Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ஒரே ஆண்டில் 70,000-க்கும் அதிகமான விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்துள்ள 'Faarms'

விவசாயத்துறையில் அனுபவமிக்கவர்களான அலோக் தக்கல், தரன்பீர் சிங் விவசாயிகளின் சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் வகையில் FAARMS என்கிற தளத்தைத் தொடங்கி 70,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சென்றடைந்துள்ளனர்.

ஒரே ஆண்டில் 70,000-க்கும் அதிகமான விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்துள்ள 'Faarms'

Friday August 12, 2022 , 4 min Read

ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவர் சுதேஷ் தேவி. விவசாயியான இவர், பால் பண்ணை வைத்திருக்கிறார். 20 ஆண்டுகளாக இவர் சம்பாதித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது கிராமத்தைச் சேர்ந்த பலரும் கால்நடை பராமரிப்பு பற்றி ஆலோசனை கேட்க இவரிடம் வருகின்றனர்.

சுதேஷ் தேவியும் கால்நடை வளர்க்கும் எல்லோரையும் போலவே விலங்குகளுக்கு தவிடு, தானியங்கள், பருப்பு போன்றவற்றால் ஆன தீவனத்தையே கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு Gold Channa Churi என்கிற தரமான தீவனம் பற்றி இவருக்குத் தெரிய வந்தது. FAARMSஎன்கிற டிஜிட்டல் அக்ரிடெக் தளத்தின் மூலமாகவே இந்தத் தீவனம் பற்றி சுதேஷ் தேவி தெரிந்துகொண்டார்.

1

தரன்பீர் சிங், அலோக் தக்கல் - இணை நிறுவனர்கள், FAARMS

தீவனத்தை மாற்றிய பிறகு ஒரு விலங்கிடமிருந்து உற்பத்தியாகும் பாலின் அளவு கிட்டத்தட்ட 2 லிட்டர் வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு ஆண்டிற்கு கூடுதலாக 20,000 ரூபாய் வரை கிடைத்துள்ளது.

”சிறியளவில் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளால் கணிசமான அளவு சேமிக்க முடிகிறது,” என்கிறார் FAARMS இணை நிறுவனர் மற்றும் சிஓஓ அலோக் தக்கல்.

FAARMS நிறுவனம் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், கால்நடை தீவனம் போன்றவற்றை வழங்கி முழுமையான சேவையளிக்கிறது.

தரன்பீர் சிங் FAARMS இணை நிறுவனர் மற்றும் சிஇஓ. அலோக், தரன்பீர் இருவரும் கிராமப்புற வங்கிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

விவசாயிகளின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் ஒரு தளத்தை உருவாக்க இருவரும் முடிவு செய்தனர்.

”நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் விவசாயத் துறையில் பணியாற்றியிருக்கிறோம். பிறகு நான் சப்ளை செயின் பிரிவிற்கு மாறிவிட்டேன். தரன்பீர் விவசாயத் துறையிலேயே தொடர்ந்து செயல்பட்டார். ஒருகட்டத்தில் விவசாயிகளுக்கு முழுமையான, அதேசமயம் எளிமையான தீர்வை வழங்கவேண்டும் என இருவரும் முடிவுசெய்தோம்,” என்கிறார் அலோக்.

விவசாயிகளின் கைகளுக்கு தரமற்ற, தவறான தயாரிப்புகளே சென்று சேர்ந்திருக்கின்றன. டெலிவரியும் சரியான நேரத்தில் கிடைக்காது. பெரும்பாலும் தாமதாகவே இந்த பொருட்களும் வந்து சேரும். இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்புகள் தரமானதாக இருந்தபோதும் விவசாயிகளிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

FAARMS 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஸ்டார்ட் அப் செயலியில் படங்கள் இடம்பெற்றிருக்கும். பல்வேறு மொழிகளில் இருக்கின்றன. இந்நிறுவனம் விவசாயம் தொடர்பான பொருட்களை வழங்குவதுடன் பயிர்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. விவசாயிகள் தங்கள் விளைச்சலை விற்பனை செய்யவும் உதவுகிறது. இவைதவிர விவசாய இயந்திரங்களைப் பெறுவதற்கும் கடன் பெறுவதற்கும் உதவ இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

“உலகளவில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் இருக்கின்றன. இதனால் கால்நடை தீவனங்களுக்கான சந்தை தேவையும் அதிகம். இருப்பினும் முறையான விநியோகம் இருப்பதில்லை. எனவே சரியான தயாரிப்பை சரியான நேரத்தில் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தால் அவர்களது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெறமுடியும் என நினைத்தோம்,” என்கிறார் அலோக்.

இப்படி விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றதால் மட்டுமே பலர் இவர்களது தயாரிப்புகளைப் பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

1
“காப்பீடு, மைக்ரோஃபைனான்ஸ், இ-ரீடெயில், ஹெல்த்கேர் என FAARMS நிதி ரீதியான சேவைகளையும் விவசாயிகளுக்கு வழங்குகிறது. 2024-ம் ஆண்டில் இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்திய விவசாயிகளுக்கு நாங்கள் அமேசான் போல் முன்னணித் தேர்வாக இருக்க விரும்புகிறோம். விவசாயிகள் மிகச்சிறந்த பிராண்டுகளை அணுகவும் பயிர்கள் பராமரிப்பிற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறவும் உதவ விரும்புகிறோம்,” என்கிறார்.

பெருந்தொற்று சமயத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப்

ஊரடங்கு சமயத்தில் உலகளவில் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டது.

“உணவுப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் பயிர் வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளும் தொடர்ந்து செயல்படவேண்டியிருந்தது. சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் வகையில் வணிகத்தைத் தொடங்க இதுவே சரியான தருணம் என்று நாங்கள் முடிவு செய்தோம்,” என்கிறார் அலோக்.

அலோக் ஒரு குழுவை ஒன்றுதிரட்டி விவசாயிகள் இந்தத் தயாரிப்பை முயற்சி செய்து பார்க்க ஏற்பாடு செய்தார். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து கிட்டத்தட்ட 40 பேர் கொண்ட குழுவாக ஒன்று சேர்ந்து தயாரிப்பை டெலிவர் செய்தனர். இது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக அலோக் தெரிவிக்கிறார்.

FAARMS தளத்தை எளிதாகப் பயன்படுத்த உதவும் வகையில் ரிலேஷன்ஷிப் மேனேஜர்களை இந்நிறுவனம் நியமித்தது. இவர்கள் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

ஒரே ஒரு தயாரிப்பை ஆர்டர் செய்து முயற்சித்துப் பார்த்த விவசாயிகள் திருப்தியடைந்ததும் தொடர்ந்து ஆர்டர் செய்துள்ளனர். இன்று இவர்களது வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேர் தொடர்ந்து மீண்டும் வாங்கும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

பெண்கள் மேம்பாடு

பால் பண்ணை துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் FAARMS முக்கிய கவனம் செலுத்துகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தபோதும் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக இந்தப் பிரிவில் ஏராளமான சிக்கல்கள் நிலவுகின்றன.

“FAARMS தரமான தீவனத்தை வழங்கி தீர்வளிக்கிறது. இந்தத் தீவனங்களைப் பயன்படுத்துவதால் பால் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது,” என்கிறார் அலோக்.

அதுமட்டுமல்ல தரமான தீவனத்தை உட்கொள்வதால் கால்நடைகளின் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

2
கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பது, இனப்பெருக்கம் மேலாண்மை, பால் பண்ணை விலங்குகள் நிர்வகிப்பு போன்ற வேலைகளில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுவது பலருக்குத் தெரிவதில்லை. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 71 சதவீதம் பேர் பெண்கள்,” என்கிறார் அலோக்.

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் இருக்கும் 14 கிராமங்களில் பால் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளில் 60 சதவீதம் பேர் தங்கள் சராசரி வருவாய் 16 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல், உத்திரப்பிரதேசத்தைன் பரேய்லி பகுதியில் இருக்கும் 10 கிராமங்களில் பால் பண்ணை வைத்திருக்கும் பெண் விவசாயிகள் தங்களது சராசரி வருவாய் 25 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகமிருப்பதை அலோக் சுட்டிக்காட்டினார். வீட்டிலுள்ள ஆண்கள் நிலங்களுக்கு சென்றுவிடும் சூழலில் கட்டணம் செலுத்துவது, ஆர்டர் செய்வது, பொருட்களை நிர்வகிப்பது போன்ற வேலைகளில் பெண்களே ஈடுபடுகிறார்கள் என்கிறார் அலோக்.

வருங்காலத் திட்டங்கள்

இதுவரை FAARMS ஹரியானா, பஞ்சாப், உத்தர்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் என ஏழு மாநிலங்களில் விரிவடைந்துள்ளது. 80 குழுக்களாக 70,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

“மேலும் ஆறு மாநிலங்களில் விரிவடைய திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் அலோக்.

பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய சமூகத்தினருக்கு முழுமையான சேவையளிக்கவேண்டும் என்பதே அலோக்கின் நோக்கம். FAARMS ஏழு மாநில விவசாய பல்கலைகழகங்களுடன் இணைந்துள்ளது. தளத்தின் மூலம் விவசாயிகளுக்கு அவர்களது சொந்த மொழியில் சமீபத்திய நிலவரங்களைக் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

“நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் திட்டமும் உள்ளது. தற்போதைக்கு குறுகிய கால இலக்குகளை எட்ட விரும்புகிறோம். நாட்டில் குறைந்தபட்சம் 15 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்கிறார் அலோக்.

ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா