பதிப்புகளில்

சென்னையில் 'ப்யூர் சினிமா'- இது வெறும் புத்தகக் கடை அல்ல..!

18th Apr 2016
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

"பகட்டான இந்நகரத்தில், விரும்பிய ஒன்றுக்காக லாபகரமான வேலையை தொழில் வல்லுநர்கள் விடுவது என்பது ஆபத்தானதாகும். ஆனாலும், அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்பது வீண்போகாது, அதற்கான வெகுமதி அவர்களுக்கு கிடைக்கும். அப்படியானவர்களில் ஒருவர் மோ.அருண். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தார்.

"நான் வேலையை விட்ட செய்தியை, எனது மனைவியிடம் மட்டுமே பகிர்ந்திருந்தேன். ஆனால் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரியவந்தபோது அவர்கள் பீதியடையவில்லை". நல்ல சினிமாவை நேசிப்பவர்கள், எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்க பொதுவாக முயற்சிப்பார்கள். அருண், அதை கடந்தும் சென்றார்.

அவர் 2008'-ல் 'தமிழ் ஸ்டூடியோ' தளத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண் அதை ஒரு இயக்கமாக மாற்றினார். செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக முப்பது பேருடன் முதல் கூட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது. இயக்கத்தை தற்போது ஆயிரக்கணக்கானோர் பின்தொடருகிறார்கள். அவரின் எந்த தகவலானலும், அது பலரால் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது."

குறும்பட, ஆவணப் படங்களை ஊக்குவித்து வருபவரும், மாற்று சினிமாவை பல தரப்புக்கும் கொண்டு செல்பவருமான தீவிர சினிமா ஆர்வலர் 'தமிழ் ஸ்டூடியோ' அருண் குறித்த இயக்குநர் அம்ஷன் குமார் உதிர்த்தவற்றை மிகச் சில வரிகள் இவை. அருணின் புதிய முன்முயற்சியாக உருவாகியிருக்கிறது 'ப்யூர் சினிமா'.

ப்யூர் சினிமா புத்தகக் கடையில் மிஷ்கின், ஷாஜி

ப்யூர் சினிமா புத்தகக் கடையில் மிஷ்கின், ஷாஜி


தமிழகத்தில் சிறியது முதல் பெரியது வரை எந்தப் புத்தகக் கடையை நாடினாலும், அங்குக் கிடைக்கக் கூடிய சினிமா சார்ந்த நூல்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கின்றன. அந்தப் புத்தகங்களில் கூட பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தரவல்லதே அதிகம் கிடைக்கின்றன. சினிமாவைத் தீவிரமாக நேசிக்கும் ஆர்வலர்கள் நல்ல புத்தகங்களை வாசிக்க முற்பட்டாலோ, உலகின் புகழ்பெற்ற திரைக்கதைகளை எழுத்து வடிவில் பார்த்துப் படிப்பதற்கு திரைப்பட மாணவர்கள் விரும்பினாலோ, சினிமா படைப்பாளிகள் குறித்த புத்தகங்களை வாசிக்க வேண்டினாலோ கடுமையான தேடல்களில் ஈடுபடும் நிலைதான் இங்கே இருக்கிறது.

இந்தச் சூழலில் முழுக்க முழுக்க சினிமாவும் சினிமா நிமித்தமுமாக ஒரு புத்தகக் கடை சென்னை வடபழனியில் திறக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கின் திறந்துவைத்த இந்தப் புத்தகக் கடையில், தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமாவில் வெளிவரும் நல்ல படைப்புகள், சிறந்த படைப்பாளிகள் குறித்த நூல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து 'தமிழ் ஸ்டூடியோ அருண்' கூறும்போது, 

"தமிழர்களின் உணர்வோடும் அன்றாட பழக்கவழக்கங்களோடும் இரண்டறக் கலந்துவிட்டது சினிமா. ஆனால், இந்தக் கலையை தெளிவாக புரியவைப்பதற்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளிவருவது இல்லை. நூற்றாண்டு வரலாறு கொண்ட தமிழ் சினிமாவில் இதுவரை 1,000 சினிமா சார்ந்த புத்தகங்கள் கூட வெளியாகவில்லை என்பதே இங்கு பெரும்பாலும் நல்ல சினிமா படைப்புகள் வெளியாவதை சாத்தியப்படுத்தவில்லை என்று கருதுகிறேன்.

இந்தச் சூழலில்தான் எங்களது 'பேசாமொழி' பதிப்பகத்தோடு, பிற பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் சினிமா சார்ந்த புத்தகங்கள் அனைத்தையும் வாசகர்களுக்கு ஒரே இடத்தில் கிடைப்பதற்கு வசதியாக 'ப்யூர் சினிமா' புத்தகக் கடையை திறந்திருக்கிறோம்.

தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்களும், நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்களின் டிவிடிகளும், பயனுள்ளதும் ரசிக்கத்தக்கதுமான சினிமா புத்தகங்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கும்" என்றார்.

தமிழ் ஸ்டூடியோ அருண்

தமிழ் ஸ்டூடியோ அருண்


'ப்யூர் சினிமா' வெறும் புத்தகக் கடையாக மட்டும் அல்லாமல், ஒரு திரைப்பட இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. இதற்கு, ரூ.1,500 மட்டும் ஆண்டு சந்தா செலுத்தினால் போதும். கீழ்க்கண்ட வசதிகளைப் பெறலாம்.

* தனியாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், சினிமா, இலக்கிய நூல்களை வாசித்துப் பயனடையலாம்.

* ஓர் அரங்கு உள்ளது. அதில், ப்ரொஜெக்டர் வசதியும் உண்டு. கிடைப்பதற்கு அரிய குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகப் படங்கள், இந்தியப் படங்களை இங்கு நீங்களே போட்டுப் பார்த்து ரசிக்கலாம்.

* சினிமா சார்ந்த ஆய்வு மாணவர்கள், 'ப்யூர் சினிமா' புத்தகக் கடையில் உள்ள அறைகளில் தங்கி, நூலகத்தில் புத்தகங்களைப் படிக்கலாம். ஆய்வுக்கு உறுதுணையானவை செய்துத் தரப்படும்.

* அவ்வப்போது நல்ல திரைப்படங்கள் திரையிடப்படும். அவற்றை கண்டு ரசிக்கலாம்.

* சரியான கால இடைவெளியில் சினிமா கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.

சினிமா ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீணி போடுவது மட்டுமின்றி, இளம் படைப்பாளிகளுக்கு சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது 'ப்யூர் சினிமா'. குறும்படங்கள், ஆவணப் படங்கள் எடுத்தவர்கள் தங்கள் படங்களை இங்கே விற்பனைக்கு வைக்கலாம்.

"குறும்படங்கள், ஆவணப் படங்களுக்கு இதுவரை சந்தை மதிப்பு இல்லாமல் இருந்தது. இனி அந்த குறை இருக்காது. உங்கள் படங்களை விற்பனை செய்ய தமிழ் ஸ்டுடியோவின் ப்யூர் சினிமா புத்தகக் கடையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அழைப்பு விடுக்கிறார் அருண்.

எண் 7, மேற்கு சிவன் கோயில் தெரு, விக்ரம் ஸ்டூடியோ எதிரில் 'டையட் இன்' உணவகத்தின் 2-ம் மாடியில் (கமலா திரையரங்கம் அருகில்) வடபழனியில் அமைந்துள்ள 'ப்யூர் சினிமா' (Pure Cinema) புத்தகக் கடையைத் திறந்துவைத்த இயக்குநர் மிஷ்கின் கூறிய கவனிக்கத்தக்க வாக்கியங்கள்:

"எனக்கு இந்த உலகில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த 10 மனிதர்களில் அருணும் ஒருவர். நம் மக்களுக்கு நல்ல படைப்புகள் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவும், சரியான சினிமா ரசனையை அடையாளம் காட்டுவதற்காகவும் அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மலைக்கவைப்பவை. அதில் ஒன்றுதான் 'ப்யூர் சினிமா'."

ப்யூர் சினிமா திறப்பு விழாவையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியாக, சினிமா படைப்புகளும் புத்தக வாசிப்பும் என்பதை மையமாக வைத்து 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார் மிஷ்கின். 300-க்கும் மேற்பட்ட சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளுக்குப் பஞ்சம் நிலவுவதற்குக் காரணம், நம் சினிமா படைப்பாளிகள், கலைஞர்களிடம் புத்தக வாசிப்பு என்ற பழக்கமே இல்லாததுதான் என்பதை மேற்கோள்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய இசை விமர்சகரும், எழுத்தாளரும், நடிகருமான ஷாஜி கூறியது:

"இந்தியாவில் எந்த இடங்களுக்குச் சென்றாலும் அங்குள்ள புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். எனக்குத் தெரிந்து சினிமா சார்ந்து மட்டுமே இயங்கும் 'ப்யூர் சினிமா' போல நம் நாட்டில் எந்த மூலையிலும் நான் புத்தகக் கடையைக் கண்டது இல்லை. அசாத்திய நம்பிக்கையுள்ள அருணின் மற்றொரு முன்னோடி முயற்சி இது."

'ப்யூர் சினிமா' புத்தகக் கடை குறித்த விவரம் அறிய - 9840698236

'தமிழ் ஸ்டூடியோ' வலைதள பக்கம் www.thamizhstudio.com

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

தமிழ் இணையவாசிகளின் கவனம் ஈர்க்கும் 5 சினிமா விமர்சகர்கள்!

'ஓடாத' சினிமாவுக்கும் உண்டு உலக மார்க்கெட்: வெற்றிமாறன் சொல்லும் வெற்றி மந்திரம்!

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags