இணையத்தில் வைரலாக பரவிய ஒரு தாயின் ஓவியம் !

0 CLAPS
0

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த ஓவியம் வைரலாக பரவிய விதம் சுவாரஸ்யமும், புதுமையும் நிறைந்திருப்பதோடு, இணையத்தின் அன்பான முகத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.

வழக்கமான வைரல் நிகழ்வுகள் எனில், முதலில் நூற்றுக்கணக்காணவர்களின் கவனத்தை ஈர்த்து, அதன்பிறகு ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் பகிரப்பட்டு இணையம் முழுவதும் வலம் வருவது என்பது பொதுவான அம்சமாக இருக்கும். தற்போது வைரலாகி உள்ள அம்மாவின் ஓவியத்தை பொருத்தவரை, முகம் தெரியாத மனிதர்களின் பரிவும், அதன் தொடர்ச்சியாக வெளிப்பட்ட சங்கிலித்தொடர் விளைவுமே முக்கிய அம்சமாக இருக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த சிண்டி டெக்கர் எனும் பெண்மணி தான் இந்த வைரல் நிகழ்வின் மையமாக இருப்பவர். பள்ளி ஆசிரியரான இவர், ஓவிய வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு அவர், வாத்து ஒன்றை ஓவியமாக வரைந்திருக்கிறார்.

அந்த ஓவியத்தை வரைந்த போது அவருக்கு எந்த பெரிய எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. உண்மையில் அந்த ஓவியத்தை ஒருவரும் விரும்பமாட்டார்கள் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், யாரும் விரும்பமாட்டார்கள் எனும் எண்ணமே அவரையும், அவரது ஓவியத்தையும் இணையம் முழுவதும் புகழ் பெற வைத்திருக்கிறது.

இந்த மாயம் எப்படி நிகழ்ந்தது?

அவரது மகன் மேத்யூ டெக்கர், அந்த ஓவியத்துடன் அம்மாவை படம் பிடித்து அந்த படத்தை ரெட்டிட் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

”இந்த ஓவியம் என் அம்மா வரைந்தது. இதை ஒருவரும் விரும்பமாட்டார்கள் என்கிறார். இது அவரது இரண்டாவது ஓவியம்,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆச்சர்யப்படும் வகையில், அந்த ஓவியத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் வகையில் பலரும், அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். (அப்வோட்). 20,000 பேருக்கு மேல் இப்படி ஓவியத்தை விரும்பி வாக்களித்திருந்தனர்.

நிச்சயம் அம்மாவும் சரி அவரது மகனும் சரி இத்தகைய ஆதரவை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இதன் பிறகு அந்த ஓவியம் வேறு விதமாக கவனத்தை ஈர்க்கத்துவங்கியது.

இந்த ஓவியத்தால் ஈர்க்கப்பட்ட ஸ்வீடனைச்சேர்ந்த கிரிஸ்டோபர் ஜெட்டர்ஸ்ட்ராண்ட் என்பவர், சிண்டி ஓவியைத்தை வைத்திருக்கும் காட்சியை அப்படியே வரைந்து, ’யாரோ ஒருவரின் அம்மாவை நான் வரைந்தேன்’ எனும் குறிப்புடன் அந்த படத்தை பகிர்ந்து கொண்டார். தான் வரைந்த் ஓவியத்தை சிண்டி வைத்திருப்பது போன்ற படத்தை அவர் வைத்திருப்பது போல அந்தக்காட்சி அமைந்திருந்தது.

அவ்வளவு தான், ஓவியத்துக்குள் அமைந்திருந்த இந்த ஓவியம் ஒரு சங்கிலித்தொடராக உருவாகத் துவங்கியது.

கனடாவைச்சேர்ந்த இதழியல் மாணவியான லெய்லா ஆமர் என்பவர், இந்த மூன்று ஓவியங்களையும் இணைத்து ஒரு ஓவியம் வரைந்தார். அதாவது, வாத்து ஓவியத்தை அம்மா கையில் வைத்திருப்பது போன்ற காட்சியை, வேறு ஒருவர் வரைந்ததை குறிப்பிடும் வகையில் தானும் அதை வரைந்திருந்தார்.”

இன்னொருவரின் அம்மாவை வரைந்த நபரை நான் வரைந்தேன்,’ எனும் குறிப்போடு இதை அவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக டிரேசி செத்ரே எனும் கலைஞர், இந்த ஓவியச்சங்கிலியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து டிரேவிஸ் ஜான்சன் என்பவரும், வாத்து படத்தை வைத்திருக்கும் அம்மாவை வரைந்தவர் துவங்கி தங்கள் படம் வரை வரைந்திருந்தனர்.

இந்த படங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான முறை பார்த்து ரசிக்கப்பட்டு, கருத்து சொல்லப்பட்டதோடு, இடையே அவ்வப்போது வேறு யாரேனும் ஓவியர்கள் , கடைசியாக வரைந்தவர் வரை சேர்த்து தங்கள் பங்கிற்கு அதை வரைந்தனர். இப்படியாக கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஓவியத்தை வரைந்து பகிர்ந்து கொண்டனர். மூல ஓவியமான சிண்டியின் ஓவியம் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு சின்னதாகி விடும் வகையில் இந்த ஓவியச்சங்கிலி தொடர்ந்தது.

நிச்சயம் இப்படி ஒரு வைரல் தன்மையை சிண்டி எதிர்பார்த்திருக்கவில்லை. ஓவியம் வரைந்தவர்கள் உள்பட பலரும் அவரை தொடர்ந்து கொண்டு, இந்த நிகழ்வு தங்களை மகிழ்ச்சி பெற வைப்பதாக தெரிவித்தனர். இதனிடையே வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், சிண்டியை பேட்டி கண்டு செய்தியாக்கி அவரை மேலும் பிரபலமாக்கியது.

ரெட்டிட் சமூகம் அவருக்கு, ரெட்டிட்டின் கவுரவ அம்மா எனும் பட்டமும் சூட்டி மகிழ்ந்தது. இப்படி இணையம் முழுவதும் குவிந்த வரவேற்பால் நெகிழ்ந்து போன, சிண்டி அம்மா, தானே ரெட்டிட் தளத்தில் உறுப்பினராக இணைந்து, சக இணையவாசிகளுக்கு நன்றி தெரிவிக்கத்துவங்கினார். தன்னைப் பிரபலமாக்கிய இணைய நிகழ்வை குறிக்கும் ’ஐயாம் தி மாம் ஹூ பெயின்ட்ஸ்’ (https://www.reddit.com/user/imthemomwhopaints/ ) எனும் பெயரில் அவரது ரெட்டிட் கணக்கு அமைந்துள்ளது.

இந்த பக்கத்தில் தொடர்ந்து சிண்டி அம்மாவின் ஓவியம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பலரும் அவருக்கு பாராட்டு தெரிவிக்க, சிண்டி சளைக்காமல் அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆதரவால் திக்குமுக்காடி போயிருக்கிறேன். ஒரு மகத்தான ஓவியம் வரையும் அளவுக்கு நான் திறமை பெற்றிருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ரெட்டிட் தளத்தில் ஓவியத்தை மகன் பகிர்ந்து கொண்ட போது எதிர்மறையான கருத்துகள் வரும் என நினைத்து பயந்தேன், ஆனால் இத்தனை நேர் நிறை கருத்துகளை எதிர்பார்க்கவில்லை என அவர் வியந்து போயிருக்கிறார்.

இணையம் கலாய்க்கவும், கேலி செய்யவும் மட்டும் பயன் தரும் என்றில்லை, அதைவிட அதிகமாக கொண்டாடவும் செய்யும் என்பதற்கு இந்த வைரல் நிகழ்வு உதாரணமாக அமைந்துள்ளது.

Latest

Updates from around the world