மீண்டும் பள்ளிக்கு போகலாம்! ஆசிரியர்களும், மாணவர்களும் செய்யவேண்டியவை...
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களை கடும் மழை மற்றும் வெள்ளம் அண்மையில் உலுக்கி எடுத்தது. பாதிப்புகள் பல இருப்பினும் இயல்பு நிலைக்கு மெதுவாக திரும்பும் பாதையை நோக்கி மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமாக, அரசின் உத்தரவு படி திங்கள் முதல் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து கல்வி நிலையங்கள் திறக்கப்படுகிறது. இயற்கை சீற்றத்தில் பல குழந்தைகளும், ஆசிரியர்களும் கூட பாதிக்கப்பட்டு பல இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்ப என்ன செய்யவேண்டும்? பாதிப்புகளால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து வெளிவருவது எப்படி? என தமிழ் யுவர்ஸ்டோரி கிரியேட்டிவ் எஜுகேஷன்ஸ் நிறுவனர் ஜெயப்பிரியாவிடம் உரையாடியது. கல்வி நிர்வாகத்தின் சரியான அணுகுமுறையும் மற்றும் சின்ன அக்கறையும் இந்த கட்டத்தில் இவர்களுக்குத் தேவை என்று அவர் கருத்து தெரிவிக்கின்றார்.
''பள்ளி குழந்தைகளின் பாடமும், அவர்கள் படிக்கும் விதமும் ஒவ்வொரு வகுப்பிற்கு ஏற்ப மாறுப்படுகிறது. அந்தந்த வயது அல்லது வகுப்பிற்கு தகுந்தாற் போல் அவர்களை பிரித்து சரியான வழிமுறைகளை பள்ளியும், ஆசிரியர்களும் கடைப்பிடிப்பது நல்லது'' என்கிறார் ஜெயப்பிரியா.
எல்.கே.ஜி முதல் 7 வயது குழந்தைகள் வரை
இந்த வயது குழந்தைகளுக்கு எல்லாமே ஒரு புது அனுபவம் தான். இது ஒரு ஆபத்து, இயற்கை சீற்றம் என்று உணர்வதற்கான பக்குவம் கூட இல்லாத வயது இது. இந்த புது அனுபவம் அவர்களுக்கு இருந்த சந்தோஷமான சூழ்நிலையை மாற்றியமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் பயம், இரவு நேரத்தில் அச்சம், அழுகை அத்தியாவசிய பொருட்கள் இல்லாது ஏற்படும் பய உணர்ச்சி என்று பல பிரச்சனைகள் அவர்களின் மனதில் இருக்கும்.
இந்த நிலையில் பெற்றோர்கள் சில சின்ன விஷயங்களை செய்து, வீட்டிலிருந்த இயல்பு நிலையை குழந்தைகளுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். இது போன்ற ஆபத்தான சூழலில் பதட்டமடைந்த பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் தங்கள் கோபத்தை காட்டியிருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பயத்தையும், இதுவரை தாங்கள் பார்த்திராத பெற்றோர்களின் குணத்தைக் கண்டு அஞ்சியிருப்பார்கள். இதை புரிந்து கொண்டு பெற்றோர், வீட்டில் மீண்டும் சந்தோஷமான சூழ்நிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவது இங்கு அவசியமாகிறது.
அவர்களை இசை அல்லது வரைதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு அறிவுரைக்கலாம். ஏதாவது ஒரு விஷயத்தை வரைந்து வண்ணம் தீட்டுதல் போன்ற ஆக்டிவிட்டீஸ் செய்ய வைப்பது, குழந்தைகளின் மனதில் இருக்கும் பாதிப்புகளை நீக்க ஒரு வடிகாலாக இருக்கும்.
தவிர, அவர்களோடு பேசுவது, பிடித்த உணவை தருவது, கதைகள் சொல்லுவது போன்ற சந்தோஷமான செயல்கள் மூலமும், அவர்களுடைய பயத்தை நீக்கலாம்.
ஆசிரியரின் பங்கு
- வெள்ளத்தால் வீடுகளில் தண்ணீர் புகுந்து சுகாதாரமின்மை ஏற்பட்டு குழந்தைகளுக்கு எளிதாக ஜூரம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த சூழ்நிலையில், ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் பேசி புரியவைத்து குழந்தைக்கு அது போன்ற உடல் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பின், பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்துவது அவசியம். ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய முதல் அடியும் இதுவே.
- குறைந்தது ஒரு வாரம் வரை, பாடங்களை விரைவாக ஆரம்பிக்காமல் சில விளையாட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். தொடர் மழை மற்றும் நடைமுறை சிக்கல் பரவலாக இருந்ததால் வெளி விளையாட்டுகளை தவிர்த்திருப்பார்கள். அவுட்டோர் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பெருமளவில் மாற்றும்.
- ஒரு மாத கால தொடர் விடுமுறை காரணத்தால், ஒரு அளவிற்கு மேல் பாடங்களை குழந்தைகள் மறந்திருப்பார்கள். மெதுவாக, பழைய பாடங்களை மீண்டும் ரிவைஸ் செய்து அவர்களுடைய ஞாபகத்தில் கொண்டுவருவது மிக அவசியம்.
- சில குழந்தைகள் அதிகக் கோபப்படுவது, பிடிவாதமாக இருப்பது போன்ற தங்களுடைய குணங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது போன்ற குழந்தைகளுடன் ஆசிரியர் உடன் உட்கார்ந்து பேசி தன்னம்பிக்கை அளிப்பது அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும்.
ப்ரைமரி குழந்தைகள்
பல வீடுகளில், பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் போன்றவை மழையில் நனைந்து, அடித்தும் செல்லப்பட்டிருக்கும். இந்த சமயத்தில், ஆசிரியர்கள் கொஞ்ச கால அவகாசம் கொடுத்து, பாட புத்தகங்கள் வாங்கி தர பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் அதற்கான முயற்சியில் ஈடுப்பட வேண்டியது அவசியம். தவிர, பாட திட்டங்களில் சில மாற்றுமுறைகளையும் செய்வதால் குழந்தைகளுடைய தேர்வு டென்ஷன்களை தவிர்க்கலாம். சில பாடங்கள் அடுத்த கல்வியாண்டில் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆசிரியர்கள், அந்த பாடங்களை விடுப்பதால், இருக்கும் குறைவான நேரத்தில் பாடங்களை முடிக்க வேண்டிய சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.
தற்போது பெரும்பாலான பள்ளிகள் CCE (Continuous Comprehensive Evaluation) என்ற முறையைப் பின்பற்றுகிறது. இதன் படி, நிறைய ப்ராஜெக்டுகள், சார்ட் வடிவிலான ஆக்டிவிட்டீஸ்களை அதிகம் ஊக்குவித்து, அதன் மூலம் மதிப்பெண்களை அளவிடலாம். தேர்விற்கு படிப்பதை விட, இது போன்ற ப்ராஜெக்டுகள் மூலம் குழந்தைகளின் அனைத்து திறன்களையும் கச்சிதமாக மதிப்பிடுவது சுலபமாகிவிடும்.
இது போன்ற இயற்கை பேரிடர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் நம் நாட்டில் பெருமளவில் இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார் ஜெயப்பிரியா. இந்த விழிப்புணர்வு திட்டங்களை குழந்தைகளுக்கும் கூட பள்ளிகளில் செய்யலாம். உதாரணத்திற்கு, இந்த வெள்ளத்தில் குழந்தைகள் சந்தித்த அல்லது கண்ட நல்ல விஷயங்களை மையப்படுத்தி ஒரு சின்ன ப்ராஜெக்ட் செய்யவைக்கலாம். அல்லது, இயற்கை பேரிடர் சமயத்தில் எவை நம் வீட்டில் இருக்க வேண்டும், என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் குழு விளையாட்டுகள் ஆக்டிவிடீஸ் தரலாம். இதற்கு ஆசிரியர்களின் பங்கும் அதிகமாக தேவைப்படுகிறது.
இது போன்ற விஷயங்களை நோக்கி குழந்தைகளுடைய அறிவு பயணிக்க வழி வகுப்பது அவசியம். காரணம், அவர்களுடைய மனதில் இருக்கும் பய உணர்வை மறக்க இது கச்சிதமாக உதவும்.
பொதுத் தேர்வு மாணவர்கள்
இந்த வகையறாக்களில் இருக்கும் மாணவர்களின் பிரச்சனைகள் மிகவும் வித்தியாசமானது. சில மாணவர்கள், தங்களுடைய புத்தகங்கள், வீடுகள், பொருட்கள் ஏன் சிலர் உறவினர்களை கூட இழந்திருப்பார்கள். ஒரு வகுப்பில் கிட்டத்தட்ட 50% பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருக்கலாம். அந்த வகையில், மனநல ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மனம் விட்டு பேசி அவர்களுக்கு தனி கவனத்தை தருவது முக்கியம்.
"அதே நேரத்தில் பாதிக்கப்படாத மாணவர்களிடம், மற்ற குழந்தைகளுடைய நிலைமையை சரியாக விளக்குவது ஆசிரியர்களின் கடமை. இது இல்லாத போது, சக மாணவர்களின் கேலி கிண்டல்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் மன உளைச்சலை தந்து விடும் அபாயமும் உள்ளது" என்கிறார் பிரியா.
ஆசிரியர்களுக்கும் தேவை கவுன்சிலிங்
இந்த இயற்கையின் தாண்டவம், ஆசிரியர்களையும் பெருமளவில் பாதித்திருப்பது மறுக்கமுடியாது. வீடு, உடைமைகளை இழந்து மனதளவில் பாதித்து, வேலைக்கு திரும்ப முடியாமல் இருக்கும் ஆசிரியர்களும் இருப்பர். இதற்கு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களுக்கு ஆலோசகர்களை கொண்டு பிரத்யேக கவுன்சிலிங் தருவது அவசியம்.
"இந்த வகையான கவுன்சிலிங்கால் அவர்களுடைய மனம் மாறி, தங்களுடைய வேலைக்கு கூடிய விரைவில் திரும்ப பெருமளவில் உதவும். தவிர, தங்களுடைய மாணவர்களுக்கும் தேவையான பாடங்களை மாற்றியமைத்து கற்றுத்தரவும் ஊக்கத்தை அளிக்கும்" என்கிறார்.
கவுன்சிலிங் தவிர பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சில சலுகைகளை தந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தினால் மட்டுமே போதும் எல்லாம் பழைய நிலையை விரைவில் அடைந்துவிடும்.