பதிப்புகளில்

பெண்களுக்கான கீபோர்டு – புதிய ஆற்றல் தரும் புதுமை செயலி!

cyber simman
10th Mar 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

பையன்கள் வீரமானவர்கள்: பெண்கள் அழகானவர்கள்- இந்த வாசகத்தை படிக்கும் போதே இதில் உள்ள முரணை உணர்ந்தீர்கள் எனில் உங்களுக்கு ஒரு சபாஷ். காலம் காலமாக நாம் இப்படி தான் பேசி வருகிறோம். அதாவது பையன்களையும், ஆண்களையும் வீரத்தோடும், ஆற்றலோடும் தொடர்புப் படுத்தி பார்க்கிறோம். ஆனால் பெண்களை அழகோடு தான் தொடர்பு படுத்த முற்படுகிறோம்.

image


திரைப்படங்களில் நாயகன், நாயகி சித்தரிப்பு துவங்கி, நடைமுறை வாழ்க்கை வரை எல்லாவற்றிலும் நமக்கு ஆண்கள் சிங்கங்கள் ! ஆனால் பெண்கள் – தேவதைகள், பதுமைகள், பாவைகள்….! இவை எல்லாம் கொண்டாடுவது போல தோன்றலாம், ஆனால் இந்த சித்தரிப்புகள் மூலம் பெண்களை பலவீனமானவர்களாக இந்த சமூகம் முத்திரை குத்தி வைத்திருக்கிறது.

இவ்வளவு ஏன், பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டால் கூட, சிறுவர்கள் வெளியே சென்று விளையாடுவார்கள் என்றால், சிறுமிகள் வீட்டுக்குள் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அன்ன நடை, ஒயிலான பார்வை என்ற வர்ணனைகள் எல்லாம் பெண்களை மறைமுகமாக பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தவே உதவுகின்றன.

இந்த பாலின பேதம் அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை சமூகம் மெல்ல உணரத்துவங்கியிருக்கிறது. இதற்கு அடையாளமாக பெண்களின் போர்க்குரலை பல துறைகளில் பார்க்க முடிகிறது. அவர்களின் சாதனைகள் பாலின இடைவெளியின் அபத்தத்தை தெளிவாகவே உணர்த்துகின்றன. ஆனாலும் கூட, இன்னமும் பெண்கள் தொடர்பான கட்டுப்பொட்டியான எண்ணங்களும், கருத்துக்களும் நீடிக்கவே செய்கின்றன.

பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கம் இல்லை என்றாலும் கூட, வழக்கமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளும், வாக்கியங்களும் பெண்கள் இப்படி தான் எனும் பழைய கருத்தாக்கத்தையே நிறுவுகின்றன. சிலர் இதை தெரிந்தே செய்கின்றனர். பலர் தெரியாமல் செய்கின்றனர். எல்லாத்துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சாதித்து வருவதை மீறி, வழக்கமான வார்த்தைகளும், வாக்கியங்களும் பெண்களை ஒரு வார்ப்புக்குள் அடைத்து வைத்துள்ளன. ஒவ்வொரு முறையும் பெண்கள் இந்த வார்ப்பை உடைத்துக்கொண்டு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த பின்னணியில் தான், பெண்களுக்கான ’ஷிபோர்டு’ எனும் அட்டகாசமான கீபோர்டு செயலியை அறிமுகம் செய்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது. பாலின சமத்துவம் பற்றி ஆரம்பித்துவிட்டு பெண்களுக்கு என்று தனியே கீபோர்டு பற்றி பேசுவது முரணாக தோன்றலாம். ஆனால், இந்த கீபோர்டில் முரண் எதுவும் இல்லை. ஏற்கனவே சமூகத்தில் உள்ள பாலின முரணை களைய உதவும் நோக்கத்துடனே இந்த கீபோர்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

image


தெரிந்தோ, தெரியாமலோ சிறுமிகளையும் பெண்களையும் பற்றி பேசும் போதும் எழுதும் போதும் நாம் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் என்றால் இஞ்சினியர் படிக்க வேண்டும் என்கிறோம். பெண் பிள்ளை எனில் அழகிய இளவரசி என்கிறோம். அவளிடம் அடக்கம் ஒடுக்கமாக இரு என கற்றுத்தருகிறோம். பீடு நடை போடு என்று சொல்வதில்லை: மாறாக பார்த்து நடந்து கொள் என அறிவுரை சொல்கிறோம்.

இப்படி பெண்களை குறிப்பிட்ட வார்ப்பில் அடைக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தும் போதெல்லாம், அதை சுட்டிக்காட்டி அதற்கு மாற்று வார்த்தைகளை பயன்படுத்த பரிந்துரைப்பது தான் ஷிபோர்டு கீபோர்டின் குறிக்கோளாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போனில் விர்ச்சுவல் கீபோர்டாக செயல்படக்கூடிய இந்த செயலி, டைப் செய்யும் போது, பெண்களை பழைய கருத்தாக்க வடிவில் நோக்க வைக்கும் வார்த்தைகள் டைப் செய்யப்பட்டால் அவற்றை சரியான வார்த்தைகளால் திருத்திக்கொள்ள உதவுகிறது. உதாரணத்திற்கு, இளவரசி என குறிப்பிடுவதற்கு பதில் சாகச பெண் என்ற வார்த்தையை பயன்படுத்த பரிந்துரைக்கிறது.

பெண்கள் தங்கள் மகள்கள் பற்றி குறிப்பிடும் போது மற்றும் சிறுமிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் போது சரியான சொற்களை பயன்படுத்த இந்த செயலி பரிந்துரைக்கிறது. சமூகத்தின் தாக்கம் காரணமாக சிறுமிகள் இன்னமும் பலவீனமான சித்தரிப்பை உணர்த்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அதே எண்ணத்தை மறைமுகமாக வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை. மாறாக, தங்களை துணிச்சலும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களாக வெளிப்படுத்திக்கொள்வதை இந்த செயலி ஊக்குவிக்கிறது.

image


பின்லாந்தின் பிளான் இண்டர்நேஷனல் எனும் அமைப்பு இந்த பெண்களுக்கு அவர்களின் ஆற்றலை உணர்த்தும் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலிக்கான இணையதளத்தில் இதற்கான விளக்கம் தெளிவாக இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளிடம் நாம் பாலின அடிப்படையில் நாம் வேறுபட்டு பேசுவதை ஆய்வுகள் நிருபித்துள்ளன என்றும், பையன்களிடம் நாம் அவர்கள் ஆற்றல் பற்றியும், சிறுமிகளிடம் அவர்கள் உடல் பற்றியும் பேசுகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிள்ளைகள் வளரும் போதே இத்தகைய வார்ப்பு சார்ந்தே வளருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் வார்த்தைகளால் வளர்க்கப்படுவதால், சரியான வார்த்தைகளை பயன்படுத்தி வளர்ப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்களும் துணிச்சலுக்கு உரியவர்கள் எனும் எண்ணத்தை பெண்களிடம் ஏற்படுத்தும் தேவை இல்லாமல், அவர்கள் தங்கள் ஆற்றலை இயல்பாக உணர்ந்து வளர அவர்கள் தொடர்பான வார்த்தைகளில் மாற்றத்தை கொண்டு வருவோம் என இந்த தளம் குறிப்பிடுகிறது.

இந்த கீபோர்டு, ஆண்களை யோசிக்க வைக்கும். பெண்களை தங்கள் ஆற்றலையும், திறமையையும் உணர வைக்கும். சமூக சிந்தனையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான வழியாகவும் அமையும்.

பாலின பேதத்தை அகற்ற தொழில்நுட்பம் எத்தனை அருமையாக பயன்படும் என்பதை உணர்த்தும் இந்த செயலி முதல் கட்டமாக ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிற மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

ஷிபோர்டு செயலி இணையதளம்: https://sheboard.com/

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags