பதிப்புகளில்

பன்முக தமிழ் பெண் கவிதா ஐயர்: தொழில்முனைவு, மாரத்தான், ஓவியம், நடிப்பில் அசத்துவது எப்படி?

YS TEAM TAMIL
11th Sep 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

கவிதா ஐயர் ரோட்ரிக்கு அவரது தாயார் தான் மிகப்பெரிய வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிப்பவராகவும் இருந்து வருகிறார. கவிதாவின் தாயார் தனது ஆறாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதனை தொடர்ந்து முதல் நான்கு ஆண்டுகள் வீட்டிலிருந்தபடியே அவர் கல்வி கற்றார். தான் எதிர்கொண்ட இந்த குறைபாட்டை பொருட்படுத்தாமல் தனது வாழ்க்கையை தொடர்ந்து முன்னெடுத்து சென்றதுடன் கல்வியையும் சிறப்பாக முடித்தார். தனது அலுவலகத்தில் பயிற்சிக் காலத்தில் தான் சந்தித்த கணக்கு தணிக்கையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின், தானும் கணக்கு தணிக்கை கல்வியை பயின்றார். கவிதாவின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில், அவரது தாய் முக்கிய பங்குவகித்தார். தெற்கு பெங்களூருவில் உள்ள ஒரு பாரம்பரியமான தமிழ் ஐயர் குடும்பத்தில் வளர்ந்த கவிதாவுக்கு, கல்வியில் அவர் சாதிப்பதற்கான மதிப்பீடு முன்னரே நிர்ணயிக்கப்பட்டது. அந்த மதிப்பீடுகளை அவர் மிகச்சிறப்பான முறையில் பூர்த்தி செய்தார்.

கவிதா ஒரு பெண் தொழில்முனைவர். இரு பயோடெக் கம்பெனிகளை உருவாக்கக் காரணமாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டில் 40ன் கீழ் 40 என்ற பெயரில் பார்ட்சூன் இந்தியா வெளியிட்ட 40 வயதிற்குட்பட்ட சாதனையாளர்களில், ஏழு பெண்களில் ஒருவர். இது தொழில்முறை வெற்றியாகவே இருந்தது. ஆனால், இவர் தனிப்பட்ட செயல்பாடுகளில் மிகவும் திறமையுடன் இயங்கி வருகிறார். குறிப்பாக, பல மாரத்தான் போட்டிகளில் ஓடியும், ஒரு ஓவியராகவும், ஒரு நடிகையாகவும், இன்னும் பல வழிகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

குழந்தை பருவத்திலிருந்தே சாதித்தல் :

கவிதா ஒரு நடுத்தர கூட்டுக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது வீட்டில் எந்த நேரமும் 12 பேருக்கும் குறையாமல் உறவினர்கள் இருந்து கொண்டே இருப்பர். அவரது பெற்றோர் முழு நேரமும் வேலை செய்து வந்ததால் கவிதா தனது தாத்தா- பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

கல்வியில் சிறந்து விளங்குவதற்காக, அதிகப்படியான அழுத்தம் தரப்படும் சூழலில் வளர்ந்து வந்த போதும், கவிதா மனம் தளராமல் பள்ளியிலும், அதனை தொடர்ந்து கல்லூரி படிப்பிலும் பதக்கங்களையும், பரிசுகளையும் அள்ளிக் குவித்தார். பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் தனது எம்.பி.ஏ படிப்பினை பயிலும் போதும் கூட நல்ல முறையில் சாதனையுடன் தேர்ச்சி பெற்றார். தனது பள்ளிப் படிப்பிற்கு பின் மருத்துவம் படிக்க அவருக்கு இடம் கிடைத்த போதும், ஓவியத்திற்கு அதிக நேரம் தேவை என்பதற்காக மைக்ரோபயாலஜியில் இளங்கலை பட்டத்தை தேர்வு செய்தார்.

பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருந்த போது அவரது இள வயது ஆளுமை வெளிப்படத் துவங்கியது. பெரும்பாலான கலாச்சார விழாக்களிலும், பயணங்களிலும், இமயமலையில் நடைபெறும் மலையேற்றங்களிலும், எண்ணற்ற சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அவரது பங்களிப்பு இருந்து வந்தது. 

“ஒரு நாள் நான் ஒரு தொழில்முனைவர் ஆவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு சென்று அங்கு பி.எச்டி படிப்பை மேற்கொள்ளுவேன் என்று தான் நினைத்திருந்தேன். எனது முதுநிலை படிப்பை மணிப்பாலில் உள்ள கேஎம்சியில் பயின்ற பின், எம்.பில் படிப்பை வுஸ்பெர்க்கில் முடித்தேன். கேஎம்சியில் நான் கல்வி பயின்ற நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. மருத்துவமனை சார்ந்த கல்வியும் அங்கு இருந்ததால், பாராமெடிக்கலிலும் முதுநிலையை நான் அங்கு பெற்றேன்.” என்றார் கவிதா.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மீதான காதல் :

கல்வி மட்டுமல்லாது, விளையாட்டிலும் கவிதா சிறந்து விளங்கினார். தனது ஏழாவது வயதில் ஜிம்னாஸ்டிக் கிளப்பில் சேர்ந்து கொண்டார். அதனுடன் அத்லெடிக், நீச்சல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். ஜிம்னாஸ்டிக்கில் அவரது முயற்சிகள் மாநில மற்றும் தேசிய அளவில் தங்கபதக்கங்கள் பெறச் செய்தது.

image


தனது தன்முனைப்புமிக்க குணநலன்களை மேலும் மெருகூட்டிய அவர் தனது இள வயதில் விளையாட்டுகளில் தொழில்முறையாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகத் தீவிரமாக செயல்பட்டார். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மீதான அந்த அவரது அந்த காதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. தனது 30 வயதுகளின் தொடக்கத்தில் பல மாரத்தான் போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார். வெறும் சந்தோஷத்திற்காக கலந்து கொள்ளாமல் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் அவரது பங்கேற்பு இருந்தது. அந்த வகையில் காவேரி ட்ரைல் மரத்தான் 2012 மற்றும் பெங்களூரு அல்ட்ரா 2010 இல் வெற்றிபெற்றார். 

“மராத்தானில் ஓடுவது ஒரு சிகிச்சையை போன்றதாகும். இதில் உள்ள தொலைவு உங்களுக்கு இணையற்ற தோற்றத்தையும், சுதந்திரமான உணர்வினையும் தருகிறது. ஒரு தொழில்முனைவை நடத்தி செல்வதை விட நிச்சயம் இது எளிமையானது.” என உணர்ச்சி பொங்க கூறுகிறார் அவர்.

தனது ஓய்வு நேரத்தில் தாய் சி (Tai Chi) பயிற்சிகளையும், வாட்டர் கலர் மூலம் ஓவியங்கள் வரையவும், பீங்கான் ஓவியங்களிலும் கூடவே மேடை நாடகங்களிலும் செலவிடுகிறார். (நாடகங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார்).

முதல் வேலை மற்றும் தொழில்முனைவில் கவனம் செலுத்துதல் :

தனது முதுநிலைப் பட்டப்படிப்பை முடிந்த பின்னர் பயோகானில் (Biocon) வேலைக்காக சென்றார் கவிதா. அங்கு பயோ தொழில் நுட்பம் குறித்த உலகளாவிய அளவிலான அனுபவங்களை பெற்றார். பயோகானை தொடர்ந்து மில்லிபூர் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்த கவிதா, திட்ட மேலாண்மை மற்றும் செயல்முறை வளர்ச்சி ஆகியவற்றில் புதிய அனுபவங்களை பெற்றார். இதன்பின்னர் அவெஸ்தகென் என்னும் நிறுவனத்தில் வணிக வளர்ச்சியில் திட்ட மேலாளராக இணைந்தார். இங்கு அவர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, ஐஐஎம் பெங்களூருவில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். இது ஒரு வணிகத்தை எப்படி நடத்திச் செல்வது என்ற புரிதலை அவருக்கு அளித்தது. இந்த நேரத்தில் தான் அவருடன் வேலை பார்த்து வந்த சோகங்க் சாட்டர்ஜி என்பவருடன் இணைந்து உயிரியல் தொடர்பான செயல்முறை வளர்ச்சி சார்ந்த தொழில் நிறுவனத்தை துவங்க முடிவு செய்தனர். 

“சோகாங்கும் நானும் இணைந்து ஏதேனும் ஒன்றை உருவாக்கி அதற்கு மதிப்பு கூட்டலாம் என முடிவு செய்தோம். அதனடிப்படையிலேயே ’இன்பயோப்ரோ’வை துவங்கினோம்” என கூறுகிறார் கவிதா.

அவரது பெற்றோரும், கணவரும் இந்த முயற்சிகளுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். அதிர்ஷ்டவசமாக சில முக்கிய தேவைகளுக்கான உதவி அவரது வீட்டினுள்ளிருந்தே கிடைத்தது. அவரது அம்மா ஒரு கணக்கு தணிக்கையாளராகவும், ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிப்பாளராக இருப்பதாலும் அந்த நிறுவனத்தின் நிதி ஆலோசகராக மாறினார்.

image


தெரமைட் நிறுவனத்தை துவங்குதல் :

2007 ஆம் ஆண்டில் மெக்கன்ஸி நிறுவனத்தின் ஆலோசகராக பணிபுரியும் ஆதித்யா ஜுல்கா, சோகாங் மற்றும் கவிதா ஆகியோர் இணைந்து இன்பயோப்ரொ என்ற நிறுவனத்தை துவங்கினர். இந்த உயிரி தொழில் நுட்ப நிறுவனம் உயிரி தொழில் நுட்பம் சார்ந்த தொழில் வளர்ச்சியிலும், செயல்முறை வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வந்தது. மேலும், 1.5 மில்லியன் டாலர் அளவில் (6.5 கோடி ரூபாய்) முதலீடாக ஆக்ஸல் பார்ட்னர்களிடமிருந்து பெற்றது. இந்த முதலீடு அவர்களுக்கு ஆய்வகம் ஒன்றை நிறுவ பெரிதும் உதவியது. தொடர்ந்து நான்கு வருட வளர்ச்சிக்கு பின்னர் லுபின் மற்றும் பெனசியா பயோடெக் உள்ளிட்ட சில பார்மா கம்பெனிகளும் கூட்டு சேர்ந்து கொண்டன. இந்நிலையில் 70 சதவீத பங்குகளை இந்த கம்பெனிகள் விற்றதன் மூலம் 2011 இல் அக்ரோலேப் என்ற நிறுவனம் 3 வருட காலத்திற்கு 65 கோடி ரூபாய் முதலீடு செய்வதை உறுதி செய்துகொண்டது. 

இதனை தொடர்ந்து இன்பயோப்ரோவிலிருந்து வெளியேறிய சோகாங்கும் கவிதாவும் இணைந்து ’தெர்மைட் நோவோபயோலொஜிக்ஸ்’ என்ற நிறுவனத்தை 2013 இல் நிறுவினர். இந்த நிறுவனம் உயிரி தொடர்பான தொழில் நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதுடன் மருந்து உற்பத்தியை அவை தொடர்பான புது தொழில்நுட்பங்களுடன் இணைத்தது. இந்த நிறுவனத்தின் மூலம் 27.5 கோடி ரூபாயை ஆரின் கேப்பிட்டல், ஆக்ஸல் பார்ட்னர்கள், ஐடிஜி வென்ச்சர் மற்றும் கர்நாடக அரசின் உதவியுடன் திரட்டினர். இதற்கான புதிய ஆய்வகம் ஒன்று கடந்த ஜனவரி 2014 இல் துவக்கி வைக்கப்பட்டது. கவிதா சோகாங்குடன் இணைந்து தங்களது பழைய நிறுவனத்தைக் காட்டிலும் புதிய நிறுவனம் வெற்றிகரமான ஒன்றாக உருவெடுக்க வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரம்ப கால சவால்களும் குடும்பத்தினரின் உதவிகளும் :

தனது முதல் நிறுவனமான இன்பயோப்ரோவை துவங்கும் போது அவர் சந்தித்த முதல் சவால் தனது குழந்தையின் பராமரிப்பையும், கம்பெனியையும் ஒருசேர கவனிக்க வேண்டிய நிர்பந்தமான சூழல் தான். இத்தகைய அழுத்தமிக்க சூழலை அவர் தனது கணவர் நெஸ்டர் ரோட்ரிக்ஸ் மற்றும் குடும்பத்தினர், மாமியார் ஆகியோருடைய அன்பு மற்றும் ஆதரவுடன் மிகச் சரியாகவே சமாளித்தார். 

“ஒரு முழுமையான பொறுப்புமிக்க தந்தையாக நெஸ்டர் இருந்து வருகிறார். அது போன்றே எனது பெற்றோர்களும் எனது மாமியாரும் எனக்கு ஆதரவளிப்பதிலும், முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதிலும் முக்கிய பங்குவகிக்கின்றனர்.” என கூறுகிறார் கவிதா.

மேலும் அவர், இன்பயோப்ரோ நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் முதலீடுகள் வரும் காலக்கட்டங்களில் இத்தகைய ஆதரவு மிகப்பெரிய வரமாக இருந்ததாக குறிப்பிடுகிறார். இது ஒரு நெம்புகோலை போல் முக்கிய பார்மா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடவும் தொடர்ந்து இரண்டாம் ஆண்டில் நல்ல வருமானத்தை ஈட்டவும் உதவிகரமாக இருந்ததாகவும் கூறுகிறார்.

இன்னும் முடியவில்லை...

தான் இன்னும் சாதிக்க வேண்டியவை நிறையவே உள்ளன என கூறுகிறார் கவிதா. “ ஒரு தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்த நான் கல்வியில் சிறந்து விளங்க அதிக கவனத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் இன்னும் பி.எச்.டி முடிக்கவில்லை அதை எப்படியும் முடிக்கவேண்டும் என்றே ஆசை படுகிறேன்” என கூறும் கவிதா, தனக்கான மதிப்பீட்டை தொடர்ந்து உயர்த்தி சென்ற வண்ணம் உள்ளார். அவரது சிறப்பான சாதனை இனிமேல் கூட வரலாம்.

ஆங்கில கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக