளுக்குத் தொடர்ந்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருகிறார்கள். இங்குள்ள பெண் கண்காணிப்பாளர்களும், எச்ஐவியுடன் வாழ்பவர்களும் எங்களிடம் உள்ள குறைந்தபட்ச உள் கட்டமைப்பைக் கொண்டும், குறைவான வளமையைக் கொண்டும் சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்கள்” என்று தெரிவிக்கிறார் ஊர்மி.

image


கல்வியின் மூலமாகவும், வாழ்க்கைத்திறன் பயிற்சியின் வாயிலாகவும் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் வன்முறைக் கொடுமைகளைத் தடுப்பதும் எங்களது நியூலைட்டின் இலட்சியம் ஆகும். “பாலியல் தொழிலில் அனேகப் பெண்கள் ஈடுபடுவதற்குக் காரணம் சூழ்நிலை பாதிப்பிற்கு உள்ளானவர்கள், முழு மனவிருப்பத்துடன் இத்தொழிலில் இறங்குபவர்கள் அல்ல, வேறு வழியின்றி இத்தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள் என்று கருதுவதால் நாங்கள் பாலியல் தொழில் சட்டத்தை ஆதரி்ப்பதில்லை.

அரசாங்கம் அளிக்கும் உடல்நல மருத்துவம் விளிம்புநிலை மக்கள் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை. எனவே பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவசரநிலை உதவி, நோய் எதிர்ப்பு சக்தி, நீண்ட நாள் நோய்களுக்கான தொடர் சிகிச்சை போன்ற அடிப்படையான சிகிச்சைகளை நியூலைட் கடந்த 14 ஆண்டுகளாக முழுமையாக அளித்து வருகிறது. சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு அருகாமை இடங்களுக்கும் நியூலைட் மருத்துவ உதவி அளித்து வருகிறது. இதற்காக இரண்டு மருத்துவ மையங்களை செயல்படுத்தி வருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும் இந்த மருத்துவ இல்லங்களுக்கு பொதுநல மருத்துவர், குழந்தைநல மருத்துவர், பெண்நல மருத்துவர் ஆகியோர் தொடர்ந்து வருகை புரிகின்றனர். முழுநேர பயிற்சி பெற்ற தாதிகள் ஆறுபேர், மருத்துவம் தேவைப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் 24 மணி நேரமும் சேவை செய்து வருகின்றனர்.

மக்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கான முயற்சி

’வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாதவர்கள் எவ்வளவு தான் ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் அவர்களால் எந்தப் பயனும் இல்லை’ என்கிறார் பாசு. நெருக்கடியான சூழலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தம் வாழ்க்கைக்கு ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய இலக்கை நிர்ணயிக்கும் வகையில் அவர்களுக்கு புத்தாக்கம், கூட்டுணர்வு, உரையாடல் ஆகியவற்றின் மூலமாக ஊக்கமூட்டும் செயலை நியூலைட் செய்து வருகிறது. ”நாங்கள் நடத்தும் பயிற்சித் திட்டங்களில் பாலியல் தொழிலில் இருந்து மீண்டவர்களும், தலித் சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் பங்கேற்று மறு சுழற்சி பருத்தித் துணிகளை உருவாக்கப் போராடிப் பல வெற்றிக்கதைகளைப் படைத்துள்ளனர். ஆஞ்சல் என்றழைக்கப்படும் திட்டம், பாலியல் தொழிலை விட்டு வெளியேறத் தயாராக உள்ள பெண்கள் ஆறுபேருக்கு நீடித்த வேலை வாய்ப்பையும், நிரந்தர வருமானத்தையும் உருவாக்கித் தந்துள்ளது. வேலை வாய்ப்பற்ற பெண்களும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட பெண்களும் நியூலைட் அளிக்கும் பயிற்சியின் மூலமாக நேர்த்தியான காந்தா எம்ப்ராய்ட்ரரி வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். எங்களது ஆஞ்சல் திட்டத்தின் கீழ் எமது பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை, கைவினைப் பொருட்களை, பயன்படுத்த இயலாத சேலை – வேட்டிகளை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றதாக மாற்ற நமது பாரம்பரியமான புத்தாக்கத் திறன்களைப் பின்பற்றுகின்றனர்” என்கிறார் சமூகச் சீர் திருத்தவாதி என்று பெயர்பெற்ற ஊர்மி. இவரது தலைமையின் கீழ் நியூலைட் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்கள், குழந்தைகள் என 40 பேர்களை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.

image


ஆங்கிலத்தில்: பய்சாலி முகர்ஜி | தமிழில் போப்பு

Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share
Report an issue
Authors

Related Tags