பதிப்புகளில்

ஸ்டார்ட் அப் நிதி திரட்ட உதவும் 12 படிகள்!

22nd Feb 2016
Add to
Shares
161
Comments
Share This
Add to
Shares
161
Comments
Share

எந்த ஒரு நிறுவன செயல்பாட்டிலும் மூலதனம் திரட்டுவது என்பது மிகவும் முக்கியமானது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இது இன்னமும் கச்சிதமாக பொருந்தும். ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பெரும்பாலும் நிதி திரட்டுவதற்கான சரியான உத்தியை வகுக்க தங்கள் நேரம், முயற்சியை செலவிடுகின்றனர். இதற்காக ஏஞ்சல் முதலீட்டாளர்களை நாடுகின்றனர், வென்ச்சர் முதலீட்டாளர்களை தேடிச்செல்கின்றனர், கருத்தரங்குகளில் பங்கேற்கின்றனர். அதோடு தங்கள் உத்தியை பட்டைத்தீட்டுவதிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதற்கேற்ப தங்கள் வர்த்தக திட்டத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் நிதி திரட்டுவதற்கான உத்தி பலரும் நினைக்கக்கூடியது போல எளிமையானது அல்ல.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ளவும், நிதி திரட்டும் முயற்சிக்கான சரியான அணுகுமுறையை கண்டறிவதற்கும், முதலீட்டாளர்களை அடைவதற்கான சரியான அமைப்பை பெறவும் வழிகாட்டும் நோக்கிலான கட்டுரை இது. இளம் தொழில்முனைவோர்கள் பின்பற்ற வேண்டிய வழி 12 படிகளை கொண்டது. இவற்றை வழிகாட்டியாக கொண்டு தங்களுக்கான உத்திகளை வகுத்துக்கொள்ளலாம். எனினும் இந்த 12 படிகள் வழி தான் முழுமையானது என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கான வழியும் மாறுபடலாம்.

image


முதல் படி: ஐடியா தான் ஆரம்பம்; ஒரு நல்ல ஐடியா மட்டும் நிதி திரட்ட போதுமானதல்ல. ஐடியாவை ஆழமாக அலசி, அதன் அம்சங்களை உடைத்து அதன் தனித்தன்மை என்ன என்பதை கண்டறிய வேண்டும். எந்த பிரச்சனைக்கான தீர்வை நீங்கள் அளிக்க முற்படுகிறீர்கள் என யோசிக்க வேண்டும். மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கக்கூடிய வகையுல் உங்களிடம் உள்ள தனித்தன்மையான அம்சம் என்ன என அறிய வேண்டும். அதன் பிறகு இதை ஒரு சில வார்த்தைகளில் விவரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு, தீர்க்க முயலும் பிரச்சனையில் துவங்கி, அதற்கான தீர்வு மற்றும் அதன் தனித்தன்மையை விவரித்து உங்கள் கோரிக்கையை முன்வைக்கலாம். இதை ஒரு நிமிடத்தில் செய்துவிடலாம்.

படி 2: வார்த்தைகளை வைத்துக்கொண்டு: உங்கள் சேவையின் தனித்தன்மையை விவரித்த பிறகு அதை மையமாகக் கொண்டு ஒரு முன்னோட்ட மாதிரியை உருவாக்குங்கள். இது முழு சேவையாக இருக்க வேண்டும் என்றில்லை. தனித்தன்மையான அம்சங்களை ஒரு பவர்பாயிண்ட் விளக்கமாக, போட்டோஷாப் விளக்கமாக அல்லது காகிதத்தில் விவரித்து காண்பிக்கலாம். முதலீட்டாளர்கள் எதையும் கண்களால் பார்க்க விரும்பலாம். சேவையின் முக்கிய அம்சங்களை சிறிய அனிமேஷன் வீடியோவாக தயாரிக்கலாம்.

படி 3: வெளிப்புறப் பார்வை (மாதிரி); முன்மாதிரி தயாரானவுடன் அதை பரிசோதித்து பார்க்க முடியுமா எனப் பாருங்கள். அதாவது இது தொடர்பாக மற்றவர்கள் கருத்தை அறிய முயலுவதாகும். மற்றவர்கள் எனும்போது வருங்கால வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்துவது நல்லது. இவர்களில் சிலரை தேர்வு செய்து அவர்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் அறிந்து கொள்ளுங்கள். இது சந்தை ஆய்வு அறிக்கையை உருவாக்க உதவும். இந்த கட்டத்தில் வாடிக்கையாளர்களால் உங்கள் சேவையை புரிந்து கொள்ள முடிகிறதா என பாருங்கள். மேலும் வருங்கால வாடிக்கையாளர்களாக மாறக்கூடியவர்கள் இதை பயன்படுத்தவதற்கான அல்லது பயன்படுத்தாமல் போவதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

படி 4: செயல்முறை முன்னோட்ட வடிவம்; காகித வடிவில் இருக்கும் முன்னோட்ட மாதிரியை செயல்படக்கூடிய ஒன்றாக மாற்றுவது அடுத்த படியாகும். இது மிகவும் சவாலானது. ஆனால் முழுவீச்சிலான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் ஐடியாவின் ஒரு முக்கிய அம்சத்தை ஒரு செயல்படும் மாதிரியாக உருவாக்கவும். நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்களின் உதவியை இதற்காக நாடலாம். உங்கள் சேவைக்கான ஐடியாவை ரகசியமாக வைத்திருக்கும் வகையில், அதை பலரிடம் பிரித்துக்கொடுத்து செயல்படுத்திக்கொள்ளலாம். இது அறிவுசார் சொத்துரிமையை காப்பதற்கானது. டெவலப்பர்களுடன் விவரங்களை வெளியிடக்கூடாது எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கலாம். முன்னோட்ட மாதிரியை உங்களால் அல்லது பங்குதாரருடன் சேர்ந்து உருவாக்க முடிந்தால் இன்னும் நல்லது.

படி 5: வாடிக்கையாளரை ஈர்த்தல்; இந்த படியும் கடினமானது மற்றும் சவாலானது. அதாவது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருளை பயன்படுத்த வைப்பது! இதற்காக உங்கள் வசம் உள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் முதல் பத்திரிகைகளுக்கு இமெயில் மூலம் கோரிக்கை வைப்பது, மற்ற ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து அறிமுக விழா வைப்பது என உங்கள் சேவை பற்றிய ஆர்வத்தை உண்டாக்க எதையும் செய்யலாம். உங்கள் வாடிக்கையாளர் பரப்பில் ஒரு குறிப்பிட்ட அளவினரை ஈர்ப்பது தான் இந்த கட்டத்தில் முக்கியம். ஆனால் இந்த கட்டத்திலும் போதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாமல் போனால் கவலைப்பட வேண்டாம். மீண்டும் முதலில் இருந்து துவங்கி உத்தியை மாற்றி அமைக்கவும். கொஞ்சம் சோதனையான கட்டம் என்பதால் தயாராக இருங்கள்.

படி 6: பணமாக்குவது; இந்த கட்டத்தில் உங்கள் ஐடியா செயல்படக்கூடியது என தெரிந்திருக்கும். அதைச்சுற்றி வர்த்தக மாதிரியை உருவாக்கலாம் என்று பொருள். அதாவது இதன் மூலம் வருமானத்திற்கான வழிகளை கண்டறிய வேண்டும். இங்கிருந்து தான் உங்கள் ஐடியா ஒரு வர்த்தகமாகத்துவங்குகிறது. இந்த நிலையில் உங்களது முதல், இரண்டாந்தர மற்றும் விளிம்புநிலை பங்குதாரர்கள் யார் என கண்டறிய வேண்டும். இந்த பங்குதாரர்கள் உங்கள் வர்த்தகத்தில் பல்வேறு நிலைகளில் பங்கேற்கலாம். எனவே அவர்களையும் வருவாய் உத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும். பல்வேறு அம்சங்களை பரிசீலித்து, தடைகளை எதிர்கொண்டு உங்கள் கருத்தாக்கத்தை வருவாயாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இவற்றை செயல்படுத்துவதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு தேவையான நிதி ஓரளவு கிடைக்கும்.

படி 7: சேவையை மேம்படுத்துவது; முந்தைய செயல்கள் மூலம் உங்களை நோக்கி பணம் வரத்துவங்கியிருக்கும். எனவே சிறகுகளை விரிக்கத்துவங்க வேண்டும். இதற்காக உங்கள் சேவையை பரவலான பயன்பாட்டிற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இந்த கட்டத்தில் முதலீட்டாளர்களை சந்திக்கத் தயாராகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நிதி தேவை, அதை எப்படி செலவிடுவீர்கள், லாபம் எப்போது கிடைக்கும் போன்ற விவரங்களை உங்களால் அளிக்க முடியும். ஆக, முதலீட்டிற்கான கோரிக்கை வைக்க ஆயுத்தமாகலாம்.

படி 8: கோரிக்கை; முதல் படியில் நீங்கள் உருவாக்கிய எலிவேட்டர் பிட்சின் நீட்டிக்கப்பட்ட வடிவம் தான் முதலீட்டாளர்களுக்கான கோரிக்கை என்பது. உங்கள் சேவையை விளக்கும் எளிமையான காட்சி விளக்கம். சந்தை ஆய்வு விவரங்கள், சந்தையின் நிலை, உங்களுக்கான வாய்ப்பு போன்றவற்றை தெரிவிக்கலாம். முதலீட்டாளர் குழு மத்தியில் உங்கள் ஐடியாவில் முதலீடு செய்யலாம் என சம்மதிக்க வைத்தால் மட்டும் போதாது, உங்களையும் உங்கள் குழுவையும் நம்பலாம், உங்கள் வர்த்தக மாதிரியை நம்பலாம் எனும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

படி 9: பணத்தை கண்டறிவது; முதலீட்டாளர்களுக்கான கோரிக்கையை தயார் செய்தவுடன் முதலீட்டாளர்களை தேடி கண்டுபிடிக்க முயலுங்கள். உள்ளூர் தேவதை முதலீட்டாளர்கள் வலைப்பின்னல், லிங்க்டுஇன் தொடர்புகள், உள்ளூர் பல்கலைக்கழக இன்குபேஷன் மையங்கள, ஸ்டார்ட் அப் திட்டங்கள், கண்காட்சிகளில் பங்கேற்பது என பலவழிகளில் இதை முயற்சிக்கலாம். பல்வேறு மேடைகளிலும் உங்களை வெளிப்படுத்திக்கொண்டு கண்டறியப்பட காத்திருக்கலாம்.

படி 10: செயல்படுத்துதல்; மூலதனம் பெறுவதில் நம்பிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உண்டாக வேண்டும். முதலீட்டாளர்களிடம் உங்கள் தெளிவு, புத்திசாலித்தனம் மற்றும் அறிவை வெளிப்படுத்துங்கள். உங்களை நம்பலாம் எனும் எண்ணத்தை ஏற்படுத்துங்கள். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. எனினும் அவர்களை சந்திக்க செல்லும் முன் கேட்கப்படக்கூடிய கேள்விகளுக்கு பதில அளிக்க தயாராக இருங்கள். நிங்கள் ஒருவர் மாறி ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஆனால் இறுதியாக சரியான நபரை சந்திப்பீர்கள். உங்கள் முதலீட்டாளர்களை கவர்வது மட்டுமே உங்கள் குறிக்கோள். ஆனால் மறைமுக நிராகரிப்புக்கு தயாராக இருங்கள். உங்களுக்கான முதலீட்டாளரை அடையும் வரை இதை நீங்கள் பலமுறை எதிர்கொள்ள நேரிடலாம்.

படி 11: சேவையை சீராக்குவது; முதலீட்டை தேடிக்கொண்டிருக்கும் போதே உங்கள் சேவையையும் சீராக்கி கொண்டிருக்க வேண்டும். மாற்றங்களுக்கு ஏற்ப இதை செய்ய வேண்டும். இதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளலாம். சேவையை சீராக்குவதன் மூலம் சந்தை நிலைக்கு ஏற்ப நீங்கள் தயாராக இருக்கலாம்.

படி 12: உறுதி தேவை; இது மன உறுதி தொடர்பானது. ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போது அதனால் துவண்டு விடாமல் உற்சாகமாக மீண்டும் முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு நிராகரிப்பையும் பாடமாக கொள்ள வேண்டும்.” ராக்கி பல்போலா கேட்பது போல ”உங்களால் எந்த அளவு குத்து விட முடியும் என்பதல்ல, எந்த அளவு தாங்க முடியும் என்பதே முக்கியம்?’ .

இந்த படிகள் ஒரு வழிகாட்டுதல் தான். புதிய தொழில்முனைவோர் நிச்சயம் இதை அடிப்படையாக கொண்டு தங்களுக்கான உத்தியை வகுத்துக்கொள்ளலாம்.

ஆக்கம்: உதய் நாயர் | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

தொடக்க நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை சேவை அளிக்கும் சென்னை 'மீட்யுவர்புரோ '

புதுநிறுவனங்களின் நிதி மற்றும் கணக்குவழக்குகளுக்கு உதவும் 'அரிஸ்டாடில்'

Add to
Shares
161
Comments
Share This
Add to
Shares
161
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக