பதிப்புகளில்

போலியோவால் நடை தளர்ந்தாலும் சிறந்த சமூக ஆர்வலராக சாதித்த சிதம்பரநாதன்!

இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட சிதம்பரநாதன், மாற்றுத்திறனுடையோரின் உரிமைகளுக்காகப் போராடும் மாமனிதராக உயர்ந்தது எப்படி?

21st Jul 2018
Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share

உடல் ஊனமுற்றவர்கள் என்று சமுதாயத்தாலும் அரசாலும் அழைக்கப்பட்டவர்களை மாற்றுத்திறன் படைத்தவர்கள் என்று தான் கூற வேண்டும் என்று தீர்க்கமாகப் போராடியவர் சமூக ஆர்வலர் சிதம்பரநாதன்.

மாற்றுத்திறனாளிகளின் மனங்களை வென்ற சிதம்பரநாதனை கடந்த 2015ம் ஆண்டு காலன் வென்றுவிட்டான். போலியோவால் பாதிக்கப்பட்ட போதும் தன்னை சிறந்த சமூக ஆர்வலராக செதுக்கிக் கொண்டதோடு பலருக்கு முன் உதாரணமாக இருந்த சிதம்பரநாதன் பற்றி அடையாறு திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மதன் கேப்ரியல் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். சோர்ந்து கிடப்போருக்கும் உத்வேகம் தரும் சிதம்பரநாதனின் வாழ்க்கைப் படம் அது.

image


தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து மாநில அளவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த அவர் கடந்து வந்த பாதை கரடு முரடானதாக இருந்தாலும் நல்ல காரியங்களுக்கு அடித்தளமிட்டுள்ளார். உப்புக் காற்று வீசும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கணபதி, மலைக்கரசி தம்பதியின் 4வது மகனாக பிறந்தவர் சிதம்பரநாதன். மழலையின் செயல்களைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவருக்கு 2 வயதாக இருந்த போது போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் நடக்க வேண்டிய நேரத்தில் தவழ்ந்தால் மட்டுமே நகரவே முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் சிதம்பரநாதன்.

ஊன்றுகோலின் துணை கொண்டே நடந்து வந்த சிதம்பரநாதன் தன் வயதுடையோர் பள்ளிக்குச் சென்று வருவது போல தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடித்து ராமநாதபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சிதம்பரநாதன் வீட்டில் இருந்து பள்ளி 6 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது, நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்திலும் சில நேரங்களில் தவழ்ந்தும் என நடை தளர்ந்தாலும் மனம் தளராமல் கல்வியை பயின்றார். இதனைத் தொடர்ந்து சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் பியூசி முடித்தார். தஞ்சாவூர் தரங்கை கல்லூரியில் தமிழ் படிக்க மிகவும் விருப்பப்பட்டார் சிதம்பரநாதன் ஆனால் மாற்றுத்திறன் காரணமாக அது நிறைவேறாமல் போக மனம் சோர்ந்து விடாமல் இலக்கியங்களையும் வரலாற்றையும் நூலகம் தேடிச் சென்று படித்து தனது தமிழ் ஆர்வத்தை பூர்த்தி செய்து கொண்டார்.

சிதம்பரநாதன் சமூக ஆர்வலராக மாற முக்கியக் காரணமாக இருந்தவர் அவருடைய பெரியப்பா மகன் மங்கலசாமி. அந்த காலத்திலேயே சென்னை மாநிலக் கல்லூரியில் படித்ததோடு ஜெர்மனியில் பொதுவுடையை படிப்பை முடித்து சமூக சேவகராக மங்கலசாமி செயல்பட்டு வந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் தனது சொத்துகள் அனைத்தையும் மக்கள் பணிக்காகவே செலவிட்டவர் மங்கலசாமி. பொதுவுடைமை சிந்தனை, பகுத்தறிவு, பொதுச்சேவை என அனைத்திற்குமான ஆதரமாக சிதம்பரநாதனுக்கு திகழ்ந்தவர் மங்கலசாமி. சிதம்பரநாதன் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள சிறந்த நூல்களை அவருக்கு மங்கலசாமி அடையாளம் காட்டினார். நூல்கள் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்பது சிதம்பரநாதன் விஷயத்தில் உண்மையானது.

தனது உறவுப்பெண் தனம் என்பவர் சிதம்பரநாதனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க இருவீட்டார் எதிர்ப்பு காரணமாக மதுரையில் எளிய முறையில் இணையேற்பு செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தனம் பிஎஸ்என்எல் பணிக்கு சென்றுவிட சிதம்பரநாதனும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு பிறந்த 4 குழந்தைகளுக்கு க்யூபா, ஜென்னி, ப்ரைவ்டா என புரட்சிகரமான பெயர்களையே சூட்டி மகிழ்ந்தார் சிதம்பரநாதன். தனம் குடும்பத்தை கவனித்துக் கொள்ள, அவர் சமூக பிரச்னைகளில் கவனம் செலுத்தினார். சாதிக் கலவரத்தால் சொந்த கிராமத்திலேயே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட குழந்தைகள், மனைவியுடன் பிறந்த மண், சொந்த பந்தங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு மதுரையில் தஞ்சமடைந்தார் சிதம்பரநாதன்.

சாதி ஒழிப்பிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவரை புரட்சி நாயகனாக மதுரை மண் மாற்றிப் போட்டது. இந்திய சோவியத் நட்புறவுக் கழகமான இஸ்கஸ் மதுரையில் செயல்பட்டு வந்தது இதனை தனது கலை, இலக்கிய பயணத்திற்கான தளமாக சிதம்பரநாதன் பயன்படுத்திக் கொண்டார். சிறந்த வீரர்களைக் கொண்ட இஸ்கஸ் மூலம் தற்காப்புக் கலை பயிற்சிகளை அளித்தார் சிதம்பரநாதன் இதே போன்று இஸ்கஸ் கீழ் கால்பந்து கிளப், கபடி கிளப் உள்ளிட்டவற்றை உருவாக்கி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கினார். இஸ்கஸ் கிளப் மூலம் தடகளப் போட்டிகளான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் இந்த கிளப் அளித்தது.

இஸ்கஸ் சிறுவர் மன்றத்தில் சிறார்களுக்கு புரட்சிப் பாடல்களை சிதம்பரநாதனே உணர்வுப் பூர்வமாக பாடிக்காட்டி பயிற்சி அளித்தார். ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி என பல மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று பள்ளிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்தனர். கல்லூரி மாணவிகளுக்காக பன்முகப் பட்டறையையும் சிதம்பரநாதன் ஏற்படுத்தி இருந்தார். படிப்பில் ஆர்வம் உள்ள சிதம்பரநாதன் நல்ல ஒரு சிறந்த நூல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்று எண்ணி பாரதி கார்கி வாசகர் பட்டம் என்ற நூலகத்தை உருவாக்கினார். இதில் இருந்த 4 ஆயிரம் நூல்கள் எல்லோருக்கும் இலக்கிய படைப்புகளை அள்ளி வழங்கியது. புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடாமல் சிந்தனையாளர்களைக் கொண்டு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயல், இசை, நாடகங்கள் மூலம் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் தளத்தை உருவாக்கிக் கொடுத்தார் சிதம்பரநாதன்.

மதுரையின் பிரதான சாலையில் உள்ள டீக்கடை அடித்தட்டு தினக்கூலித் தொழிலாளர்களுக்காக அவர் செயல்பட வேண்டியதற்கான அவசியத்தை உணர்த்தியது. இங்கு வந்து டீ குடிக்கும் ரிக்ஷா, ஆட்டோக்காரர்கள், கட்டுமான வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று கூலித் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சார்ந்த வேலைக்கென ஒரு தனி அமைப்பை உருவாக்கி அதன் கீழ் செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு புரிய வைத்தார் சிதம்பரநாதன். பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய சிதம்பரநாதனின் சிந்தனைகள் அனைத்தையும் மதுரை மண்ணில் விதைத்துவிட்டு சென்றுள்ளதாக இன்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மதுரையில் உறுதிபெற துணை நின்றதை நினைவுகூர்கின்றனர் பயனாளிகள்.

கொத்தனார்களாக இருந்த சரவணன், பரிணாமன் இருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சிதம்பரநாதன். சிதம்பரநாதனின் சிந்தனைகளால் வளர்க்கப்பட்ட சரவணன் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராக இருக்கிறார். இதே போன்று சிதம்பரநாதனின் ஊக்கமிகு பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு நட்பு வட்டத்திற்குள் வந்து கவிஞராக மாறிய பரிணாமனின் நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் அளவிற்கு வளர்ந்ததற்கு மூலக் காரணமாக இருந்தவர் சிதம்பரநாதன்.

உழைக்கும் வர்க்கத்தின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அரசுடன் போராட்டம் நடத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்தாலே சிறந்த தலைவன் என்பது சிதம்பரநாதனின் கொள்கை. மக்களுக்காக சேவையாற்ற வேண்டும், பிரதிபலன் எதிர்பாராமல் இருந்தால் மட்டுமே ஊழல் என்ற வார்த்தை நம்மை அண்டாது என்பதில் உறுதியாக இருந்தார். 

கம்யூனிச சித்தாந்த கொள்கைகளைக் கொண்ட சிதம்பரநாதன் பல்வேறு தொழிற்சங்கங்களை அமைத்ததோடு அந்த அமைப்புகளுக்கு சிறந்த தலைவர்களையும் உருவாக்கித் தந்தவர். பேச்சிலும் சிந்தனையிலும் கார்ல் மார்க்ஸ், லெனினின் கோட்பாடுகள் வெளிப்படும்.

ஒரு நாள் மதுரை ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் 7 பேர் பேசிக்கொண்டிருந்த போது பூங்கா நிர்வாகம் அவர்களை வெளியேற்ற அவர்கள் காந்தி மியூசியத்தில் அடைக்கலமடைந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். தன்னைப் போல மாற்றுத்திறன் உள்ளவர்கள் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட சிதம்பரநாதன் அவர்களின் உரிமைக்காக போராடுவது என்று முடிவு செய்தார். 

சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மாற்றுத்திளனாளிகள் பிழைப்புக்காக பிறரிடம் கையேந்தாமல் தங்களின் உரிமை பெற்று சக மனிதர்களைப் போல கவுரவமாக வாழ வைக்க வேண்டியதற்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வர முடிவு செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் விதமாக தானே வீதியில் இறங்கி காதி கிராப்ட் ஆடைகளை மக்கள் மத்தியில் விற்று பணம் சேமித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தியை சந்தித்து ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் சிதம்பரநாதன் கோரிக்கை வைக்க அந்த கோரிக்கை சில மாதங்களிலேயே நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக கேலிபர் ஷூ தயாரிப்பு, ஷூ ரிப்பேரிங் மற்றும் கட்டில் தயாரித்தல் உள்ளிட்ட மையங்களை சிதம்பரநாதன் ஏற்படுத்தியுள்ளார்.

உடல் ஊனமுற்றவர்கள் என்று சொல்லக் கூடாது அவர்கள் நம்பிக்கையோடு வாழ மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் என்று தான் கூற வேண்டும் என்று வலியுறுத்தியவர் சிதம்பரநாதன். பேருந்தின் முன் இருக்கையை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பெற்றுத்தந்தவர் சிதம்பரநாதன்.

ஒருபுறம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றொரு புறம் அரசுடன் பேசி சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல், தொழிற்சாலைகளுடன் ஆலோசித்து வேலைவாய்ப்பை பெருக்குதல், ஊடகங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்று சிறப்பாக செயல்பட்டவர் சிதம்பரநாதன்.

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் தென்மண்டல சங்கம் என்று செயல்படுத்தி வந்த சிதம்பரநாதன் 1996ல் சென்னைக்கு இடம்பெயரவே தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கி 32 மாவட்டங்களையும் அதில் இணைத்தார். பெண்கள் என்றால் இளகிய மனம் படைத்த சிதம்பரநாதன் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கென்று தனியான ஒரு அமைப்பை உருவாக்கினார்.

நடை சோர்ந்தாலும் எடுத்த காரியத்தில் உறுதியாக இருந்து அதில் போராடி வெற்றி காண்பதே சிதம்பரநாதனின் தீர்க்கம். பல மாடிகளுக்கு தவழ்ந்தே சென்று தன் மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்தவர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்த சிதம்பரநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாக இருந்தாலும் அவரின் சிறந்த சேவைகளை மற்றவர்களை சோர்ந்து விடாமல் தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்க மருந்து.


கட்டுரை : பிரியதர்ஷினி

Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share
Report an issue
Authors

Related Tags