பொலிவிழந்த சிறுதொழில்களுக்கு இணையம் மூலம் வெளிச்சம் தரும் தமிழ் பிராண்ட்ஸ்!

  தமிழ்நாட்டில் நலிவடைந்து வரும் சிறுதொழில், குடிசைத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்போரை டிஜிட்டல் வணிகத்தில் இணைத்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு தெம்பூட்டும் பணிகளை செய்து வருகிறார் நித்திலா திருவள்ளுவன்!
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  காலையில் எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டில் தொடங்கி சோப், சென்ட், காலணி, கொசுவிரட்டி என அனைத்திலும் அந்நியம். ஒவ்வொரு மாதமும் இவற்றின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் லாபம் சம்பாதிக்கும் அந்த நிறுவனங்கள் கோடிக்கோடியாய் காசை கொட்டிக் கொடுத்து விளம்பரம் செய்வதற்குக் காரணம் அவர்களின் வர்த்தம் பெருக வேண்டும், நாம் அவர்களின் பொருட்களுக்கு அடிமையாக வேண்டும் என்பதே.

  வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே விருட்சம் பெற்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகின்றனர். சொந்த ஊரில் கடந்த 30 ஆண்டுக்கு முன்னர் சிறுதொழில் செய்து வந்தவர்களோ இன்றளவும் வறுமை கோட்டிற்கு கீழே போராடிக் கொண்டிருக்கின்றனர். 

  விளம்பரச் சந்தையை பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஈடு கொடுக்க முடியாமல் இருப்பதற்கு அந்தப் பொருட்களை நுகர்வு செய்வோரின் எண்ணிக்கை குறைவும் காரணம். உள்ளூர் உற்பத்தியாளர்கள் நலிவடைந்து போனதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகி இருக்கிறோம். இந்த தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக ரசாயன கலப்பு இல்லாமல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே வித்திடும் பொருட்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த சிறுதொழில்களுக்கு டிஜிட்டல் யுகத்தில் அடையாளம் தந்து வருகிறது தமிழ் பிராண்ட்ஸ். காம் (www.tamilbrands.com).

  image


  திருச்சியில் பிறந்து வளர்ந்த நித்திலா, திருமணத்திற்கு பின்னர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் மிகுந்த அன்பு கொண்ட அவர் தமிழர்கள் உயர்வு குறித்து எப்போதுமே சிந்தித்து செயல்படுபவர். இவரின் சிந்தனையில் உதித்தது தான் தமிழ் பிராண்ட்ஸ். காம். 

  நான் சிறு பிள்ளையாக இருந்த போது எங்கள் வீட்டின் அருகே தீக்குச்சி, மெழுகுவர்த்தி உற்பத்தி செய்பவர்கள் என பல குடிசைத் தொழில்களை பார்த்திருக்கிறேன். 30 ஆண்டுகளில் இந்த சிறுதொழில்கள் எல்லாம் என்ன ஆகின, அவை ஏன் முடங்கிப் போனது என்ற கேள்வி எழுந்தது. உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி மருந்தே உணவு என்றாகிவிட்டது இந்த தவறுகளை திருத்த வேண்டுமென்றால் தன்னிச்சை பொருளாதாரம் ஒன்றே தீர்வு, என்றார்.

  “தன்னிச்சை பொருளாதாரத்தில் சிறுதொழில், குடிசைத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு என அனைத்துமே வலுவடைய வேண்டும். இவை வலுவடைய வேண்டும் என்றால் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்,” என்கிறார் தமிழ் பிராண்ட்ஸ்.காம்’ன் நிறுவனர் நித்திலா.

  சமூக வலைதளங்கள் பலரது வாழ்க்கையை மாற்றுகிறது, இதனை பயன்படுத்தி நலிவடைந்த சிறு தொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வர நித்திலா எடுத்த ஓராண்டு முயற்சியின் பலனாக இந்த ஆண்டு தமிழ் பிராண்ட்ஸ்.காம் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

  இந்த இணையதளத்தில் உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் பதிவு செய்து செய்யலாம். பதிவு செய்யப்படும் உற்பத்தியாளர்களின் பொருட்கள் இணையதள பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் அதை பார்த்து விருப்பம் இருப்பவர்கள் உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு பொருட்களை ஆர்டர் கொடுக்கலாம்.

  உற்பத்தியாளர்கள், நுகர்வோர் இடையேயான சப்ளை செயினை குறைத்து உற்பத்தியாளருக்கு அதிக லாபம், அதிக விற்பனை நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான பொருள் என்பதை அடிப்படையாகக் கொண்டே தமிழ் பிராண்ட்ஸ் செயல்பட்டு வருகிறது என்கிறார் நித்திலா. 

  உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை நுகர்வு செய்யும் கலாச்சாரம் வளரும் போது இளம் தலைமுறை உற்பத்தியாளர்கள் உருவாக நேரிடும், மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து அவர்கள் தொழில்முனைவர்களாவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்.

  தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உற்பத்தியாளர்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் தளமாக தமிழ் பிராண்ட்ஸ் திகழ்கிறது. பற்பொடி, அழகு சாதன பொருட்கள், வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள், சத்துமாவு, தின்பண்டங்கள் என நுகர்வோருக்கு தேவையான A to Z பொருட்கள் அனைத்தையும் தமிழ்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்தே வாங்கும் பழக்கத்தை கொண்டு வர நித்திலாவின் தமிழ் பிராண்ட்ஸ் முயன்று வருகிறது. 

  இது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இவர்கள் இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளனர், அவற்றில் சில உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் டீலர்ஷிப் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் நித்திலா. 

  உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெட்டிக்கடை முதல் பலசரக்கு கடை வரை வணிகம் செய்பவர்களும் இவர்களின் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என்கிறார் அவர். மேலும் விவசாயிகளுக்கு இணைய வர்த்தகம் பற்றிய புரிதலை கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களை களைந்து விரைவில் விவசாயப் பொருட்களும் தமிழ் பிராண்ட்ஸ் பக்கத்தில் சேர்ந்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நித்திலா.

  தமிழ் பிராண்ட்ஸ். காம் நிறுவனர் நித்திலா

  தமிழ் பிராண்ட்ஸ். காம் நிறுவனர் நித்திலா


  உற்பத்தியாளர்களை இணையத்தில் பதிவு செய்ய வைப்பதோடு நின்று விடாமல் அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் மேக்கிங் வீடியோவையும் பதிவு செய்து யூ டியூப் மூலம் விளம்பரப்படுத்தியும் வருகிறது இக்குழு. ஆன்லைனில் பொருட்கள் விற்பனை என்றால் என்ன என்று உற்பத்தியாளர்களுக்கு புரிய வைப்பது கடினமான விஷயமாக இருந்தது. அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பின் பேரிலேயே தற்போது வீடியோக்கள் பதிவு செய்து தமிழ் பிராண்ட்ஸ் யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருவதாகக் கூறும் நித்திலா அவரின் குழு உழைப்பாலேயே இவை சாத்தியமானது என்கிறார்.

  சமூகவலைதளம் நித்திலாவிற்கு புதிதல்ல, முகநூலில் கற்ககசடற என்ற பக்கத்தில் சமூக பிரச்னைகள் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்து அதற்கு சரியான தீர்வையும் கூறி வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இப்படி நித்திலா பதிவிட்டவற்றில் விவசாயிக்கு கிடைக்கும் லாபம் என்ற வீடியோவிற்கு கிடைத்த பார்வையாளர்கள் மற்றும் ஷேர்களை வைத்தே தமிழ் பிராண்ட்ஸ் என்ற ஒன்றை தொடங்கலாம் என முடிவு செய்திருக்கிறார்.

  தமிழ் பிராண்ட்ஸ் இணைய பக்கம் தொடங்கலாம் என்று நான் கூறிய போது இணையத்தில் பார்த்து பொருட்களை யார் வாங்குவார்களா என்று என் பெற்றோர் கேட்டனர் எனினும் எனது முயற்சிக்கு தடை போடாமல் உறுதுணையாக இருந்தனர். இதே போன்று என் கணவரும் எனக்கு பக்கபலமாக இருந்ததால் இந்த இணைய பக்கத்தை செயலுக்குக் கொண்டு வர முடிந்தது என்கிறார். 

  தமிழ் பிராண்ட்ஸ் இணைய பக்கம் தொடங்க சுமார் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்துள்ளார் நித்திலா, உற்பத்தியாளர்களை தெரிந்து கொள்ளும் பக்கமாகவே இருக்கும் இதனை இந்த ஆண்டு இறுதிக்குள் ஆன்லைனிலேயே பொருட்களை வாங்கும் இணைய வர்த்தகமாக மாற்ற முடிவு செய்து அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

  தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் நித்திலாவிற்கு அதீத அன்பு வர மற்றொரு காரணம் அவருடைய தாத்தா பிரபல மேடைப் பேச்சாளர் பேராசிரியர் சத்யசீலன். என்னுடைய அப்பா அம்மா இருவரும் பணியில் இருந்ததால் நான் அம்மாச்சி வீட்டில் தான் வளர்ந்தேன், என் தாத்தா சத்யசீலன் என்னுடைய ரோல்மாடல் என்று சொல்லலாம் தாத்தாவுடன் பட்டிமன்றங்களை பார்க்கச் செல்வது, எளியவர்களுக்கு அவர் உதவுவது உள்ளிட்டவற்றை பார்த்தே வளர்ந்ததால் எனக்கும் உதவும் குணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். 

  ”நலிவுற்ற தொழில்களுக்கு தோள் கொடுக்கும் சிறு தூணாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறார். எனக்கான தனித்துவத்தை இழக்காமல் இருப்பதே என்னுடைய அடையாளமாக நான் நினைக்கிறேன், பெண்கள் தங்களின் தனித்துவத்தை இழக்காமல் இருக்க திருமணத்திற்கு பின்னர் கணவன்மார்களும், திருமணமாகாத பெண்களுக்கு உறவினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்,” என்கிறார்.

  ”பெண்களுக்கு குடும்பம் முக்கியம் தான் ஆனால் அந்த குடும்பத்திற்காக தனித்துவத்தை இழந்து கனவுகளை தொலைத்து அவர்களை மூலையில் முடக்கி விடாமல் தனித்து செயல்பட விட்டால் பெண் இனம் சரித்திரங்கள் பல படைக்கும்,” என்கிறார் நித்திலா.

  சாப்பாடு முதல் நமது அன்றாட தேவைகளுக்கான அனைத்தையும் ஆன்லைனில் ஆஃபர்களை அள்ளித் தருகிறார்கள் என்று அந்நிய நிறுவனங்களிடம் மட்டுமே வாங்காமல் தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் உலகம் முழுவதும் கிடைக்கும் வகையில் ஆன்லைனிலேயே கிடைக்கும் போது அவர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆதரவு கொடுத்தாலே போதும் நலிவுற்ற தொழிலாளர்கள் மீண்டு வந்து விடுவார்கள் என்று நித்திலா எடுத்துள்ள முயற்சிக்கு மனம் இருப்பவர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும். 

  “தமிழ்நாட்டு உற்பத்தியாளர்களை மதிப்போம், தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருட்களை ஆதரிப்போம்.”