பதிப்புகளில்

ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புதிய புத்தகம்...

cyber simman
1st Oct 2017
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

மறக்கப்பட்ட ஒரு புத்தகம் அழிக்கப்பட்ட ஒரு புத்தகத்திற்கு சமமானது அல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார் சாப்ட்வேர் வல்லுனரான ஸ்டீவ் ஜெயின். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எண்ணற்ற நல்ல புத்தகங்கள் இருக்கும் போது அவற்றை அணுக வழியில்லாவிட்டால் என்ன பயன், அந்த புத்தகங்கள் இருந்தும் இல்லாதது போன்றது தானே எனும் அர்த்தத்தில் தான் இந்த கேள்வியை கேட்கிறார். ஆனால் வெறும் கேள்வியோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பதிலாக விளங்கும் இணைய சேவையையும் அவரே உருவாக்கி இருக்கிறார்.

உண்மையில், மறக்கப்பட்ட புத்தகங்களை நினைவு கூறுவதற்கான அழகான இணைய சேவையை உருவாக்கிவிட்டு தான் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.

’100 மில்லியன் புக்ஸ்’ எனும் பிரவுசர் நீட்டிப்பு சேவை தான் அவர் உருவாக்கியிருப்பது. கூகுள் குரோம், ஃபயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களில் செயல்படக்கூடிய இந்த நீட்டிப்பு சேவை, புதிய புத்தகங்களை புதுமையான வழியில் அறிமுகம் செய்கிறது. எப்படி என்றால், பிரவுசரில் புதிய தளத்தை திறப்பதற்காக கிளிக் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகம் அறிமுகம் செய்யப்படும். புத்தகத்தின் அட்டைப்படத்துடன் தரப்படும் அறிமுக குறிப்புகள் மூலம் அடையாளம் காட்டப்படும் புத்தகம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அடுத்த முறை பிரவுசரில் புதிய பக்கத்தை திறக்க முற்பட்டால் இன்னொரு புதிய புத்தகம் எட்டிப்பார்க்கும். அடுத்த கிளிக் செய்தால் இன்னொரு புத்தகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

image


ஆக, புத்தக பிரியர்கள் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமலே பிரவுசர் எல்லைக்குள்ளேயே புதுப்புது புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். (இங்கு புதிய என்பது இதுவரை அறியாத என்பதை குறிக்கிறது. அது பழைய புத்தகமாகவும் இருக்கலாம்.) புத்தக அறிமுக இணையதளங்கள் பல இருக்கின்றன என்றாலும், அவை ஒவ்வொன்றிலும் நுழைந்து பார்க்க வேண்டும். நமக்கான புத்தகங்களை தேடிப்பார்க்க வேண்டும்; அவற்றில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, எப்போது பிரவுசரை திறந்தாலும் ஒரு புத்தகம் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பது சுவாரஸ்யமானது தானே. இந்த சுவாரஸ்யத்தை தான் ’100 மில்லியன் புக்ஸ்’ நீட்டிப்பு சேவை அளிக்கிறது.

பிரவுசரில் கிளிக் செய்யும் போது, ஒவ்வொரு முறையும் புகைப்படம் அல்லது கலைப்படைப்பு போன்றவை எட்டிப்பார்க்கும் வகையிலான பிரவுசர் நீட்டிப்புகள் இருக்கின்றன. இதே முறையில் ஜெயின், புத்தகங்களுக்கான நீட்டிப்பு சேவையை உருவாக்கி இருக்கிறார்.

இப்படி ஒரு சேவையை உருவாக்குவதற்கான காரணம் அல்கோரிதம்கள் மீதான கோபம் தான் என்கிறார் ஜெயின். இந்த சேவை தொடர்பாக அவர் மீடியம் தளத்தில் எழுதியிருக்கும் வலைப்பதிவில், அல்கோரிதம்களின் ஆதிக்கத்தால் இணையத்தில் கண்டறிதலின் சுவையே போய்விட்டது என குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல, அல்கோரிதம்கள் மூலம் முன்வைக்கப்படும் விஷயங்களால் சமூகத்தில் ஒருவித சார்புத்தன்மையும் வந்துவிடுவதாக குறைப்பட்டுக்கொள்கிறார்.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் தான், புத்தகங்களை கண்டறிவதற்கான சேவையை உருவாக்கி இருப்பதாக குறிப்பிடுகிறார். அல்கோரிதம் இல்லாமல், சமூக பகிர்வு அம்சங்கள் இல்லாமல், புத்தக வகைகள் இல்லாமல். ஒரு புதிய புத்தகத்தை ஒவ்வொரு முறையும் அறிமுகம் செய்து கொள்ள வைப்பதே இதன் நோக்கம் என்கிறார்.

அவர் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். மனிதர்கள் தோன்றி மறைகின்றனர். ஆனால் அவர்கள் உருவாக்கிய புத்தகங்கள் காலத்தை மீறி நிற்கின்றன. அவை இன்றளவும் படித்தால் பயன் தரக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளன. புத்தக பொக்கிஷங்களை டிஜிட்டல் மயமாக்கும் பிராஜக்ட் குடென்பர்க் திட்டம், கூகுள் புக்ஸ் போன்ற திட்டங்கள் காரணமாக எண்ணற்ற நல்ல புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை அணுகவும் வழி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவை மட்டும் போதுமா என்ன?

இந்த புத்தகங்களை எல்லாம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு தூண்டுதல் வேண்டும் அல்லவா? அதற்கான வழியாக தான் 100 மில்லியன் புக்ஸ் சேவை.

இந்த நீட்டிப்பு சேவையை இன்ஸ்டால் செய்து சோதனை செய்துப்பார்த்தால், ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு புத்தகம் பற்றி அறிய முடிகிறது. புத்தகம் தொடர்பான மேலும் தகவல்களை அதற்கான குட்ரீட்ஸ் அல்லது அமேசான் பக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு சில பரிந்துரைகள் நாம் தேடினாலும் கிடைக்காத, நமக்கான புத்தகத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் இருக்கலாம். உண்மையில் புத்தக புழுக்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய சேவை தான். தேடல் முடிவுகள் கூட, ஒருவரின் கடந்த கால தேடல் தன்மைக்கு ஏற்ப வடிகட்டி அளிக்கப்படும் கால கட்டத்தில் எந்தவிட வடிகட்டலும் இல்லாத பரிந்துரை சேவையாக இது இருக்கிறது.

இந்த நீட்டிப்பு சேவை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுமானால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த முயற்சியில் வாசகர்களும் பங்கேற்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், புதிய புத்தகத்தை அதற்கான அறிமுகத்தோடு சமர்பிக்கலாம். மற்றவர்களின் முயற்சியால் மட்டுமே இதை தொடர்ந்து மேம்படுத்த முடியும் என்று ஜெயின் குறிப்பிட்டுள்ளதோடு, யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பகிர்வதற்கான வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

எத்தனையோ மகத்தான புத்தகங்கள் மனிதர்கள் கையில் கிடைக்காமல் அழிந்து போயிருக்கின்றன. எண்ணற்ற புத்தகங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் காலத்தை வென்று நிற்கும் புத்தகங்கள் மறக்கப்பட்ட புத்தகங்களாக மாறிவிடாமல் இருக்க அவற்றை நினைவில் நிறுத்துக்கொண்டே இருப்பது அவசியம் தானே. இணையம் புத்தகங்களை சேமித்து வைக்கவும், தேடி எடுக்கவும் வழி செய்திருக்கும் போது, அவற்றை கண்டறிவதற்கான புதுப்புது சேவைகளை உருவாக்குவதும் அவசியமானது தானே!

’100 மில்லியன் புக்ஸ்’ இணையதளம்: http://www.100millionbooks.org/

(கட்டுரையாளர் சைபர்சிம்மன் – பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர், இணையம் தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர். தகவல் திங்கள்; இது தொழில்நுட்பம், இணையம் மற்றும் புதிய அம்சங்கள் பற்றி அலசும் கட்டுரையாகும்.)

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags