வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டும் ஸ்டார்ட் அப்கள்!

YS TEAM TAMIL
22nd Aug 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கரைபுரண்ட வெள்ளமும் கன மழையும் கேரளாவை மிகப்பெரிய அளவில் சேதப்படுத்தியுள்ளது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் மாநிலம் 1924-ம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் மோசமான கன மழையை எதிர்கொண்டுள்ளது.

ஒரு நூற்றாண்டின் மிகவும் மோசமான இந்த வெள்ளத்தால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 20,000-க்கும் அதிகமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 14 மாவட்டங்களில் பத்து மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

பணம், நிவாரணப் பொருட்கள் என நாடு முழுவதும் இருந்தும் உலகம் முழுவதும் இருந்தும் உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ ஸ்டார்ட் அப்களும் முன்வந்துள்ளன.

அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதல், பொருட்களை அனுப்புவதற்கான போக்குவரத்தில் உதவுதல் என இந்த ஸ்டார்ட் அப்கள் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதில் பங்களித்துள்ளனர். 

image


பேடிஎம் Paytm

டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் மற்றும் டிஜிட்டல் வாலட் நிறுவனமான பேடிஎம் தனது முகப்பு பக்கத்தில் ’கேரளா வெள்ளம்’ என்கிற பகுதியை இணைத்துள்ளது. இது நேரடியாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பயனர்கள் நன்கொடை வழங்குவதை இந்தத் தளம் எளிதாக்கியுள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி இந்தப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது முதல் இது வரை மொத்தம் 20 கோடி ரூபாய் சேகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும் வரிவிலக்கிற்கான ரசீதுகளை வழங்கமுடியாது என்று பேடிஎம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நன்கொடை அளிப்பவர் செலுத்தும் தொகைக்கு இணையாக அதே தொகையை, ஒரு கோடி ரூபாய் வரை பேடிஎம் நிறுவனம் செலுத்தும் என வாக்களித்துள்ளது.

சொமேடோ Zomato

புதிய யூனிகார்னான சொமேடோ பெங்களூருவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து அதன் செயலியில் ’ஹெல்ப் கேரளா’ என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வாயிலாக ஒருவர் மூன்று உணவு பேக்கேஜ்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து நன்கொடை வழங்கலாம். இந்த பேக்கேஜில் மூன்று நபர்களுக்கான உணவிற்கு 90 ரூபாயும், ஆறு நபர்களுக்கான உணவிற்கு 180 ரூபாயும், பத்து நபர்களுக்கான உணவிற்கு 180 ரூபாயும் உள்ளது. உணவு டெலிவர் செய்யும் வேன்கள் அல்லது படகுகள் உதவியுடன் உணவு டெலிவர் செய்யப்படும் என சொமேடோ தெரிவிக்கிறது.

அமேசான் இண்டியா

டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான Goonj மற்றும் ஹேபிடட் ஃபார் ஹ்யூமானிட்டி இண்டியா, வேர்ல்ட் விஷன் இண்டியா, OXFAM இண்டியா ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து அமேசான் இண்டியா அதன் பயனர்கள் நிவாரண பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய உதவுகிறது. நன்கொடை பேனரை க்ளிக் செய்து அதிலுள்ள இந்த நான்கு அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பப்பட்டியலைக் காணலாம். அவர்கள் நன்கொடை வழங்க விரும்பும் பொருட்களை முடிவு செய்து அதற்காக பதிவு செய்யப்பட்ட டெலிவரி முகவரியை பணம் செலுத்துவதற்கு முன்பு தேர்வு செய்யலாம். போர்வைகள், குளியலறை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் போன்ற பொருட்கள் இதில் அடங்கும். அமேசான் செயலி, வலைதளம் இரண்டிலுமே இந்த வசதி உள்ளது.

பிக்பாஸ்கட் BigBasket

பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் மளிகை ஸ்டோரான பிக்பாஸ்கட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடை வழங்கி உதவ Goonj நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் வலைதளத்திலும் செயலியிலும் உள்ள பண்டில் பேக்ஸைப் பயன்படுத்தி நன்கொடை வழங்கலாம். அரிசி, பிஸ்கட், தண்ணீர், சானிட்டரி நாப்கின்கள், டூத்பேஸ்ட் போன்ற பொருட்கள் வெவ்வேறு அளவுகளில் கொண்ட ஐந்து பேக்கள் உள்ளது. பிக்பாஸ்கட் செயலி அல்லது வலைதளத்தில் உள்ள கேரள வெள்ள நிவாரணம் பேனரை க்ளிக் செய்தால் பொருட்களை தேர்வு செய்து கட்டணம் செலுத்த உதவக்கூடிய அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ஆர்டர் செய்யும் அனைத்து பொருட்களும் Goonj நிறுவனத்திற்கு டெலிவர் செய்யப்படும். இந்நிறுவனம் அந்தப் பொருட்களை கேரளாவில் விநியோகம் செய்கிறது.

ஃப்ளிப்கார்ட் Flipkart

மின்வணிக ஜாம்பவானான ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நன்கொடை வழங்க Goonj நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இணைப்பு ஃப்ளிப்கார்டில் ரொக்கமாக நன்கொடை வழங்கவும் உதவுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு Goonj போர்வைகள், தார்பாலின், கொசுவலை, குளியலறை பொருட்கள், சமையல் பாத்திரங்கள் போன்ற பல பொருட்களை வாங்கி வழங்குகிறது. பயனர்கள் நன்கொடை வழங்க ஃப்ளிப்கார்ட் செயலி அல்லது வலைதளத்தில் உள்ள கேரளா நன்கொடை என்கிற பேனர் விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும். அவ்வாறு க்ளிக் செய்தால் பயனர்கள் Goonj நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கும் பக்கத்திற்குச் செல்லலாம்.

ஊபர் Uber

நன்கொடை வழங்க விரும்பினாலும் அதைக் கொண்டு சேர்க்க இயலாத மக்களுக்காக கொச்சியில் உள்ள ஊபர் குழு அருகாமையில் இருக்கும் நிவாரண முகாம்களுக்கு அவற்றை கொண்டு சேர்க்கும் இலவச போக்குவரத்து சேவையை வழங்குகிறது. பயனர்கள் ஊபர் செயலியில் இருக்கும் வெள்ள நிவாரணம் என்கிற பகுதியை தேர்வு செய்யவேண்டும். அதன் பிறகு ஊபர் ஓட்டுநர் அவர்களது இடத்திற்கே சென்று நிவாரணப் பொருட்களை சேகரித்து அருகில் உள்ள நிவாரண முகாம்களில் டெலிவர் செய்வார்.

Simpl

ஆனலைன் கட்டண செயலியான Simpl கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மக்கள் உடனடியாக நன்கொடை வழங்க உதவுகிறது. Simpl செயலி வாயிலாக வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் CMDRF-க்கு இணைக்கப்படும். ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணிக்கு மொத்த நன்கொடை தொகையும் CMDRF-க்கு மாற்றப்படும் என Simpl தெரிவிக்கிறது.

கூகுள் Tez

கூகுளின் மொபைல் கட்டண சேவை வழங்கும் கூகுள் Tez ஒரு புதிய வசதியை கேரள வெள்ளத்திற்காக இணைத்துள்ளது. Tez செயலிக்கு சென்றதும் பயனர் பிசினஸ் பிரிவின்கீழ் கேரள முதலமைச்சர் கணக்கு தென்படும். இதில் பயனர் நன்கொடை வழங்கலாம். இந்த வசதி நேரடியாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தற்சமயம் செயல்பாட்டில் இல்லை.

ஆங்கில கட்டுரையாளர் : அபூர்வா பி | தமிழில் : ஸ்ரீவித்யா

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags