பதிப்புகளில்

Free Basics கோரிக்கை மூலம் பயனர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஃபேஸ்புக்?

21st Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இந்தியாவில் ஃபேஸ்புக் மீண்டும் இணைய சமநிலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கையால் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது.

ஃபேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர், ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு கோரும் மனு, நோட்டிபிகேஷன் வடிவில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். இந்தியாவில் ஃப்ரீ பேசிக்சை காப்பாற்றும் வகையில் செயல்படுங்கள் என வேண்டுகோள் விடுக்கும் இந்த மனு தான் இணைய சமநிலை ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் இலக்காகி உள்ளது.

image


ஃபேஸ்புக் மனு

இந்த மனுவை ஆதரித்து கிளிக் செய்த பலரும் தங்களை அறியாமலேயே இணைய சமநிலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் இணைய சமநிலை ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தான் இந்தியாவில் இணைய சமநிலைக்கு ஆதரவாக இணையவாசிகள் தீவிர போராட்டம் நடத்திய நிலையில், இந்த சர்ச்சை ஃபேஸ்புக் பயனாளிகள் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணைய சமநிலைக்கு ஆதரவான போராட்டத்தின் போதே ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டமும் கடும் எதிர்ப்புக்கு இலக்கானது நினைவிருக்கலாம். இணையத்தை பயன்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு இணையத்தை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்டதாக சொல்லப்பட்ட இந்த திட்டம் முழு இணையத்தையும் அணுகுவதை சாத்தியமாக்காமல், குறிப்பிட்டச் சில இணைய சேவைகளை மட்டுமே வழங்கியதால் விமர்சனத்திற்கு இலக்கானது. ஃபேஸ்புக் மற்றும் அதனுடன் இணைந்து இந்த திட்டத்தை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தேர்வு செய்யும் இணைய சேவைகளை மட்டுமே இதன் பயனாளிகள் பயன்படுத்த முடியும் என்பதால் இது இணைய சமநிலை கொள்கைக்கு எதிரானது என வாதிடப்பட்டது.

ஃபேஸ்புக் வாதம்

இதனால் எதிர்ப்பு வலுத்து, இந்தத் திட்டத்தில் இணைந்திருந்த பல இந்திய நிறுவனங்கள் அதில் இருந்து விலகி கொண்டன. ஆனால், இலவச இண்டெர்நெட் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல, மாறாக இணைய வசதி பெற முடியாதவர்களுக்கு அதை சாத்தியமாக்குவது என ஃபேஸ்புக் தெரிவித்தது. அதன் பிறகு, ஃபேஸ்புக் இந்தத் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களையும் கொண்டு வந்தது. இதில் இணைய சேவை வழங்கும் யார் வேண்டுமானால் பங்கேற்கலாம் என்று அறிவித்த ஃபேஸ்புக் இந்த திட்டத்தின் இணையதளத்திற்கான பெயரை 'ப்ரீ பேசிக்ஸ்' என்றும் மாற்றியது.

இந்த திட்டத்திற்கு ஆதரவான மனுவை தான், இந்திய தொலை தொடர்பு ஆணையமான டிராய் அமைப்பிற்கு அனுப்பி வைக்குமாறு ஃபேஸ்புக் கோரிக்கை வைக்கிறது.

மனுவில் இடம்பெற்றுள்ள வாசகம் வருமாறு;

இந்திய தொலை தொடர்பு ஆணையத்திற்கு, நான் இந்தியாவில் டிஜிட்டல் சமநிலையை ஆதரிக்கிறேன். ப்ரீ பேசிக்ஸ் தகவல் தொடர்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட இன்னும் பிற அடிப்படையான இணைய சேவைகளை இலவசமாக அளிக்கிறது. டேட்டாவுக்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அல்லது அதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு இது கைகொடுக்கிறது. இது எல்லோருக்கும், எல்லா டெவல்லபர்கள் மற்றும் செல்போன் நிறுவனங்களும் பங்கேற்கக் கூடிய தன்மை கொண்டது. நாட்டில் 100 கோடி இந்தியர்கள் இன்னமும் இணைய தொடர்பு இல்லாமல் இருக்கும் நிலையில் ப்ரீ பேசிக்சை முடக்குவது நாட்டின் ஏழை மக்களை மிகவும் பாதுக்கும். ப்ரீ பேசிக்ஸ் மற்றும் இந்தியாவில் டிஜிட்டல் சமத்துவத்தை நான் ஆதரிக்கிறேன்”.

image


இந்த மனுவை படிக்கும் போது, இந்தியாவில் இணைய வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக இணைய சேவை வழங்குவது நல்லது தானே என நினைக்கத்தோன்றும். மேலும் டிஜிட்டல் சமத்துவம் எனும் வார்த்தையும் ஈர்க்கலாம். எனவே பலரும் ப்ரீ பேசிக்சை ஆதரிப்பது சரியானதே என்றும் கூட நினைக்கலாம்.

இலவச இணையம்

ஆனால் இதற்கு அடுத்த பத்தியில் தான் வில்லங்கமே இருக்கிறது.

“இந்தியாவில் ப்ரீ பேசிக்ஸ் ஆபத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறு குழுவிலான விமர்சகர்கள் இணைய சமநிலை அடிப்படையில் ப்ரீ பேசிக்ஸிற்கு தடை கோருகின்றனர். மக்களும் சில அடிப்படையான இணைய சேவைகளை இலவசமாக அளிப்பதற்கு பதில் இவர்கள் இணைய சேவைக்கு எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதன் விளைவாக 100 கோடி பேர் எந்த இணைய சேவையையும் பயன்படுத்த முடியாமல் போகும்” என்று அந்த மனு முடிகிறது.

இணைய சமநிலையை விவாதத்தில் ஃபேஸ்புக் எடுத்து வைக்கும் அடிப்படை வாதமும் இது தான். முழு இணையத்தையும் இலவசமாக வழங்க முடியாது, அதனால் தான் குறிப்பிட்ட சில சேவைகளை மட்டும் இலவசமாக வழங்குகிறோம் என்றும் கூறும் ஃபேஸ்புக், இணையத்தை அணுக முடியாமல் இருப்பதைவிட அடிப்படையான இணைய சேவைகளை இலவசமாக அணுகும் வாய்ப்பு நல்லது தானே என்று கேட்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் இந்தியா வந்திருந்த போதும் இதே கருத்தைத் தான் பதிலாக அளித்தார். அதோடு இணைய சம நிலையை ஆதரிப்பதாகவும் இந்த திட்டம் அதற்கு எதிரானது அல்ல என்றும் கூறியிருந்தார்.

ஆவேச மறுப்பு

ஆனால் இணைய சம நிலை ஆதரவாளர்கள் இதை திட்டவட்டமாக மறுக்கின்றனர். ப்ரீ பேசிக்ஸ் திட்டம் அடிப்படையில் இணைய சமநிலைக்கு எதிரானதே என்றும், அதில் எல்லோரும் பங்கேற்கலாம் என கூறப்பட்டாலும், அவர்களை நிராகரிக்கும் உரிமை ஃபேஸ்புக்கிடமே இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியில் ஃபேஸ்புக் மிகவும் புத்திசாலித்தனமாக இலவச இணையம் மற்றும் டிஜிட்டல் சமத்துவம் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி இணையவாசிகளை எமாற்றப்பார்க்கிறது என்றும் இணைய சமநிலை ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இணைய சமநிலை ஆதரவாளர்களை உரக்கக் குரல் கொடுக்கும் சிறு குழு என குறிப்பிடப்பட்டிருப்பது சரியானதல்ல, ஏப்ரல், மாதம் லட்சக்கணக்கான இணையவாசிகள் இணைய சமநிலைக்கு ஆதரவு தெரிவித்து இ-மெயில் அனுப்பினர் என்கிறார் இணைய சமநிலை செயற்பாட்டாளரான நிகில் பவா (Nikhil Pahwa )

ப்ரீ பேசிக்சை எதிர்ப்பது , கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இணைய வசதி கிடைப்பதை விரும்பாததற்கு சமம் என தோன்றச்செய்யும் வகையில் ஃபேஸ்புக் இந்த மனுவின் வாசகத்தை அமைத்திருப்பதாக அவர் விமசிக்கிறார்.

ஆனால் ஃபேஸ்புக்கோ, இந்தப் பிரச்சாரம் இந்தியாவில் டிஜிட்டல் சமத்துவத்தை ஆதரிக்க வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

டிராய் புதிய ஆவணம்

எல்லாம் சரி, இப்போது ஏன் ஃபேஸ்புக் இப்படி ஒரு கோரிக்கை பிரச்சார்த்தை கையில் எடுத்துள்ளது என கேட்கலாம். கடந்த வாரம் தான் டிராய் அமைப்பு ஜிரோ ரேட்டிங் தொடர்பான கருத்தாக்க அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளது. இந்த அறிக்கை பிரதானமாக தொலைதொடர்பு நிறுவனங்கள் வித விதமான சேவைகளுக்கு விதவிதமான கட்டணத்தை வசூலிக்க வழி செய்யும் யோசனைகளை கொண்டிருக்கிறது. ;http://www.trai.gov.in/Content/ConDis/20761_0.aspx

இந்த ஜிரோ ரேட்டிங் கருத்தின் கீழ் தான் ப்ரீ பேசிக்சும் வருவதால் ஃபேஸ்புக் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனது பயனாளிகள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இணைய சமநிலை ஆதரவாளர்கள், ஃபேஸ்புக்கில் ப்ரீ பேசிகிற்கு ஆதரவு கோரும் மனு வந்தால் அதில் உள்ள வாசகத்திற்கு பதிலாக இந்த வாசகங்களை இடம்பெறச் செய்யுங்கள் எனும் கோரிக்கையுடன் மாற்று வாசகங்களை முன்வைத்துள்ளனர்.- https://t.co/mcOna2vv6F

ஃபேஸ்புக் உங்களை குழப்பப் பார்க்கிறது. இதற்கு ஏமாறாமல், இந்த பிராச்சாரத்தை ஆதரிக்க வேண்டாம் என நண்பர்களிடம் கூறுங்கள் என தெரிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு பலரும், டிவிட்டரில் குறும்பதிவுகளாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக அனுராக் ஜெயின் என்பவர், ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தை ஆதரிக்க வேண்டாம். நமக்கு ப்ரீ பேசிக்ஸ் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். #NetNeutrality எனும் ஹாஷ்டேகுடன் இவை வெளியாகி வருகின்றன.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags