கொலைவெறி தாக்குதலில் கணவர் சங்கரை இழந்ததில், ஜாதி எதிர்ப்புக் குரல் கொடுக்கும் துணிவான பெண் ஆகிய கௌசல்யா!

0 CLAPS
0

கடந்த வருடம் மார்ச் மாதம் நம்மை உலுக்கிய அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் உலா வந்தது. வேற்று ஜாதியை சேர்ந்த ஒருவரை மணந்த காரணத்தினால் புதுமண தம்பதியர்களை பட்டப்பகலில் கூலிப்படை கொல்ல முயற்சி செய்த பதிவை நாம் அனைவரும் கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தோம். அந்த சம்பவத்தில் சங்கர் பரிதாபமாக உயிரிழக்க, கெளசல்யா வாழ்க்கையே பறிபோன நிலையில் முற்றிலும் மனமுடைந்து போனார். 


தற்போது கெளசல்யா (வலது)

கௌசல்யா மற்றும் ஷங்கர் கல்லூரி படிக்கும்பொழுது காதலித்து தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யாவின் பெற்றோர்கள், மேல் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஷங்கர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்தனர். திருமணமாகி எட்டு மாதம் கடந்த நிலையில் உடுமலைப்பேட்டைக்கு ஷங்கர் மற்றும் கௌசல்யா துணி எடுக்க சென்றபோது கௌசல்யாவின் பெற்றோர்கள் அனுப்பிய கூலி ஆட்கள் ஷங்கர் மற்றும் கௌசல்யாவை அறிவாள்களுடன் தாக்கினர். சம்பவ இடத்தில் உயிரிழந்தார் ஷங்கர், ஆனால் கௌசல்யா வெட்டு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் அங்குள்ள சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாக அது வலைத்தளம் முழுவதும் தீயாய் பரவியது. இதைத் தொடர்ந்து கௌசல்யாவின் தந்தை போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் நடந்து ஓர் ஆண்டு முடிந்த நிலையில் கௌசல்யாவை பற்றி அறிய தொடர்புகொண்டோம்.

துயரத்தில் இருந்து துணிவான பெண்ணாக

ஒரு சமயத்தில் சராசரியான பெண்ணை போல் பொட்டு வைத்து, புடவை கட்டி, நீண்ட கூந்தலுடன் வலம்வந்த கெளசல்யா, தற்பொழுது முற்றிலும் வேரொருவராக மாறியுள்ளார். தன் அழகிய கூந்தலை வெட்டிவிட்டு, தன்னைச் சுற்றி எங்கும் ஜாதி எதிர்ப்புப் புத்தகங்களை வைத்துள்ளார். தன் தோற்றத்தை மட்டும் கௌசல்யா மாற்றவில்லை, தன் சிந்தனையையும் மாற்றியுள்ளார்.

இப்போது கெளசல்யாவின் முன் ஒரு பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறார். சங்கரின் குடும்பத்தை காப்பாற்ற தன்னை தயார்படுத்தி வருகிறார். 


கௌசல்யா மற்றும் ஷங்கர் 

இருபது வயதான கௌசல்யா தன் கணவரின் மரணத்திற்கு காரணமாய் இருந்த ஜாதிக்கு எதிராய் குரல் கொடுக்க முன் வந்துள்ளார். பல பெண் அமைப்புகளுடன் இணைந்து பணிப்புரிந்து வருகிறார். அவர் இணைந்துள்ள இந்த அமைப்பு எல்லாம்; ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது, கௌரவக் கொலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கும் பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் அமைப்புகளாகும்.

“இந்த சமூகத்தில் செய்வதற்கென எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. முதலில் என் கணவர் இறப்புக்குக் காரணமாக இருந்த ஜாதியை ஒழிக்க வேண்டும். பல அமைப்புகள் இதற்காக இருகின்றனர் நானும் அவர்களில் ஒருவராய் பணிபுரிகிறேன்,” என்கிறார்.

இது போன்ற பல அமைப்புகள் இருந்தாலும் பல கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் கலப்புத் திருமணம் செய்து கொண்டுள்ள தம்பதியர்களை கவனமாக இருக்கச் சொல்கிறார் கௌசல்யா. சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய பல நகரங்களுக்குச் சென்று பொது இடங்களிலும், கூட்டங்களிலும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிவருகிறார்.

மேலும் தொலைதூரக் கல்வி மூலம் பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார், இதர நேரங்களில் கராத்தே கற்று வருகிறார். தன் கணவரின் சமூகத்தின் தமிழ் பாரம்பரிய ’பறை’-யை இசைக்கவும் கற்று வருகிறார். இந்த ஒரு வருடமாக தாக்கப்பட்ட காயங்களில் இருந்து சிகிச்சைப் பெற்று மீண்டு வந்துள்ளார்.

“நான் தனியாகத் தான் இருக்கிறேன், ஆனாலும் ஜாதி ஒழிப்பிற்காக எந்த பயமுமின்றி முடிந்த வரை போராடுவேன் என் கூறுகிறார்.”

கணவர் சங்கர் மீது கொண்டிருந்த அதே நம்பிக்கையை தற்போது தன் மீது கொண்டதால், தன் துயங்களில் இருந்து வெளிவந்து வாழ்க்கையை தைரியத்துடன் அனுகுவதாக கூறுகிறார். தன்னைப்போன்ற கெளசல்யாக்கள் சமூகத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார் அவர்.