பதிப்புகளில்

ஒரு சாலை விபத்தை நேரில் கண்ட நண்பர்கள்: அவசர தேவையை உணர்ந்து தொடங்கிய ’CallAmbulance’

14th Mar 2017
Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share

ஆம்புலன்ஸை அழைப்பதைத் தாண்டிய ஒரு ஒருங்கிணைந்த அவசரகாலப் பராமரிப்புத் தளமாக விளங்கும் ஹைதராபாத்தைச் சார்ந்த ’கால் ஆம்புலன்ஸ்’

2013-ம் ஆண்டு உமாசங்கர் கோட்டுரு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னுடைய சக பணியாளரான ஜகதீஷ் பாபு விஷ்வநாத்துடன் வாரங்கல்லில் நடக்கும் ஒரு செமினாருக்காக சென்றுகொண்டிருந்தபோது ஒரு சாலை விபத்தைக் கண்டார். அதில் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவருக்கு அதிகமாக காயமேற்பட்டிருந்தது. மற்றவருக்கு மிதமான காயம். இருப்பினும் இரத்தப் போக்கு அதிகமாக இருந்தது. 

image


மிதமாக காயமடைந்த நபரை உமாசங்கர் மற்றும் ஜகதீஷ் இருவரும் சேர்ந்து வாரங்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மற்றவரது மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸை அழைக்க வேண்டியிருந்தது. விபத்து நடந்த இடத்தின் அருகே குறிப்பிட்டு சொல்லும்படியான லேண்ட்மார்க் இல்லாததால் ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்தை அடைவதற்கு வழிகாட்ட அதிகம் சிரமப்பட்டனர். உமாசங்கர் அந்த சம்பவத்தை நினைவுகூறுகையில்,

“சுங்கச்சாவடி இடத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணித்திருப்போம் என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அது மட்டுமல்லாமல் முதல் நபரை மருத்துவமனையில் அனுமதிக்க 45 நிமிடங்கள் பயணித்து வாரங்கல் மருத்துவமனையை அடைந்தோம். விபத்து நடந்த பகுதிக்கு அருகில் சில நிமிடங்களில் சென்றடைய ஏதேனும் சுகாதார மையம் உள்ளதா என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை.”

அவர்கள் திரும்பச் சென்றுகொண்டிருந்தபோது தாங்கள் எவ்வளவு தகுதியானவர்களாகவும் தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பினும் உதவியற்ற நிலையில் இருந்ததை உணர்ந்தனர். இந்த எண்ணம்தான் ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு மொபைல் செயலியை உருவாக்க இவ்விருவருக்கும் தூண்டுதலாக அமைந்தது. 

இது குறித்து அதிகம் ஆராய்ந்தபோது உடல்நலன் குறித்த தகவல்கள், இடம் ஆகியவற்றை உள்ளடக்கி சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு ஒட்டுமொத்த அவசரகாலப் பராமரிப்பு தளத்தின் தேவை இருப்பதை உணர்ந்தனர்.

ஒட்டுமொத்த அவசரகாலப் பராமரிப்பு தளம் 

இப்படித்தான் ஒருங்கிணைந்த அவசரகாலப் பராமரிப்பு தளமாக ’கால்ஆம்புலன்ஸ்’ (CallAmbulance) உருவானது. அவசரகாலப் பராமரிப்புகளில் 80 சதவீதம் சாலை விபத்து, பிரசவகால பராமரிப்பு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, மாரடைப்பு, ஆஸ்துமா, பக்கவாதம் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதை இவ்விருவரும் அறிந்தனர்.

ஆம்புலன்ஸை அளிப்பதே அவசரகாலப் பராமரிப்பாக கருதப்படுகிறது என்கிறார் உமாசங்கர். அவசரகால உதவியை ஆம்புலன்ஸால் மட்டுமே அளிக்க முடியாது. மேலும் ஆழமாக பார்க்கும்போதுதான் ஆம்புலன்ஸ் அளிப்பதைத் தாண்டி ஒரு ஒருங்கிணைந்த அவசரகால பராமரிப்பை அளிப்பதற்கான வாய்ப்புள்ளதை உணரமுடியும் என்கிறார்.

அவசரகால பராமரிப்பு சார்ந்த ஒட்டுமொத்த இகோசிஸ்டத்தையும் ஒருங்கிணைத்து அவசரகாலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேம்படுத்த உருவானதுதான் கால்ஆம்புலன்ஸ். GPS மற்றும் செயலி சார்ந்த தொடர்புகளின் உதவியுடன் விபத்து நடந்த இடத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் செல்கின்ற திறனை இந்தத் தளம் மேம்படுத்துகிறது.

இந்தத் தளம் எவ்வாறு இயங்குகிறது?

“108 மற்றும் பிற தனியார் ஆம்புலன்ஸ்களையும் இணைக்க தற்போது நம்மிடம் ஒரே இண்டெர்ஃபேஸ் உள்ளது. தனியார் ஆம்புலன்ஸ்களை இணைக்கும் பணி துவங்கிவிட்டது.” என்றார் உமாசங்கர். 

இந்த தளத்தில் ’ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ என்றழைக்கப்படுபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே பதிலளித்து ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே நோயாளியின் நிலையை மேம்படுத்த உதவுவர். பொதுமக்களின் ஒரு பிரிவினரான பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் (RMPs), ஓட்டுநர்கள், செக்யூரிட்டி கார்டுகள், கார்ப்பரேட் ஊழியர்கள் போன்றோருக்கு பல்வேறு மருத்துவமனையுடன் இணைந்து இந்தப் பயிற்சியளிக்கப்படுகிறது.

இணைந்து செயல்படுதல்

ஒரு தனிப்பட்ட ரத்த தான நெட்வொர்க் உருவாக்கிக் கொள்வதற்கும் கால்ஆம்புலன்ஸ் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தேவை ஏற்பட்டால் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இதில் இணைத்துக்கொள்ளலாம். 

எங்களது மொபைல் செயலி ஃபோனிலிருக்கும் அட்ரஸ் புக்கை கண்காணித்து தானமளிக்க விரும்புவோர் அனைவரையும் பட்டியலிடும். சாலை விபத்தில் பாதிக்கப்படுவோரை காப்பற்றப்போகிறது இந்தத் தளம்.” என்றார் உமாசங்கர்.

ரத்த தானமளிப்போரின் தேவை குறித்து உமாசங்கர் விவரிக்கையில் பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்தப்போக்குதான் உயிரிழப்பிற்குக் காரணமாக அமைகிறது என்றார். அது மட்டுமல்லாமல் சிறப்பு மருத்துவமனைகளை இந்தத் தளம் பட்டியலிடுவதால் பாதிக்கபட்டவரை குறிப்பிட்ட சிறப்பு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அழைத்துச் செல்ல உதவுகிறது. 

இறுதியாக பாதிக்கப்பட்டவர், அவரது பராமரிப்பாளர், ஆம்புலன்ஸ் மேலாளர், ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவர் ஆகியோரை இந்தத் தளம் ஒரே வலைப்பக்கத்தில் இணைக்கிறது. உதாரணத்திற்கு பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை குறித்த விஷயங்கள் மருத்துவருக்கு தெரியும். அதேபோல சிகிச்சைக்கு உரிய சம்மதம் பெற குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கிடைக்கும்.

ஆதாருடன் கூடிய பீமா யோஜனா அல்லது தனியார் காப்பீடு நிறுவனங்கள் வாயிலாக அவசரகால பராமரிப்பிற்குத் தேவையான நிதியுதவியை இணைப்பதற்கும் இந்தக் குழு திட்டமிட்டு வருகிறது. எனினும் ஹெல்த்கேர் பிரிவில் மொபைல் தொழில்நுட்பத்திற்கான தகவல்களை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

குழு அமைத்தல்

மொபைல் சார்ந்த ஹெல்த்கேர் தீர்வுகளை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள நுகர்வோர் தயாராக இல்லை என்பதால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. எனினும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் ரிலையன்ஸ் ஜியோ அளித்த மலிவான டேட்டா கட்டணங்களாலும் 2016-ம் ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகமாக ஏற்றுக்கொண்டனர். 

”2017-ம் ஆண்டு டிஜிட்டல் ஹெல்த்தில் பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.” 

தகவல் தொழில்நுட்பத் துறையில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் பெற்ற உமாசங்கர் மற்றும் ஜகதீஷ் பாபு விஷ்வநாதம் தவிர இவர்களது குழுவில் தகவல் தொழில்நுட்பத்தில் 12 வருட அனுபவமுள்ள முன்னாள் இன்ஃபோசிஸ் ஊழியரான பாஸ்கர் கந்துகுரி மற்றும் US அரசாங்கத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்த ராகுல் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.

“அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்தில் ஹைதராபாத்தின் 60 மூன்றாம் நிலை மருத்துவமனைகளுடன் இணைந்தோம். காண்டினெண்டல், யசோதா, மேக்ஸ்க்யூர், சன்ஷைன், ஆம்னி உள்ளிட்ட முதல் நிலை (Tier-1) மருத்துவமனைகள் இதில் அடங்கும்.” 

இந்தக் குழு Uber-உடன் இணைந்து அவர்களது ஓட்டுநர்களுக்கு அடிப்படை உயிர் காக்கும் திறன்களில் பயிற்சியளித்து ’ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்’ என்று சான்றிதழ் அளித்தனர். ஹைதராபத்தில் 500-க்கும் மேற்பட்ட ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ்க்கு பயிற்சியளித்துள்ளனர். இந்தியா முழுவதிலிருந்தும் ஒவ்வொரு நாளும் இவர்களது செயலி வாயிலாக 108-க்கு தொடர்பு கொள்ளப்படுகிறது.

தனித்துவம்

கடந்த சில வருடங்களாக ஹோம் ஹெல்த்கேர் தளம், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் அக்ரிகேட்டர்ஸ், ஆலோசனைகள், ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பல்வேறு ஹெல்த்கேர் தளங்கள் வந்துள்ளன. 

Practo, Lybrate, Portea போன்ற பெரும்பாலானவை அதிக நிதியுடன் செயல்படுகிறது. பல்வேறு ஆன்லைன் மருந்தகங்களும் உள்ளன. Axoi Biosolutions மற்றும் Raksha Safe Drive ஆகிய ஸ்டார்ட் அப்கள் அவசரகாலப் பராமரிப்பு பிரிவில் இயங்கி வருகிறது. Accel Partners- லிருந்து Axio நிதி உயர்த்தியுள்ளது.

கால்ஆம்பூலன்ஸின் USP குறித்து உமாசங்கர் விவரிக்கையில் உலகெங்கும் செயல்பட்டு அவசரகால தூண்டுதலுக்காக பல்வேறு IoT சாதனங்களுடன் இணைக்கப்படும் விதத்தில் இவர்களது தீர்வு அமைக்கப்பட்டிருப்பதாகவும் உலகளாவிய பொது மற்றும் தனியார் அவசரகால அமைப்புகளுடனும் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட இணைப்புகளில் இருக்கும் ஏராளமான சிக்கல்களை நுகர்வோரிடமிருந்து மறைத்து அவர்களுக்கு ஒரு இணையற்ற அனுபவத்தை வழங்கும் விதத்தில் இவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு செயல்படுகின்றனர்.

எதிர்கால திட்டங்கள்

”இடர்பாடான நேரத்தின் அவசரகால தூண்டுதல்கள் மற்றும் தொடர்பு முறைக்கு நாங்கள் காப்புரிமை பெற்றுள்ளோம். நாட்டின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வழங்குபவர்களான 108-டுடன் இணைந்திருக்கும் ஒரே மொபைல் செயலி எங்களுடையதுதான்.” என்றார் உமாசங்கர்.

இந்தக் குழு ஏஞ்சல் நிதியை பெற்றுள்ளது. இந்தியா எங்கும் செயல்பாட்டை விரிவுப்படுத்த ஸ்ராடஜெக் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை எதிர்நோக்கியுள்ளது. 2016-ம் ஆண்டின் ஐந்து மிகச்சிறந்த ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக BioAsia-வால் பட்டியலிடப்பட்ட ஹைதராபாத்தை சார்ந்த HYSEA-விடமிருந்து ’சோஷியல் இம்பேக்ட் விருது’ வென்றுள்ளது.

அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ட்ராமா சென்டர்களையும் அவர்கள் கையாளக்கூடிய எமெர்ஜென்சி வகையைப் பொருத்தும் அவர்கள் செயல்படும் நேரத்தைப் பொருத்தும் வகைப்படுத்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து ஆம்புலன்ஸ் சேவை வழங்குவோரையும் ஒன்றிணைக்கவும் அவர்களது ஆம்புலன்ஸ் வகையைப் பொருத்து மதிப்பிடும் நடவடிக்கையையும் மேற்கொள்ள கால்ஆம்புலன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக சரியான எமெர்ஜென்சிக்கு சரியான ஆம்புலன்ஸ் அனுப்பப்படும்.

இந்தக் குழு ரத்த தானம் வழங்க விரும்பும் நண்பர்களின் தனிப்பட்ட நெட்வொர்க்கை ஒவ்வொருவரும் உருவாக்கிக்கொள்ள உதவுவதற்கு திட்டமுள்ளனர். கார்ப்பரேட், பள்ளிகள் மருத்துவமனைகள் அல்லது சாலை போக்குவரத்து அதிகாரிகள் போன்றோருக்கு ஃப்ர்ஸ்ட் ரெஸ்பாண்டர் பயிற்சியை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

”ஆம்புலன்ஸ் வழங்குவோர் அனைவருக்கும் தொழில்நுட்பத்திற்கு சர்வதேச அளவில் உரிமம் கிடைக்க விரும்புகிறோம். அனைத்து இணைப்புகளின் சிக்கல்களையும் மறைத்து ஒட்டுமொத்த உலகிற்கும் அவசரகால பராமரிப்பிற்காக ஒரே செயலியாக வழங்குவதே எங்களது நோக்கம்.” என்று முடித்தார் உமாசங்கர்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்

Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக