நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி- 8
ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்பட, பங்குசந்தையின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம்!
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதலீடை தேடும் பயணத்தில் இறுதி நிறுத்தம் பங்குசந்தையில் நிறுவனத்தின் பங்குகளை வெளியிட்டு முதலீட்டை கோருவது. அதற்கு முன் பங்குசந்தையின் கதையை பார்த்துவிடலாம். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெல்ஜியத்தில் ஒரு வணிக குழுமம் பங்குசந்தையாக உருவெடுத்து பொதுமக்களிடம் முதலீட்டை கோருகிறது. ஆனால் பரவலாக அறியப்பட்ட முதல் வெற்றிகரமான பப்ளிக் லிமிட்டட் கம்பெனி என்றால் அது ஈஸ்ட் இந்தியா கம்பெனி. இந்தப் பெயரை எங்கோ கேள்விப் பட்டது போல் இருக்கிறதா.. அதே தான். இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்து கம்பெனி. ஆரம்பத்தில் பங்குகளை வாங்கி விற்கும் இடமாக இருந்தது எது தெரியுமா.. காபி ஷாப்கள் தான். எல்லாமே பேப்பர்களில் எழுதி கொடுக்கப்பட்டு கூவி கூவி விற்பார்களாம்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான முதலீட்டை ஒரு வங்கியிடமோ, தனி நபரிடமோ வாங்கினால் அதற்கு வட்டி கொடுத்து மாளமுடியாது என்பதால் பொதுமக்கள் பலரிடமும் முதலீட்டை வாங்கி அதன் மூலம் வணிகத்தை பெருக்கி வரும் லாபத்தில் பகிர்ந்துகொண்டு முன்னேறுவதுதான் பங்குசந்தையின் அடிப்படை. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல கட்ட முதலீடை பெற்ற போதும் வளர்ந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு பங்குசந்தையின் தேவையும் அதிகம். காரணம் மிக குறைந்த சதவீதத்தில் மிகப்பெரிய முதலீடை பெறக்கூடிய வாய்ப்பு அதில் உண்டு. படிப்படியாக முதலீடை பெற்று வளர்ந்துவரும் நிறுவனம் பங்குசந்தையில் விட்டுக்கொடுப்பது வெறும் 10% மட்டுமே. சில நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வெஞ்சர் கேபிட்டல் இல்லாமல் வெற்றிகரமாக வளர்ந்து வந்தால் அவைகள் சற்று அதிகமாக பங்குகளை விட்டுக் கொடுப்பார்கள்.
ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் எடுத்தவுடன் பங்குசந்தையில் முதலீட்டை கோரிவிட முடியாது. நிறுவனம் பதியப்பட்டு குறைந்தது மூன்று வருடங்கள் ஆகி இருக்க வேண்டும். மூன்று வருட நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவேண்டும். நிறுவனத்திற்கு கடன்கள் அதிகமாக இருக்கக் கூடாது. அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தொழிலை மேற்கொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும். பங்குதாரர்களுடன் எந்தவித சட்டசிக்கலும் வழக்கும் இருக்கக்கூடாது. மற்றும் பிற அடிப்படை ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவேண்டும். இவையெல்லாம் உலகம் முழுக்க உள்ள எல்லா பங்குசந்தையிலும் கேட்கப்படும் பொதுவான தகுதிகள். நாட்டுக்கு நாடு சில வேறுபாடுகள் இருக்கும்.
பங்குசந்தையில் உங்கள் நிறுவனம் வரும் முன்பு அது பரவலாக மக்களை சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் போகக்கூடும். இந்தியாவில் அது போலவும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஆக இங்கு மார்கெட்டிங் மிகவும் முக்கியம். பொதுமக்களை நுகர்வோராக கொண்ட நிறுவனங்கள் மிக எளிதாக பங்குசந்தையில் வெற்றி பெரும். காரணம் அவை தங்களின் பொருள்கள, சேவைகள் வழியாக ஏற்கனவே மக்களை சேர்ந்துவிடுகிறது.
வெற்றிகரமாக வளர்ந்த நிறுவனங்கள் பங்குசந்தையில் செல்வதற்கு மற்றுமொரு காரணம் ஸ்திரதன்மையை உறுதிசெய்யவும். நிறுவனத்தை தொடங்கியவர் பல கட்ட முதலீட்டை பெற்று வெற்றி பெற்றாலும் பங்குதாரர்களின் குழப்பங்களில் அல்லது முரணான முடிவுகளில் இருந்து நிறுவனத்தையும் தன்னையும் காத்துக்கொள்ளவும் பங்குசந்தையில் முதலீடை கோருவார். ஃ பேஸ்புக் கதையில் நடந்தது அதுவே
வெற்றி பெற்ற நிறுவனங்கள் பங்கு சந்தையை அணுகுவதில் இன்னொரு நுணுக்கமான காரணம் நிறுவனத்தின் மதிப்பை கூட்டுவதும் ஆகும். பங்குசந்தைக்கு சென்றபின் ஃபேஸ்புக் மார்க் சுக்கர்பெர்க்கின் பங்கு மதிப்பு பன்மடங்காக உயர்ந்து அவரை உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக ஆக்கியது. வெளியிட்டபோது ஒரு IPO பங்கின் விலை 38$. அது வளர்ந்து வளர்ந்து இன்று 142$க்கு செல்கிறது.
தாய்லாந்து அரசு சமிபத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு என்று ஒரு தனி பங்குச்சந்தை தொடங்கப்போகிறோம் என்று அறிவித்துள்ளது ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் உலகநாடுகள் அனைத்திலும் இதுபோன்ற சந்தைகள் உருவாகக்கூடும். ஒவ்வொரு தொடக்க நிறுவனமும் பங்குசந்தையை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் அது உங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தை திட்டமிட்டு ஒவ்வொரு முடிவையும் எடுக்கவும் சட்டரீதியாக உங்கள் நிறுவனத்தை தகுதிப்படுத்திக்கொள்ளவும் உதவும்.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும் என்பார் வள்ளுவர். ஆகவே தொடங்கும் போதே உங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தால் வெற்றி நிச்சயம்...
கதை தொடரும்...
(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)