பதிப்புகளில்

'சானிட்டரி பேட்' அணிந்த முதல் ஆணின் கதை: ஏழைப் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கண்ட புரட்சி மனிதன்!

குறைந்த விலை சானிட்டரி பேட் தயாரிப்பு மூலம் புதிய சமூக மாற்றத்துக்கு வித்திட்ட கோவை முருகானந்தம்!​

9th Jul 2016
Add to
Shares
10.7k
Comments
Share This
Add to
Shares
10.7k
Comments
Share

கோவை அருகே பாப்பநாயக்கன் புதூரிலிருந்துதான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கதை தொடங்குகிறது. முருகானந்தம் - அவருடைய குடும்பம் மிகவும் பெரியது. அவருடைய பாட்டிக்கு 24 குழந்தைகள். நான்காவதாக பிறந்தவர்தான் முருகானந்தத்தின் அம்மா. அவர்களுடையது கூட்டுக் குடும்பம். உறவினர்களும் அருகேதான் வசித்துவந்தனர். அப்பா அருணாச்சலம் நெசவு செய்துவந்தார், அம்மா வனிதா. அவர்களுக்குப் பிறந்தவர்தான் முருகானந்தம். முருக கடவுளிடம் வேண்டிக் கொண்டதால் பிறந்த குழந்தை என்பதால் அனைவரும் அவரை 'முருகா..முருகா.' என்றே அழைத்தனர். பெண் குழந்தைதான் வேண்டும் என்று அம்மா ஆசைப் பட்டிருந்தார். எனவே, முருகானந்தத்தை பெண் குழந்தையாகவே பாவித்து வளர்த்தனர்.

"பெண் குழந்தை போன்று அம்மா எனக்கு அலங்காரம் செய்வார்கள். முடியை வெட்ட விடாமல் பின்னல் போட்டு விடுவார்கள். நண்பர்கள் நக்கல் செய்தார்கள். ஆனால் சில தினங்களில் அதுவே பழகிவிட்டது." என்று குழந்தை பருவத்தை பற்றி புன்முறுவலுடன் கூறினார்.
image


முருகானந்தம் படித்தது எல்லாம் அரசு பள்ளியில்தான். அந்த அரசு பள்ளிக்கு 4 சுவர்கள் இல்லை. வெட்டவெளியில் தான் பள்ளி நடைபெறும். ஆனால் விளையாட மைதானம் இருந்தது. வயல்வெளி, பறைவைகள் என்று இயற்கை சூழல் வாய்ந்த பள்ளியில் படித்தார்.

"இயற்கையோடு ஒன்றிய பள்ளியில் படித்தேன். பட்டாம் பூச்சி, பறவைகள், கால்நடைகளுக்கு பின்னால் ஓடி விளையாண்டோம். மரங்களில் ஏறி விளையாடினோம். இயற்கையிடமிருந்து 90 சதவீதமும், ஆசிரியர்களிடமிருந்து 10 சதவீதமும் படித்தேன்."

முருகானந்தம் உயர்ந்த சாதி என்றாலும் அவருடைய நட்பு வட்டாரம் ஆடு மேய்ப்பவர்களுடனும், செருப்பு தைப்பவர்களுடனும்தான் இருந்தது. 'மொத்தமாக ஆடுகளை எப்படி மேய்க்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே அவர்களுடன் நீண்ட நேரம் இருப்பேன். திரும்ப வீட்டுக்கு வரும் போது அம்மா என்னை குளிப்பாட்டி சுத்தி தெளித்த பின்னர்தான் வீட்டுக்குள் விடுவார்' என்று சிறுவயது நாட்களை நினைவு கூறினார்.

சிறுவயதில் விளையாடித் திரிந்தாலும், தந்தைக்கு உதவியாகவும் இருந்தார். தந்தையின் உழைப்பை புரிந்து கொண்டார். நெசவு வேலை எளிதானதல்ல என்பதை உணர முடிந்தது. 15 நாட்களுக்கு ஒருமுறை அவரது தந்தை டிசைன்களை மாற்றும் அளவுக்கு கலை நுணுக்கம் தெரிந்தவராக இருந்தார். தந்தையின் வேலைப்பாடுகள் முருகானந்தத்தை பெரிதும் கவர்ந்தது. அப்பாவின் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது. அப்படி இருக்கும் போது ஒரு சாலை விபத்தில் திடீரெனெ தந்தை இறந்துவிட்டார். அப்போது முருகானந்தம் 10 ஆம் வகுப்பில் இருந்தார். அப்பாவுக்கு பின் முருகானந்தம் உள்பட 3 குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு அம்மாவை வந்து சேர்ந்தது. அப்போதெல்லாம் பெண்களுக்கு வயல் வேலைகள் மட்டுமே இருந்தது. ஒரு நாள் கூலியாக 10 முதல் 15 ரூபாய் வரை கிடைக்கும். அது போதாது என்றாலும், மூன்று பேரையும் படிக்க வைக்க ஆசை பட்டார்கள்.

image


"என்னை போலீஸ் ஆகவும், இரண்டாவது பையனை வக்கீல் ஆக்கவும், மூன்றாவது மகனை கலெக்டர் ஆக்கவும் அம்மா ஆசைப் பட்டார். அம்மா நிறைய சினிமா பார்ப்பார்கள். வைஜெயந்தி மாலா, ஹேமா மாலினி, சவுகார் ஜானகி ஆகியோர் சினிமாவில் சாதிப்பது போல் தம்மாலும் சாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் நிஜ வாழ்வில் அது கடினம் என அவருக்கு தெரியவில்லை".

தனது அம்மாவின் அறியாமை குறித்து தெரிந்தும் அவரை பெரிதும் நேசித்தார் முருகானந்தம். அம்மாவின் வருவாயில் குடும்பம் நடத்த முடியவில்லை என்கிற சூழ்நிலை வந்தது. அப்படி தனது 14 வயதில் பள்ளிப்படிப்பை விட்டார் முருகானந்தம். "வேப்ப மரத்தின் கீழ் நின்று யோசித்த போதுதான் திடீரென அத்தகைய முடிவை எடுத்தேன். ஆடு மேய்க்கும் பசங்களோடு இருந்தபோது அம்மா படும் கஷ்டம் குறித்து பேச்சு வந்தது. அம்மாவுக்கு உதவ வேண்டும் என்றால் படிப்பை விடுவது தவிர வேறு வழி இல்லை என்பதால் அந்த முடிவுக்கு வந்தேன்."

பின்னர் பல இடங்களில் முருகானந்தம் வேலை செய்துள்ளார். பட்டாசு விற்பனை, கணபதி சிலை விற்பனை, இட்லி வியாபாரம், கரும்பு விற்பனை என்று பல வேலைகள் செய்துள்ளார். பின்னர் வெல்டிங் வேலை ஒன்றில் சேர்ந்துள்ளார். அப்போது அவர் சிறுவன் என்பதால் டீ, பீடி வாங்கி கொடுக்கும் வேலைதான் அவருக்கு தந்தார்கள். ஆனாலும் சுய முயற்சியில் வெல்டிங் வேலையை கற்றுக்கொண்டார் முருகானந்தம்.

"வெல்டிங் வேலையை விட வேறு ஒரு வேலையும் இருந்தது. குடிகார முதலாளி குடித்துவிட்டு விழுந்து கிடப்பார். அவரை பத்திரமாக வீடு சேர்ப்பதும் என் வேலையாக இருந்தது. சில நேரங்களில் சாக்கடையில் கூட கிடப்பார், தூக்கிச்செல்ல வேண்டும்."

அதனாலேயே அந்த வேலையை விட முடிவு செய்தார் முருகானந்தம். இதை முதலாளியிடம் சொன்னபோது, "நீ எங்கேயும் போக வேண்டாம் இந்த கடையை எடுத்துக்கொள் என்று அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. குடி போதையில் சொல்கிறாரோ என்று முதலில் நினைத்திருக்கிறார். அப்படி இல்லை நிஜமாகவே சொல்கிறார் என்பது தெரிந்த போது பெருமையாக உணர்ந்தார் முருகானந்தம். ஆனால் அதனை வாங்கும் அளவுக்கு பணம் இல்லை என்பதை சொன்ன போது அதற்கும் ஒரு வழி சொன்னார் முதலாளி. அதன் படி வட்டிக்கு பணம் பெற்று வெல்டிங் கடை உரிமையாளர் ஆனார் முருகானந்தம். இனிமேல் முதலாளியை இரவு வீட்டுக்கு தூக்கிச் செல்லும் வேலை இல்லை என்பதை நினைத்தபோது அதுதான் பெரிய சந்தோஷமாக இருந்தது!

பேட் உருவாக்கும் இயந்திரம்

பேட் உருவாக்கும் இயந்திரம்


ஒர்க் ஷாப்பை சுத்தம் செய்து லட்சுமி தேவியின் படத்தை மாட்டினார். அப்படித்தான் முதன் முதலில் முருகானந்தம் தொழில் முனைவராக மாறினார். "எப்போதும் ஒரே மாதிரியான வேலை செய்ய எனக்கு பிடிக்காது. இந்த மாற்றம் எனக்கு பிடித்திருந்தது. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது."

அந்த புதிய சந்தர்ப்பத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். மற்றவர்களை போல் அல்லாது புதிய புதிய மாடல்களில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கிரில், இரும்பு கேட் ஆகியவற்றை செய்து கொடுத்தார். அவற்றில் ரங்கோலி டிஸைன் வேலைப்பாடுகளை புகுத்தினார். அதனால் வெளி ஊர்களில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் கிடைத்தன. வியாபாரம் பெருகியது. அப்போதுதான் அம்மா அவருக்கு பெண் பார்க்கத் தொடங்கினார். 1998 ஆம் சாந்தி என்பவருடன் திருமணம் ஆனது.

திருமணத்துக்கு பிறகு அவரது நிலைமை மாறியது. மனைவியை மகிழ்விக்க பல முயற்சிகள் எடுத்தார். கூட்டுக் குடும்பம் என்பதால் மத்திய உணவின் போது மட்டும்தான் மனைவியோடு பேச முடிந்தது. ஒருநாள் அவரது மனைவி, முதுகுக்குப் பின் எதையோ மறைத்திருக்கிறார். என்ன என்று கேட்ட போது 'உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்' என்று கோபமாக கூறியிருக்கிறார். அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல் முருகானந்தத்துக்கு அதிகரித்தது. அது பழைய துணி என்றும், எதற்கோ பயன்படுத்தி விட்டு, வீட்டுக்குப் பின்புறம் யாரும் காணாமல் அதனை குப்பையில் போட்டு விடுகிறார்கள் என்பதை அவர் தெரிந்து கொண்டார். பின்னர் ஒருவழியாக மாதவிடாய் காலத்தில் அதனை பயன் படுத்துகிறார்கள் என்பதையும், தனது மனைவியும் அந்த பழைய துணிகளை அதற்கு பயன் படுத்துகிறார் என்பதை புரிந்து கொண்டார். அதனால் உடலுக்கு கெடுதல் வரும் என்பதையும் உணர்ந்தார். எனவே புதிய துணிகளை அதற்கு உபயோகிக்க மனைவியை அறிவுறுத்தினார்.

"அந்த கால கட்டத்தில் கடைகளில் அதற்கென ஒரு பொருள் கிடைக்கிறது என்று தெரியும். ஆனால் அதன் பெயர் சானிட்டரி பேட் என்பதோ, அதன் பிராண்ட் பெயர் என்ன என்பதோ தெரியாது. அதனை வாங்கி பயன்படுத்த மனைவியிடம் சொன்னேன்". அதற்கு மனைவி, "நான் அதைப் பயன்படுத்தத் தொடங்கினால் பால் வாங்க பணம் இருக்காது' என்று சொன்னார். 'ஏன் அப்படி சொன்னார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?' என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது.

"மனைவியை சந்தோஷப்படுத்த நினைத்து, நானே மெடிக்கல் ஷாப் போய் அதனை வாங்கிவர முடிவு செய்தேன்".

அங்கிருந்த பெண் ஊழியர் ஒரு பேப்பரில் சுற்றி யாருக்கும் தெரியாதவாறு என் கையில் திணித்தார். ஏதோ தடை செய்யப்பட்ட, கடத்தல் பொருள் போல் பாவித்து அதனை தந்தார். அவரின் செயலைப்பார்த்த பிறகுதான் இது பெண்கள் மட்டுமே சென்று வாங்கும் பொருள் என்பதை உணர்ந்தேன். ஆண் சென்று வாங்கியதை அவர் ஆச்சரியமாக பார்த்ததை புரிந்து கொண்டேன். அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பிரித்து பார்த்தேன். அதை எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற கேள்வி அடுத்ததாக எழுந்தது."

தனது தயாரிப்புகளுடன் முருகானந்தம்

தனது தயாரிப்புகளுடன் முருகானந்தம்


அதில் இருப்பது காட்டன் என்பதை தெரிந்து கொண்டார். 1990 வாக்கில் அதில் பயன்படும் 10 கிராம் பஞ்சின் விலை 10 காசுதான். அதனை 6/-ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கணக்குப் போட்டார் முருகானந்தம். இந்த அளவுக்கு அதிகமான மார்ஜின் வைத்து எந்த பொருளும் விற்பனை செய்வதை அவர் பார்த்ததில்லை. அது பல கேள்விகளை அவர் மனதில் எழுப்பியது. அப்படி தோன்றிய ஒன்றுதான் ஏன் தாமே ஒரு பேட் தயாரித்து மனைவிக்கு கொடுத்தால் என்ன என்பது. மனைவியையும் சந்தோஷப் படுத்தலாம். செலவும் குறையும் என்று நினைத்தார்.

அதற்காக எட்டு அங்குல நீளத்தில், நீள் சதுர வடிவில் 'பேட்' ஒன்றுக்கு உருவம் கொடுத்தார். இரண்டே நாட்களில் அதனை செய்து முடித்தார். அவருக்கு பெரு மகிழ்ச்சி. ஏதோ பெரிய விஷயத்தை செய்து முடித்தது போல் நினைத்தார். மனைவியிடம் கொடுத்தால் பாராட்டுவார் என்று நினைத்தார். இரண்டு நாட்கள் ஆகியும் மனைவியிடமிருந்து பதில் இல்லை. மேலும் ஒன்றிரெண்டு நாட்கள் காத்திருந்தார். ஒருநாள் பொறுமை இழந்து அவரே கேட்டுவிட்டார். நான்கு நாட்களுக்கு ஒருமுறை எல்லாம் மாதவிடாய் வராது என்று அவர் மனைவி சூசகமாக சொன்னார். அது அவருக்கு புரியவில்லை.

மாதவிடாய் எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் வர, கோயிலுக்குப் போனால் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து அங்கு சென்றார். ஒரு வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் நிறைய பேர் கோயிலுக்குள் செல்லாமல் வெளியே நின்றவாறு சென்று விட்டனர். அதனை பார்த்தவுடன் வெள்ளிக்கிழமைதான் பெண்களுக்கு மாதவிடாய் வரும்போல் இருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார். இதனை பின்னர் மனைவியிடம் கேட்டபோது மாதத்துக்கு ஒரு முறைதான் வரும் என்று சொல்லிப் போய்விட்டார்.

அதன்பிறகுதான் மாதவிடாய் நாட்களை பற்றி தெரிந்துகொண்டார். அது குறித்து கூடுதலாக படித்து அறிந்து கொண்டார் முருகானந்தம். தமது தயாரிப்பை பயன்படுத்திய மனைவி, 'இதைவிட அந்த பழைய துணியே மேல் 'என்று சொல்லிவிடடார். அது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. ஒரு பெரிய பின்னடைவாக நினைத்தார். ஆனால் அடுத்து இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்று தமது முயற்சியை அவர் தொடர்ந்தார்.

அப்படி மற்றோரு புது மாதிரி பேட் ஒன்றை தயாரித்தார். பயன்படுத்திப் பார்க்க மனைவி மறுத்து விட்டார். யாரிடம் செல்வது என்று யோசித்தார். வேறு பெண்களிடம் கேட்டால் தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற பயம் இருந்தது. எப்படி சோதிப்பது என்கிற கவலையில் அவர் ஆழ்ந்தார். அதன் பிறகு அதனை தனது தங்கைகளிடம் சோதிப்பது என்கிற முக்கிய முடிவினை எடுத்தார். "மனைவிக்குப் பிறகு அவர்களால்தான் தனக்கு உதவ முடியும் என்று நம்பினேன். ஆனால் அவர்களிடமிருந்தும் பதில் வரவில்லை" அவர்கள் அதனை பயன்படுத்தினாலும் வெட்கம், தயக்கம் காரணமாக அதன் பயன்பாடு குறித்து அவர்களால் என்னிடம் பேச முடியவில்லை.

"தங்கைகள் ரொம்ப வெட்கப் பட்டார்கள். என் முகத்தோடு முகம் பார்த்து பேச மாட்டார்கள். சுவரை பார்த்துதான் பேசுவார்கள். அந்த ஒன்றிரண்டு வார்த்தைகள் மூலம் எனது தயாரிப்பு வேலை செய்கிறதா இல்லையா என்பதை அறிய முடியவில்லை. எங்கள் வீட்டு சுவர்களில் கணபதி, சிவன் கடவுள் படங்கள் இருந்ததால் மாதவிடாய் குறித்து போசுவதே தவறு என்று நினைத்தார்கள். தொடர்ந்து கேட்ட போது அம்மாவிடம் சொல்லிவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதோடு சகோதரிகளிடம் சோதனையை நிறுத்திக் கொண்டேன்."

அடுத்ததாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளிப்படையாக இருப்பார்கள். வெட்கப்பட மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை அணுக முடிவு செய்தார். அப்படித்தான் கோவை மருத்துவ கல்லூரி மாணவிகளிடம் சென்றார். இது குறித்து கேட்ட உடனே அவர்கள் வெட்கப்பட்டு ஓடினார்கள். மருத்துவ மாணவர்களே முன்வரவில்லை. இதற்கு படிக்காத பெண்களே மேல் என்று நினைத்தார். தொடர்ந்து அதனை சோதித்தறிய பெண்கள் யாரும் கிடைக்கவில்லை. சாமியார்களிடம் மட்டும் எப்படி அவ்வளவு பெண்கள் செல்கிறார்கள் என்று யோசித்தார்.

மற்றவர்கள் போல் தோல்வியை அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே ஒரு உறுதி மொழி எடுத்துக் கொண்டார். "உறுதியான, தரமான, விலை குறைந்த பேட் ஒன்றை உருவாக்காமல் ஓய மாட்டேன்" என்பதுதான் அந்த உறுதிமொழி.!

அடுத்த சில நாட்கள் யோசித்து கடைசியில் யாருமே துணியாத அந்த முடிவை எடுத்தார். தாமே ஏன் அந்த பேடை அணிந்து சோதித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தார். அதற்காக ஒரு கால்பந்து பிளாடர் ஒன்றை வாங்கி வந்தார். அதில் ஆட்டு ரத்தத்தை நிரப்பி அதனை கர்ப்பப் பையாக பாவித்து தனது வயிற்றுப் பகுதியில் கட்டினார். மெதுவாக நடந்து பார்த்தார்... வேகமாக நடந்தார்... ஓடினார்... சைக்கிள் ஒட்டியும் பார்த்தார்.

ஒரு சானிட்டரி பேட் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்சும், எவ்வளவு நேரம் அது தாங்கும் என்பதை சோதித்தார். பத்து நாட்கள் வரை இப்படி பெண்கள் பிரச்சனையை அவரே நேரடியாக அனுபவித்தார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. அவர் பயன்படுத்திய காட்டன் ரத்தத்தை போதுமான அளவுக்கு உறிஞ்சவில்லை. மாற்றாக மோசமான வாடை உருவானது. நிராசை அடைந்த அவர் மீண்டும் சில பல மாற்றங்களை அதில் ஏற்படுத்தினார். பின்னர் மருத்துவ மாணவிகளிடமே இந்த முறை தஞ்சம் அடைந்தார்.

இந்த முறை அவர்கள் பயன்படுத்த முன்வந்தனர். தன்னுடையதை மட்டுமல்ல, அவர்கள் பயன்படுத்திய பன்னாட்டு நிறுவனங்களின் 'பேட்'களையும் சோதித்து பார்க்கக் கொடுத்து உதவினர். அதில் எப்படி ரத்தக்கரை படிந்துள்ளது. தமது தயாரிப்பும் அதுவும் எப்படி வேறுபடுகிறது என்பதை எல்லாம் கண்டறிந்தார். கேள்வி பதில் மாதிரியான வினா தாள் ஒன்றையும் அவர்களிடம் கொடுத்து பதில் பெற்றார். அதில் போதுமான திருப்தி அவருக்கு வரவில்லை. அந்த கேள்விகளுக்கு ஏனோதானோ என்று அவர்கள் நிரப்பி இருப்பதாகவே கருதினார். அப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது.

image


"மாணவிகளை அடிக்கடி சந்திப்பதை மனைவி விரும்பவில்லை. ஒரு நாள் சாப்பிடும் போது அந்த பேச்சு வந்தது. மனைவி கோபமாக கேட்டார். நான் கேட் ரிப்பேர் செய்யவே சென்றேன் என்று பொய் சொன்னதை அவர் நம்ப வில்லை. அழுது சண்டை போட்டார்." பின்னர் அவர் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு செல்லும் அளவுக்கு போனது. அங்கு சென்ற பிறகு விவாகரத்து நோட்டீஸ் கூட அனுப்பினார். அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒருவகையில் அந்த தனிமை அவருக்கு வசதியாகவே அமைந்தது. ஆய்வுக்கு அதிக நேரம் கிடைத்தது. வேலைகள் விரைவாக நடந்தன.

அப்போதுதான் பன்னாட்டு தயாரிப்பில் பயன்படுத்துவது சாதாரண காட்டன் அல்ல என்பது தெரிய வந்தது. எப்படி அதனை தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பல நிறுவனங்களுக்கு கடிதங்கள் எழுதினார். பின்னர் அதில் பயன்படுத்துவது செல்லுலஸ் பொடி என்பதை தெரிந்து கொண்டார். ஐ.ஐ.டி உள்பட பல சோதனை சாலைகளுக்கு அனுப்பி தெரிந்து கொண்டார். அப்போது தான் அந்த செல்லுலஸ் பொடி என்பது பைன் மரத்தின் பசையில் இருந்து எடுப்பதாக தெரிந்தது. இது புது உற்சாகத்தை தந்தது. புது நம்பிக்கை பிறந்தது.

அந்த நேரத்தில்தான் அடுத்த கட்ட சோதனை அவர் வாழ்வில் நடந்தது. அதன் பிறகு கஷ்டங்கள் அதிகரித்தன. அவருடைய அடையாளம் சிதைந்து போனது. ஒருநாள் பயன்படுத்தப்பட்ட பேட்களை கத்தியால் வெட்டி சோதித்துக் கொண்டிருந்தபோது முருகானந்தம் சிக்கன் வெட்டுவதாக நினைத்திருக்கிறார் அவரது அம்மா. அருகே வந்து பார்த்த அம்மா அதிர்ந்தே போனார். அவர் மனம் உடைந்து போனது. மகன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை. பைத்தியம் பிடித்து விட்டதாக நினைத்தார். அப்படித்தான் அம்மாவும் அவரை விட்டுப் பிரிந்தார்.

அம்மா போனபிறகு கிராமமே இவரை பைத்தியக்காரனாக பார்த்தது. இவர் பெண்களிடம் தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார்கள். அதிக பாலியல் ஆர்வம் காரணமாக இப்படி ஆகிவிட்டான் என்று முடிவு செய்தார்கள். அதனால்தான் சானிட்டரி பேட்டை சேகரித்து திரிகிறார் என்று எண்ணினார்கள். ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அனைவரும் முருகானந்தத்துக்கு எதிராகவே பேசினார்கள். சங்கிலியால் வேப்ப மரத்தில் கட்டிப்போட உத்தரவானது. அப்படியும் குணமாகவில்லை என்றால் ஊரைவிட்டு துரத்துவது என்று முடிவு செய்தார்கள். முருகானந்தமோ அன்று இரவோடு இரவாக அந்த கிராமத்திலிருந்து தப்பிச் சென்றார்.

வேறு ஊருக்குப் போனபிறகும் தனது தயாரிப்பில் குறியாகவே இருந்தார். அடுத்த கட்டமாக என்ன மாதிரியான இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன என்கிற ஆய்வில் இறங்கினார். அதனுடைய குறைந்த பட்ச விலை மூன்றரை கோடி என்று கேட்டபோது அதிர்ந்து போனார். அதனை தாமே ஏன் தயாரிக்கக் கூடாது என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் மனைவி, தாய், உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் உடன் இல்லாத அந்த நாட்கள் மிகவும் கடினமானதாக கடந்தது. ஆனால் தனது முயற்சியில் தோற்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஏழை பெண்களுக்கு குறைந்த விலை பேட் உருவாக்கித் தர வேண்டும் என்பதில் தீர்க முடிவோடு செயல்பட்டார்.

அவரது வாழ்க்கையில் அவர் கடந்து வந்த மிக மிக கடினமான சம்பவங்களைக் கூட யுவர் ஸ்டோரியிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

 "குடும்பத்தை விட்டும், ஊரை விட்டும் சென்ற பிறகு ஒரு 10 அடிக்கு 10 அடி அறையில்தான் தங்கினேன். என்னோடு மேலும் நான்கு பேரும் அந்த சிறிய அறையில் தங்கி இருந்தனர். சரியாக கால் நீட்டி படுக்கக் கூட இடம் இருக்காது. பல நாள் சுவரில் சாய்ந்தபடியே தூங்கினேன். அதனால் தலை சுற்றல், தலை வலி அடிக்கடி வந்து படுத்தியது." 

நல்ல வேலை, வீடு, மரியாதை இவற்றை எல்லாம் விட்டு விட்டு இந்த சானிட்டரி பேட் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார். இரவு பகலாக உழைத்து கடைசியில் ஒரு இயந்திரத்துக்கு முருகானந்தம் வடிவம் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் ஷேவிங் செய்ய நேரமில்லாமல் தாடியோடுதான் திரிந்திருக்கிறார்.

முருகானந்தம் தினமும் இரும்பும் கையுமாகத்தான் அந்த நாட்களில் நடந்திருக்கிறார். வெல்டிங் தெரிந்திருந்ததால் தனது விருப்பத்துக்கும், எண்ணத்துக்கும் ஏற்ப இயந்திரம் வடிவமைக்க முடியும் என்கிற நம்பிக்கை பலனை தந்தது. அப்படி எட்டு ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பின் ஒரு இயந்திரத்தை முழுமையாக தயாரித்து முடித்தார். அதற்கு ஆன செலவு வெறும் 65,000/- ரூபாய்தான். பிறகு சோதனை வேலைகளை தொடங்கினார். தோல்வி தந்த சிறு சிறு பிரச்சனைகளை சிறிது சிறிதாக சரி செய்தார். கடைசியாக குறைந்த விலையில் ஒரு இயந்திரம் தயாரானது. அதன் மூலம் குறைந்த விலை சானிட்டரி பேட் உற்பத்தியையும் வெற்றிகரமாக தொடங்கினார் முருகானந்தம். பிரிந்து சென்ற குடும்பமும் இவருடன் இணைந்தனர்.

பின்னர் சென்னை ஐ.ஐ.டி யில் சென்று தனது இயந்திரத்தை நிபுணர்களுக்கு விளக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு நடந்த ஒரு போட்டியில் முருகானந்தமும் கலந்து கொண்டார். இந்த கண்டுபிடிப்பை பார்த்து ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பெரிதும் பாராட்டினர். ஆனால் போதுமான அளவுக்கு அவர்களிடம் ஆங்கிலத்தில் விளக்க முடியவில்லை. அவர்களோ அனைத்தையும் புரிந்து கொண்டு பாராட்டினார்கள்.

பில் கேட்ஸ் உடன் உரையாடல்

பில் கேட்ஸ் உடன் உரையாடல்


அதனைத் தொடர்ந்துதான் முருகானந்தம் பெயர் 'சிறந்த கண்டுபிடிப்பு' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் பெற்றார்!

பல நிபுணர்கள் சொல்லும் ஆர் & டி முறை முருகானந்தத்துக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது. டிரைல் & எரர் மூலமே வெற்றி கிடைக்கும், அதுதான் சிறந்த முறை என்று நம்பினார். அதன் மூலம் தொடர் வெற்றிகள் கிடைத்தன. பல பல பரிமாணங்களில் தயாரிப்பை தொடர்ந்தார். சில ஆண்டுகளில் உலக பிரபலமும் ஆனார். பி.பி.சி, சி.என்.என், அல் ஜஸீரா போன்ற பிரபல தொலைக்காட்சிகள் அவரை பேட்டி கண்டு அவரது கதையை ஒளிபரப்பின. சிலர் 'பெண்களுக்காக சானிட்டரி பேட் அணிந்த முதல் ஆண்' என்று சொன்னார்கள்.

பின்னர் ஜெயஸ்ரீ என்கிற நிறுவனத்தை தொடங்கி தனது குறைந்தவிலை பேட் உற்பத்தியை ஆரம்பித்தார். 'கோவை' என்கிற பெயரில் அதனை விற்பனைக்கும் கொண்டுவந்தார். அவரே தயாரித்து, அவரே விற்பனை செய்வது என்பது கடினமாக இருந்தது. மார்க்கெட்டிங் சரியாக வரவில்லை. குறைந்த விலை பேட் என்பதால் மக்கள் நம்பிக்கையை உடனே பெற முடியவில்லை. விலை குறைவு என்பதால் போதிய தரம் இருக்காது என்று மக்கள் நினைத்தார்கள். விற்பனை மந்தமானதால் தேக்கம் ஏற்பட்டது. அவற்றை மனைவிதான் பயன்படுத்தி வந்தார். மனைவி மூலமாக கொஞ்சம் விற்பனை நடந்தது. அண்டை வீட்டுப் பெண்கள், நண்பர்கள் என்று பெண்கள் வட்டம் வாங்கிச் சென்றது. அப்படி மனைவி ஒரு விற்பனை மாடல் ஆனார். தயாரிப்பை மட்டுமே விற்றால் போதிய லாபம் கிடைக்காது என்பதால் இயந்திரங்களையும் தயாரித்து விற்பனை செய்ய முன்வந்தார். அதனை பெண்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், பெண் தொழில் முனைவோருக்கும் அதிகமாக விற்கத் தொடங்கினார்.

குடும்பத்துடன் முருகானந்தம்

குடும்பத்துடன் முருகானந்தம்


இயந்திர விற்பனை மூலம் பல லட்ச ரூபாய் வருமானம் வந்தது. ஆனாலும் கோடிக்கணக்கில் விற்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இல்லை. அனைவருக்கும் இந்த குறைந்த விலை பேட் போய் சேர வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. இந்தியா முழுதும் இந்த இயந்திரம் பிரபலமானது. அதன் மூலம் குறைந்த விலை பேட் பாப்புலர் ஆனது. பல பெண் சமூக ஆர்வலர்கள் மூலம் அது பிரபலமானது.!

முருகானந்தத்தின் இந்த கண்டுபிடிப்பு நாட்டில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தெரியவந்து, அவர்களும் இயந்திரத்தை வாங்கிச் சென்றார்கள். இன்றும் அந்த இயந்திரத்துக்கு உலக அளவில் வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல லட்சம் ஏழை பெண்கள், மாதவிடாய் நோய்களிலிருந்து தப்பினர். இப்படி ஒரு புதிய சமூக மாற்றத்துக்கே முருகானந்தம் வித்திட்டார்.

இந்தியாவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் அவரது கண்டுபிடிப்பு மூலம் உற்பத்தி நடைபெறுகிறது. இதுவரை 19 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. முருகானந்தம் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்லாமல் சிறந்த தொழில் முனைவராக, சமூக சீர்த்திருத்தவாதியாகவும் அறியப்படுகிறார். உலகில் உள்ள பல பெரும் நிறுவனங்கள் இன்று அவரை பேச அழைக்கிறார்கள். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மாணவர்கள், எதிர்கால தொழில் முனைவோருக்கு ஒரு சிறந்த தூண்டுதலாகவும் இருக்கிறார்.

இவரது சாதனை மற்றும் சேவைக்காக நாடு உயரிய 'பத்மஸ்ரீ' விருது வழங்கி பாராட்டி உள்ளது!

முருகானந்தம் டாக்டர் பட்டம் பெற்றபோது

முருகானந்தம் டாக்டர் பட்டம் பெற்றபோது


இந்தியாவில் 100% குறைந்த விலை மாதவிடாய் பேட்களை ஏழை பெண்கள் பயன்படுத்திடும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதற்கான முதல் படியை உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து எடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்தது. மாநில அரசின் முழு ஒத்துழைப்பு மூலம் அந்த மாநில பெண்கள் குறைந்த விலை தயாரிப்பை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உத்தர பிரதேச மாநில வெற்றியைத் தொடர்ந்து தற்போது மற்ற மாநிலங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். 

தொண்டு நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது முயற்சி மூலம் 10 மில்லியன் பெண்கள் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர்!

இந்த வெற்றிக்குப் பிறகு பிரிந்து சென்ற குடும்பம் ஒரு சேர்ந்தது. அவரது மனைவி சாந்தி, மகள் ப்ரீதி ஆகியோர் இன்று அவரோடு அமைதியாக, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். எப்படி எல்லாம் மோசமாக பேசினார்களோ அவர்கள் எல்லாம் இன்று அவரை பாராட்டுகிறார்கள், பெருமையாக பேசுகிறார்கள். அம்மாவுக்கும் சந்தோஷம். பத்தாவது மட்டுமே படித்த தனது மகன் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்கிறான் என்றால் இன்னும் படித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது அவரது ஏக்கம்.

பாப்பநாயக்கன் புதூர் கிராமம் இன்று ஒரு புற நகர் பகுதியாக வளர்ந்துவிட்டது. அந்த கிராம மக்கள் முருகானந்தத்துக்கு விளைவித்த தங்களுடைய செயலுக்கு பிராயசித்தம் செய்யும் விதமாக இன்று அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள்...!

கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ்

Add to
Shares
10.7k
Comments
Share This
Add to
Shares
10.7k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக