பதிப்புகளில்

கலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி!

cyber simman
11th Feb 2018
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

'மறுத்து பேச வேண்டிய நிலை வந்தால், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், ஆனால் உங்கள் எதிர்ப்பை நேர்த்தியாக கலைநயத்துடன் வெளிப்படுத்துங்கள்' என்று சொல்லாமல் சொல்லி இணையத்தின் லேட்டஸ்ட் நட்சத்திரமாகி இருக்கிறார் லண்டன் மாணவி அலெக்ஸ் ரூத் பெர்டுலி பெர்னாண்ட்ஸ். 

கலைத்துறை மாணவியான அலெக்ஸ் தனது ஆசிரியர் ஒருவரிடம் இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத அறிவுரை வந்த போது அவருக்கு கலைநயமான முறையில் பதிலடி கொடுத்து இணையத்தில் ஆதரவையும், கைத்தட்டல்களையும் குவித்து வைரலாகி இருக்கிறார்.

மாணவி அலெக்ஸ்

மாணவி அலெக்ஸ்


இந்த நிகழ்வின் பின்னணி பற்றி தெரியவில்லை, ஆனால் அலெக்ஸின் ஆசிரியர்களில் ஒருவர், அவரது பெண்ணிய கொள்கையை தனது படைப்புகளில் கொஞ்சம் தணித்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தவர், ஆசிரியருக்கு பதில் அளிக்கும் வகையில் தான் உருவாக்கிய கலை படைப்பையும், இன்று இதை எனது பதிலாக காண்பித்தேன் எனும் குறிப்பிடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

’பெண்ணியத்தை குறைத்துக்கொள்ளவும்’, எனும் தலைப்பிலான அந்த படத்தில் மின்னணு சாதனங்களில் இருப்பது போன்ற ஸ்விட்ச் இடம் பெற்றிருந்தது. ஸ்விட்சின் இடப்பக்கத்தில், என் மனிதத்தன்மையை குறைத்துக்கொள்வது தொடர்பாக கவலைப்படாமல் இருப்பது எனும் வாசகமும், வலப்பக்கத்தில் ஆவேசமான பெண்ணியவாதி எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்தன. இரண்டில் அவர் எதை தேர்வு செய்துள்ளார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் ஸ்விட்சின் பச்சை கோடும் வலப்பக்கத்தில் உள்ள ஆவேசமான பெண்ணியவாதி எனும் வாசகத்தை நோக்கி இருந்தது.

ஆக, ஒரு கலைப்படைப்பு மூலமே அலெக்ஸ் தனது ஆசிரியரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துவிட்டார். விவாதம் இல்லாமல், குரலை உயர்த்தாமல், ஆனால் அழுத்தந்திருத்தமாக தனது பெண்ணிய நோக்கை கைவிட மாட்டேன் என்பதை அவர் இந்த படத்தின் மூலம் உணர்த்தியிருந்தார். ஆசிரியர் தனது அறிவுரையில், டயல் டவுன் எனும் வார்த்தையை பயன்படுத்தியிருந்ததால் அதனுடன் பொருந்தி வரும் வகையில், மின்னணு சாதன ஸ்விட்சை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி தனது எதிர்ப்பை கச்சிதமாக பதிவு செய்திருந்தார்.

நிச்சயமாக மாணவியின் ஆசிரியரும் இந்த கலைநயமான பதிலடியை ரசித்திருக்க வேண்டும். ஆசிரியர் ரசித்தாரா அல்லது ஆவேசம் கொண்டாரா எனத்தெரியவில்லை, ஆனால் அலெக்ஸ் இதை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதும் இணையவாசிகள் ரசித்து மகிழ்ந்தனர். இந்த குறும்பதிவுக்கு ஆதரவு குவிந்ததோடு, பலரும் இதை ரிவீட்டும் செய்த்துவங்கினர். இரண்டின் எண்ணிக்கையில் ஆயிரத்தை தொட்டு, பல்லாயிரமாக பெருகியது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் முறைக்கு மேல் இந்த கருத்து ரீடிவீட் செய்யப்பட்டு, இணையத்தில் வைரலானது. விளைவு டைம், நியூஸ்வீக் உள்ளிட்ட இதழ்கள் அலெக்ஸ் பதிலடி கொடுத்தவிதம் பற்றி எழுதி அவரை மேலும் பிரபலமாக்கின.

image


அது மட்டும் அல்ல, டிவிட்டரில் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒருவர், உங்கள் ஆசிரியர் வெறுப்பை ஏற்படுத்துகிறார், நீங்கள் அசத்துகிறீர்கள் என குறிப்பிட்டிருந்தார். இன்னொருவர், பிரச்சனைகள் பற்றி பேசும் போது எல்லோருமே எப்போதும் பெண்களை அடங்கிபோகும்படி தான் கூறுவார்கள், இத பொருள், எதிர்ப்பு தெரிவியுங்கள், ஆனால் மோதல் இல்லாத வகையில் என்பதாகும்’ என கூறியிருந்தார்.

இன்னொருவரோ, இதை அச்சில் இருந்தால் எனது 11 வயது மகள் அறையில் மாட்டி வைப்பேன், இதைப்பார்த்து அவளும் ஆற்றல் பெறட்டும் என கூறியிருந்தார். இப்படி ஆதரவு கருத்துக்கள் ஒரு பக்கம் குவிந்த நிலையில், பலர் விமர்சனமாகவும் கருத்துக்களை கூறியிருந்தனர். இன்னும் சிலர், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை இல்லையா என்றும் கேட்டிருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டர் பயனாளிகளில் சிலர், இதில் நடுநிலை எல்லாம் கிடையாது, ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என பதில் கூறியிருந்தனர்.

இப்படியாக பெண்ணியம் சார்ந்த உரையாடலாகவும் கருத்துக்கள் தொடர்ந்தன. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆதரவால் அலெக்ஸ் திக்குமுக்காடிப்போயிருக்கிறார். இதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தனது கருத்தை மேலும் பரவலாக கொண்டு செல்லும் வகையில் வைரலாக பரவிய தனது கலை படைப்பை அச்சில் கொண்டு வரவும், டி-ஷர்ட் வாசகமாக கொண்டு வரவும் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

துடிப்பும், துணிச்சல் மிக்கவராகவும் தோற்றம் தரும் அலெக்ஸ், பெண்ணிய பதிலடியால் திடீர் புகழ் பெற்றிருந்தாலும், ஆவேசமான அணுகுமுறையை இயல்பாக இருப்பதை அவரது மற்ற படைப்புகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவரது இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் படைப்புகளில் இருந்து இதை அறிய முடிகிறது. எல்லாவற்றிலுமே பெண்ணிய கருத்துக்கள் அடிநாதமாக அமைந்திருக்கின்றன. விளம்பர நிறுவனத்திற்கு காபிரைட்டராக அவர் உருவாக்கித்தந்துள்ள வாசங்களிலும் இதை பார்க்க முடிகிறது.

கேலி கிண்டல், நகைச்சுவை மட்டும் அல்ல, கொள்கை சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமும் இணையத்தில் வைரலாக நம் குரலி ஒலிக்க வைக்கலாம் என்பதற்கான உதாரணமாக அலெக்ஸ் விளங்குகிறார்.

அலெக்ஸ் இணையதளம்: https://www.alexbertulisfernandes.com/

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags