பதிப்புகளில்

புதுமையான கண்டுபிடிப்புகளால் மாதவிடாயைக் கொண்டாட வைத்த 2015

YS TEAM TAMIL
5th Jan 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதுமுள்ள 80 கோடி பெண்கள் தமது “அந்த நாட்களை” அனுபவிக்கின்றனர். ‘கோட் ரெட்’ என்பதன் அர்த்தம் உங்களுக்கும் தெரியுமல்லவா? ‘கம்யூனிஸ்ட்டுகளிடம் சரணாகதி’, ‘ஆன்ட்டி ஃப்ளோவைச் சந்திக்கும் விடுப்பு’ என பல்வேறு விதமாக நமது மாதவிடாய் காலத்தை எத்தனையோ வளர்ச்சியைத் தொட்ட இந்தக் காலத்திலும் சோதனையான நாளாகவே உணர்ந்து வருகின்றோம். 

கடந்த ஆண்டில் நாம் மாதவிடாய் என்கிற மாதாந்திர நிகழ்வைச் சூழ்ந்துள்ள பழங்கருத்துக்களையும் அவற்றை மாற்றும் முயற்சியில் இறங்கியவர்கள் பலரையும் கவனித்தோம்.

image


மாற்றத்தை விதைத்த மாதவிடாய் கதைகள்

1. மென்ஸ்ட்ருப்பீடியா Menstrupedia

ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ந்துவரும் நகரமான கர்வாவைச் சேர்ந்தவர் அதிதி குப்தா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பழமைவாத குடும்பத்தில் முதன்முறையாக பருவமெய்தியது முதல் தனித்து வைக்கப்பட்டார். அசுத்தமானதாகக் கருதப்படும் மாதவிடாயைச் சூழ்ந்துள்ள பழமைவாத கருத்துக்களுக்கு தன்னைப்போல இன்னொரு சிறுமி உணரக்கூடாது என எண்ணினார். சமூகத்தில் நிலவிவந்த பழங்கருத்துக்களை தகர்த்தெறிய அறிவின் ஒளியை நாடினார். தன்னை ஒத்த சிந்தனையைக் கொண்ட இணை-நிறுவனரும், ஆத்ம துணையுமான துஹினுடன் ஒருங்கிணைந்து 'மென்ஸ்ட்ருபீடியா'வின் உருவாக்கத்துக்கு வித்திட்டார். இணையதளமாக உருவெடுத்த இவரது எண்ணம் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய புத்தகங்களைக் கொண்டதாக உள்ளது. மாதத்துக்கு ஒரு லட்சம் பேர் பார்வையிடும் தளமான இதில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘மென்ஸ்ட்ருப்பீடியா காமிக்’ தென் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பகுதிகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த காமிக்குக்கு கிடைத்த வரவேற்பு, விரைவில் எட்டு இந்திய மொழிகளிலும், மூன்று அயல்நாட்டு மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்ய எண்ணும் தன்னார்வலர்களால் நிரம்பி வழிகின்றது. ஒலி - ஒளி பொருந்திய மென்ஸ்ட்ருப்பீடியா செயலியும் விரைவில் வெளிவர உள்ளது. “இதுகுறித்து பரவலாக பேசுவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வாழ்வின் பல்வேறு தளத்தில் உள்ளவர்களும் எழுதிய பல்வேறு கட்டுரைகள் எங்கள் வசம் உள்ளது. தந்தையரும், தாத்தாக்களும் எங்கள் புத்தகத்தை வாங்கி தமது மகள்களுக்கு பாடம் புகட்டுகின்றனர்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார் அதிதி.

2. ஸ்வாதி பெட்கரின் ‘சகி’ Sakhi

நமது மாதவிடாய் கால கட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் நீளமானதா அல்லது எக்ஸ்ட்ராவிங்ஸா என சிந்திப்பதே பெரும்பாடாய் உள்ளது. ஆனால், உலகின் பெரும் பங்கு பெண்கள் மாதவிடாயை தூய்மையற்ற துணி சுருளுடன் கழிக்கின்றனர். இந்தியாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களின் இதுபோன்ற வாழ்க்கை முறை ஸ்வாதியை தூக்கமிழக்கச் செய்தது. அனைவருக்கும் அடிப்படை உரிமையாக கிடைக்க வேண்டிய சுத்தத்தை இந்த கிராமப்புற பெண்களுக்கு தருவதற்காக, தன்னுடைய வாத்சல்யா நிறுவனத்தின் மூலமாக ‘கோயம்பத்தூரின் அருணாச்சலம் முருகானந்தம்’ என்பவரின் மரக்கூழ் மூலம் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கினார். கிராமப்புறங்களில் நிலவிவந்த முந்தைய தூய்மையற்ற துணி பயன்படுத்தும் பழக்கத்தை உடனடியாக மாற்ற இது ஏதுவாக இருந்தது. இத்துடன், இந்த நாப்கின்களை அகற்றுவதற்காக ‘எரியூட்டிகளையும்’ இப்பகுதியில் அமைத்துள்ளார். ‘சகி’ என்ற பெயரில் குஜராத் மாநிலத்தின் பான்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள சுமார் நூறு குடும்பங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் முறையை கற்பித்து முதல் உற்பத்தியாளர்களையும் உருவாக்கியுள்ளார்.

3. ஆக்கர் Aakar

மாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமின்மையால் நான்கில் ஒரு இளம் பெண் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை நீடிப்பதால், பள்ளியின் பாடத்திட்டங்களுடன் இணங்கி பயில முடியாமலும், சக மாணவர்களுக்கு இணையாக சிறப்பாகத் திகழ முடியாமலும், இறுதியாக பள்ளிப்படிப்பை முழுவதுமாக கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ‘ஆக்கர்’ சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் சிறு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளது. பத்து முதல் பதினைந்து பெண்கள் பணிபுரியும் இந்தத் தொழிலில் இந்திய தரச் சான்று பெற்ற மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. ஆக்கரின் அடுத்த இலக்காக இருந்தது, கிராமப்புறப் பெண்களை உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளர்களாகவும், ‘ஆனந்தி பென்’ என்ற பெயரில் மிளிர வைப்பது. இவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதவிடாய் கால சுத்தத்திற்கு வழிவகுக்கும் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வது என தொடர்ந்து வருகின்றது.

தொடரும் விழிப்புணர்வுக்கான முயற்சிகள்

1. மாதவிடாய் சுகாதார நாள்: மாதவிடாய் சுழற்சியினைப் பற்றிப் பேச பழங்கருத்துக்கள் தடையாக இருப்பதனாலேயே, சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், பெண்களை நோய்களிலிருந்து காப்பதிலும் பெரும் தாமதம் நிலவுகின்றது. வாஷ் கூட்டுறவின் (WASH) பெரும் முயற்சியால் கடந்த 2014-ம் ஆண்டின் மே 28-ம் தேதி முதன்முறையாக மாதவிடாய் சுகாதார நாள் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏன் மாதவிடாய் ஒதுக்கப்படவேண்டியதில்லை என்பது பற்றியும், ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அத்துடன், உலகெங்கிலுமுள்ள மற்ற நிறுவனங்களுக்காக கருவித்தொகுப்புகளின் கண்காட்சியையும் உருவாக்கினர். இதன்மூலம், விழிப்புணர்வு அமர்வுகளையும், பேச்சுவார்த்தைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நாள் வரும் 2020-ம் ஆண்டுக்குள் சர்வதேச மாதவிடாய் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என ஐ.நா. தீர்மானிக்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2. #ஹேப்பிடுப்ளீட் இயக்கம்: பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரைச் சேர்ந்த நிகிதா ஆசாத் என்ற மாணவி தன்னை ஒரு பாலின உரிமை ஆர்வலராக தனது தனித்துவமான போராட்டத்தின் மூலம் முழு இந்தியாவும் திரும்பிப் பார்க்க வைத்தார். தனது #ஹேப்பிடுப்ளீட் இயக்கத்தின் மூலமாக பாலின வெறுப்பை வெளியிட்ட கேரள மாநிலத்தின் ஐயப்பன் கோவிலில் தேவஸ்தான தலைவராக உள்ள பிராயர் கோபலகிருஷ்ணனனுக்கு எதிராக குரலெழுப்பினார். இந்தக் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கோபலகிருஷ்ணன் அனுமதி மறுத்துள்ளார். இந்தப் புனிதத் தளத்திற்குள் பெண்கள் நுழைந்தால் அதன் தூய்மை கெட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தினை எதிர்த்து இந்தியாவின் எல்லா மூலைகளிலும் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களின் பக்கங்கள் ரத்த சிவப்பு நிறத்தினால் நிரம்பி பாலின பாகுபாட்டுக்கு எதிரான கோபத்தை சீற்றத்துடன் வெளியேற்றியது.

3. ரூபி கெளரின் சோதனை முயற்சி: படங்கள் ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் என்கிற கருத்தை தனது இன்ஸ்டிகிராம் பக்கத்தில் சோதனை முயற்சியாக ரத்தக் கறையுடன் உள்ள படங்களை கடந்த மார்ச் மாதம் முதல் வெளியிடத் தொடங்கினார். தூக்கத்தில், ரத்தக் கறையுடன் வெளிட்ட புகைப்படங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக இன்ஸ்டகிராமால் நீக்கப்பட்டன. 95 சதவிகித கமெண்டுகள் தன்னை ஆதரிக்கும் வகையில் வந்தாலும், இன்ஸ்டகிராம் அவற்றை நீக்க முடிவெடுத்துவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

4. டேம்பூன் அணியாத மாரத்தான்: தொழில்முறை மாராத்தான் ஓட்டப்பபந்தய வீராங்கணையான கிரண் காந்தி தன்னுடைய போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் வாரக்கணக்கில் தயாராவார். ஆனால், தனது நகரின் மாபெரும் போட்டியன்று அவருக்கு மாதவிடாய் தொடங்கியது கடும் சவாலாகிப்போனது. முதலில், இதனால் வெறுப்படைந்த கிரண் வழக்கம் போல தான் அணியும் உடையிலேயே (டேம்பூன் அணியாது) லண்டன் மாராத்தான் போட்டிக்கு தயாரானார். இந்தப் போட்டியின் நாயகியாக தனது தன்னம்பிக்கையான முடிவால் உலக மக்களால் உற்று நோக்கப்பட்டார். அவரது இந்த வெளிப்படையான முடிவு அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றுத்தந்தது.

மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்: தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கண்டுபிடிப்புகளை மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படும் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகளின் மூலம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது பல நகர்புற நிறுவனங்கள்.

1. சாத்தி: சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுவரும் மோசமான விளைவை அறிந்து, அதற்கு மாற்றாக, சாத்தி சானிட்டரி நாப்கின்களை நான்கு பெண்கள் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. ஸ்டெம் அமைப்பினை, உருவாக்கியுள்ள கிறிஸ்டின் காகெட்ஸூ, அமிர்த்தா செய்கல், கிரேஸ் கானே, அஷுதோஷ் குமார் மற்றும் ஸாக்கரி ரோஸ் ஆகியோர் இணைந்து வாழை நாரைக்கொண்டு சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காத சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகின்றனர். நகரப்புறங்களில் சக போட்டியாளர்களுக்கு இணையாக விலைவைத்து விற்கப்படும் இது, கிராமப்புறங்களில் மானியத் தொகையில் விற்கப்பட்டு வருகின்றது.

2. ஹைஜீன் அண்ட் யூ: இந்தியர்களிடையே, ‘மாதவிடாய் கோப்பை’ என்ற வார்த்தையைக் கூறினாலே அதிர்ச்சி அலைகள் பரவும். “நான் இதைப் பயன்படுத்துவதைக் குறித்து தோழிகளிடம் தெரிவித்தபோது முதலில் எனக்கு ஆதரவாகப் பேசினர். இதன் பயன்பாட்டு முறையை விளக்கமாக தெரிவித்த பிறகு யார் இந்த கோப்பையைப் பயன்படுத்தத் தயார்? என கேள்வியெழுப்பியபோது ஒரே குரலாக பயன்படுத்த தயாரில்லை’ என தோழிகள் புறமுதுகிட்டதாக ஹைஜீன் அண்ட் யூ (சுகாதாரமும் நீங்களும்) நிறுவனர் பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். தனது நிறுவனத்தின் மூலமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த செலவில் கிடைக்கும் மாதவிடாய் கோப்பைகளை இவர் தயாரித்து வருகின்றார். இந்த அதி நவீன தொழில்நுட்பம் மகிழ்ச்சியான மாதவிடாயைத் தருவது மட்டுமல்லாது, மாதவிடாய் மற்றும் மாதவிடாய் கோப்பை தொடர்பான தேவையற்ற பழங்கருத்துகளை புறந்தள்ளும் பிரியங்காவின் தனிப்பட்ட போராட்டத்துக்கும் கைக்கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

3. லூன்கப்: முந்தைய மாதவிடாய் கோப்பைக்கு அடுத்த கட்டமாக வெளிவந்துள்ளது ‘லூன்கப்’. உடலின் ரத்த ஓட்டம் முதல் வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்ந்து இதுதொடர்பான செய்திகளை உங்களது ஸ்மார்ட்போனுக்கே அனுப்பி வைக்கின்றது. கடந்த 2015-ம் ஆண்டு சிந்தனையில் உதித்த இது, ‘கிக்ஸ்டார்ட்டர்’ தளம் மூலமாக முழுவடிவம் பெற நிதி திரட்டப்பட்டது. தற்போது இதனை கிக்ஸ்டார்ட்டர் பக்கம் மூலமாகவே ஆர்டர் செய்து கொள்ளலாம்.

4. தின்க்ஸ்: மாதவிடாய் கால உள்ளாடை ‘பிரச்சனையைப் பற்றி யோசிக்காதே! அதற்கான தீர்வைப்பற்றி யோசி!’ என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் ‘தின்க்ஸ்’ என்ற யோசனைக்கு வித்திட்டிருக்க முடியும் எனத் தோன்றுகின்றது. பன்நெடுங்காலமாக எவ்வித சானிட்டரி நாப்கின்கள் அல்லது டேம்பூன்கள் சரி? என யோசித்து அவற்றை தயாரித்து வந்தோம். தின்க்ஸ் ஒரு படி மேல் சென்று இந்த அடிப்படை பிரச்சனையை சரி செய்யும் விதமாக ‘மாதவிடாயன்று வெளிவரும் ரத்தத்தை’ உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுள்ள இந்த உள்ளாடைகளை தயாரித்துள்ளனர்.

5. தி பீரியட் டால்: லம்மிலி தமது மகளிடம், மாதவிடாய் பற்றிப் பேசத் தயங்கும் பெற்றோருக்கு உதவுவதற்கென லம்மிலி உருவாக்கப்பட்டிருக்கின்றாள். மாதவிடாயின்போது தனது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை இந்த பொம்மையுடன் விளையாடும்போதே சிறுமி தெரிந்துகொண்டுவிடுவாள். லம்மிலியுடன் விளையாடும்போது ஒரு கட்டத்தில் சிறுமி லம்மிலிக்கு நாப்கினை வைக்க வேண்டிவரும். மேலும், லம்மிலி பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க தயங்கும் விஷயங்களையும் எடுத்துரைப்பாள் என்பது ஒரு சிறப்பம்சம்.

6. பீயிங் ஜூலியட்: மாதவிடாய் நாட்களை கொண்டாடும் யுக்த்தியை தனது தொழிலாக்கிக் கொண்டுள்ளார் ராஷி பஜாஜ். தன்னுடைய பீயிங் ஜூலியட் திட்டத்தின் கீழ் மாதவிடாய் நேரத்தில் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இதனை நமது நண்பர்களுக்காகவும் வாங்கி அனுப்பி வைக்கலாம். இது மாதவிடாயைக் கொண்டாடும் விதமாகவும் நமது அன்பையும், அக்கறையையும் மாதவிடாய் காலத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பதாகவும் உள்ளது. இந்த நாட்களைக் கொண்டாட வாய்ப்பு கொடுப்பதாக பீயிங் ஜூலியட் திட்டம் அமைந்துள்ளது.

இந்தத் தீவிரப் பிரச்சாரங்கள் நம்மை மாதவிடாயைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்க வைத்துவிட்டன. இது நமது பார்வையிலும், சிந்தனையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம்.

ஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags