பதிப்புகளில்

ஆன்லைன் வணிகமும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும்: ஒரு பார்வை

cyber simman
9th May 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்த்திருத்தம் என வர்ணிக்கப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியான ஜி.எஸ்.டி வரி அறிமுகமாகி ஒராண்டு நிறைவடைய உள்ளது. ஆரம்ப சந்தேகங்கள், கேள்விகளை மீறி ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, வர்த்தக நிறுவனங்களும், வணிகர்களும், பொது மக்களுக்கும் இந்த புதிய முறைக்கு பழகி வருகின்றனர்.

image


ஜி.எஸ்.டி தொடர்பான சிக்கல்களும், பிரச்சனைகளும் அரசால் எதிர்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் ஒரே சந்தையாக மாற வழி செய்யும் இந்த வரி விதிப்பு, பொருளாதார நோக்கில் பல்வேறு நலன்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிக அளவிலான வர்த்தக நிறுவனங்கள், வணிகர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் இந்த வரி விதிப்பின் கீழ் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பல்வேறு துறைகளும் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு தங்களை உட்படுத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிகம் அல்லது ஆன்லைன் வணிகத்துறையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி முறையை பின்பற்றுவது இ-காமர்ஸ் துறையின் வெற்றிக்கும் முக்கியமானதாக அமைகிறது. இந்தியாவில் இ-காமர்ஸ் வேகமாக வளர்ச்சி அடையும் துறையாக இருக்கிறது. இணைய பயன்பாடு அதிகரிப்பு, கிராமப்புறங்களில் உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை பயன்படுத்த துவங்கியிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்தியாவில் இ-காமர்ஸ் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய இ-காமர்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், உள்நாட்டைச்சேர்ந்த புதிய நிறுவனங்களும் அதிக அளவில் உருவாகி வருவது இ-காமர்ஸ் துறை வளர்ச்சியை மேலும் பிரகாசமாக்கி உள்ளது.

இந்த பின்னணியில், ஜி.எஸ்.டி அமலாக்கம் என்பது இ-காமர்ஸ் துறையின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு இன்றிமையாதாக அமைகிறது. அதற்கேற்ப இ-காமர்ஸ் துறையில் ஜி.எஸ்.டி யின் தாக்கம் மற்றும் பல்வேறு அம்சங்களை புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஜி.எஸ்.டியை பொருத்தவரை இ-காமர்ஸ் துறை சில தனித்தன்மையான சவால்களை கொண்டிருப்பதால் இந்த வரிவிதிப்பின் அடிப்படை அம்சங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

மாநில மற்றும் மத்திய அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் சேவை வரியை ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பின் கீழ் பல்வேறு அடுக்குகளில் வரி வசூலிக்கப்படுகிறது.

இ-காமர்ஸ் துறையில் ஜி.எஸ்.டியின் தாக்கத்தை சரியாக புரிந்து கொள்ள முதலில் இத்துறையின் செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். இ-காமர்ஸ் சந்தை பல்வேறு வகையான வர்த்தக மாதிரிகளை கொண்டிருக்கிறது. அதற்கு முன்னர் இ-காமர்ஸ் எப்படி வரையரை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜி.எஸ்.டி சட்டத்தின் படி, இ-காமர்ஸ் என்பது, டிஜிட்டல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அல்லது சேவைகளை இணையம் அல்லது டிஜிட்டல் வலைப்பின்னல் மூலம் விற்பனை செய்வதாகும்.

சந்தை மாதிரி

இணையம் மூலம் பலவிதங்களில் பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யலாம். ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் நேரடியாக இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட இணையதளம் மூலம் பல்வேறு நிறுவனங்கள், பிராண்ட்கள் அல்லது தனிநபர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். இத்தகைய வர்த்தகத்திற்கு வழி செய்யும் இணையதளங்கள் சந்தையிடம் போல செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே இவை சந்தை மாதிரி அதாவது மார்க்கெட் பிலேஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. இ-காமர்ஸ் துறையில் கோலோச்சும் ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னேப்டீல் உள்ளிட்ட இணைய நிறுவனங்கள் இந்த மாதிரியை தான் பின்பற்றுகின்றன.

இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு வகையான நிறவனங்களை இணைக்கும் இணைய சந்தையாக செயல்படுகின்றன. விற்பனையாளர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்தாலும் பொதுவாக அதற்கான இன்வாய்ஸ் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இந்த நிறுவனங்கள் இடைத்தரகர் போல செயல்படுவதாகவும் கொள்ளலாம். சந்தை மாதிரியை பின்பற்றும் நிறுவனங்கள் சில நேரங்களில் தங்கள் சொந்த தயாரிப்பு அல்லது பிராண்ட்களை நேரடியாக விற்பனை செய்கின்றன.

image


திரட்டி நிறுவனங்கள்

சந்தை மாதிரி தவிர, பல்வேறு நிறுவனங்கள் அல்லது சேவையாளர்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையிலான சேவையும் அளிக்கப்படுகின்றன. இவை திரட்டிகள் அதாவது அக்ரிகேட்டர்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. காப்பீடு, ஓட்டல் பதிவு, வாடகை வாகன சேவை உள்ளிட்டவை இந்த முறையில் வழங்கப்படுகின்றன.

சில நிறுவனங்கள் பொருட்களை கொள்முதல் செய்து, இருப்பு வைத்திருந்து தங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன. பொருட்கள் அல்லது சேவைகள் தளத்தில் பட்டியலிடப்பட்டு அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கையிருப்பு அல்லது நேரடி விற்பனை முறையாக இது அமைகிறது.

மேலும் வகைகள்

இவைத்தவிர, வாடிக்கையாளர் பரப்பிற்கு ஏற்பவும் இ-காமர்ஸ் வகைகள் அமைகின்றன. வர்த்தக நிறுவனம் மற்றொரு வர்த்தக நிறுவனத்திற்கு இணையம் மூலம் விற்பனை செய்யலாம். இது பிடுபி (B2B) என குறிப்பிடப்படுகிறது. இந்தியாமார்ட் இதற்கான உதாரணம். இதே போல வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது பிடுசி (B2C) என குறிப்பிடப்படுகிறது. அமேசான, ஃபிளிப்கார்ட் இந்த வகையின் கீழ் வருகின்றன. சில நேரங்களில் நுகர்வோரே நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம். இது சிடுசி (C2C) என குறிப்பிடப்படுகிறது. காமன்புளோர், மேஜிக்பிரிக்ஸ் ஆகியவை இதற்கான உதாரணங்கள். நுகர்வோர் தரப்பில் இருந்து வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் முறையும் அமலில் உள்ளது.

வரி விதிப்பு சிக்கல்

பொதுவாக ஒரு பொருளை விற்பனை செய்யும் போது விற்பனையாளர் அதற்கான வரியை செலுத்துவார். இந்த வரி பில்லில் குறிப்பிடப்பட்டு நுகர்வோரிடம் இருந்து பெறப்படும். ஜி.எஸ்.டியிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இன்புட் டாக்ஸ் கிரெடிட் என சொல்லப்படும் ஏற்கனவே செலுத்தப்பட்ட வரிகளுக்கான கழிவுகளும் கோரப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள அனைத்து வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த வரம்பிற்கு கீழே உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை அதன் பல்வேறு வர்த்தக மாதிரிகளால் சில நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. நேரடி விற்பனை மாதிரி எனில் மேற்கூறிய நடைமுறை எளிதாக பொருந்தும். ஆனால் சந்தை மாதிரி அல்லது திரட்டிகள் மாதிரியில் சிக்கல்கள் எழுகின்றன. சந்தை மாதிரியில் விற்பனையாளர் ஒருவராகவும், உண்மையில் சப்ளை செய்பவர் வேறு ஒருவராகவும் இருக்கின்றனர். ஆனால் இன்வாய்ஸ் நிறுவனத்தால் அளிக்கப்படுகிறது. நிறுவனம் இடைத்தரகர் போல செயல்பட்டு தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை விற்பனையாளருக்கு அளித்துவிடுகிறது.

image


இந்தச் சூழலில், யாருடைய தரப்பில் இருந்து வரி செலுத்தப்பட வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. மேலும் வரி விதிப்பு விலக்கு வரம்பு எப்படி பொருந்தும் எனும் கேள்வியும் எழுகிறது. திரட்டிகள் மாதிரியிலும் இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. திரட்டிகள் முறையில் விற்பனை வரம்பை கணக்கிடுவதும் சிக்கலாகிறது.

இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்

இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தான் இ-காமர்ஸ் ஆப்பரேட்டர் எனும் புதிய வரையறை உண்டாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேடை அல்லது மின்னணு வசதி அல்லது மின்னணு வர்த்தகத்திற்கான மேடையை இயக்கும் அல்லது சொந்தமாக கொண்டுள்ள எந்த நிறுவனமும் இ-காமர்ஸ் ஆப்பரேட்டர் என வகைப்படுத்தப்படுகின்றன. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்த பிரிவில் வருகின்றன. எனினும், அவை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்களுக்கு இந்த பிரிவு பொருந்தது. இந்த வகை நிறுவனங்களை பொருத்தவரை, அரசு குறிப்பிட்டுள்ள பொருட்கள் பட்டியலின் கீழ் இவை சப்ளையராக கருதப்படும். 

இதன் பொருள் இவை ஜி.எஸ்.டியை செலுத்த வேண்டும். இந்த பட்டியலின் கீழ் வராத பொருட்களுக்கு இவை நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வரி பெற்று அதை அரசிடம் செலுத்த வேண்டும். இது டாக்ஸ் கலெக்ஷன் அட் சோர்ஸ் என சொல்லப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பிரநிதிதிகள் மூலம் இதற்கு உடன்பட வேண்டும். உள்நாட்டு பிரதிநிதி இல்லை எனில் உடனடியாக அதற்கான நடவடிக்கைய மேற்கொள்ள வேண்டும்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான காலம் மற்றும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலமும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளுக்கு உட்படாத போது அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ஜி.எஸ்.டி என்பது சரக்கு சென்றடையும் இடம் சார்ந்த வரி விதிப்பாக இருப்பதால் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மாநிலங்களுக்கு இடையிலான சிக்கலை போக்கியுள்ளன. 

எந்த இடத்தில் பொருள் அளிக்கப்படுகிறதோ அங்கு வரி விதிப்பு பொருந்துகிறது. மேலும், இ-காமர்ஸ் ஆப்பரேட்டர் முறையின் கீழ் வரும் விற்பனையாளர்களுக்கு வரிவிதிப்பிற்கான வரம்பு விலக்கு பொருந்தாது. அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும். சிறு வணிகர்களுக்கான நஷ்ட ஈடு வழிமுறையும் பொருந்தாது.

இதே போல ஏப்ரல் மாதம் முதல் மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்திற்கு, இணையம் மூலமான இவே பில் முன்கூட்டியே பெற வேண்டும் எனும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

50,000 ரூ மதிப்புக்கு மேல் உள்ள சரக்குகளுக்கு இது பொருந்தும். இ-காமர்ஸ் நிறுவனங்களை பொருத்தவரை ஒற்றை சரக்கின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இவே பில் அவசியமில்லை. எனவே குறிப்பிட்ட மார்கத்திலான மொத்த சரக்கு அதிகம் இருந்தாலும், அதன் தனி மதிப்பின் அடிப்படையில் தான் இவே பில் அவசியமாகும்.

ஆக, ஜி.எஸ்.டி வழிமுறை சிக்கலாக தோன்றினாலும் இதன் அடிப்படைகளை புரிந்து கொண்டால் கடைப்பிடிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி வழிமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ள இந்த வழிகாட்டியை நாடலாம்; https://mailchi.mp/yourstoryemail.com/understanding-gst-online-business

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக