பதிப்புகளில்

சுட்டிக் குழந்தைகளை விஞ்ஞானிகள் ஆக்கும் சென்னை இன்ஜினியர்!

Sindhu Sri
27th Feb 2016
Add to
Shares
39
Comments
Share This
Add to
Shares
39
Comments
Share

“பெரும்பாலானவர்கள் படித்து முடித்த பின்னர்தான் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள், நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் போதே முடிவு செய்து விட்டேன். சுவாரஸ்யமான, அதே நேரத்தில் சவாலான ஒன்றுதான் நமது எதிர்காலப் பணி என்று...“ இப்படி நம்பிக்கையோடு பேசும் ஜெய்காந்த், www.infiniteengineers.org இன் நிறுவனர். அப்படி என்னதான் முடிவு செய்தார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறியும் ஆவலோடு தமிழ் யுவர் ஸ்டோரி ஜெய்காந்திடம் நடத்திய உரையாடல் இதோ…

image


அலைந்து திரிந்து அடைந்த இலக்கு

சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பயின்று வந்த தான், 4 ஆராய்ச்சி திட்டங்களை சமர்ப்பித்ததுடன், 3 கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியபோதும் மனநிறைவு பெறவில்லை என்கிறார். தனது மனம் இதனைத் தாண்டி வேறொன்றை சிந்தித்த நிலையில், இந்த உலகம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றிற்கு தீர்வு காணத் துடித்தேன் என்கிறார். 

“இரவில் பேனாவும் பேப்பரும் எடுத்துக் கொண்டு நகரின் வீதிகளில் அலைந்தேன். எதிர்ப்படும் பிரச்சினைகளை எல்லாம் குறித்துக் கொண்டு வந்தேன். சில நேரங்களில் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து குழுவாகவும், தனியாக எனக்குள்ளும் உரையாடினேன்” என்கிறார்.

எப்போதுதான் தொழில்முனையும் முடிவுக்கு வந்தீர்கள் என்றவுடன், தனது துறைத்தலைவர் முனைவர் சீனிவாசன் சொன்னதை நினைவு கூறும் ஜெய்காந்த். “உன்னால் பல ஆராய்ச்சித் திட்டங்களில் பணியாற்ற முடியும், உனது கண்டுபிடிப்புக்களுக்கான காப்புரிமை பெற முடியும். உன் சக மாணவர்கள் மற்றும் இளைய மாணவர்களைக் கொண்டு முயற்சி செய்” என்று அவர் கூறியதே தனது முயற்சிக்கு அச்சாரம் ஆனது என்று நெகிழ்கிறார் ஜெய்காந்த்.

அதன் அடிப்படையில் தனது சகமாணவர்கள் மற்றும் இளைய மாணவர்களிடம் கலந்துரையாடியபோதுதான், பரிட்சை, தேர்வு, வளாக நேர்காணல் என்ற நோக்கத்திலானதாக மட்டுமே கல்வி போதிக்கும் முறை இருப்பதையும், கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாக, புதிய சிந்தனைகள் விளையும் களமாகவும் இல்லை என்பதையும் உணர முடிந்தது என்ற ஜெய்காந்த், “நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது” என்ற முடிவுக்கு வந்ததாக கூறுகிறார்.

தீர்வை நோக்கிய கலந்துரையாடல்

பரிட்சை தேர்வு தான் நோக்கம் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் சட்டெனப் பதில் வருகிறது ஜெய்காந்திடமிருந்து.

“ 12 ஆண்டுகளாக நானும் பள்ளியில் பயின்றிருக்கிறேன். அதை நினைத்துப் பார்த்தால், பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க நமக்கு அப்போது என்ன வாய்ப்பிருந்த்து, ஒவ்வொன்றையும் 3 வரிகளில் வரையறைகள் போலக் கற்றோம். அனுபவம், செய்முறை ஆகியவற்றிற்கான கருவிகளோ, களங்களோ இல்லை. அதனால்தான் இப்போதும் பெரும்பாலான பொறியியல் மாணவர்களின் படிப்பின் இறுதி எல்லை தேர்வில் வெற்றி பெறுவது என்பதாக மட்டுமே உள்ளது” என்கிறார் அவர்.
image


பிரச்சினையை புரிந்து கொண்டால், அடுத்து தீர்வை நோக்கித்தானே... என்றவுடன், ஆம், இந்த சிக்கலைத் தீர்க்க உண்மையாகவே நான் விரும்பினேன். ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் இந்த பிரச்சினையை உணரவேண்டும் எனவும் எண்ணினேன். இதற்கு ஒத்துழைக்க முன்வந்த சக மாணவர்களோடு இணைந்து எல்லையற்ற பொறியாளர்கள் எனப் பொருள்படும் 'Infinite Engineers' உருவானது.

பொறியியல் படிப்பு முடிந்ததும் இதில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோம். ஆனால் இணைந்து இயங்குவதற்கு முதலில் ஒரு இடம் தேவை, தொடக்கத்தில் நம்மால் வாடகை கொடுக்க முடியாது என்ற நிலையில், என் தாயார் நடத்திவந்த தொடக்கப் பள்ளியின் இரண்டாவது மாடியில் பயன்பாடற்று இருந்த ஒரு அறையைச் சுத்தம் செய்து எங்கள் அலுவலகமாக மாற்றினோம் என்கிறார் ஜெய்காந்த்.

வகுப்பறைகளில் புதிய மலர்ச்சி

பள்ளிகளின் பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டு எங்களின் ஆராய்ச்சி மற்றும் செயல்களை ஒருங்கிணைத்தோம். 6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அறிவியல் சார்ந்த செயலூக்கத்திறனை வளர்க்கும் விதத்திலான, அனுபவக் கல்வியை வளர்க்கும் வகையிலான கையடக்கமான அறிவியல் கலனை உருவாக்க முனைந்தோம்.

இதனை உருவாக்குவதற்கான பணத் தேவைக்காக பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு எந்திரவியல், மின்னணுவியல் போன்ற பல்வேறு பொறியியல் துறை தொடர்பான பட்டறைகள் நடத்த முடிவு செய்து அணுகினோம். பத்து பள்ளிகள் வரை அனுமதி கிடைத்தது.

image


அதே நேரத்தில் எங்கள் ஆராய்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. மாணவர்கள் மனப்பாடம் செய்வதால் அது மறந்து மீண்டும் பாடப்புத்தகங்களை தேடுகிறார்கள். கல்வி செயல் சார்ந்த்தாக இருந்தால் அது தேவையில்லை என்கிற வகையில், செயல்வழிக்கல்விக்கான கருவியை ஓராண்டில் உருவாக்கி "டெட்ஸ்டெர் பாக்ஸ்" "DEXTER BOX” எனப் பெயரிட்டோம். இது மாணவர்கள் செயல்வழி கற்பதற்கான பொருட்கள் பலவற்றை உள்ளடக்கியது என்கிறார்.

DEXTER BOX' ஐ மாணவர்களிடம் சோதிக்க விரும்பிய நாங்கள், பல்வேறு பள்ளிகளையும் அணுகினோம். சில பள்ளிகள் அனுமதியளித்த நிலையில், DEXTER BOX ஐ பயன்படுத்தும் மாணவர்களின் முகத்தில், பாடப்புத்தகங்களை பார்க்கும் போது ஏற்படும் அலுப்பு தெரியவில்லை, அதற்கு பதில் முகத்தில் பரவசம் நிறைந்திருந்தது.

அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தோம், ஒருநாள் தமிழக கல்வித்துறையில் இருந்து அழைப்பு வந்த்து. அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 100 அரசுப் பள்ளிகளுக்கு DEXTER BOX அளித்தோம். இதேபோல், அரசுப் பள்ளிகள் மட்டுமன்றி, தனியார் பள்ளிகள் பலவற்றிற்கும் DEXTER BOX’களை அளித்து வழக்கமான வகுப்பறைகளை அனுபவப் பாடசாலைகளாக மாற்றியிருக்கிறோம்.

வெல்வதற்காகவே சவால்கள்

இந்த பணியில் நாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். முதலில் பணமில்லை, பயிற்சிப் பட்டறைகள் மூலமாக சிறிய அளவில் ஈட்ட முடிந்தாலும், அதற்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. எல்லோரும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவமதிப்புகளும் இருந்தன. “உனக்கென்ன தெரியும் பாடம் நடத்துறதப்பத்தி...? போய் எதாவது ஐ.டி கம்பனியில வேல பாரு, ஒரு கடைல வேல பாத்த அனுபவம் இருக்கா ஒனக்கு?” இப்படி ஏராளமான சொற்களைத் தாங்கித்தான் நாங்கள் சாதித்திருக்கிறோம் என்கிறார் ஜெய்காந்த். 

ஆனால் பல அரசுப் பள்ளிகளும், உயர்மட்டப் பள்ளிகளும் எங்கள் வேலைகளை அங்கீகரித்தப் பின்னர் மற்றவர்களும் எங்களை நோக்கித் திரும்பினார்கள் என தன் அனுபவங்களைப் பகிர்கிறார் அவர்.

image


என்னுடன் ஹரிஷ், அரவிந்த் ஆகியோரும் இணைந்து 3 பேராக உருவாக்கிய இந்த அமைப்பு, விமல், ஜெய்குமார், மீரா சுரேஷ் ஆகியோருடன் 6 பேர் கொண்டதாகப் மாறியுள்ளதோடு, Dexter box என்பதோடு நில்லாமல், பள்ளி மாணவர்களை அறிவியல் வல்லுனர்களாக ஊக்குவிக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளின், பயிற்சியின் களமாக 'Infinite Engineers' மாறியிருக்கிறது என்கிறார் ஜெய்காந்த். இதுவரை எங்கள் பையை நம்பியே செயலாற்றி வந்த நாங்கள் இந்த ஆண்டு முதலீட்டைப் பெற இருக்கிறோம் என்கிறார்.

ஒவ்வொரு சிறந்த சிந்தனைக்கும் பின்னால் ஒரு சிறந்த ஆசிரியர் உள்ளார். அதுபோல் எனக்கு எனது ஆசிரியர் முனைவர் எஸ்.பி.சீனிவாசன் உள்ளார். “உனது செயல் சமூகத்திற்கு எந்த வகையிலாவது பயனாக இருக்க வேண்டும்” என்று எப்போதும் அவர் கூறுவதைப் பின்பற்றி நான் நடக்கிறேன் என்று தன்னடக்கத்துடன் கூறி மகிழ்கிறார் ஜெய்காந்த்.

இணையதள முகவரி: Infinite Engineers ஃபேஸ்புக்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

செயல்முறைக் கல்வி மூலம் குழந்தைகள் வாழ்வில் ஏற்றத்தை தரும் 'ஃப்ளின்டோபாக்ஸ்'

கல்வி கற்பதை, கற்பித்தலை கற்கண்டாக இனிக்க வைக்கும் "சயா லேர்னிங் லேப்ஸ்"Add to
Shares
39
Comments
Share This
Add to
Shares
39
Comments
Share
Report an issue
Authors

Related Tags