87 வயதில் 10வது, 12ம் வகுப்பு பாஸ் ஆகிய முன்னாள் முதல்வர்!

கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை 87 வயதான ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.
0 CLAPS
0

கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை 87 வயதான ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்.

ஹரியானா மாநில முதலமைச்சராக 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அப்போது, ஆசிரியர்கள் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில், டெல்லி நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, கடந்த 2017ஆம் ஆணடு தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில், ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தண்டனை முடிந்து, சிறையிலிருந்து வெளியே வந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா தேசிய திறந்த நிலை வாரியத்தின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். இருப்பினும், அவர் இன்னும் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரது முடிவுகள், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், 10ம் வகுப்பு ஆங்கிலth தேர்வை எழுதினார். தற்போது அதில் தேர்ச்சி பெற்றதன் மூலமாக 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தனது பொதுத் தேர்வுக்கான மார்க் ஷீட்டை பெற்றுக் கொண்டார். ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தான் எழுதிய 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் 100க்கு 88 மதிப்பெண்கள் எடுத்திருத்துள்ளார்.

தேர்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுதாலா கூறியதாவது,

"நான் இப்போது ஒரு மாணவன் - அரசியல் கருத்துக்கள் எதற்கும் இப்போது இடமில்லை,” எனக்கூறிவிட்டுச் சென்றார்.

87 வயது முதியவரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்த பதிலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அபிஷேக் பச்சன் மற்றும் நிம்ரத் கவுர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ஓம்பிரகாஷ் சவுதாலாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“தஸ்வி! அற்புதம்” என்று அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் நிம்ரத் கவுர் "முற்றிலும் அற்புதம்!! வயது என்பது உண்மையில் ஒரு இலக்கம் அல்லது நெம்பர் மட்டுமே," என பதிவிட்டுள்ளார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் அபிஷேக் பச்சன், நிம்ரத் கவுர், யாமி கெளதம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

‘தஸ்வி’ எனப் பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் வெளியானது. வயதான அரசியல்வாதி சிறையில் கல்வி கற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதை மையமாகக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு - கனிமொழிLatest

Updates from around the world