பதிப்புகளில்

தென்னக செய்திகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக துவக்கப்பட்ட 'TheNewsMinute'

19th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

வட கிழக்கு பருவமழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது தேசிய மீடியா சென்னை மழை வெள்ளத்தை உரிய முறையில் கண்டுகொள்ளத் தவறியதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தென் மாநிலங்களை தேசிய மீடியா கவனிப்பதில்லை என்பது எப்போதும் முன்வைக்கப்படும் விமர்சனமாகவே இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட "தி நியூஸ் மினிட்.காம்" The News Minute செய்தித்தளம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மீடியாவில் வீசும் டிஜிட்டல் அலையின் விளைவாக உண்டான நியூஸ் மினிட் தளம் தென்னக செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது மட்டுமல்லாமல்; மற்ற ஊடகங்கள் வெளியிடாத பல செய்திகளை தகுந்த ஆதாரங்களோடு வெளியிடுவதே இவர்களின் சிறப்பு.

தி நியூஸ் மினிட் நிறுவனர் தன்யா ராஜேந்திரனுடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய உரையாடலில் இருந்து...

image


துவக்கம்

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், தி நியூஸ் மினிட், துவக்கப்பட்ட இரண்டாவது ஆண்டிலேயே செய்தித் தளமாக இணைய வாசகர்களை கவர்ந்திருப்பதுடன், சமீபத்தில் தனது முதல் ஃபண்டிங்கையும் பெற்றிருக்கிறது.

"தங்களைச்சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு மாறுபட்ட கோணத்தையும், புரிதலையும் அளிக்க முயலும் இளம் செய்தியாளர்களை கொண்ட துடிப்பான குழுவை தி நியூஸ் மினிட் கொண்டிருக்கிறது” என்கிறார் இதன் நிறுவனர்களில் ஒருவரான தன்யா ராஜேந்திரன். 

கேரளாவில் பாலக்காட்டில் கல்லூரி படிப்பை முடித்து, சென்னை ஆசிய இதழியல் கல்லூரியில் இதழியல் பயின்றவரான தன்யா, இத்துறையில் 12 ஆண்டுக்கும் மேல் அனுபவம் பெற்றவர். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தென்னக பீயூரோ சீஃபாக பணியாற்றிக்கொண்டிருந்தவர் 2013 ல் தனது பணியை ராஜினாமா செய்தார். தொலைக்காட்சி செய்தி சேகரிப்பிற்கான துடிப்பும், வேட்கையும் இருந்தாலும், பத்தாண்டு கால அனுபவத்திற்கு பிறகு பரிசோதனை முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இது என உணர்ந்ததாக தன்யா குறிப்பிடுகிறார்.

image


டிஜிட்டல் பரப்பு பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. இணையத்தில் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் தெளிவான எண்ணம் இருக்கவில்லை என்று கூறும் தன்யா, நியூஸ் மினிட் தளம் பிறந்த விதத்தை இப்படி விவரிக்கிறார்.

"இந்த கட்டத்தில் எனக்கு உறுதியாக தெரிந்தது எல்லாம், தென் மாநிலங்களை சேர்ந்த செய்திகளுக்கு மேலும் பெரிய அளவில் கவனம் தேவை என்பது தான். டைம்ஸ் நவ்வில் இருந்த போது நான்கு மாநிலங்களை கவனித்த அனுபவம், (அப்போது தெலுங்கானா இல்லை) தென் மாநிலச் செய்திகள், அதிலும் குறிப்பாக தலைநகர் அல்லாத பகுதிகளின் நிகழ்வுகள் தினசரி செய்திகளில் இடம்பிடிப்பது எத்தனை கடினம் என உணர்ந்திருந்தேன். தில்லி அல்லது மும்பையில் உள்ள நியூஸ் டெஸ்கிற்கும் களத்தில் நிகழும் செய்திகளுக்கும் பெரும் இடைவெளி இருப்பதும் புரிந்தது. 

ஜெயலலிதா, எடியூரப்பா, கருணாநிதி, ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற பிரபலங்கள் பற்றிய செய்திகள் தவிர வேறு எவரும் தேசிய அளவில் செய்திகளில் இடம்பிடிப்பதில்லை”என்கிறார் தன்யா.

தென்னகத்தில் கவனம்

இந்த எண்ணமே தென்னக செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் 'தி நியூஸ் மினிட்' செய்தித் தளத்தை துவக்க வைத்தது. இதழியல் துறை சகாவான சித்ரா சுப்பிரமணியம் அப்போது சுவிட்சர்லாந்தில் இருந்தாலும் செய்தித்துறைக்கு திரும்ப விரும்பியதாகவும், தன்னை இணையதளம் துவக்க ஊக்குவித்ததாகவும் தன்யா கூறுகிறார். சித்ரா சுப்பிரமணியம் நிறுவனராக இணைந்து கொள்ள, சாஃப்ட்வேர் துறையை சேர்ந்த விக்னேஷ் வெல்லூர் (Vignesh Vellore ) இன்னொரு இணை நிறுவனராக கைகோர்த்தார். விக்னேஷ், மக்கள் எதை படிக்க விரும்புகின்றனர் என்ற புரிதலை இதழியலுக்கு வெளியில் இருந்து, கொண்டு வந்ததாக தன்யா மேலும் குறிப்பிடுகிறார்.

image


ஆரம்ப காலப் பயணம் சவாலாகவே இருந்தது. இதழியலில் அனுபவம் இருந்தாலும், செலவுகள் பற்றி புரியவில்லை என்கிறார். ஆரம்பக் கட்டத்தில் நிதி நெருக்கடி இருந்ததால், முதலில் செய்தி திரட்டியாக துவக்க விரும்பினார். 2014 மார்ச்சில் 'தி நியூஸ் மினிட்' தென்னக செய்திகளை திரட்டித்தரும் மாறுபட்டத் தளமாக அறிமுகமானது. "பிராந்திய மொழிகளில் வெளியாகும் செய்திகள் பெரும்பாலும் யூகங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதையும், அதற்கு தானும் வலு சேர்க்க விரும்பவில்லை “ என்றும் தன்யா கூறுகிறார்.

இதன் பிறகு மூலச் செய்திகளை உருவாக்குவதிலும், களத்தில் இருந்து செய்தி சேகரிப்பதிலும் கவனம் செலுத்தியது தி நியூஸ் மினிட் குழு. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, புதிய செய்தியாளர்களும் நியமிக்கப்பட்டு குழு விரிவாக்கப்பட்டது. செய்தித் தளம் வளர்ந்த நிலையில், முதலீடு திரட்டும் வாய்ப்புக்கு தயாராக இருந்ததாகவும் ஆனால் இது ஆசிரியர் குழுவின் செயல்பாட்டில் குறுக்கிடும் வகையில் அமையக்கூடாது என உறுதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

முதல் சுற்று நிதி

தற்போது நியூஸ் மினிட் தளம் நெட்வொர்க் 18 நிறுவனர் ராகவ் பால் (Raghav Bahl) இணை நிறுவனராக உள்ள குவிண்டோலியன் மீடியாவிடம் (Quintollion Media) இருந்து வெளியிடப்படாத முதல் சுற்று நிதியை பெற்றுள்ளது.

இந்தியாவில் பொருட்படுத்தக்கூடிய செய்திகளில், குறிப்பாக தென்னகம் சார்ந்த செய்திகளுக்கு அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறும் தன்யா, செய்தியையும், அலசல் மற்றும் கருத்துக்களை ஒன்றாக கலக்காமல் இருக்கும் பாரம்பரிய இதழியல் கோட்பாட்டை கடைபிடித்து வருவதாக குறிப்பிடுகிறார்.

சிறிய செய்தி, பெரிய செய்தி, உள்ளூர் செய்தி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறுபவர் சென்னை மழைக்கு நடுவே, கடமை உணர்வுடன் பால் விநியோகம் செய்த ராதா என்பவர் பற்றிய தாங்கள் வெளியிட்டச் செய்தி வைரலாக பரவியதை உற்சாகமாக நினைவு கூறுகிறார். 

பெங்களூரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு, சிறார்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய பிரட்டனைச் சேர்ந்த பால் மீக்கின்ஸ் வளைகுடாவில் இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை முக்கிய மைல்கல்லாகவும் குறிப்பிடுகிறார். இந்த விவகாரம் பற்றி தாங்கள் வெளியிட்டச் செய்திகளை படித்த மாணவி ஒருவர் அவர் குவைத்தில் பதுங்கி இருக்கும் விவரத்தை ரகசியமாக பகிர்ந்து கொண்டது இதற்கு உதவியது என்கிறார்.

image


அண்மையில் மும்பையில் ShethePeople நடத்திய 'Digital Women Awards' விழாவில், சிறந்த செய்தித் தளத்திற்கான விருது, தன்யா ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

சென்னை மழை சேவை

சென்னை மழை பாதிப்புகளை தீவிரமாக செய்தி ஆக்கியதுடன், செய்தி கண்ணோட்டத்தை கடந்து மனிதாபிமான நோக்கில் செயல்பட்டதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் தன்யா. மழை செய்திகளை அதிகம் வெளியிடவில்லை, ஏனெனில் செய்தியாளர்கள் உதவி கோரியும் மீட்பு கோரியும், வந்த கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதில் ஈடுபட்டனர் என்கிறார்.

சென்னை மழை வெள்ளத்துக்கான காரணம் என்ன? என்று செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத சூழலை அலசி ஆராயும் வகையில் வெளியான கட்டுரையும் பரவலாக கவனிக்கப்பட்டது. மழை பாதிப்பு, மீட்புப் பணிகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்திய தளம், மழையால் சேதத்திற்கு இலக்கான நூலகங்களை சீரமைக்கும் முயற்சி குறித்தும் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மாற்று ஊடக தளத்தை நடத்துவதில் பொருத்தமாக இருப்பது தான் மிகப்பெரிய சவால் என்று கூறும் தன்யா, எல்லோரும் வெளியிடும் செய்திகளையே வெளியிட்டால் யார் படிப்பார்கள் என்று கேட்கிறார். அதனால் தான் பொருத்தமான, கவனிக்கப்படாத ஏன் சொல்லப்படாத கதைகளை செய்தி ஆக்குவதில் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்.

முதல் சுற்று நிதி கிடைத்துள்ள நிலையில் வருங்காலத்தில் பிராந்திய மொழி உள்ளடக்கத்தையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், இது மொழிபெயர்க்கப்பட்டதாக இல்லாமல் மூல வடிவில் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி: TheNewsMinute

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags