பதிப்புகளில்

ஒரு முகத்தின் கதை...!

2013-ல் தற்கொலைக்கு முயற்சி செய்து, பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும், 3 ஆண்டு காத்திருப்புக்கு பிறகும், வேறொருவரின் முகத்தை பெற்றுக் கொண்ட கேட்டி ஸ்டபிள்ஃபீல்டின் கதை. 

YS TEAM TAMIL
21st Aug 2018
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

மறக்கவே முடியாத பெயர்களில் ஒன்றாக கேட்டி ஸ்டபிள்ஃபீல்டின் பெயரும், மறக்கவே முடியாத முகங்களாக அவரின் முகங்களும் இருக்கும். ஆமாம், கேட்டிக்கு மொத்தமாக மூன்று முகங்கள். தற்கொலை முயற்சிக்கு முந்தைய பூ முகம், தற்கொலை முயற்சிக்கு பின்னரான சிதைந்த முகம், முகமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொருத்தப்பட்டிருக்கும் இன்னொருவரின் முகம். 

தன்னுடைய பதினெட்டு வயதில் தற்கொலைக்கு முயற்சி செய்தார் கேட்டி. கல்வியில் இருந்த சிக்கல், பாய்ஃப்ரெண்டு வேறொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தபோது உண்டான நடுக்கம், ஏற்கனவே உடலில் செய்திருந்த அறுவை சிகிச்சைகள் உண்டாக்கிக் கொண்டிருந்த வேதனை என மிகக் குழப்பமான மனநிலையில், ஒரு துப்பாக்கியை தன் தாடையில் வைத்து சுட்டுக் கொண்டார் கேட்டி. முகத்தை பெருமளவு சிதைத்த அந்த தோட்டா, அவருடைய மூளைப்பகுதியை பாதித்து ஞாபக மறதியை உண்டாக்கியிருக்கிறது.

கேட்டி ஸ்டபிள்ஃபீல்டின் முகச்சிதைவுக்கு முன்னால் மற்றும் தற்போது, Image Courtesy : National Geographic 

கேட்டி ஸ்டபிள்ஃபீல்டின் முகச்சிதைவுக்கு முன்னால் மற்றும் தற்போது, Image Courtesy : National Geographic 


சிதைந்து போன கேட்டியின் முகத்தை மறுசீரமைப்பு செய்ய, ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. இந்நிலையில், நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கை, இந்த முக மாற்றுசிகிச்சையை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கவர் செய்து ‘ஸ்டோரி ஆஃப் அ ஃபேஸ்’ (ஒரு முகத்தின் கதை) என்று ஒரு கட்டுரையை பிரசுரம் செய்திருக்கிறது. கூடவே, வருகின்ற செப்டம்பர் மாதத்தில், நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கையின் அட்டையில் இருக்கப் போவது, கேட்டி ஸ்டபிள்ஃபீல்டின் முகம் தான்.

2013 ஆம் ஆண்டு, கேட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றதிலிருந்தே பல்வேறு அறுவை சிகிச்சைகள் அவருடைய முகத்திற்காக செய்யப்பட்டன. ஆனால், 2017 ஆம் ஆண்டு, மூன்று வருட காத்திருப்புக்கு பிறகு, கேட்டிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒரு முகம் கிடைத்தது. கிடைத்த உடனேயே, அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் குழு தயார் ஆனது. இந்த 31 மணி நேர அறுவை சிகிச்சையை கவர் செய்ய நேஷனல் ஜியோகிராஃபிக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளருக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் ஒஹையோ மருத்துவமனை அனுமதி அளித்தது. அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள், மனிதர்களும், அவர்களது உணர்வுகளும் அறிவியலின் முன் எவ்வளவு சிறியவை என நிரூபிப்பதாக இருக்கிறது.

Image Courtesy : National Geographic

Image Courtesy : National Geographic


உலகம் முழுதும் இதுவரை நாற்பது பேருக்கு மட்டுமே முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. முதல் முறையாக ஒரு முழு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது 2010 ஆம் ஆண்டில்.

முகமாற்று அறுவை சிகிச்சைகள் இன்னும் அசாதாரணமாகவே பார்க்கப்படுவதனால், அமெரிக்க காப்பீட்டு திட்டங்களின் கீழ் அவை வராது. எனவே, கேட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆர்ம்டு ஃபோர்சஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ரீஜென்ரேடிவ் மெடிசின் நிறுவனமே நிதி உதவி செய்திருக்கிறது. போரில் காயமடையும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேம்படுத்த இந்நிறுவனம் விரும்புகிறது.

கேட்டிக்கு பொருத்தப்பட்ட முகம் 31 வயதான ஏட்ரியா ஷ்னெய்டருடையது. இவர் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் போதை மருத்து அதிகமானதால் உயிரிழந்தார். ஏட்ரியா உறுப்பு தானம் செய்திருந்தாலும், முகமாற்று சிகிச்சைக்கு தயாராகியிருக்கவில்லை. ஆனால், ஏட்ரியாவின் பாட்டி அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். தற்போது, கேட்டி ஸ்டபிள்ஃபீல்டு உடலளவில் சில சிரமங்களோடு வாழ்ந்து வந்தாலுமே, தற்கொலை எண்ணங்களும், உளவியல் சிக்கல்களும் இருப்பவர்களுக்கு வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறார் கேட்டி.

Image Courtesy : National Geographic (கேட்டி குடும்பம்-இடது, கேட்டிக்கு முக தானம் செய்தவர் வலது)

Image Courtesy : National Geographic (கேட்டி குடும்பம்-இடது, கேட்டிக்கு முக தானம் செய்தவர் வலது)


முகமாற்று அறுவை சிகிச்சை என்பது எவ்வளவு பெரிய அறிவியல் மகத்துவமாக இருந்தாலும், நாம் எதை முகமாக நினைக்கிறோம், ஒரு முகம் மாறுகையில் நம் குணம் எப்படி மாறுகிறது என்பன போன்ற தத்துவார்ந்த குறிப்புகள் ஒரு கணம் உறையச் செய்கிறது. 

கட்டுரையாளர் - ஸ்னேஹா

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக