இன்று முதல் ஆவின் தயிர், நெய் விலை திடீர் உயர்வு: என்ன காரணம்?

5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆவின் நிர்வாகம் தயிர் மற்றும் நெய் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
0 CLAPS
0

5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆவின் நிர்வாகம் தயிர் மற்றும் நெய் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய வரி நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 18 முதல் அமலுக்கு வந்தன.

மேலும், தொகுக்கப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட இறைச்சி (உறைந்தவை தவிர), மீன், பனீர், தேன், கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள் மற்றும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

அதில், பாக்கெட்டுகளில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் ஜிஎஸ்டி வரி. சில்லறையில் விற்கப்படும் பொருட்களுக்கு வரி இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக மத்திய அரசு பட்டியலிடப்பட்ட உணவுப்பொருட்கள் அனைத்துக்கும், 25 கிலோ அல்லது 25லிட்டருக்கு குறைவாக இருந்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி என அறிவித்திருந்தது.

இந்நிலையில், பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஆவின் பால், தயிர் விலை உயர்வு:

  • நெய் லிட்டருக்கு ரூ.50, தயிர் லிட்டர் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
  • 100 கிராம் தயிர் விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆக அதிகரித்துள்ளது.
  • 200 கிராம் தயிர் விலை ரூ.25ல் இருந்து 28 ஆக உயர்ந்துள்ளது.
  • பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.
  • ஒரு லிட்டர் நெய் ரூ.538ல் இருந்து ரூ.580 ஆக அதிகரித்துள்ளது.
  • அரை லிட்டர் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆக அதிகரித்துள்ளது.

Latest

Updates from around the world