பதிப்புகளில்

இரண்டாம் முயற்சியில் ‘நீட்’ தேர்வை வென்ற புதுக்கோட்டை ஏழை மாணவர்!

பனிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், முதல் தடவை நீட் தேர்வில் தோல்வி பெற்று, மறுபடி முயற்சித்து வெற்றி பெற்றுள்ள புதுக்கோட்டை கொத்தனாரின் மகன் கவியரசன்.

sneha belcin
16th Jun 2018
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

நீட் தேர்வுக்கெதிராக நடந்த போராட்டங்கள் எல்லாம் நினைவில் இருந்து மாறவில்லை. இன்னும் ஏதோ மூலையில் நீட்டிற்கு எதிரான கோஷங்கள் ஒலித்துக் கொண்டும், எதிரொலித்துக் கொண்டும் தான் இருக்கிறது. ஆனாலும், ‘நீட்’ போன்ற அநாவசிய தடைகளை தாண்டவும் நம் மக்களுக்கு திராணி இருக்கிறது என்பதை சொல்கிறது புதுக்கோட்டை கவியரசனின் கதை.

புதுக்கோட்டை கரமக்குடியை அடுத்த பல்லவராயன்பத்தையை சேர்ந்தவர் கவியரசன். கவியரசனுக்கு பனிரண்டாவது படிக்கும் ஒரு தம்பியும், பத்தாவது படிக்கும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். இவருடைய அப்பா கொத்தனார் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கவியரசன் ஐந்தாம் வகுப்பு வரையிலுமே கொளப்பம்பட்டி அரசுப்பள்ளியில் படித்திருக்கிறார். 

பட உதவி: புதிய தலைமுறை

பட உதவி: புதிய தலைமுறை


ஐந்தாம் வகுப்புக்கு பிறகு, ஒன்றிய அளவில் நடக்கும் தனித்திறன் போட்டி ஒன்றில், வெற்றி பெறும் மாணவருக்கு கல்வி உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த போட்டியில் பங்கேற்ற கவியரசன் கரமக்குடி ஒன்றிய அளவில் தேர்வாகியிருக்கிறார். 

இதன் வழியே, புதுக்கோட்டை ஆட்சியர் கவியரசனின் உயர் கல்விக்கு உதவிகள் செய்ய முன் வர, புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து பனிரண்டாம் வகுப்பு வரை படித்தார் கவியரசன். 

பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாநிலத்தில் மூன்றாம் இடமும் பெற்றார். பனிரண்டாம் வகுப்பில் 1168 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். கட்-ஆஃப் 198 மதிப்பெண்கள். 

தமிழ் வழி கல்வியில் படித்திருந்த கவியரசனுக்கு, நீட் தேர்வுகள் கடினமானவையாகவே இருந்தது. முதல் முறை தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்த அவர் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண் கல்லூரியிலும் மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார். இரண்டு கல்லூரிகளிலுமே இடம் கிடைத்த போதும், அங்கு தன்னுடைய படிப்பை தொடர விருப்பமில்லாததால் விலகியிருக்கிறார். 

பிறகு ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை வேறோரு அமைப்போடு சேர்ந்து இணைந்து இலவச நீட் கோச்சிங் நடத்தியதை அறிந்த கவியரசன், அங்கு சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்த போது ஏற்பட்ட கோளாறுகளை விட இந்த ஆண்டு தான் அதிகளவில் மாணவர்கள் அவதிக்கு ஆளானார்கள். தமிழக மாணவர்கள் பலருக்கும் வெகு தொலைவில் தேர்வு மையங்கள் விதிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 

கவியரசன் தேர்வு எழுதிய போது அரை மணி நேரம் தாமதமாகவே பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பத்தே காலுக்கு கேள்வித்தாள் கொடுத்த போதிலும், பத்தே முக்காலுக்கு தான் பதில்கள் எழுத தொடங்கியிருக்கிறார். 

இப்படி பல தடங்கல்களோடு தேர்வை சந்தித்த கவியரசன், இம்முறை 331 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார். சென்னையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறு வயதிலிருந்தே தன்னுடைய ஆசை எனவும் சொல்கிறார். 

பனிரண்டாவது படிக்கும் கவியரசனின் தம்பியும் அடுத்து மருத்துவம் படிக்கும் கனவோடு தான் இருப்பதாக கவியரசன் சொல்கிறார்.

’நீட்’ எனும் திறன் தேர்வின் வழியே யாரெல்லாம் மருத்துவர்களாக தகுதியுடையவர்கள் என்பதை இனம் காண முடியாது என்பது உண்மை. இருந்தாலும், இப்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த தேர்வு அதிகம் பாதிப்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் மாணவர்களை தான். இருப்பினும் கவியரசனைப் போன்ற மாணவர்கள் எப்படியோ இச்சாவல்களை கடந்து தங்கள் கனவை நோக்கிச் செல்வது பாராட்டுதலுக்குரியது.

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக