பதிப்புகளில்

இணையத்தில் வைரலாவது எப்படி?

cyber simman
6th Nov 2017
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

இணையத்தில் புகழ் பெற வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் எனும் விருப்பம் யாருக்கு தான் இல்லை! இதற்கான வழி வைரலாகும் தன்மையில் இருக்கிறது என்றாலும், வைரலாக்குவது எப்படி எனும் கேள்விக்கான பதில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. அதிலும் திடீர் திடீரென வைரலாக பரவி கவனத்தை ஈர்க்கும், வீடியோக்களும், மீம்களும் சாமானிய நெட்டிசன்களை எல்லாம் இணைய நட்சத்திரங்களாக்குவதை பார்க்கும் போது, வைரலாவது எப்படி எனும் கேள்வியை பலரும் கேட்கலாம்.

image


எனினும், பரவலாக கருதப்படுவது போல, இந்த கேள்விக்கான பதில் இணைய மார்கெட்டிங்கில் இல்லை, மாறாக இணைய கலாச்சாரத்தில் இருக்கிறது.

வைரலாக பரவும் எந்த நிகழ்வை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தாலும், அதில் இணைய கலாச்சாரத்தின் கூறுகளை காணலாம். இந்த கூறுகளை திட்டமிட்டு பிரதியெடுத்து வெற்றிபெற முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், வைரல் நிகழ்வுகளில் எல்லாம் இந்த கூறுகளை காணலாம் என்பதோடு, அந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும் இவை உதவலாம்.

இதற்கு உதாரணமாக அண்மையில் இணையத்தில் வைரலாகி இருக்கும் கார் விளம்பரத்தை எடுத்துக்கொள்வோம். காதலியின் பழைய காரை விற்பனை செய்வதற்காக அமெரிக்க இயக்குனர் ஒருவர் எடுத்த இந்த விளம்பரம் யூடியூப்பில் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.

ஒரு சூப்பர்ஹிட்டான திரைப்படம் வெற்றி பெற்றதற்கான காரணங்களை ஆய்வு செய்வது போலவே இந்த கார் விளம்பரத்தையும் ஆய்வு செய்யலாம். இந்த ஆய்வையும் தமிழ் திரைப்பட பாணியிலேயே துவக்கலாம்.

கார்களை விற்பனை செய்ய ஷோரூம் அமைக்கலாம், முழு பக்க விளம்பரம் செய்யலாம், சலுகைகள் வழங்கலாம். இவை பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் செய்வது தான். எல்லாம் சரி ஒற்றை காரை அதிலும் பயன்படுத்திய பழைய காரை விற்பனை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்யலாம். நாளிதழில் வரி விளம்பரம் கொடுக்கலாம். இணைய வரி விளம்பர தளங்களிலும் விளம்பரம் செய்யலாம்.

அவ்வளவு தானா? கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால், அந்த ஒற்றை பழைய காரை விற்பனை செய்வதற்காக என்றே ஒரு ஷோரூமை அமைத்து, அதற்காக என்றே அட்டகாசமாக விளம்பரம் செய்தால் எப்படி இருக்கும். கிறுக்குத்தனமாக தோன்றக்கூடிய இந்த யோசனையை, திரைப்பட நாயகன் தனது காதலி மீதான அன்பை வெளிப்படுத்துவதற்காக அவரது பழைய காரை விற்றுக்காட்ட இப்படி ஒரு உத்தியை பின்பற்றுவது சாத்தியம் தானே.

தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் வெளியான வெகுஜன படங்களில் இந்த யோசனைக்கு நிகரான காட்சி அமைப்புகளை பார்க்கலாம். நாயகன் காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த இத்தகைய புதுமையான அல்லது வித்தியாசமான உத்திகள் நம் திரைப்படங்களின் டிரேட்மார்க் சங்கதிகள் என்று தயங்காமல் கூறலாம். திரைப்படங்களில் நாயகனுக்கு வேண்டுமானால் இது சாத்தியம், ஆனால் நிஜ வாழ்க்கையில் இது போன்ற மிகை கற்பனைகள் நடைமுறையில் சாத்தியம் தானா?

பழைய காரை விற்க ஷோரூம் அமைக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பழைய காரை விற்பனை செய்ய விளம்பரம் இயக்கலாம், அதை யூடியூப்பில் பதிவேற்றலாம். அந்த விளம்பரம் ஒரு சிலருக்கு பிடித்துப்போய் பகிரப்பட்டால் அது வைரலாக புகழையும் தேடித்தரலாம். அமெரிக்க இயக்குனர் மேக்ஸ் லான்மேன் விஷயத்தில் இது தான் நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசிக்கும் 29 வயது இயக்குனரான லான்மேன் காதலி கேரி தனது பழைய காரை விற்பனை செய்ய முடிவு செய்த போது, அவர் அதற்காக வித்தியாசமான வழியை தேர்வு செய்தார். பழைய கார் விற்பனைக்கான பொதுவான இணையவழிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, புத்தம் புதிய காருக்கு வர்த்தக நிறுவனம் உருவாக்கக் கூடிய விளம்பரம் போலவே ஒரு விளம்பரத்தை இந்த பழைய காருக்காக எடுக்க தீர்மானித்தார். அதன்படியே விளம்பரத்தை எடுத்து யூடியூப்பிலும் பதிவேற்றினார்.

எனது காதலி பழைய காரை விற்பனை செய்ய விரும்புகிறார். அவருக்கு உதவ இந்த விளம்பரத்தை எடுத்துள்ளேன் எனும் அறிமுகம் வாசகத்துடன் துவங்கும் அந்த விளம்பரம் புதிய காருக்கான தொழில்முறை விளம்பரம் போலவே அட்டகாசமாக இருக்கிறது. அழகிய நெடுஞ்சாலை, அதில் தவழும் கார், நீளமான ஷாட்கள் என நகரும் அந்த விளம்பரத்தில் புதிய கார் பெருமைகளை பேசும் விளம்பரம் போலவே பின்னணிக்குரல் பழைய காரின் பெருமைகளை விளக்குகிறது. பியோனோ இசை பின்னணில் ஒலிக்க, நீங்கள் வித்தியாசமானவர், உங்கள் பாணியில் எல்லாவற்றையும் செய்கிறீர்கள், அதுவே உங்களை தனித்தன்மை பெற வைக்கிறது என்றேல்லாம் வாடிக்கையாளரை புகழும் இந்த விளம்பரம், இந்த காரை வாங்க 500 டாலரில் இருந்து ஏலம் கேளுங்கள், என முடிகிறது. முத்தாய்ப்பாக, ஆடம்பரம் என்பது ஒரு மனநிலை எனும் பஞ்ச் வசனமும் இடம்பெற்றுள்ளது.

image


இந்த விளம்பரம் யூடியூப்பில் வெளியான சில நாட்களில் சூப்பர்ஹிட்டாகி 20 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமா, இந்த கார் ஏலம் விடப்பட்டுள்ள இபே இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதை வாங்க போட்டி போடுகின்றனர். இதனால் 500 டாலரில் துவங்கிய ஏலத்தொகை பல ஆயிரங்களை கடந்து லட்சம் டாலர்களையும் தொட்டிருக்கிறது.

ஒரு பழைய காரை விற்பனை செய்வதற்கான பிரத்யேக விளம்பரம் யூடியூப்பில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதும், 1996 மாடலான அந்த காரை ஏலம் எடுக்க இ-பேவில் பலர் போட்டியிடுவதும் செய்தியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிகழ்வு எப்படி வைரலாக பரவுகிறது என்பதற்கு இது அழகான உதாரணம்.

ஆனால், இந்த விளம்பரம் வைரலானது எப்படி?

இதில் தான் இணைய கலாச்சார கூறுகளை காண வேண்டும். முதல் விஷயம், இந்த நிகழ்வில் ஒரு புதுமை இருக்கிறது. கூடவே படைப்பூக்கமும் இருக்கிறது. காதலியின் காரை விற்க, ஒரு பிரத்யேக விளம்பரம் என்பது வியக்க வைப்பதாகவே இருக்கிறது அல்லவா! அது மட்டும் அல்ல, இந்த விளம்பரத்தில் ஒருவித நையாண்டித்தன்மையும் இருக்கிறது.

ஒரு பழைய காருக்காக பக்காவான தொழில்முறை விளம்பர படத்தை இயக்கியதன் மூலம் அதை ரசிக்க வைத்துள்ளதோடு, புதிய கார் விளம்பரங்களின் மிகை அம்சங்களை எல்லாம் நயமாக கேலியும் செய்திருக்கிறார். இந்த அம்சங்கள் எல்லாம் சேர்த்து தான் விளம்பர வீடியோவை ஹிட்டாக்கி இருக்கிறது.

விளம்பரத்தை இயக்கிய லான்மேன், ஆடம்பர கார்களை ஓட்டிச்செல்லும் போதெல்லாம், ஒரு மொக்கை காருக்கு தொழில்முறையிலான விளம்பரத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்ததாகவும், காதிலியின் கார் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். சும்மாயில்லை ஓராண்டுக்கு மேல் பகுதி நேரத்தில் செயல்பட்டு இந்த பக்கா வர்த்தக விளம்பரத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த விளம்பரம் கொஞ்சம் வைரலாகி அதன்முலம் வாய்ப்பு வந்தால் நன்றாக தான் இருக்கும் எனும் கற்பனையோடு தான் வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியதாகவும், ஆனால் இந்த அளவு வரவேற்பை பெறும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

ஒரு புதுமையான ஐடியா, அதை செயல்படுத்தி பார்க்க வாய்ப்பு தந்த இணையம், வர்த்தக தன்மை மீதான நேர்த்தியான நையாண்டி, இவற்றின் மத்தியில் இழையோடும் காதல் என எல்லாம் சேர்ந்து தான் இந்த விளம்பரத்தை வைரலாக்கியுள்ளது.

எல்லாம் சரி, விளம்பரத்தை யூடியூப்பில் பார்த்து ரசிப்பது ஒருபக்கம் இருக்கட்டும், அதற்காக பழைய காரை அதன் விலையை விட பல மடங்கு அதிக விலைக்கு இ-பேவில் பலரும் ஏலம் எடுக்க போட்டி போடுவது ஏன்? மொத்தமே 1500 டாலர் மதிப்பு கொண்ட இந்த 1996 ஹோண்டா மாடல் காரை, பத்தாயிரம் டாலருக்கு மேல் பலரும் வாங்கத்துணிந்தது எப்படி? இதுவும் இணைய கலாச்சாரம் தான். ஆனால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டுள்ளனரேத் தவிர அதே விலைக்கு வாங்குவார்களா என்பது சந்தேகம் என்றும் இந்த செய்தி தொடர்பான பின்னூட்ட விவாதங்களில் கருத்துக்களை பார்க்க முடிகிறது. காரை வாங்காவிட்டால் என்ன, வீடியோவுக்கான யூடியூப் விளம்பரம் மூலமே பத்தாயிரம் டாலர் வருமே என்றும் ஒருவர் கூறியிருக்கிறார்.

இதுவும் இணைய கலாச்சாரத்தி ஒரு அம்சம் தானா!


வால்: புதுமை மட்டும் கொஞ்சம் நேர்மையும் இருந்தால் இணையத்தில் வைரலாகும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்க்கலாம். பழைய கார்களை விற்பனை செய்யும் அமெரிக்கர் ஒருவர் சில மாதங்களுக்கு முன், தன்னிடம் உள்ள பழைய காருக்கான வரி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். பொதுவாக இது போன்ற விற்பனைகளில் இருக்க கூடிய மிகை தகவல்கள் எதுவும் இல்லாமல், அந்த பழைய கார் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே விவரித்திருந்தார். காரில் ஒரு பக்கம் துரு பிடித்திருப்பதை கூட, குறிப்பிட்டிருந்தவர், புகைப்படத்தில் பார்த்தபடி கார் இல்லை என்றெல்லாம் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 20,000 கிமீ ஓடியிருக்கிறது. இந்த கார் ஓடும், பாட்டு கேட்கலாம் அவ்வளவு தான் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் இத்தனை நேர்மையான வரி விளம்பரத்தை பார்த்ததில்லை எனும் கருத்துக்களுடன் இந்த விளம்பரம் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது; https://www.good.is/articles/honest-car-dealer

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக