பதிப்புகளில்

உங்கள் பாஸ்வேர்டு மூலம் உங்களின் வாழ்க்கையை மாற்றிவிட முடியும் தெரியுமா?

20th May 2018
Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share

பாஸ்வேர்டு தொடர்பாக எண்ணற்ற விஷயங்கள் வலியுறுத்தப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் பாஸ்வேர்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டிருப்பவை. பாஸ்வேர்டு வலுவானதாக இருக்க வேண்டும் எனும் அறிவுரை இவற்றில் அதிகமாகவே வலியுறுத்தப்படுகிறது. எளிதில் மற்றவர்களால் யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும் என்பது வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான அடிப்படை உத்தியாக சொல்லப்படுகிறது. இதற்கும் பலவித நுணுக்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

image


பாஸ்வேர்டாக பிறந்த நாளையோ, நெருக்கமானவர்களின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்கின்றனர். அதே போல அகராதியில் பார்க்கக் கூடிய எந்த சொல்லையும் பாஸ்வேர்டாக பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இவைத்தவிர, பாஸ்வேர்டு வெறும் எழுத்துக்களை கொண்டிருக்கக் கூடாது, இடையே எண்கள் தேவை, சிறப்பு குறியீடுகளையும் சேர்த்து பாஸ்வேர்டை வலுவாக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவதோடு, அதை முறையாக பராமரித்தும் வர வேண்டும் என்கின்றனர். தேவை எனில் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் மாற்று கருத்துக்களும் உள்ளன. இப்படி பாஸ்வேர்டு தொடர்பான நுணுக்கங்களையும், உத்திகளையும் நீளமாக பட்டியலிடலாம்.

பாஸ்வேர்டு பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை பட்டியலிட்டாலும் மிக நீளமாகவே இருக்கும். இந்த பட்டியலில் முற்றிலும் வித்தியாசமான கட்டுரையாக மவுரிசியோ எஸ்ட்ரெல்லா எழுதிய கட்டுரையை சேர்த்துக்கொள்ளலாம். பாஸ்வேர்டு தொடர்பான மற்ற கட்டுரைகளை வாசிப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட, எஸ்ட்ரெல்லா எழுதிய கட்டுரையை படித்துப்பார்ப்பது நல்லது. ஏனெனில், இவரது கட்டுரை வித்தியாசமானது மட்டும் அல்ல, மிகவும் சுவாரஸ்யமானதும் கூட.

அநேகமாக இந்த கட்டுரை உங்கள் வாழ்க்கையை கூட மாற்றலாம். ஏனெனில், எஸ்ட்ரெல்லாவின் இந்த கட்டுரையில் சொல்லும் விஷயம் என்னவெனில், பாஸ்வேர்டு உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது தான்.

image


என்னது, பாஸ்வேர்டால் வாழ்க்கையை மாற்ற முடியுமா? அது எப்படி? என்று கேட்கத்தோன்றுகிறதா? அது தான் இந்த கட்டுரையின் சிறப்பம்சம். எப்படி என பார்க்கலாம்.

‘ஒரு பாஸ்வேர்டு எப்படி என் வாழ்க்கையை மாற்றியது?’

இது தான் எஸ்ட்ரெல்லா கட்டுரையின் தலைப்பு. அடிப்படையில் வடிவமைப்பாளரான எஸ்ட்ரெல்லா தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அடிக்கடி எழுதி வருபவர். மீடியம் வலைப்பதிவில் இவர் எழுதிய பதிவு தான் பாஸ்வேர்டு தொடர்பான இந்தக்கட்டுரை.

அவர் பணியாற்றும் நிறுவனத்தில் உள்ள தனது கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதை குறிப்பிட்டு இந்த கட்டுரையை துவக்கியிருக்கிறார். பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் எதிர்கொள்ளக்கூடிய நிலை தான் இது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றியாக வேண்டும். எஸ்ட்ரெல்லா நிறுவனத்திலோ மாதம் ஒரு முறை மாற்றியாக வேண்டுமாம். அது மட்டும் அல்ல, புதிய பாஸ்வேர்டை உருவாக்கும் போது, பழைய பாஸ்வேர்டை எதையும் பயன்படுத்தக்கூடாது எனும் கட்டுப்பாடு வேறு இருக்கிறதாம்.

இந்த கட்டுப்பாடுகள் அவரை ஆவேசம் கொள்ள வைத்தன. இது வழக்கமாக நடப்பது தான் என்றாலும், அந்த காலகட்டத்தில் தனி வாழ்க்கையில் அவர் கசப்பான அனுபவத்திற்கு உள்ளானது நிலைமைய மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் புதிய பாஸ்வேர்டை உருவாக்க வேண்டிய கட்டாயம், அதிலும் அந்த பாஸ்வேர்டை அடுத்த ஒரு மாதத்தில் மாற்ற வேண்டும் எனும் நிதர்சனம் அவரை மேலும் அதிருப்தி கொள்ள வைத்தது.

இந்த நிலையில் தான், பாஸ்வேர்டு உருவாக்கம் பற்றி முன்னாள் முதலாளி சொன்ன குறிப்பு அவருக்கு நினைவில் வந்தது. 

’பாஸ்வேர்டை என் வாழ்க்கையை மாற்ற பயன்படுத்தப்போகிறேன்’ என அவர் கூறியிருந்தார்.

எஸ்ட்ரெல்லா இருந்த நிலையில் இந்த குறிப்பை துடுப்பு போல பற்றிக்கொண்டார். வாழ்க்கையில் அவருடன் இருந்த பெண்மணி அவரை விட்டு பிரிந்துச்சென்று விட்டிருந்தார். அந்த பிரிவு உண்டாக்கிய வலியையும், வேதனையையும் அனுபவித்துக்கொண்டிருந்தவர், அவற்றில் இருந்து விடுபட முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.

வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு வர வேண்டும் என்றால், அந்த பெண்மணி செய்த துரோகத்தை மறந்தாக வேண்டும். இதற்கு பிரிந்து சென்ற மனைவியை மன்னிக்க வேண்டும். அந்த பக்குவம் தனக்கு வர வேண்டும் எனில், அதற்கான வழியாக பாஸ்வேர்டை பயன்படுத்துவது என எஸ்ட்ரெல்லா தீர்மானித்தார். அதாவது வாழ்க்கையை மாற்ற பாஸ்வேர்டை ஒரு கருவியாக்கி கொள்ள நினைத்தார். அதன்படியே, பிரிந்து சென்ற மனைவியை மன்னிப்பதை குறிக்கும் சொற்றடரையே புதிய பாஸ்வேர்டாக அமைத்துக்கொண்டார். Forgive@h3r என்பது தான் அந்த பாஸ்வேர்டு.

ஒவ்வொரு முறை இந்த பாஸ்வேர்டை டைப் செய்யும் போதும், தனக்குத்தானே இதை சொல்லிக்கொள்வது போல உணர்ந்தார். இப்படி தினமும் செய்தது, தவிக்க விட்டுச்சென்ற மனைவியை அவர் பார்த்த விதத்தையே மாற்றி அமைப்பதாக உணர்ந்தார். மெல்ல அவரது மனதின் காயமும் மாறியது. ஒரு மாதத்திற்குள் அவர் பிரிவின் வேதனையில் இருந்து விடுபட்டுவிட்டார். அதாவது அவரது முன்னாள் மனைவியை மன்னித்துவிட்டார்.

ஆக, அடுத்த மாதம் மீண்டும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு கம்ப்யூட்டர் கட்டளையிட்ட போது அவர் கோபம் கொள்ளவில்லை. பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள தனக்கு புதிய வழி கிடைத்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னாள் மனைவியை மன்னிக்க பழைய பாஸ்வேர்டு உதவியது போல, வாழ்க்கையின் அடுத்த இலக்கை புதிய பாஸ்வேர்டாக வைத்துக்கொள்ள தீர்மானித்தார்.

image


புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் எனும் இலக்கை குறிப்பதாக அந்த பாஸ்வேர்டு அமைந்தது: Quit@smoking4ever. ஒரு மாதத்தில் அவர் புகைப்பதையும் விட்டுவிட்டார்.

அதன் பிறகு, தனக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு பாஸ்வேர்டுகளை அமைத்துக்கொள்ளும் உத்தியை எஸ்ட்ரெல்லா வெற்றிகரமாக பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டை டைப் செய்யும் போதும் இலக்கை நினைவு படுத்திக்கொள்வது நல்ல பலன் தருவதாக அவர் உற்சாகமாக சொல்கிறார்.

இப்படி தனக்கு பலன் தந்த பாஸ்வேர்டுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

ஆக, நீங்களும் கூட புதிய பாஸ்வேர்டை உருவாக்க இந்த உத்தியை பின்பற்றலாம். நீங்கள் அடைய விரும்பும் இலக்கு அல்லது வாழ்க்கையில் மாற்றிக்கொள்ள நினைக்கும் பழக்கத்தை குறிக்கும் வகையில் பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த பாஸ்வேர்டை வலுவானதாக்க, எண்கள், சிறப்பு குறியீடுகளை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதன் அடிப்படை என்னவென உங்களுக்குத்தெரியும் என்பதால் டைப் செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் உள்ளம் உறுதிபடும்.

இதை தான், பாஸ்வேர்டு உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வழி என்கிறார் எஸ்ட்ரெல்லா. பாஸ்வேர்டு வாயிலாக வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நீங்கள் தயாரா!

எஸ்ட்ரெல்லாவின் கட்டுரை: https://medium.com/@uxmomo/how-a-password-changed-my-life-7af5d5f28038

Add to
Shares
30
Comments
Share This
Add to
Shares
30
Comments
Share
Report an issue
Authors

Related Tags