பதிப்புகளில்

கல்லாபெட்டி கலெக்‌ஷனில் ரோபோ, முக அடையாளம் மூலம் பேமென்ட்…

இணைய வர்த்தகத்தில் 5-வது மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா சீனாவின் ஷாங்காயில் தொடங்கியுள்ள 'ஹமா’ ரீட்டெய்ல் சூப்பர் ஸ்டோர், வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்த ரோபோ கேஷியர், முக அடையாள பணம் செலுத்துதல் என டெக்னாலஜியால் அசர வைக்கிறது. 

Gajalakshmi
8th Sep 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

மனதில் நினைப்பதைத் தானாகவே புரிந்து கொள்ளும் அம்சம் மட்டும் தான் இன்னும் ஸ்மார்ட் போனில் இல்லை. மலிந்து கிடக்கும் ஸ்மார்ட் போன்கள் இன்று ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டில் மட்டுமே சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர். சொகுசுகளை வாரி வழங்கும் ஸ்மார்ட் போன்கள் ஒருபுறம் என்றால், போட்டி போட்டுக் கொண்டு டேட்டாக்களை வாரி வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் மறுபக்கம். இன்று ஒரு மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும்.

குண்டூசி முதல் இறுதிச் சடங்கிற்கு தேவையான பொருட்கள் வரை என அனைத்தையும் இணைய வர்த்தக நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டன. உணவு, உடைகள், பணப்பரிமாற்றம், என எதற்குமே வெளியே போகத் தேவையில்லை, வீட்டில் இருந்தபடியே ஹாயாக அனைத்தையும் ஆன்லைனில் செய்து முடித்துவிடலாம். அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் இ-வர்த்தகத்தின் மூலம் மக்களின் மாதாந்திர அத்தியாவசயங்களை பூர்த்தி செய்பவையாக மாறிவருகின்றன. வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற அவை செய்யும் பிரயத்தனங்கள் மட்டுமே அந்த நிறுவனத்தை நோக்கி மக்கள் படையெடுக்கக் காரணமாக அமையும்.

இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அலிபாபா செய்துள்ள புதிய முயற்சி, ரீட்டெய்ல் சூப்பர் ஸ்டோர்களின் எதிர்காலம் இதுவாக இருக்குமோ என்று யோசிக்க வைத்துள்ளது. மளிகைக் கடையில் என்ன புதுமையை செய்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள், நாம் வாய்பிளந்து அசந்து நிற்கும் அளவிற்கு இருக்கிறது இந்த ஸ்டோர்.

படஉதவி : கூகுள் இமேஜஸ்

படஉதவி : கூகுள் இமேஜஸ்


சீனாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அலிபாபா உலகிலேயே ஐந்தாவது பெரிய இணையதள நிறுவனம். இணைய வர்த்தகம், ரீட்டெய்ல் ஸ்டோர், தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கிறது இதன் வளர்ச்சி. இந்நிலையில் இந்த நிறுவனம் சீனா முழுவதும் தனது ரீட்டெய்ல் ஸ்டோரான ’ஹமா’வை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சீனாவின் 65 இடங்களில் ஹமா ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.

ஷாங்காயில் தொடங்கப்பட்டுள்ள ஹமா ஸ்டோர் மினி ஷாப்பிங் மால் போல காணப்படுகிறது. மளிகைப் பொருட்களை நேரில் வாங்கும் இடம், ஆன்லைன் ஆர்டர்களை டெலிவரி செய்யும் விநியோகிஸ்த மையம், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை இதில் உள்ளது. இங்கு பொருட்களை வாங்குவோருக்காக ஹமா பெயரிலேயே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

கடையில் வைத்துள்ள பொருட்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பார்கோடுகளை செயலியில் ஸ்கேன் செய்தால் அந்தப் பொருளின் விலை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப லைவ் விலை, ரெசிபிகள், பொருள் பற்றிய வாடிக்கையாளர்களின் கருத்துகள் என அனைத்தும் அடுத்த நிமிஷம் ஸ்மார்ட் போன் திரையில் வந்துவிடும். வாடிக்கையாளர்கள் நேரவிரயத்தை குறைக்க நினைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்கள் இதே பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறும் வசதியையும் இந்த செயலி வழங்குகிறது.

படஉதவி : நன்றி சிஎன்பிசி 

படஉதவி : நன்றி சிஎன்பிசி 


ஹமா ஸ்டோர் இரண்டு விற்பனை மையங்களாக செயல்படுகிறது. ஆன்லைனில் கொடுக்கும் ஆர்டர்களை ஊழியர்கள் பைகளில் நிரப்பி கன்வேயர் பெல்ட்டில் பொருத்திவிடுகின்றனர். அந்த பெல்ட் பொருட்களை எடுத்துச் சென்று டெலிவரி மையத்திடம் ஒப்படைக்கிறது. ஊழியர்களின் வேகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் ஹமா ஸ்டோர்களைச் சுற்றி 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்களுக்கு 30 நிமிடத்தில் ஆர்டர் செய்த மளிகை சாமான்கள் கிடைத்துவிடும்.

அலிபாபா ஸ்டோர்களுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்கிச் செல்பவர்களை விட ஆன்லைனில் வாங்குபவர்களே அதிகம் என்பதால் அவர்களுக்கான கட்டண வசதிக்காக அலி பே என்ற ஆன்லைன் தளத்தையும் அலிபாபா வழங்குகிறது. ஹமா ஸ்டோருக்கு வருவோரும் அலி பே மூலமே பணம் செலுத்தலாம். ஆனால் இங்கு என்ன வித்தியாசம் என்றால் காலம்காலமாக பின்பற்றப்படும் கல்லாபெட்டியில் உட்காரும் கேஷியர்களுக்கு பதிலாக ரோபோக்களே இங்கு கேஷியர்கள். 

பொருட்களை வாங்கிவிட்டு அதன் பார்கோடுகளை கேஷியர் ரோபோவிடம் ஸ்கேன் செய்தால் அலி பே மூலம் கட்டணம் எடுத்துக் கொண்டு ரசீதை வழங்கிவிடுவார் ரோபோ கேஷியர். இதே போன்று முகத்தை அடையாளமாக வைத்து கியோஸ்க் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் அலிபாபா சில ஹமா ஸ்டோர்களில் அறிமுகம் செய்துள்ளது.
படஉதவி : கூகுள் படங்கள்

படஉதவி : கூகுள் படங்கள்


முகத்தை அடையாளமாகப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறைக்கு கடந்த ஓராண்டாக தீவிரம் காட்டி வருகிறது அலிபாபா நிறுவனம். சீன அரசு மற்றும் நிறுவனங்களுக்கு முக அடையாளம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் ஹாங்காங் மென்பொருள் நிறுவனமான சென்ஸ் டைமிற்கு அலிபாபா 600 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டில் அலிபாபா நிறுவனம் கேஎஃப்சியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு முகத்தை அடையாளமாக வைத்து பணம் செலத்தும் முறையை அறிமுகம் செய்தது.

ரீட்டெய்ல் ஸ்டோருக்கு அடுத்தபடியாக ஹமாவில் கிடைக்கும் புதிய அனுபவம், இங்குள்ள ரெஸ்டாரண்டில் உணவை வாடிக்கையாளர்களின் மேஜைக்கு ரோபோக்கள் டெலிவரி செய்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது டேபிளில் உள்ள QR பார்கோடை ஹமா செயலியில் ஸ்கேன் செய்தால் அதிலேயே மெனுகார்டு வரும் அதிலிருந்து விருப்ப உணவை தேர்வு செய்யலாம். 

சீனர்கள் அதிகம் விரும்பி உண்ணும் கடல் உணவுகள் இங்கு உயிருடன் வைக்கப்படுகிறது, அவர்கள் அதனை தேர்வு செய்யும்பட்சத்தில் ஊழியர்கள் அதனை பிடித்து வந்து சுடச்சுட சமைத்து கொடுப்பார்கள். வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் உணவை செஃப் தயார் செய்து சுடச்சுட ரோபோடிக் மெஷினில் வைத்தவுடன் அது ஆர்டர் கொடுத்தவரின் டேபிளை அடுத்த நொடியே வந்தடைந்துவிடுகிறது. உணவு எப்போது வரும் என்று காத்திருக்கத் தேவையில்லை ஏனெனில் அவை குறித்த விவரங்கள் மேஜையில் பொருத்தப்பட்டிருக்கும் டேபில் வந்துவிடும்.

படஉதவி : Thedrum

படஉதவி : Thedrum


மொத்தத்தில் ஷாங்காயில் திறக்கப்பட்டுள்ள ஹமா ஸ்டோர் ஹைடெக் டெக்னாலஜியைக் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளின் கூடாரம். ரீட்டெய்ல் மார்க்கெட்டுகளின் எதிர்காலம் இப்படித் தான் இருக்குமோ இந்த தொழில்நுட்பம் மேலும் பல ஸ்டோர்களுக்கு விரிவடைந்தால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் இப்போதே சீனாவில் உள்ள மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கு வந்துவிட்டது.

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags