பதிப்புகளில்

பட்டதாரிகளை நிறுவனங்களுக்கு ஏற்ற திறனாளிகளாக்கும் சுயமுதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள ‘Edu2020’

Induja Raghunathan
7th Nov 2016
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

தொழில் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிரபல நிறுவனங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட துறை குறித்து தெரிந்து கொள்வது என்பது சிரமமான காரியமாகவே உள்ளது. மாணவர்களது பெற்றோர், உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்களின் சிபாரிசு இருத்தால் மட்டுமே அது சாத்தியமாகிறது. மாணவர்கள் சந்தித்து வரும் இந்த நடைமுறை சிக்கல், தடைகளை உடைத்து மாணவர்களுக்கு உதவ வந்திருக்கிறது ’Edu2020’ என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம்.

கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு, துறை சார்ந்த இன்றைய நடைமுறை அறிவைப் புகட்டி, மாணவர்களின் கனவுகள், இலக்குகளை அடையச் செய்வதில் பல நேரங்களில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன, வாகன தொழிற்சாலைகளில் கார்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது, ஒரு அனல் மின்நிலையம் எப்படி இயங்குகிறது, ஒரு அணை எப்படி கட்டப்படுகிறது என்பதெல்லாம் ஒரு மூன்றாம் நிலை மாணவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Edu2020 குழு

Edu2020 குழு


'நாஸ்காம் முன்னோக்கப் பார்வை 2020' ஆய்வின் படி இன்று தொழில் நிறுவனங்கள் திறன் படைத்த மாணவர்களின் பற்றாக்குறையை பெருமளவில் சந்தித்து வருவதாகவும், மாணவர்களை வேலைக்கு எடுத்தபின் பயிற்சி வழங்கும் போக்குதான் நிலவுவதாகவும் கூறுகிறது. இந்த பிரச்சனையை களைய நினைத்த முகேஷ் கன்னா நாகராஜன் என்ற இளைஞர், ‘Edu2020’ வை நிறுவியுள்ளார். அதைப்பற்றி விவரிக்கையில்,  

"கல்வி நிறுவனங்களுடன் இணைந்து எங்களது ’Edu2020’ நிறுவனம் இண்டஸ்ட்ரீஸ் நிபுணர்கள் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்குகிறோம். சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உண்மை தொழில்முறை அறிவை வழங்கும் பயணத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்,” என்கிறார்.

இந்த பயிற்சியை அளிக்க ஒரு மாணவனிடம் ஒருநாள் கட்டணமாக ரூபாய் 1500 பெறுகின்றனர். அதில் வாகன வசதி, உணவு உள்ளிட்டவற்றையும் வழங்குகிறார்கள். மாணவர்கள் நேரடியாக தொழில் உற்பத்தி இயக்கத்தை தெரிந்து கொள்வது, தொழில்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசனை பெற்று அவற்றோடு சான்றிதழ் ஒன்றும் வழங்குவதாகவும் முகேஷ் தெரிவித்தார். 

நிறுவனரின் பின்னணி

முகேஷ் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது முதல் தலைமுறை தொழில்முனைவராக அவதாரம் எடுத்துள்ளார். படிப்பை முடித்த கையோடு ஃபோர்ட் நிறுவனத்தில் வேலைக்கான வாய்ப்பு வந்தாலும் அந்த நிறுவனத்தில் சேர மறுத்துவிட்டார். தனது கனவான Edu2020 பணிகளை தொடங்கி தொழில்முனைவில் ஈடுபட்டதாக கூறினார் முகேஷ். கல்லூரியில் படிக்கும் போதே பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்ததால் அதன் மூலம் கிடைத்த வருவாயை Edu2020 முதலீட்டுக்காக பயன்படுத்தி உள்ளார்.

கல்லூரி நாட்களில் கூட மாணவர்களின் தொழில் நிறுவன ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார் முகேஷ். நான்கு ஆண்டுகள் தனது ஜூனியர் மாணவர்களுக்கு அந்த வகையில் தொடர்ந்து உதவி வந்துள்ளார். 

“உலகத் தரமான நிறுவனங்களுக்குச் சென்று மாணவர்கள் சுற்றிப்பார்ப்பது, அதற்கான அனுமதி பெறுவது, கல்லூரியிலிருந்து அத்தாட்சி பெறுவது என்கிற பல சிரமங்களை மாணவர்கள் சந்தித்து வருகிறார்கள். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் மாணவர்களுக்கு உரிய பயன் கிடைப்பதில்லை. நிறுவனங்களை அமைதியாக சுற்றிப் பார்த்துவிட்டு வருவதோடு முடிந்துவிடும்,” என்றார். 

இண்டஸ்டிரியல் விசிட் என்று கல்லூரிகளே மாணவர்களை அழைத்துச் செல்லும் போது எண்ணிக்கை என்பது அதிகமாக இருக்கும். அதாவது 50 அல்லது 100 மாணவர்கள் அந்த குழுவில் இருப்பார்கள். அதுவே மாணவர்களுக்கு உரிய முறையில் கருத்து பரிமாற சிக்கலாக இருக்கும் என்றார் மேலும். 

''நான் படிப்பை முடித்து வந்த பிறகு பணிகளில் சேர்ந்த நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் அந்த நிறுவனங்களோடு ஒத்துழைத்து பணியாற்ற சிரமப்படுவதாக கூறினார்கள். எனவேதான் EDU 2020 மூலம் அந்த நடைமுறை தடைகளை உடைத்து, செயல்முறை பயிற்சிகள் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்க முடிவெடுத்தேன்,'' என்கிறார் முகேஷ் கன்னா.

Edu2020’யின் வளர்ச்சி

2014 ஆம் ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டி இல் நடந்த தொழில்முனைவோர் மாநாட்டில் எங்களது இந்த கருத்தை முன்வைத்தோம். 2500 பேர் கலந்து கொண்டதில் முதல் 40 இடங்களில் எங்கள் நிறுவன ஐடியா வரமுடிந்தது. அப்போது தான் இந்த கருத்தை வணிகமாக மாற்றமுடியும் என்கிற நம்பிக்கை உருவானதாக கூறினார் முகேஷ். 

“நானும் எனது கல்லூரி தோழி தீபிகாவும் இணந்து களத்தில் இறங்கினோம். அவர் இணயதளம் உருவாக்கும் பணிகளை எடுத்துக் கொண்டார். நான் மார்கெட்டிங், விற்பனை ஆகியவற்றை கவனிக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் எனது கல்லூரியில் படித்த சீனியர் அனந்தராமன், ராஜசேகர் போன்றோர் பெரிதும் உதவினார்கள். அவர்கள் நடத்திவந்த அலுவலகத்தில் எங்களுக்கும் சிறிது இடம் தந்து உதவினார்கள். அதே போன்று நேட்டிவ் லீட் அமைப்பின் சிவராஜா ராமநாதன் அவர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமும், நம்பிக்கையும் தந்தார்.”

எல்லா வீடுகளிலும் வரும் எதிர்ப்பை இவரும் தொடக்கத்தில் சந்தித்துள்ளார். அமெரிக்கா சென்று எம்.சி.ஏ படிக்கச் சொன்னார்கள். அல்லது எம்.என்.சியில் வேலைக்குப் போக அறிவுறுத்தினார்கள். ஆனால் கன்னாவின் கனவு முழுதும் தொழில் தொடங்குவதிலேயே இருந்திருக்கிறது. அதற்கான முதலீட்டுக்கான பணத்தை கேட்டு அவரது குடும்பத்தை தொந்தரவு செய்யவில்லை. கல்லூரி நாட்களில் பணி செய்து சேமித்த பணம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டிராவல் சம்மந்தப்பட்ட பகுதிநேர பணிகளை செய்துகொண்டே அதிலிருந்து கிடைக்கும் வருவாயையும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

"ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். அவரவர் வீடுகளில் இருந்தேதான் பணிகளை செய்து முடிப்போம்.” என்றார். 

நிறுவனம் தொடங்கிய பின் ஒவ்வொரு பெரிய கம்பெனிகளையும் அணுகி எங்களைப் பற்றியும், அது மாணவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வாரு பயன்படப் போகிறது என்பதை விளக்கினோம். மாணவர்களை எப்படி இதன் மூலம் படிக்கும் போதே பயிற்சிகள் அளித்து செயல்முறை தொழில் அறிவை புகட்டி அவர்களை திறானாளிகளாக மாற்றமுடியும், அது தொழில் துறைக்கு என்ன பலனைத்தரும் என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னோம்," என்றார். 

இவரது முயற்சிக்கு இளம் தொழில் நிறுவன இயக்குனர்கள், துணைத்தலைவர்கள் ஆதரவளித்துள்ளனர். Edu 2020 முயற்சிக்கு முதல் வாய்ப்பளித்தவர் Grundfos Pumps எம்டி ரங்கநாத்.

விருது பெறும் Edu2020 நிறுவனர் முகேஷ் கன்னா

விருது பெறும் Edu2020 நிறுவனர் முகேஷ் கன்னா


கல்வி தொழில்நுட்பத்துறை பற்றிய பார்வை

Edu 2020 கல்வி தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறது. இந்த கல்வி தொழில்நுட்பம் என்பது வளர்ந்து வரும் முக்கியத் துறை. இதில் இன்று கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்படுகின்றது.

EDU 2020 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக முகேஷ்கன்னா நாகராஜன் இருக்கிறார். தீபிகா மதுராந்தகி இணை தலைவராக பங்காற்றுகிறார். அவரவர் வீடுகளில் இருந்து செயல்படத் தொடங்கிய இவர்கள், பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆதரவோடு தரமணியில் 100 சதுர அடி அறைக்கு இடம் மாறினர். பின்பு மேலும் வளர்ந்த இவர்கள், வேளச்சேரியில் 1000 சதுர அடி அலுவலகத்துக்கு நிறுவனத்தை மாற்றியது, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதை காட்டுகிறது. 

முன்னணி நிறுவனங்களான ஃபோர்டு, எல் அண்டு டி, ராயல் என்பீல்டு, அஷோக் லேலண்ட், வோல்ஸ்வேகன், குருண்போஸ், நிப்பான் பெயிண்ட்ஸ், பஜாஜ், டைடன், பிரஷ்டெஸ்க் உள்ளிட்ட பல நிறுவனங்களோடு EDU 2020 கைகோர்த்து பணியாற்றி வருகிறது.

சென்னை மட்டுமல்லாது கோவை, பெங்களூரு, பூனே நகரங்களிலும் இந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இவர்கள் பயிற்சி சேவையை வழங்கியுள்ளார்கள்.

இந்த நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு 2016 ஆம் ஆண்டுக்கான ”சிறந்த கல்விசார் ஸ்டார்ட் அப்” என்ற விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் இவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக