பதிப்புகளில்

லீவ் விட்டாச்சு - இயற்கைச் சூழலில் விடுமுறையை கொண்டாட இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்!

YS TEAM TAMIL
17th Apr 2018
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

தகவல்கள் மக்களிடையே பரவுவதில் இணையதளமும் சமூக வலைகதளங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இதுவரை இல்லாத அளவு மக்கள் அதிகம் பயணிக்கின்றனர். சிறு நகரைச் சேர்ந்தவர்களும் பல்வேறு வயதினரும் புதிய கண்ணோட்டம், தனிப்பட்ட வளர்ச்சி, முழுமையான கற்றல் அனுபவம் ஆகியவற்றை பெறுவதற்கான முதலீடாகவே அனுபவத்திற்கான பயணத்தை கருதுகின்றனர்.

”அனுபவத்திற்கான பயணம் என்கிற சுற்றுலா வகையில் ஒரு குறிப்பிட்ட நாடு, நகரம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் வரலாறு, மக்கள், கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்ப்புப்படுத்தி அனுபவம் பெறுவதில் கவனம் செலுத்தப்படும். எனவே ஒருவரது தனிப்பட்ட தேவைகள், சுதந்திரம், கற்றல் அனுபவம் ஆகியவற்றை சமன்செய்யும் வகையில் பல்வேறு பயண பேக்கேஜ்கள் உருவாகத் துவங்கியது,” 

என்றார் தி வில்லா எஸ்கேப்ஸ் நிறுவனர் யோகி ஷா.

image


மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் மற்றொரு சுற்றுலா பிரிவு சுற்றுச்சூழல் சுற்றுலாவாகும்.

சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது இயற்கை சார்ந்ததாகும். இந்தச் சுற்றுலா வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அதே சமயம் உள்ளூர் மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படும். இந்தியா கடந்த இருபதாண்டுகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவில் 20.64 சதவீதம் காடுகளால் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் 160 தேசிய பூங்காவும் 698 வனவிலங்குகள் சரணாலயமும் உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இது நாட்டின் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இந்தியாவின் சுற்றுசூழல் சுற்றுலா நிறுவனங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த நிறுவனங்களில் ஒன்றுதான் ’இகோஸ்பியர்’. 2000-ம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ’ட்ராவல் அனதர் இண்டியா’ மற்றும் ’இண்டியா அண்ட்ராவல்ட்’ ஆகிய நிறுவனங்கள் 2009-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டுகளுக்கிடையே நிறுவப்பட்ட நிறுவனங்களாகும்.

உள்ளூர் மக்கள் தங்களது கலாச்சாரம், கைவினைப் பொருட்கள், உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை வெளிப்படுத்தி வேலை வாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள இந்த மையங்கள் உதவுகிறது

ஹிமாலயாஸ், ஸ்பிதி பள்ளத்தாக்கு, லடாக், கர்நாடகா, ஒடிசா போன்ற பகுதிகளுக்கு அனுபவத்திற்கான பயணம் மேற்கொள்ளவோ அல்லது சுற்றுச்சூழல் சுற்றுலா மேற்கொள்ளவோ அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படும் சில சுற்றுலா சார்ந்த ஸ்டார்ட் அப்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. தேசிய இகோ டூரிசம் கேம்ப் (Desia Eco-Tourism Camp)

ஒடிசாவின் கொராபுட் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். யுகப்ரதா கர் தேசிய இகோ டூரிசம் வாயிலாக உள்ளூர் இளைஞர்களும் வேலை வாய்ப்பை அளிப்பதுடன் இந்த நிலப்பகுதியின் கலை மற்றும் கலாச்சார ஆர்வத்தையும் மீட்டெடுக்கிறார்.

image


சிறப்பான சுற்றுச்சூழலைக் கொண்ட ஒடிசாவின் கொராபுட் பள்ளத்தாக்கில் வெவ்வேறு பழங்குடியினரை குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் யுகப்ரதாவின் ’தேசியா’. இதன் மூலம் அவர்களது மூதாதையர் வாழ்க்கை முறையையும் பாரம்பரிய முறையையும் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்படும். இந்நிறுவனம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் இந்த பழங்குடியினர்கள் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டுவதற்கான சந்தைப்பகுதியாகவும் செயல்படுகிறது.

”சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகையும் அமைதியையும் ரசிப்பதோடு பல்வேறு உள்ளூர் சமூகத்தினரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்,” என்றார் யுகப்ரதா.

இரண்டு காட்டேஜ்களைக் கொண்ட இந்த இடம் இந்திய கட்டமைப்புடனும் நவீன வசதிகளுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கலைகளுக்கான முகாம் மற்றும் அணிகலன் தயாரிக்கும் பயிற்சி பட்டறைகள் போன்றவை உள்ளூர் பெண்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் பழங்குடியினரின் குடியிருப்புகளுக்கு மத்தியில் வசிக்க வாய்ப்பளிக்கப்படுவதோடு அவர்களுடன் ஒன்றாக உணவருந்தி உரையாடி அவர்களது பகுதி குறித்து தெரிந்துகொண்டு சுற்றுலா தளங்களையும் பார்வையிடலாம்.

2. இகோஸ்பியர் (Ecosphere)

இஷிதா கன்னாவால் நிறுவப்பட்டு ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இகோஸ்பியர் நிறுவனம் சுற்றுச்சூழலை பராமரிக்கும் சுற்றுலாவை ஊக்குவிக்கிறது. பொருளாதார ரீதியில் அதிகாரமளிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காமல் பாதுகாக்கும் அணுகுமுறையை பின்பற்றுகிறது. இந்நிறுவனம் 2004-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தங்குமிடம் ஏற்பாடு செய்வது குறித்தும் அதன் வாயிலாக வருவாய் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் பலர் அறிந்து செயல்படத் துவங்குவதற்கு முன்பே இந்நிறுவனம் அதன் ப்ராஜெக்டுகளைத் துவங்கியது. 

image


இங்குள்ள கிராமங்கள் அதிக உயரமான இடங்களில் அமைந்துள்ளதால் மழைக்காலத்தில் பனி உருகி வருவதைச் சார்ந்தே பாசனம் அமைந்திருக்கும். எனவே இந்தச் சமூகத்தினரின் விவசாய நடைமுறைகள் பருவநிலைக்கு ஏற்றவாறு இருக்க உதவும் வழிமுறைகளை இகோஸ்பியர் அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் அந்தப் பகுதியில் செயற்கை பனி ஆறுகளை அறிமுகப்படுத்தியது. நீர்வரத்தின் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாகச் சென்றால் அது உறைந்துபோகும். வசந்த காலத்தின்போது இது உருகி பாசனத்திற்கு பயன்படும் என்பதால் தடுப்பணைகளையும் இந்நிறுவனம் கட்டியது. இதுவரை வெற்றிகரமாக 10 தடுப்பணைகளை கட்டி முடித்துள்ளது.

அத்துடன் உள்ளூர் மக்கள் வருவாய் ஈட்டுவதற்கான பிற வாய்ப்புகளான காட்டு எருதின் ரோமங்கள் கொண்டு கம்பளி நெய்தல், மண்பாண்டம் தயாரித்தல் உள்ளிட்ட உள்ளூர் சமூகத்தினரின் பாரம்பரிய கைவினைக்கலைகளும் அழிந்து வருகின்றன. இகோஸ்பியர் பாரம்பரிய அறிவு கொண்ட குடும்பத்தினருடன் பணியாற்றி அவர்களுடைய நடைமுறைகளை வலுப்படுத்திக்கொள்ளவும் நவீன நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் பயிற்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் தற்போது இந்த உள்ளூர் சமூகத்தினருடன் நேரம் செலவிட்டு இந்த நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம்.

”நீங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பினால் அவை இரண்டையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பதையே எங்கள் அனைத்து ப்ராஜெக்டுகளிலும் வலியுறுத்துகிறோம்,” என்றார்.
image


அனைத்து ப்ராஜெக்டுகளிலும் உள்ளூர் சமூகத்தினரின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களையும் இணைத்துக்கொண்டு சுற்றுச்சூழல் சுற்றுலாவின் கான்செப்டை உண்மையாக நிலைநிறுத்துகிறது இகோஸ்பியர். ஸ்பிதியில் உள்ள 66 கிராமங்களில் இகோஸ்பியர் 80 சதவீத கிராமங்களை இணைத்துக்கொண்டு அதன் ப்ராஜெடுகளில் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

3. ஆஃப்பீட் ட்ராக்ஸ் (Offbeat Tracks)

வந்தனா விஜய் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் மூன்றாண்டுகள் பணியாற்றிய பிறகு தனது வேலையை விட்டுவிட தீர்மானித்தார். 30 வயதில் ஆஃப்பீட் ட்ராக்ஸ் துவங்கினார். இவரது நிறுவனம் அனுபவம் சார்ந்த பயணம் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையிலான பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு கிராமப்புற சமூகங்களுடன் பணியாற்றி உள்ளூர் மக்களை ஒன்றிணைக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் அழகான, வழக்கத்திற்கு மாறான, சுற்றுச்சுழலை பாதுகாக்கும் அம்சங்களை நிலைநாட்டும் பயணங்களை உருவாக்குகிறது. வந்தனாவின் ’ஆஃப்பீட் ட்ராக்ஸ்’ ஹிமாலயா பகுதியின் உள்ளூர் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பயணம் மற்றும் அனுபவம் சார்ந்த பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தங்குமிடம் மற்றும் உள்ளூர் அனுபவங்கள் உருவாக்குதல் போன்ற கான்செப்ட் வாயிலாக சிறு தொழில்முனைவோரை உருவாக்குகிறது.

image


”ஹிமாலயாவின் கிராமப்புற பகுதிகளில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு சுற்றுச்சூழல் சுற்றுலாவை பயன்படுத்த விரும்புகிறோம். நாங்கள் விநியோகிக்கும் உணவு உள்ளூர் சுவையுடன் இருப்பதையும் முடிந்தவரை உள்ளூரிலேயே தயாரிக்கப்படுவதையும் உறுதிசெய்கிறோம்,” என்றார்.

ஆஃப்பீட் ட்ராக்ஸ் உள்ளூர் குடும்பங்கள் வழங்கும் தங்குமிடங்களை பயணிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இதனால் விருந்தினருக்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கை குறித்த புரிதல் கிடைக்கும். அவர்களது அன்றாட வாழ்க்கை முறையை நன்கறியலாம்.

அழகான, வழக்கத்திற்கு மாறான, சுற்றுச்சுழலை பாதுகாக்கும் அம்சங்களை நிலைநாட்டும் பயணங்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளூர் அனுபவங்களை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. சுற்றுலா பயணிகள் அவர்கள் தங்கும் உள்ளூர் குடும்பத்தின் சமையலறையை பார்வையிடலாம். நிலத்தில் ஒரு நாள் செலவிட்டு நெல் பயிரிட கற்றுக்கொள்ளலாம். உள்ளூர் நாகா கிராமத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் கூடை மற்றும் சால்வை நெசவு பயிற்சி வகுப்பில் நேரம் செலவிடலாம்.

4. ரெயின்ஃபாரஸ்ட் ரிட்ரீட் (Rainforest Retreat)

கர்நாடகாவின் பெங்களூருவிற்கு மேற்கே ஐந்து மணி நேர பிரயாணத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் குடகு மாவட்டத்தில் சுஜாதாவும் அனுராக் கோயலும் 1994-ம் ஆண்டு மோஜோ ப்ளாண்டேஷன் ஸ்டார்ட் அப் துவங்க திட்டமிட்டனர். இதன் மூலம் பரபரப்பான நகர வாழ்க்கையை விடுத்து இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை ஊக்குவிக்க விரும்பினர்.

ஆர்கானிக் விவசாயத்தைப் போன்றே மோஜோ ப்ளாண்டேஷன் சூழலியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்கு தாவரவியல், உயிர் வேதியியல், மரபியல், சூழலியல், மூலக்கூறு உயிரியல் ஆகியவற்றில் நிறுவனர்களுக்கு உள்ள அனுபவம் உதவுகிறது.

image


மேலும் இயற்கையுடன் ஒன்றி வாழும் அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க ரெயின்ஃபாரஸ்ட் ரிட்ரீட் என்கிற தனித்துவமான சுற்றுச்சூழல் சுற்றுலா ப்ராஜெக்ட் செயல்படுகிறது.

“ஒரே சிந்தனையுடைய மக்கள், விவசாயிகள், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் போன்றோரிடையே தகவல் பரிமாற்றம், விவசாய முறைகள், ஆய்வு திட்டங்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள உதவும் தளமாக விளங்குகிறது,” என்றார் அனுராக்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பிற்கான உலகளாவிய சங்கம் (Worldwide Association for Preservation and Restoration of Ecological Diversity) என்கிற பெயரைக் கொண்ட இவர்களது அரசு சாரா நிறுவனம் உள்ளிட்ட கோயலின் பிற ப்ராஜெக்டுகளுக்கு மோஜோ ப்ளாண்டேஷன் மற்றும் ரெயின்ஃபாரஸ்ட் ரிட்ரீட் முயற்சிகள் வாயிலாக நிதி பெறப்படுகிறது.

கொடகு மற்றும் அதைத் தாண்டி உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் வழக்கமான விவசாய முறையில் உள்ள ஆபத்துகள் குறித்து அறிய வேண்டும். அத்துடன் மண்ணை பாதுகாத்து பல்லுயிர் வளர்ப்பை ஊக்குவிக்கும் ஆர்கானிக் விவசாயத்தை பின்பற்றவேண்டும். இவையே இந்த நிறுவனங்களின் நோக்கமாகும்.

5. நிர்வானா நொமாட்ஸ் (Nirvana Nomads)

பெங்களூருவைச் சேர்ந்த நிர்வானா நொமாட்ஸ் வழக்கத்திற்கு மாறான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது. அவர்கள் உல்லாசமாக அதே சமயம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதை ஊக்குவிக்கிறது. மலிவு விலையில் இத்தகைய பயண அனுபவத்தை வழங்குகிறது. வழக்கத்திற்கு மாறான பயணத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு பெங்களூருவைச் சுற்றி சுவாரஸ்யமான வார இறுதி பயணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிர்வானா நொமாட்ஸ் பயணங்கள் மேற்கொள்வோருக்கு மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சாரம், பயணங்கள் வாயிலான கற்றல் ஆகியவற்றை அளிக்கிறது. இது வழக்கமான சுற்றுலா தளங்களுக்கு செல்வதுடன் ஒப்பிடுகையில் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை தரும்.

image


”நாங்கள் இதை வணிகமாகப் பார்த்ததைத் தாண்டி ஒத்த சிந்தனையுடைய பயணிகள் அடங்கிய சமூகமாகவே கருதுகிறோம். வனவிலங்கு, கலாச்சாரம், கலை, வரலாறு, ஃபோட்டோகிராஃபி போன்ற மக்களின் ஆர்வத்தை மையமாகக் கொண்டு மாறுபட்ட பயணங்களில் கவனம் செலுத்துகிறோம். நேர்மறையான சமூக மாற்றத்தை ஊக்குத்து மக்களை ஒன்றிணைத்து, உலகம் இன்று சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பயணத்தை பயன்படுத்தவேண்டும் என்பதே எங்களது திட்டம்,” என்று குழுவினர் விவரித்தனர்.

நிர்வானா நொமாட்ஸ் நொமாட்ஸ் ஜாம், வாழ்க்கையின் வெவ்வேறு நிலையில் உள்ள மக்களின் உரை, இரவு உணவிற்காக மக்கள் வீட்டில் தயாரித்த உணவுடன் ஒன்று திரள்வது போன்ற ஆஃப்லைன் நிகழ்வுகளை மெய்நிகர் உலகத்தை தாண்டி ஒருவரோடொருவர் இணைவதற்காக ஏற்பாடு செய்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் ஃப்ரான்சைஸ் இண்டியா மேகசினால் இந்தியாவின் டாப் 100 SME-க்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

6. தி ப்ளூ யாண்டர் (The Blue Yonder)

2004-ம் ஆண்டு கோபிநாத் பராயில் ’தி ப்ளூ யாண்டர்’ என்கிற நிறுவனத்தை பொறுப்புணர்ச்சியை ஊக்குவிக்கும் சுற்றுலா சார்ந்த சமூக நிறுவனமாக கேரள கிராமத்தில் அமைத்தார். (இந்நிறுவனம் தற்போது பெங்களூருவில் அமைந்துள்ளது.)

இன்று ஒரு சமூக நிறுவனம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கவனம் செலுத்தி சுற்றுலா வாயிலாக சமூகத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

image


நிலா ஆறு (பாரதப்புழா) வற்றிக்கொண்டே இருந்த நிலையில்தான் இவர்களது முயற்சி முதலில் துவங்கப்பட்டது. இவர்களது சமூக மேம்பாட்டு முயற்சிகள் வாயிலாக முதலீடு செய்யப்பட்டு நிலா ஆறு பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தி ப்ளூ யாண்டர் நிலா ஆற்றில் முக்கிய கவனம் செலுத்துகிறது. மேலும் அவர்களது தனித்துவமான பயண அனுபவ மாதிரியானது மீன்பிடி சமூகம், மண்பாண்டங்கள் தயாரிப்போர், செம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோக பணியாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மூங்கில் பின்னுபவர்கள், கம்பளம் தயாரிப்போர், கைத்தறி ஆடை நெசவாளர்கள் போன்றோரை ஒன்றிணைக்கிறது.

தற்சமயம் தி ப்ளூ யாண்டர் ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தனித்துவமான விடுமுறை அனுபவங்களை வழங்குகிறது. மக்கள், கலாச்சாரம், வனாந்திரம் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு இந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்தியாவிற்கு வெளியே ஸ்ரீலங்கா, பூடான், பங்களாதேஷ், தென் ஆப்ரிக்கா, நேபால் போன்ற நாடுகளுக்கு தனிப்பட்ட தேவைக்கேற்ப பயண ஏற்படுகள் செய்து வருகின்றனர்.

தி ப்ளூ யாண்டர் அதன் ஊழியர்கள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவுகிறது. உதாரணத்திற்கு தி ப்ளூ யாண்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ப்ளம்பர் அல்லது எலக்ட்ரீஷியன் மாலை நேரங்களில் கிராமிய இசைக் குழுவில் பாடகராக பங்கேற்று கூடுதல் வருவாய் ஈட்டலாம். இந்த மாதிரியானது அவர்கள் பொருளாதார ரீதியில் தங்களை வலுப்படுத்திக்கொள்ள உதவுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக