ராயல் என்ஃபீல்ட் பாகங்களைக் கொண்டு இ-பைக்: 9ம் வகுப்பு மாணவன் அசத்தல்!

மறு சுழற்சி பாகங்களை கொண்டு கலக்கிய டெல்லி மாணவன்!
105 CLAPS
0

ராயல் என்ஃபீல்ட் பைக்கின் மறு சுழற்சி பாகங்களைக் கொண்டு டெல்லியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக் தயாரித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் ராஜன். டெல்லியின் சுபாஷ் நகரில் உள்ள சர்வோதய பால் வித்யாலயா பள்ளியின் மாணவரான இவர், ராயல் என்ஃபீல்ட் பைக்கின் ஸ்கிராப் எனப்படும் மறுசுழற்சி பாகங்களைக் கொண்டு இ-பைக்கை உருவாக்கி இருக்கிறார். இதற்காக அந்த மாணவர் ரூ.45,000 மட்டுமே செலவு செய்துள்ளார் என்றுள்ளார்.

தனது கண்டுபிடிப்பு தொடர்பாக பேசியுள்ள மாணவன் ராஜன்,

“பாகத்தை சேகரிக்க எனக்கு மூன்று மாதங்களும், அவற்றை ஒரு இ-பைக்கில் இணைப்பதற்கு மூன்று நாட்களும் ஆனது," எனக் கூறியுள்ளார்.

மாணவன் ராஜன் இதற்கு முன்பே இ-சுழற்சியை முயற்சித்துள்ளார். ஆனால், அதில் வேகக் கட்டுப்பாட்டு பொறிமுறையை வைக்கத் தவறினார், இதன் காரணமாக அவர் ஒரு விபத்தில் சிக்கிக் காயமடைந்தார். அதில் இருந்து மீண்டு வந்த ராஜன், இந்த கொரோனா காலத்தை மீண்டும் பயனுள்ளதாக மாற்றினார்.

கொரோனா காலத்தை மெக்கானிஸத்துடன் பயணித்து தனது அறிவை மேம்படுத்திக் கொண்டார்.

“என் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு மோட்டார் கடையில், ஒரு மோட்டரின் தொழில்நுட்பம் குறித்து நான் கேள்விகளைக் கேட்டேன். பின்னர் அதை செய்ய முடிவு செய்தபிறகு என்னால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்று என் தந்தை கவலைப்பட்டார், ஆனால் என் அம்மா அவரை சமாதானப்படுத்தினார்," என்று தனது கதையை விவரித்துள்ளார்.

ராஜனின் தந்தை தஷ்ரத் சர்மா இதுதொடர்பாக பேசுகையில், ”ராஜன் குழந்தை பருவத்திலிருந்தே ஆர்வம் மிகுந்தவன். எலக்ட்ரானிக் பொருட்களுடன் விளையாடுவதை விருப்பமாக்கிய ராஜன், இந்த இ-பைக்கை உருவாக்க முதலில் என்னிடம் பொய் சொன்னான். ஒரு பைக்கை மறுசுழற்சி செய்யச் சொல்லி பள்ளியில் இருந்து சொல்லியிருப்பதாகக் கூறினான். வெல்டிங் செய்யும் போது பல முறை காயமடையவும் செய்தான். எனது வேலையின் காரணமாக என்னால் அவனுக்கு உதவ முடியவில்லை.

“அவன் தனியாகவே இந்த இ-பைக்கை உருவாக்கினான். தனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் ராஜன் வெற்றிபெறுவான். அரசாங்கம் தேவையான ஆதரவை அளித்தால் அவன் நாட்டுக்காக நிறைய செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி: ஏஎன்ஐ | தமிழில்: மலையரசு