பதிப்புகளில்

மயிலு எனும் மறக்க முடியாத நடிகை...!

cyber simman
25th Feb 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

அவர் பாலிவுட்டுக்கு இடம் பெயர்ந்து, உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, கோலோச்சி அங்கேயே செட்டிலாகி இருக்கலாம். ஆனால் ரசிக உள்ளங்களை எல்லாம் தனது அகால மரணத்தால் திகைப்பில் ஆழ்த்தி நீங்காத பாதிப்பை ஏற்படுத்திச்சென்றிருக்கும் ஸ்ரீதேவி எனக்கும், என் போன்ற எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் என்றென்றும் மயிலு தான். 

மறக்க முடியாது மயிலு!

’செந்தூரப்பூவே’ என கண்கள் அகல விரிய பரவசமாக பாடியபடி 16 வயதினிலேவில் மயிலுவாக உலா வந்த ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானதும், அதன் பிறகு 13 வயதில் மூன்று முடிச்சு படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்ததும், பின்னர் ரசிகர்களின் உள்ளங்கவர் கனவு நாயகியாக நெஞ்சில் பதிந்ததும் பரவலாக அறியப்பட்ட வரலாறு. 

கந்தக பூமியான சிவகாசியில் பிறந்து வளர்ந்தவர் தமிழ் திரையின் ஆகச்சிறந்த இளம் நாயகிகளில் ஒருவராகி அதன் பிறகு இந்தியா முழுவதும் கொண்டாடிய கலைஞராக உருவான விதம் வியக்க வைப்பதாகவே இருக்கிறது.

image


ஆனால், ஒரு கலைஞராக அவருக்கு இருந்த அளவில்லாத ஆற்றலையும் அதை அவர் நேர்த்தியாக வெளிப்படுத்திய விதத்தையும் பார்க்கும் போது அவர் புகழின் உச்சியை தொட்டு நின்றதில் வியப்பதற்கு எதுவுமில்லை. 

தமிழ் திரையுலகம் எத்தனையோ அழகிய நடிகைகளை கண்டிருக்கிறது. ஆனால், 70-களுக்கு பிறகு தமிழகத்தில் அழகுக்கு உதாரணம் என்றால் அது ஸ்ரீதேவி தான். கிராமத்து மயிலாக உள்ளத்தை கொள்ளைக்கொண்ட ஸ்ரீதேவியிடம் ஒரு குழந்தைத்தனமும், அப்பாவிதத்தனும் குடி கொண்டிருந்தது. அதே நேரத்தில் பருவத்தின் நளினமும், நேர்த்தியும் அவரிடம் அபிரிமிதமாக இருந்தது. இவற்றோடு தான் ஏற்று நடிக்கும் திரைப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் அபாரமான நடிப்பாற்றலும் அவரிடம் இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்தே அவரை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்தது.

ஸ்ரீதேவி என்றதும் தமிழில் மூன்றாம் பிறையும் இந்தியில் சாந்தினி உள்ளிட்ட படங்களும் தவறாமல் நினைவுக்கு வரும். மூன்றாம் பிறையில் பாலுமகேந்திரா அவரது பாத்திரத்தை கவித்துவமாக உருவாக்கியிருப்பார். அந்த கவிதையின் ஜீவனாக ஸ்ரீதேவி நடித்து உள்ளங்களை உருக வைத்தார். ஜானி படத்தில், மகேந்திரன் புகழ் பெற்ற பாடகியாக அவரை செதுக்கியிருப்பார். 

என் வானிலே ஒரு வென்னிலா என தன்னை மறந்து பாடும் போதும் சரி, காற்றில் எந்தன் கீதம் என உருகும் போதும் சரி, ஸ்ரீதேவி தனது நடிப்பால் சொக்க வைத்திருப்பார். அதே நேரத்தில் ராணுவ வீரன் படத்திலும், போக்கிரி ராஜா படத்திலும் துள்ளலும் துடிப்புமான நடிப்பில் கிறங்கடித்திருப்பார்.

வாழ்வே மாயம், குரு உள்ளிட்ட படங்களில் கமலுடன் அவர் இளமை துடிப்புடன் ஆடிய நடன அசைவுகள் இன்று திரையில் பார்த்தாலும் உள்ளத்தை சிதறடிப்பவை. அவர் நடிப்பாற்றலை போற்றி பாராட்ட எத்தனையோ படங்கள் இருந்தாலும், ’வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ ஒரு பாடல் போதும் அவரது நவரசங்களை கண்டு சொக்கிப்போக.

இந்த பாடலே ஒரு கவிதையாக அதுவே ஒரு சின்ன கதை போல அழகாக படமாக்கப்பட்டிருக்கும். காட்சிப்படி, நாயகி சந்தங்களை சொல்லி, நாயகனின் கவிதை உள்ளத்தை சோதித்துப்பார்ப்பாள். மெல்லிசை மன்னரின் இசை, பாலச்சந்தரின் இயக்கம், கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் என எல்லாமே படைப்பூக்கத்தின் உச்சத்தில் அமைந்த பாடல் இது. 

வேட்கையும், விரக்தியும் கொண்ட வேலையில்லா பட்டதாரி இளைஞனாக கமலும், அவனது மனங்கவர்ந்த காதலியாக இளமைத்தென்றலாக ஸ்ரீதேவியும் இந்த படைப்பூகத்தின் உச்சத்தில் ஜொலித்திருப்பார்கள்.

இந்த பாடலின் முடிவில் நாயகன் காதலை மனமுவந்து நாயகி ஏற்றுக்கொள்ளும் சூழலில், பாடலின் தன்மைக்கேற்ப இருவரும் பரஸ்பரம் சவால்விட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். நட்பான போட்டி தான் என்றாலும் தான் சொல்லும் சந்தங்களுக்கு, நாயகனால் கவிதை வரிகளை சொல்ல முடிகிறதா என பார்த்துவிடத்துடிக்கும் குறும்பும், லேசான கர்வமும் அவரிடம் எட்டிப்பார்க்கும். ஆனால் நாயகன் ஒவ்வொரு முறை வெற்றிகரமான கவிதை வரிகளை எடுத்து போடும் போது லேசான ஏமாற்றம் அவரது முகத்தில் இழையோடும். அதே நேரத்தில் நாயகன் கடினமான சந்தங்களுக்கு கவிதை வரிகளில் ஈடுகட்டும் போது தன்னை மறந்த சந்தோஷம் அந்த பெண் முகத்தில் பீறிட்டெழும். 

போட்டி, ஏமாற்றம், காதல், பரவசம் என எல்லாவிதமான ரசங்களையும் அந்த ஒரு பாடலில் ஸ்ரீதேவி வெளிப்படுத்தியிருப்பார். குரு படத்தில் பறந்தாலும் விடமாட்டேன் பாடலிலும் இப்படி தான், நாயகனுக்கு பிடி கொடுக்காத நாயகியாக கம்பீரம் காட்டியிருப்பார்.
image


பதினாறு வயதினிலே படத்திலும் இதே போல, ஒரு பாடலில் நாயகன் உவமைக்கு தடுமாறும் போது அவரது கண்கள் குளோசப்பில் காட்டப்பட்டு, கெண்டை மீன் என உவமை பெறும் போது அவரது விழிகள் அசரடிக்கும். 

சிவப்பு ரோஜாக்களில், ’நினைவோ ஒரு பறவை’ பாடல், தர்மயுதத்தில் ஆகாய கங்கை … என பல பாடல்களில் அவரது இளமைத்துடிப்பு நடிப்பாக வெளிப்பட்டு வசிகரிக்கும். காயத்ரி படத்தில் தடுமாற்றத்துடன் பாடும் ஒரு பாடலில் அவரது விழிகளில் சீறும் சீற்றத்தை பார்க்கலாம். தரம்யுத்தம் படத்தில் அதிகம் பிரபலமாகாத, போய்யா, உலகம் பெரிது எனும் பாடலில், தனித்து நிற்க விரும்பும் பெண்ணின் சுதந்திர உணர்வை பார்க்கலாம்.

வாழ்வே மாயம் படத்தில், நீல வான ஓடையில் பாடலில், குழப்பம், தவிப்பு, கோபம் என அடுத்தடுத்து அவர் காட்டும் உணர்வுகளை என்னவென சொல்லி வர்ணிக்க முடியும்.

அழுத்தமான காட்சிகளை விடுங்கள் பாடல்களிலேயே இப்படி பலவிதமான வசீகரிக்ககூடிய நடிகை என்றால் அது ஸ்ரீதேவி தான். அவர் தென்றலாக தவழ்ந்து காற்றில் கலந்திருக்கிறார். ஆனால் என்றென்றும் ரசிகர்கள் மனதில் இனிய கீதமாக கேட்டுக்கொண்டே இருப்பார். 

போய் வாருங்கள் மயில்! 

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags