இணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன?

cyber simman
1st Jul 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களை அறிந்து கொள்ள வேண்டுமா? 

டைம் இதழ் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான டைம் இதழின் டிரேட்மார்காக ’அதன் ஆண்டின் சிறந்த மனிதர்’ தேர்வு அமைகிறது. இது போலவே டைம் இதழ் அவ்வப்போது வெளியிடும் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவது. இந்த வரிசையில் டைம் இதழ், இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு நான்காவது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை பட்டியலில் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பட்டியலில் தெரிந்த பிரபலங்களும் உண்டு, அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களும் உண்டு. இந்த அம்சம் பட்டியலை கூடுதலாக கவனிக்க வைக்கிறது. அதே நேரத்தில் இணையம் அறிந்தவர்கள் என நாமெல்லாம் நினைக்கக் கூடிய பல பிரபலங்களும், இணைய நட்சத்திரங்களும் இதில் இடம்பெறவில்லை.

image


டைம் பட்டியல்

சமூக ஊடகங்களில் சர்வதேச அளவிலான செல்வாக்கு மற்றும் செய்திகளில் தாக்கம் செலுத்தும் தன்மையின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது. இது முழு முதல் பட்டியலா? இதற்கான அளவுகோள் சரியானதா? விடுபட்டவர்கள் இல்லையா? என்பது போன்ற கேள்விகளை எல்லாம் விட்டுவிட்டு, பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களையும், அவர்கள் கவனத்தை ஈர்த்ததற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால், இணைய உலகின் பல்வேறு போக்குகளை புரிந்து கொள்ள முடிகிறது.

பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில், பாப் பாடகி ரிஹானா, பாப் பாடகர் கான்யே வெஸ்ட், மாடல் அழகி கெய்லி ஜென்னர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் உலகறிந்தவர்களாக இருக்கின்றனர். மற்றபடி இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் அதிகம் அறியப்படாதவர்களே. அதாவது இணையம் மூலம் புகழ் பெறுவதற்கு முன் அப்படி தான் இருந்துள்ளனர்.

இணையம், குறிப்பாக சமூக ஊடகம் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்தவர்களாக இவர்கள் விளங்குகின்றனர். அதன் காரணமாகவே செல்வாக்கு பெற்றவர்களாக அறியப்படுகின்றனர்.

கொரிய இசைப்புயல்கள்

உதாரணத்திற்கு பிடிஎஸ் இசைக்குழுவையே எடுத்துக்கொள்வோம். நம்மில் பலர், பிடிஎஸ் குழுவா? என வியப்பாக கேட்கலாம். ஆனால், தீவிர பாப் இசை ரசிகர்கள் இப்படி கேட்க வாய்ப்பில்லை. அறிமுகமான ஐந்தாண்டுகளுக்குள் கொரியாவைச்சேர்ந்த இந்த இசைக்குழு உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. அதிலும் அமெரிக்காவில் இதன் ஆல்பங்கள் சக்கை போடு போடுவதாக டைம் தெரிவிக்கிறது. இந்த புகழுக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணம் சமூக ஊடகங்களில் ஆர்வத்தோடு இக்குழுவை பின் தொடரும் ரசிகர் படை தான். அதனால் தான் இணையம் மூலம் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பைபரையும், இணையத்தில் கோலோச்சும் டெய்லர் ஸ்விட் மற்றும் மைலி சைரஸ் போன்ற பாடகிகளை இக்குழு இணைய செல்வாக்கில் பின்னுக்குத்தள்ளியுள்ளது. கொரிய இசைக்குழுவுக்கு ஆங்கில மொழி ரசிகர்கள் மத்தியில் 50 மில்லியன் பாலோயர்கள் என்றால் பெரிய விஷயம் தான் அல்லவா?

இது கொரிய ஆச்சர்யம் என்றால், இந்த பட்டயலில் இடம்பெற்றுள்ள நடிகை நவோமி வாடனாபே ஜப்பானிய ஆச்சர்யமாக இருக்கிறார். நடிகை, நகைச்சுவை கலைஞர், பேஷன் டிசைனர் என பலமுகம் கொண்ட நவோமி, சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற ஜப்பானிய கலைஞராக இருக்கிறாராம். 10 ஆண்டுகளுக்கு முன் பாப் பாடகி பியான்ஸ் மற்றும் பாடகி லேடி காகாவை நகலெடுத்து இணையத்தில் வைரலான நவோமி அதன் பிறகு ஜப்பானின் பியான்ஸ் என அழைக்கப்படுகிறார். இவரது நகைச்சுவைக்கும், பேஷன் ஆலோசனைக்கும் ஜப்பான் அடிமை சாசனமே எழுதிக்கொடுத்திருக்கிறதாம்.

இண்ஸ்டா இளவரசி

இதே போல, இன்ஸ்டாகிராம் மகாராணிகளில் ஒருவராக திகழும், சியா கூப்பரும் இந்த பட்டியலில் கவனத்தை ஈர்க்கிறார். பேஷன் வலைப்பதிவாளரான சியா, இன்ஸ்டாகிராமில் @DiaryOfAFitMommyOfficial எனும் முகவரியில் செயல்பட்டு வருபவர். இண்ஸ்டாவில் இவரை பின் தொடராவிட்டால் கூட, இவரது முகவரி உங்கள் டைம்லைனில் எட்டிப்பார்க்க வாய்ப்பிருப்பதாக டைம் வர்ணிக்கிறது. இந்த புகழுக்கு எல்லாம் காரணம், நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் நச்சென வெளியிடும் கமெண்ட்கள் தானாம். அநேகமாக இண்ஸ்டாகிராமில் கமெண்ட் மூலமே முன்னுக்கு வந்த பிரபலமாக இவர் மட்டும் தான் இருப்பார் போலிருக்கிறது.

image


சியாவைப்போலவேம், ஜார்ஜியாவை சேர்ந்த 18 வயதான ரோலாண்ட் சாபோ புகழ்பெற்ற விதமும் ஆச்சர்யமாக தான் இருக்கிறது. இணையத்தில் வைரல் நிகழ்வுகளை கவனிப்பவர்கள் எனில், இந்த ஆண்டு இணையத்தை குழப்பத்தில் ஆழ்த்திய யானியா அல்லது லாரலா ('Yanny/Laurel') எனும் சொல் ஒலி குழப்ப நிகழ்வை கவனித்திருக்கலாம். உச்சரிப்பு இணைய தளத்தில் லாரல் எனும் சொல்லின் ஒலி யானி என்பது போல அமைந்திருப்பதாக கூறி, இது உண்மையில் யானியா அல்லது லாரலா என கேட்டு அவர் வெளியிட்ட பதிவு ரெட்டிட் தளத்தில் இருந்து பற்றிக்கொண்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த உச்சரிப்பை கேட்ட யாராலும், யானியா அல்லது லாரலா என தெளிவாக சொல்ல முடியாமல் இருவித ஒலி கேட்டது குழப்பத்தை உண்டாக்கி இந்த வீடியோவை மேலும் வைரலாக்கியது. இந்த குழப்பத்திற்கான விஞ்ஞான விளக்கம் எல்லாம் வெளியானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இணையம் இன்னும் இந்த குழப்பம் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறது.

இணைத்தை குழப்பியவர்

இணையத்தின் மூலம் ஊக்கம் அளிக்குவ் வகையில் செயல்பட்டு கவனத்தை ஈர்த்தவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். சவுதி அரேபியாவில் பெண்கள் காரோட்ட நிலவிய தடை விலக்கப்பட்டதற்கு காரணமாக விளங்கும் வலைப்பதிவாளரான இமான் அல் நப்ஜான் (Eman al–Nafjan) இதில் ஒருவர். சவுதியில் பெண்கள் காரோட்டுவதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது என சொல்லப்பட்ட காலத்தில் இவர் இது குறித்து எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இவரது இருமொழி வலைப்பதிவை சவுதிக்கு வரும் பத்திரிகையாளர்கள் தவறாமல் படிப்பது வழக்கம் என்கிறது டைம்.

இதே போலவே, பெண்களுக்கு எதிரான அணுகுமுறை கொண்டவராக அறியப்படும் அதிபர் ரோட்ரியோ டுடெர்டே, நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக பெண்மணி ஒருவர் வரக்கூடாது என தெரிவித்த போது, கலைஞர்கள் முதல் செயற்பாட்டாளர்கள் வரையான 12 பெண்கள் குழுவாக இணைந்து #BabaeAko எனும் ஹாஷ்டேகுடன் இணையத்தில் பெண்களுக்காக வாதாடும் வீடியோக்களை வெளியிட்டனர். நான் ஒரு பெண் என குறிக்கும் இந்த ஹாஷ்டேக் அதன் பிறகு ஒரு இணைய இயக்கமாகவே உருவாகியிருக்கிறது.

image


போர்க்குரல்

அமெரிக்காவிலும் இதே போல, பார்க்லான் பள்ளியில் 17 பேர் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த பள்ளி மாணவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கடுமையான குடியுரிமை கட்டுப்பாட்டு விதிமுறைகளால், எல்லையில் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படும் பிள்ளைகள் நலனுக்காக இணையம் மூலம் லட்சக்கணக்கில் நிதி திரட்டி நெகிழ வைத்த சார்லட்டே மற்றும் வில்னர் (Charlotte and Dave Willner ) ஜோடியும் இந்த பட்டியலில் உள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரியவர்கள் மத்தியில் ரயான் எனும் ஆறு வயது சிறுவனும் இருக்கிறார். ரயான், பொம்மைகளை விமர்சனம் செய்யும் யூடியூப் சானல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற சுட்டி பையன்.

எல்லாம் சரி, இந்த பட்டியலில் ஏன் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை? இது சர்சைக்குறிய கேள்வியா, சிந்தனைக்குறிய கேள்வியா!

டைம் இதழின் பட்டியலை பார்க்க: http://time.com/5324130/most-influential-internet/

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags