Accenture Layoff: ஒரே நேரத்தில் 19,000 பேரை வேலையைவிட்டு நீக்கும் அக்சென்சர்!
அக்சென்சர் நிறுவனம் வியாழக்கிழமை தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Accenture நிறுவனம் வியாழக்கிழமை தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பணவீக்கம், வங்கிகள் திவால், பொருளாதார மந்த நிலை பற்றி அச்சம் காரணமாக முன்னணி ஐ.டி. நிறுவனங்களும், கார்ப்பரேட் கம்பெனிகளும் செலவை குறைக்கிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியை விட்டு நீக்கி வருகின்றன. ட்விட்டர், கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் தற்போது முன்னணி ஐ.டி. நிறுவனமான அக்சென்சர் (Accenture) இணைந்துள்ளது.
இந்நிறுவனம் உலக அளவில் பணிபுரிந்து வரும் 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதோடு, தனது வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது.
அக்சென்சர் அதிரடி முடிவு:
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் தனது ஒட்டுமொத்த பணியாளர்களில் 2.5 சதவீதத்தினரை, அதாவது, 19 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் மோசமடைந்து வருவதை கணக்கில் கொண்டு செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அக்சென்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், நல்ல விஷயம் என்னவென்றால், அக்சென்சர் அனைத்து ஊழியர்களையும் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்றும், அடுத்த 18 மாதத்திற்கு சிறிது, சிறிதாக பணி நீக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
அக்சென்சர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“இந்த நடவடிக்கைகள் மூலமாக அடுத்த 18 மாதங்களில் ஏறத்தாழ 19,000 பேர் அல்லது எங்கள் தற்போதைய பணியாளர்களில் 2.5 பேர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோராக இருப்பார்கள்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய நபர்களை பணியமர்த்துவது தொடரும் என்றும் ஐடி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
"நாங்கள் தொடர்ந்து பணியமர்த்தும்போது, குறிப்பாக எங்கள் மூலோபாய வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிக்க, 2023 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாங்கள் எங்கள் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினோம். எனவே, ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்வது செலவினங்களைக் குறைக்க உதவும்,” எனத் தெரிவித்துள்ளது.
திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?
அக்சென்சர் நிறுவனம் தங்களது பணிநீக்க நடவடிக்கைக்குக் காரணம் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதே என உறுதியாகத் தெரிவித்துள்ளது. அக்சென்சர் நிறுவனம் அளவுக்கு அதிகமான ஊழியர்களைப் பணியமர்த்தியது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
கடநத 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 லட்சத்து 99,000 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் அதே காலக்கட்டத்தில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேராக எண்ணிக்கை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் வளர்ச்சி கணிப்பு:
பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது.
அக்சென்சர் நிறுவனம் இப்போது ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. முன்பு இதன் அளவீட்டை 8% முதல் 11% ஆக நிர்ணயம் செய்திருந்தது. அக்சென்சர் அதன் மூன்றாம் காலாண்டு வருவாய் $16.1 பில்லியன் மற்றும் $16.7 பில்லியன் வரம்பில் இருக்கும் என்று கணித்துள்ளது.
"2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வருவாய் $16.1 பில்லியன் முதல் $16.7 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது உள்ளூர் நாணயத்தில் 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
டெக் நிறுவனங்கள் தரும் அதிர்ச்சி:
சமீபத்தில் மெட்டா நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்காக 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்திறன் மற்றும் செலவை குறைப்பதற்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே 11,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக மெதுவான வளர்ச்சி மற்றும் வருவாய் குறைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்தது. அமேசான் நிறுவனம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், தற்போது வரை 9,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

'800 பேருக்கு வேலை வாய்ப்பு; ஆனா...’ Zomato சிஇஓ பதிவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!