ஆவின் Vs அமுல் - கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் தலைதூக்கும் பால் சர்ச்சை!

அமுல் நிறுவனம் தனது விற்பனையை தொடங்க உள்ளது கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆவின் Vs அமுல் - கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் தலைதூக்கும் பால் சர்ச்சை!

Thursday May 25, 2023,

4 min Read

அமுல் நிறுவனம் தனது விற்பனையை மாநில அளவில் தொடங்க உள்ளது கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

குஜராத் கோஆப்ரேட்டிவ் மில்க் மார்கெட்டிங் பெடரேஷன் (GCMMF) என்பது நம் நாட்டின் மிகப் பெரிய பால் கூட்டுறவு அமைப்பு. இந்தக் கூட்டுறவு அமைப்பு இந்தியாவில் ’அமுல்’ என்கிற பிராண்ட் பெயரில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் விற்பனை நிறுவனமான இது, தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமுல் Vs நந்தினி:

கர்நாடகாவில் உள்ள பால் கூட்டுறவு அமைப்பு சார்பில் ’நந்தினி’ என்ற பெயரில் பால், பால் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான இது, பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

amul

இதனிடையே, கர்நாடகாவில் குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் நந்தினியை அழித்துவிட்டு, குஜராத்தின் அமுலை வாழவைப்பதா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

காங்கிரஸ் கட்சி இதனை பெரிய பிரச்சனையாக கையில் எடுக்க, கன்னட அமைப்புகளும் ஆதரவாக களமிறங்கின. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பாஜகவிற்கு எதிராக வாக்காளர்கள் திரும்ப அமுல் பால் சர்ச்சையும் மிக முக்கியமான காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

தற்போது இதே பிரச்சனை தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆவின் Vs அமுல்:

தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனமான ’ஆவின்’ மூலமாக பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமாக நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருள்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.

amul

தனியார் நிறுவனங்களை விட ஆவின் பால் விலை குறைவு என்பதால் அதிகமான மக்கள் ஆவின் பாலை வாங்குகின்றனர். பால் உற்பத்திக்கான விலைவாசியும் அதிகரித்த நிலையில், பால்கொள்முதல் விலையை அதிகரிக்கும் படி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. இதனால் ஆவின் கொள்முதல் செய்யும் பாலின் அளவு வெகுவாக குறையும் நிலை உருவாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

”தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அமுல் நிறுவனத்தின் செயல்பாடு, கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்படும் ஆவின் நிறுவன பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்..." என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 1981ம் ஆண்டு முதல் ஆவின் செயல்பட்டு வருவதையும், பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான வருவாயை கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.”
amul

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமையும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். எனவே, உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமுல் நிறுவனத்தால் சிக்கலா?

போட்டிக்கு ஆவின் என்ற அரசு நிறுவனம் இருப்பதால் தான் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி வருகின்றன. ஒருவேளை ஆவின் நிறுவனம் நழுவடைந்து பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி சரியும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆனால், இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 1 முதல் 2 ரூபாய் வரை அதிகம் தருகின்றன. இப்போது அமுல் விற்பனை தொடங்கும் பட்சத்தில் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்,” எனக்கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு வெறும் 16% மட்டுமே.இதை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்,

“மாநிலங்களுக்கு மாநிலம் அரசு சார்பில் பால் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதை மீறும் வகையில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் நிறுவனங்களை தொடங்குவது வரம்பு மீறுவது. ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்றும், தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருவதாகவும் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் திறன் இப்போது 40 லட்சம் லிட்டராக உள்ளது. இதை 70 லட்சம் லிட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறையின் புதிய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்கை 50% ஆக அதிகரிக்க இது போதுமானதல்ல. ஆனால், அமுல் நிறுவனத்தின் அதிரடி நுழைவால் இருக்கும் சந்தைப் பங்கையும் அமுலிடம் ஆவின் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.