Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

2018ல் யுவர்ஸ்டோரி தமிழ் அடையாளம் கண்ட ‘இறைவி’கள்!

2018க்கு பைபை சொல்லும் முன்னர் யுவர்ஸ்டோரி தமிழ் கட்டுரைகள் மூலம் தனித்துவமான பெண்கள் என்று அடையாளம் காணப்பட்ட தன்னம்பிக்கை இறைவிகளின் ரீகேப்.

2018ல் யுவர்ஸ்டோரி தமிழ் அடையாளம் கண்ட ‘இறைவி’கள்!

Thursday December 20, 2018 , 4 min Read

2018ம் ஆண்டின் 365 நாட்கள் அதற்குள்ளாகவா முடிவுக்கு வருகிறது என்ற மலைப்புகளும், கண் இமைக்கும் நேரத்தில் இந்த வருஷம் முடியப் போகிறதே என்று நினைக்கிறீர்களா. ஒய் பீலிங் சேம் பீலிங்தான் இங்கயும், 2018க்கு பைபை சொல்லும் முன்னர் யுவர்ஸ்டோரி தமிழ் கட்டுரைகள் மூலம் தனித்துவமான பெண்கள் என்று அடையாளம் காணப்பட்ட தன்னம்பிக்கை இறைவிகளை ஒரு ரீகால் செய்யலாமா.

image


1. ‘மண்வாசனை’ மேனகா

சென்னையைச் சேர்ந்த மேனகா ’மண்வாசனை’ என்ற இயற்கை அங்காடியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஐடி பணியை உதறி விட்டு பாரம்பரிய நெல் வகையை தேடி அலைந்த கணவர் மீது கோபப்பட்ட மேனகா, பாரம்பரிய அரிசியால் தனது தைராய்டு பிரச்னை தீர்ந்ததை உணர்ந்து மக்களும் பயன்பெற வேண்டும் என்று இயற்கை பொருள்கள் விற்பனை அங்காடியை தொடங்கியுள்ளார். 

இப்படியாக படிப்படியாக முன்னேறி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மேனகாவின் வாழ்க்கையில் கடந்தாண்டு மாபெரும் சோகம் நிகழ்ந்தது. ஓர் எதிர்பாராத விபத்தில் கணவர் திலகராஜன் உயிரிழந்தார். திடீரென வாழ்க்கையே இருண்டு விட்டதைப் போல் உணர்ந்த மேனகா, தன் குழந்தைகளுக்காக மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மாறினார்.

image


கணவரின் பல ஆண்டுகால உழைப்பு வீணாகக் கூடாது என்று தீவிரமாக உழைத்து, ‘மண்வாசனை’ தொழிலை மேலோங்கச் செய்தார். பாரம்பரிய உணவுத்திருவிழா நடத்தி 100 வகை அரிசியில் பொங்கல் செய்து துணை உலக சாதனை விருதையும், நம்மாழ்வார் விருதையும் மேனகா பெற்றுள்ளார். 

அவரைப் பற்றி விரிவாக: பாரம்பரிய அரிசிகள் பற்றிய கணவரின் தேடலை அவரின் மறைவுக்குப் பின் தொடர்ந்த ‘மண்வாசனை’ மேனகா!

2. பாடி பில்டர் ரூபி ப்யூட்டி

ஆண்களுக்கு மட்டுமே உரித்தான துறை என்று கருதப்படும் பாடி பில்டிங்கில் சென்னையைச் சேர்ந்த ரூபி ப்யூட்டி தனி அடையாளத்தை பெற்றுள்ளார். உடல் பருமனிற்கு கணவர் செய்த கேலிப் பேச்சில் தொடங்கிய ரூபியின் உடல் எடைக் குறைப்புப் பயணம் பாடிபில்டிங் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. 

image


பெண் பாடிபில்டரா என்று பலரும் கிண்டல் செய்ய அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். சென்னையில் நடந்த போட்டியிலும் மிஸ் சென்னை பட்டத்தையும் பெற்று தன்னை இகழ்ந்து பேசியவர்களும் ஆச்சரியப்படும் வகையில் சாதித்து காட்டினார். கணவனை பிரிந்து தனது மகனுடன் வசிக்கும் ரூபியின் பக்கபலமாய் இருப்பது அவரது மகன் மட்டுமே.  

இந்த ப்யூடியைப் பற்றி மேலும்: பள்ளி ஆசிரியரான ரூபி, ப்யூட்டிபுல் பெண் பாடி பில்டரான கதை!

3. பழுப்பு புரட்சியாளர் ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி

சிவகங்கைச் சீமையில் பிறந்த ஜோஸ்பின் ஆராக்கிய மேரி பிளஸ் 2 முடித்த கையோடு திருமணமாகி மதுரைக்கு இடம்பெயர்ந்தார். கணவரின் உறுதுணையால் பட்டப்படிப்பு படித்தவர் தேனீ வளர்ப்பு செய்து வந்துள்ளார். ஆனால் மகள் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது, அதனைத் தொடர்ந்து ஜோஸ்பினுக்கு பக்கபலமாக இருந்த கணவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது என வாழ்க்கை இருண்டு போக, அந்த இருளை விரட்டி தேனீ வளர்ப்பு தொழிலை கையில் எடுத்தார்.

image


இப்போது ஆண்டுக்கு 3 கோடி டர்ன் ஓவர் செய்யும் தொழில்முனைவராகி இருக்கிறார். தேன் விற்பனை மட்டுமின்றி அழிந்து வரும் தேனீக்களை காக்க வீட்டுக்கொரு தேனீ பெட்டி, வீட்டுக்கு ஆயுள் கெட்டி என்ற பழுப்புப் புரட்சியையும் செய்து வருகிறார்.

இந்த தேனீ மங்கையின் முழுக்கதை: தொடர் இழப்புகளை சந்தித்து துவண்டுபோன பெண் உருவாக்கிய தேனீக்களின் சாம்ராஜ்யம்! 

4. வாட்ஸ் அப் தொழில் புகழ் சண்முகப்ரியா

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்கிற்கான தளம், விவாதத்திற்கான களம் என்பதைத் தாண்டி அதனை பயன்படுத்தி, வாட்ஸ் அப் மூலம் தொழில் சாம்ராஜ்யம் நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சண்முகப்ரியா. 

image


வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை தொடங்கி அதில் லாபம் கிடைக்க அதையே நூல் போல பிடித்து மேலே முன்னேறி ’யுனிக் த்ரெட்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி புடவைகளை உற்பத்தி செய்து வருகிறார். மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்-அப் மூலம் $400,000, மதிப்பிலான புடவைகளை 2000 மறு விற்பனையாளர்கள் மூலம் ஆன்லைனில் விற்றிருக்கிறார் இவர். ஓராண்டில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் சண்முகப்ரியா பல பெண் தொழில்முனைவர்களையும் உருவாக்கியுள்ளார்.

’வாட்ஸ்-அப்’ மூலம் புடவைகள் விற்று லட்சங்களில் வருவாய் ஈட்டும் சென்னை சண்முக பிரியா!

5. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் தந்த ‘போதும் பொண்ணு’

மாற்றுத்திறனாளிகள் என்றால் வீட்டிலேயே முடங்கி விடுவர் எல்லாவற்றிற்கும் பிறரையே சார்ந்து இருப்பார்கள் என்ற சிந்தனைகளை விரட்டியடித்து பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் போதும் பொண்ணு. இவருக்கு பக்கபலம் கணவர் கண்ணன். 

இரு மகள்களுக்கு பின், அடுத்தும் பெண் பிறந்த விரக்தியில் ‘போதும் பொண்ணு’ என்று மூன்றாவது மகளுக்கு பெற்றோர்கள் பெயர்சூட்டினர். அதோடு போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போன போதும் பொண்ணு, 10ம் வகுப்பு வரை படித்து கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து தனது வாழ்க்கைத் துணையாக மாற்றுத்திறனாளி கண்ணனை மணந்துள்ளார். 

குறை உடலில் தான் உள்ளத்தில் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக கண்ணனிடம் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்த்தலை கற்றுக்கொண்டு இருவரும் சேர்ந்து 400க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 80க்கும் மேற்பட்டோருக்கு சுயதொழில் வாய்ப்பை அளித்துள்ளனர்.

இவர் மாற்றுத் திறனாளி அல்ல; மற்றவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் திறனாளி!

6. ரம்யா ஜே க்ரிஸ்டினா

மூன்று வயதில் ஒவ்வாமைக்கு எடுத்துக் கொண்ட மருந்து உடலில் நிறவேற்றுமையை ஏற்படுத்த 17 வருடங்கள் சமூகத்தின் உதாசினங்களால் துவண்டு போன சென்னைப் பெண் ரம்யா தனது 20வது வயதில் எடுத்த துணிச்சலான முடிவால் இன்று அவர் பலரின் ரோல்மாடலாகி இருக்கிறார். 

image


வாழ்க்கை என்பது உன்னைத் தேடுவதல்ல உன்னை நீயே உருவாக்குவது என்பதை உணர்ந்து நிறத்திற்கு வேண்டாம் முக்கியத்துவம் அகத்தின் அழகைப் பாருங்கள் என்று பலருக்கும் தன்னம்பிக்கை தரும் சுயமுன்னேற்ற பேச்சாளராக மாறி இருக்கிறார்.

அழகில் மிளிரும் ரம்யா: புறக்கணிப்பை புறம்தள்ளிய தன்னம்பிக்கை தேவதை!

7. நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே பள்ளி ஆசிரியர் ஸதி. கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இவர் தனி முயற்சி எடுத்து 170 மாணவர்கள் படித்த பள்ளியில் 270 மாணவர்களை படிக்க வரவழைத்தார். 

image


தனியார் நிறுவனங்களின் உதவியை நாடி அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக வடிவமைத்து மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டியவர். பள்ளியின் மாணவ, மாணாவியர் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வருகிறார். 

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை!

8. கிருபா முனுசாமி

சேலத்தை பிறப்பிடமாகக் கொண்ட கிருபா முனுசாமி பின்தங்கிய சமூகம் மற்றும் பொருளாதாரம் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். கல்வி மட்டுமே வளர்ச்சிக்கான வேர் என்று நம்பி சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்த கிருபா, கிரிமினல் சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். 

image


உச்சநீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்யும் முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞரான கிருபா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக நீதி சார்ந்த வழக்குகளை தொடுத்து மாற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறார்.

சமூக நீதிக்கான நீதித்துறை செயல்முனைவு: வழக்கறிஞர் கிருபா முனுசாமியின் முயற்சி!

9. ‘ராதாகால்வாய்’ ரங்கநாயகி

கடலூர் மாவட்டம் வடமூர் கிராமத்தில் நிலவி வந்த தண்ணீர் பிரச்னைக்கு தனி ஒரு பெண்ணாக போராடி சுமார் 10 கிலோமீட்டர் நீளமிருந்த ராதா வாய்க்காலை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போராடி மீட்டவர் ரங்கநாயகி. ரங்கநாயகியின் போராட்டத்தால் பயனடைந்த விவசாயிகள் அவருக்கு ராதாகால்வாள் ரங்கநாயகி என்றே பெயர் வைத்துவிட்டனர்.

image


இவரது முயற்சியால் தான் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது.

தண்ணீருக்காக தனியாகப் போராடி வெற்றி பெற்ற ‘ராதா கால்வாய் ரங்கநாயகி’!

10. கடல் பைலட் ரேஷ்மா நிலோபர்

image


கடல் பயணம் என்றாலே பலருக்கும் தலை சுற்றிவிடும். கடல் உப்புக்காற்று ஒத்துக் கொள்ளாமல் வயிற்று பிரட்டல், வாந்தி, மயக்கம் என்று சில மைல் தூர பயணத்திற்கே பலர் கிறுகிறுத்துவிடுவர். ஆனால் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் கடல் பைலட்டாக பணியில் சேர்ந்து தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இந்த பெருமைக்கு முக்கிய காரணம் இந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ரேஷ்மா என்பதே.

உலகின் முதல் பெண் கடல் பைலட் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர்!

கட்டுரையாளர் : பிரியதர்ஷினி