பதிப்புகளில்

இனி, டிஜிட்டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தலாமே...!

19th Nov 2018
Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share

இன்ஸ்டாகிராம் அண்மையில் ’யுவர் ஆக்டிவிட்டி’ எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது புதிய வசதி மட்டும் அல்ல, பயனாளிகளின் நலன் காக்கும் நடவடிக்கையும் கூட! இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் இணையத்தின் புதிய போக்கில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் வெல்னஸ் என குறிப்பிடப்படும் டிஜிட்டல் ஆரோக்கியம் காப்பதற்கான முயற்சி தான் இந்த புதிய போக்கு. இணையத்தில் ஒரு அலையாக இது வீசத்துவங்கியிருக்கிறது. டிஜிட்டல் வசதிகளை அளவோடு பயன்படுத்துவது என இதை புரிந்து கொள்ளலாம்.

நம்முடைய நவீன வாழ்க்கை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களால் சூழப்பட்டிருக்கிறது. நாம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களில் மூழ்கி இருப்பதோடு, செய்திகளை தெரிந்து கொள்வது முதல் வெட்டி அரட்டை அடித்து நேரம் கழிப்பது வரை எல்லாவற்றுக்கும் இணைய சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். வாட்ஸ் அப் பார்வேர்ட், மீம்கள், ஃபேஸ்புக் லைக்ஸ் என நம்முடைய வாழ்க்கையில் இணைய சேவைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தவிர, போனில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் நோட்டிபிகேஷன்கள் நம் கவனத்தை கோரிக்கொண்டே இருக்கின்றன.

image


ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சேவைகளில் நாம் அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் வீடியோ பதிவு சேவையான டிக்டாக் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சுருக்கமாக சொல்வது என்றால் நாம் சாதனங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நேரத்தில் பெரும்பகுதியை சாதனங்களின் திரை எடுத்துக்கொண்டு விடுகிறது. இதனால் நேரம் வீணாவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக அஞ்சப்படுகிறது. 

ஆன்லைனிலேயே மூழ்கிக் கிடப்பது நேரடி சமூக உரையாடல்களை குறைத்து விடுவதோடு, வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளில் பகிரப்படும் படங்களின் அழகியல் மற்றும் தோற்ற அம்சங்கள் இளம் பெண்களிடம் உடல்சார்ந்த அழுத்தங்களை ஏற்படுத்துவதாக கவலையோடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாதிப்புகளை இன்னும் பட்டியலிடலாம். அதற்காக டிஜிட்டல் உலகில் இருந்து வெளியேற வேண்டும் என்றில்லை. ஆனால், டிஜிட்டல் உலகில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்வதும், அதைவிட முக்கியமாக டிஜிட்டல் பயன்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

இதற்காக தான், டிஜிட்டல் ஆரோக்கியம் எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது. உடல் நலனுக்கும் மன நலனுக்கும் கேடு விளைவிக்காத வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்றும் இதை புரிந்து கொள்ளலாம். வேறுவிதமாக சொல்வது என்றால், டிஜிட்டல் பழக்கங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் அளவுக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது என்றும் புரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் ஆரோக்கியத்தை பேணி காக்க பலவிதமான யோசனைகளும், வழிகளும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, திரை நேரத்தை குறைப்பது. அதாவது சாதனங்களிலும், இணைய சேவைகளிலும் செலவிடும் நேரத்தை குறைப்பது. எப்போதும் எந்த இடத்திலும் புதிதாக நோட்டிப்பிகேஷன் வந்துள்ளதா என ஸ்மார்ட்போனை எதிர்பார்ப்புடன் எடுத்து பார்த்துக்கொண்டிருக்காமல், வேறு முக்கிய பணிகளில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இத்தகைய கட்டுப்பாடு பயனாளிகளிடம் இருந்து தான் வரவேண்டும் என்றாலும், இணைய நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு இதில் உதவ முன்வந்துள்ளன. பல நிறுவனங்கள் பயனாளிகள் தங்கள் சேவையில் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்ப்பதற்கான கட்டுப்பாட்டு வசதியை அறிமுகம் செய்து வருகின்றன. 

ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் இதற்காக ஸ்கிரீம் டைம் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஐபோன் பயனாளிகள் போன் திரையில் தாங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து அதை கட்டுப்படுத்திக்கொள்ளலாம். போன் பயன்பாடு மற்றும் அதில் குறிப்பிட்ட செயலிகளில் செலவிடும் நேரத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமும் தன் பங்கிற்கு ஆண்ட்ராய்டில் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. யூடியூப் தளத்திலும், அதில் பயனாளிகள் செலவிடப்படும் நேரம் டாஷ்போர்டில் காண்பிக்கப்பட்டு, அதை கட்டுப்படுத்த வழி செய்யப்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கூகுள் டிஜிட்டல் வெல்பீயிங் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

இப்போது இன்ஸ்டாகிராமும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள யுவர் ஆக்டிவிட்டி வசதியில், பயனாளிகள் இன்ஸ்டாகிராமில் கழிக்கும் நேரத்தை தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட வேண்டும், எப்போது அதனிடமிருந்து நோட்டிபிகேஷன் பெற வேண்டும் என்பது போன்ற அம்சங்களை எல்லாம் வரையரை செய்து கொள்ளலாம்.

image


டிஜிட்டல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடு இணையத்தில் தீவிரமாக வரும் நிலையில் ஆகஸ்ட் மாதமே இதற்கான வசதியை அறிமுகம் செய்வதாக ஃபேஸ்புக் அறிவித்தது. இப்போது இன்ஸ்டாகிராமில் இந்த வசதி அறிமுகம் ஆகியுள்ளது. அடுத்ததாக ஃபேஸ்புக்கும் இந்த பட்டியலில் சேரும் என எதிர்பார்க்கலாம்.

இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் நலன் கருதி அவர்கள் தங்கள் சேவைகளில் செலவிடும் நேரத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் வசதியை அளிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் இதற்கான முன்முயற்சி பயனாளிகளிடம் இருந்து வருவதே நல்லது. நம் நேரத்தை கட்டுப்படுத்துவதை இணைய நிறுவனங்களின் கைகளில் கொடுக்காமல் இதை நாமே கையில் எடுத்துக்கொள்வேமே.

ஆக, இனி ஸ்மார்ட்போனை கையில் எடுக்கும் போது அல்லது நிலைத்தகவல் வெளியிடும் போது நம்முடைய டிஜிட்டல் ஆரோக்கியத்தையும் நினைவில் கொள்வோம்.

நிற்க, டிஜிட்டல் ஆரோக்கியம் காப்பதை இப்போது இணையத்தில் பாட திட்டமாகவே வழங்குகின்றனர் தெரியுமா! https://www.futurelearn.com/courses/digital-wellbeing

Add to
Shares
18
Comments
Share This
Add to
Shares
18
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக